விடாதுகருப்புவிற்கு இந்த பதிவில் நான் தெரிவித்த கண்டனமும் அதை தொடர்ந்து அசுரன் எழுதிய பதிவில் நான் அளித்த பின்னூட்டம் இங்கே பதிவாக.
கருத்துகளம் என்பது போர்களமல்ல எதிராளிக்கு வலிக்க வேண்டுமென்பதற்கோ எதிராளி சாக வேண்டுமென்பதற்கோ, உமது வெற்றி எதிராளிக்கு வலிப்பதில் இல்லை, உமது வெற்றி எதிராளி உன் கருத்தை ஏற்பதில் தான் உள்ளது, உன் பக்க நியாயங்களை எதிராளியை யோசிக்க வைப்பதில் தான் உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் (எல்லாவற்றையும் போல இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு)
பண்பற்ற, கேவலமான கெட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எந்த நியாயத்தையும் யாருக்கும் எடுத்து செல்லாது, அவைகள் காயத்தை மட்டுமே உண்டாக்கும், வலியை மட்டுமே உண்டாக்கும், அது அந்த வார்த்தையை பிரயோகித்தவரின் தோல்விதான், நிச்சயமாக எனக்கு அதில் உடன்பாடில்லை அதனால் தான் எனது கண்டனத்தை விடாது கறுப்புவிற்கு தெரிவித்தேன்.
இது ஒரு விதமான விளையாட்டு, இங்கே விளையாட்டின் விதிகள் வினோதமானது, நேரடியாக இந்த அனானி நீங்களா அந்த பெயரில் எழுதுபவர் நீங்களா என்று கேட்பதுமா பெரும் பாவம், ஆனால் அதையே நேரடியாக சொல்லாமல் சுச்சு என்ற பெயரில் உள்ள பின்னூட்டத்தை படித்தால் உங்கள் ஞாபகம் வருகிறதே என்றும் உங்களை பார்த்தால் அவரை பார்க்க வேண்டாம், அவரை பார்த்தால் உங்களை பார்க்க வேண்டாம் என நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதையே கேட்கலாம் இது ஆட்ட விதிகளுக்குட்பட்டது, நேரடியாக கேட்பது ஆட்டவிதிகளுக்கு முரணானது.
நக்கல் நையாண்டி எனவும் பெயரை குறிப்பிடாமல் லேசாக எழுத்துகளை மாற்றி எழுதலாம் அதெல்லாம் அங்கத்தில் வந்துவிடும், அதையே நேரடியாக பெயர் கூறி எழுதினால் ஆட்டவிதிகளுக்கு முரண், இது மாதிரியான ஒரு வினோதமான விதிமுறைகள் உள்ள ஆட்டகளம் இது. ஏனெனில் முதலில் ஆட ஆரம்பித்தவர்கள் உருவாக்கிய விதிகள் இவை.
பண்பற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிப்பவருக்கு மட்டுமல்லாமல் யார் மேல் அது பிரயோகிக்கப்பட்டதோ அவர்களை நியாயமான காரணங்களால் எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே அளவற்ற சேதத்தை உருவாக்குகின்றது, அது மட்டுமல்லாமல் எதிரில் வார்த்தைகளால் தாக்கப்படுபவர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகவும் அமைகிறது, இதனை தொடர்ந்து நடைபெறும் விடயம் தான் மிக முக்கியமானது, இந்த பண்பற்ற வார்த்தைகளை யாருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் புனிதர்கள் ஆகின்றனர், மேலும் அவர்கள் அப்படி திட்டு வாங்கியதாலேயே பரிதாபத்திற்குறியவர்களாகவும் அவர்களது கருத்துகளை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் போலவுமான சித்தரிப்பும் விழுகின்றது.
இங்கே நிதானம் மிக முக்கியம், அதுவும் வெகுசன ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை (உதாரணம் சாதிக்கட்சிகள் மோசமானவை, சாதியில்லை என்கிறீர் ஆனால் சாதி ரீதியானா இடஒதுக்கீடு தேவை, அரசியல்வாதிகளே சாதிக்கு காரணம், சாதிபற்றி பொதுவில் பேசுவதே பாவம், திராவிடம், etc...) உடைக்க முயலும் போது அது அத்தனை சுலபமானது அல்ல, ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொது மதிப்பீட்டிற்கு எதிரான நிலை எடுத்து பேசும்போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை, ஏனெனில் ஏற்கனவே பொதுமதிப்பீட்டில் தவறாக எடுத்துவைக்கப்பட்டுள்ள விடயத்தை பேசும்போது அது சென்று செல்ல வேண்டிய ஆட்கள்(targetted audience) யாரெனில் அது நடுநிலையாட்கள், இவர்களுக்கு மாற்று கருத்துகள் வெகுசன ஊடகங்களினால் எடுத்து வைக்கப்பட்டதில்லை, அப்படி செல்லும்போது விழும் வார்த்தை பிழறல்களினால் சொல்ல வந்தது targetted audineceஐ சென்று சேராமலே போய் விடும், targetted audience கண்டிப்பாக நடுநிலை போர்வையில் உள்ளவர்கள் அல்ல.
திட்டு வாங்கியவர்கள் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் சாக்கில்(கண்டனம் தெரிவிப்பது நிச்சயம் தவறில்லை) போகிற போக்கில் மற்றவர்களையும் சேர்த்தே கத்தியால் சொருகி விட்டு செல்வார்கள், அவர்களுக்கான தேவையும் அது தான், ஏனெனில் பண்பற்ற வார்த்தைகளில் திட்டுபவர்கள் அதற்கான விலையை தருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன் பிறகு அவர்களின் ஆக்கங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பும் எத்தனை குறைவாக இருக்கும் என்பதும் தெரிந்ததே, ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் தான் போகிற போக்கில் மற்றவர்களை சொருக முடியும், நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சிலரின் மீது, சில குழுவின் மீது, சில பிம்பங்களை உருவாக்க முடியும், இதன் மூலம் மாற்று கருத்துகளை எடுத்து செல்பவர்களை பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடியும், பொதுவாக ஒரு சாதியை கெட்ட வார்த்தைகள் திட்டினால் ஆட்டவிதிகளுக்கு முரண் என கண்டிக்கும் நம்மால் இப்படியெல்லாம் பண்பற்ற வார்த்தைகள் பேசுவதற்கு காரணமே திரா'விட'ம் என்று பொதுவாக பேசுவதை கண்டிக்க இயலாது ஏனெனில் இது ஆட்டவிதிகளுக்குட்பட்டது, அங்கேயும் பொதுமை படுத்தல், இங்கேயும் பொதுமை படுத்தல் தான், ஒரே வேறு பாடு அங்கே பண்பற்ற வார்த்தை, இங்கே நாகரீக நஞ்சில் தோய்த்த வார்த்தைகள்.
இந்த சூழ்நிலையில் ஒரு சிலர் மாற்று கருத்துகளை முன்னெடுத்து செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொன்றும் திரிக்கப்படும், அய்யோ என ஓலமிடப்படும் முத்து தமிழினி வார்த்தைகளில் சொல்வதென்றால் கீழே விழுந்து கை கால்களை உதைத்துக்கொண்டு அழுவார்கள், அதை சட்டென்று பார்க்கும் போது என்னமோ அவர்கள் பாதிக்கப்பட்டது போன்றதாகவுமான ஒரு படக்காட்சி உருவாக்க முயலுவார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவை பொறுமை, கொஞ்சம் பொறுமையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான எதிர்வினை ஆற்றாமல் இருந்தால் அவர்களின் நடுநிலைமை பல்லிளிக்கும் ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும் மேலும் இப்படியான முன்னெடுப்பாளர்களின் ஒரு ஒரு வார்த்தையும் ஆராயப்படும், ஆதலால் மிக கவனமாக இருத்தல் வேண்டும், ஏனெனில் பலரும் காத்திருப்பது இந்த முன்னெடுப்பாளர்களை போட்டு தள்ள, இதில் மிகவும் சிக்கலானதே நடுநிலை போர்வையில் இருப்பவர்களால் தான் ஆணாதிக்க சமுதாயத்தில் ஆணாதிக்கத்திலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக்கொள்ள முயல்பவர்கள் ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில் எத்தேச்சையாக வந்து விழும் "மீசை வைச்ச ஆம்பிளை யாரும் எதிர்க்கவில்லை" என்ற வார்த்தையை நடுநிலையாளர் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள கூட அவகாசம் அளிக்கப்படாமல் அதை ஆணாதிக்க வெறியாக சித்தரித்து அதை தொடர்ந்து பல திரிப்புகள் புனைவுகள் செய்து கை கால் உதைத்து கொண்டு ஆர்பாட்டம் செய்யும் போது கண்டிப்பாக அது அந்த வார்த்தைகளுக்கு அல்ல அது வேறு முன்னெடுப்புகளுக்கு போட முனையும் தடை என்பது புலனாகும். ஆனால் அது எல்லோருக்கும் புலப்பட நேரமெடுக்கும் அது வரை ஆட்டவிதிகளுக்குட்பட்டு பொறுமை காக்க வேண்டும், இதில் மாபெரும் வேடிக்கையென்னவென்றால் சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியே வந்து அவர்களின் நடுநிலை பல்லிளிப்பது தான், மடியில் உள்ள பூனைக்குட்டி நிச்சயம் ஒரு நாள் வெளிவரும் அது வரை இந்த ஆட்டத்தில் பொறுமைதான் ஒரே விதி ஏற்கனவே சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியில் குதித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் இப்போது இல்லை, இனி எங்கிருந்தாவது பூனைக்குட்டி குதித்தாலும் பெரிய அதிர்ச்சியெல்லாம் இருக்காது, ஒரு சிறிய வியப்பு மட்டுமே தோன்றும்.
உலகக்கால்பந்து கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முக்கிய வீரர் ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஜிடேன் திடீரென எதிரணியினரை முட்டி மோதினார், விளைவு சிவப்பட்டை வாங்கி வெளியேறினார், முட்டுவதற்கு காரணம் ஜிடேனை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசியது, ஜிடேன் முட்ட வேண்டுமென்று பேசியது தான் அது ஆனாலும் கால்பந்து விதிகளின் படி முட்டியது மட்டுமே விதிகளுக்கு முரணானது ஜிடேனை கோப மூட்டி முட்டு வாங்கியதால் வென்றது யார்? இதற்காகத்தானே ஜிடேனை கோபமூட்டியது, முட்டுவதற்கு காரணங்கள் இருந்தாலும் முட்டியதால் ஜிடேனுக்கா வெற்றி? இல்லையே, அய்யோக்கியத்தனம் செய்து முட்டு வாங்கியவர்கள் வெற்றிகளிப்பில், அதே ஜிடேன் விதிகளின் படி அமைதியாக இருந்திருந்தால் வெற்றி பறிபோயிருக்காதே, இது தான் நேர்மையான ஆட்டத்தையும் தாண்டிய மொள்ளமாறித்தனம்.
உறுதிப்படாத ஒரு விடயத்தை வாதத்தில் வைப்பதையும் பெரும்பாலும் தவிர்ப்பேன், அப்படி ஒரு தகவலை வைக்கும் போது உதாரணமாக ஒருவரை பார்த்து நீங்கள் தான் இந்த பெயரில் பின்னூட்டமிடுகிறீர் என்று நான் கருதுகிறேன் என சந்தேகப்பட்டால் கூட போதும் மற்ற அனைத்து விவாதங்களும், கருத்துகளும், தவறுகளும் மறைக்கப்பட்டு இது மிகப்பெரிதாக பேசப்படும், எல்லா படங்களும் காட்சிகளும் அரங்கேறும், பிறகு மற்றவை எல்லாம் மறைக்கப்பட்டு இது மட்டுமே நிற்கும், ஆனாலும் பொதுமையில் இதை கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த போலித்தனம் பல நேரங்களில் புரிவதில்லை, இந்த விடயத்தில் என் குரு சிம்ரன், அவரின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்ட போது அந்த தற்கொலையின் பின்னுள்ள நடன இயக்குனர், அவரின் தங்கை, மோனலின் காதலன், இதில் நடிக மும்தாஜின் பங்கு என பேட்டியில் பேசிய சிம்ரன் ஒரே ஒரு குற்றச்சாட்டாக மும்தாஜ் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை மோனலின் வீட்டிலிருந்து திருடியதாக கூறிவிட்டார், மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு மிக அதிகமாக ஊடகங்களும் மும்தாஜீம் மற்றவர்களும் பேசியது ஐம்பதாயிரம் ரூபாய் விடயத்தை தான், இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் மும்தாஜ் இதை செய்திருப்பாரா என்பதில் ஆரம்பித்து அத்தனை கவனமும் இதிலே தான் இருந்தது, இதில் சிம்ரன் அம்பலப்படுத்திய மற்ற அனைத்தும் மறைந்து விட்டன, ஏனெனில் ஆட்டவிதி அப்படி.
மற்றவர் மனம் புண்படாமலெல்லாம் எதையும் எழுத முடியாது உடைக்க முடியாது, இந்து மத மூடப்பழக்கங்களை இந்து மதத்தினர் புண்படுவார்கள் என பேசாமல் இருக்க முடியாது, இசுலாமிய அடிப்படை வாதத்தை அவர்கள் மனம் புண்படுமென எழுதாமல் இருக்க முடியாது, நடிகர்களின் ரசிகர்களின் கோமாளித்தனத்தையும், அரசியல் தலைவர்கள். தொண்டர்களின் கோமாளித்தனத்தையும் மனம் புண்பட்டுவிடும் என பேசாமல் இருக்க முடியது, ஆனால் விமர்சனங்கள் கண்டிப்பாக கேவலமான வார்த்தைகளில் இருக்க கூடாது என்பது என் எண்ணம், விமர்சனத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, நல்ல வார்த்தைகளில் காழ்ப்புணர்ச்சியை துப்பினாலும் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும், எல்லாருடைய எழுத்துகளும் நிலைப்பாடுகளும் மற்றவர்களால் தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கின்றார்கள், எத்தனை போலித்தனத்தையும் அவர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லையென்றாலும் நாளாக நாளாக அவர்களால் கண்டுபிடிக்க முடியும் அப்போது சாயம் வெளுக்கும் அதுவரை முடிந்த அளவிற்கு அவர்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தாலே போதும்.
எல்லா மனிதர்களுக்கும் பிரேக்கிங் பாயின்ட் என்று ஒன்று உண்டு சிலருக்கு அது உடனே இருக்கும் சிலருக்கு கொஞ்சம் நேரம்பிடிக்கும்.
பண்பற்ற வார்த்தைகளினால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் எத்தனை சேதத்தை கருத்து தளத்தில் அவர்கள் விளைவிக்கின்றார்கள் என்பதை விளக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்கின்றேன்.