தவறவிடக்கூடாத அற்புதமான இரண்டு இணைய சிறுகதைகள்

இணைய எழுத்துகள் தரம் வேறெந்த எழுத்துகளும் குறைந்தது அல்ல என்பதை நிரூபிக்கம் பல எழுத்துகள் இங்கே உள்ளன, இணையத்தில் சிறுகதை கவிதைகள் என்றால் தெரித்து ஓடும் நிலை உள்ளது, இயல்பாகவே சிறுகதைகள் மேல் ஓரளவிற்க்கு ஆர்வம் உள்ளவன் என்பதால் இணையத்தில் கண்ணில் படும் சிறுகதைகளை படிக்காமல் விடுவதில்லை, பல சிறுகதைகள் பழைய விகடன் குமுதம் டெம்ப்ளேட் கதைகளாக இருப்பதும், பயிற்ச்சி இல்லாததால் ஏற்படும் சலிப்பூட்டும் நடைகளும், ஜெண்டில்மேன் கதைக்கருக்கள், அரதப்பழசான கதைக்கருக்கள் படிக்க கொஞ்சம் சிரமத்தை தந்தாலும் நல்ல கதை சிக்கிவிடாதா என்று படிப்பது உண்டு.

முதல் 4 வரியிலேயே கதையை மேலே படிக்கலாமா வேண்டாம என்ற முடிவுக்கு வாசகன் வந்துவிடுவான், அந்த 4 வரியை தாண்டி வந்துவிட்டாலும் சிறுகதை ஒரு 20-20 கிரிக்கெட் ஆட்டம் போன்றது கடைசி வரை விறுவிறுப்பாக செல்ல வேண்டும்...

வேறு எந்த எழுத்துக்களுக்கும் குறைவில்லாத இணையத்தில் வெளியான இரண்டு இணைய சிறுகதைகளை இங்கே பகிர விரும்புகிறேன்...

தெய்வநாயகி என்றொரு ஆட்டக்காரி - மோகன் தாஸ் எழுதிய இந்த சிறுகதையானது "ஒக்காளி யெந்த நாதாரிடா சொன்னான் பாளயக்கார நாயுடுன்னு ஒரு சாதியே இல்லைன்னு" என்று ஆரம்பமாகும் கதை ஒரு பையனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும்,அப்படியே அங்கீகாரத்துக்காக ஏங்கும் சேர்த்துக்கொண்டு வாழவைக்கப்படும் பெண்ணின் உணர்வு, முதல் தாரத்தின் அதிகாரம் கையை விட்டு போகாமல் இருக்க செய்யும் முயற்சிகள் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் காலிப்பெருங்காய டப்பா பேச்சுகள், என்னடா உங்க சித்தி ராத்திரியில் உங்க நைனாவிற்காக டிரெஸ்ஸே போடாம டான்ஸ் ஆடுவாங்களாமே நீ பார்த்திருக்கிறியா என்று கேட்கும் ஊர் ஆட்கள் என ஒரு திரைப்படத்தை நம் மனக்கண் முன் ஓட்டிவிடுகிறார்.... என் வாழ்க்கையில் படித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நிச்சயம் இது இருக்கும்...

வேட்டையாடு! விளையாடு!!!- விசை என்ற வலைப்பதிவில் எழுதப்பட்ட சிறுகதை முகமூடி சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற இந்த கதையானது வேந்தர் விலாடிமிர் வீழ்ந்தார்! வேந்தர் வேலன் வாழ்க!! என்ற ஆரம்பமாகும் இது விஸ்வநாத் ஆனந்த் மற்றும் காஸ்ப்ரோவை நினைவு படுத்தினாலும் நிறைய செஸ் பற்றிய டெக்னிக்கல் தகவல்கள் இருப்பது போல தோன்றினாலும் கதை சர சர வென வேகமாக செல்லுகிறது, மேலும் படக்காட்சிகளாக கதை விரிகின்றது, கதையின் கடைசி பத்தியில் ஒரு சஸ்பென்ஸ்ம் உடைகிறது... இந்த கதையை எழுதியவர் தற்போது பதிவுகள் எழுதவில்லை போலும், அவரோட வலைப்பதிவுகளில் தற்போது புதுப்பிக்கப்படுவதில்லை...

இந்த இரண்டு சிறுகதைகளையுமே அவசர அடியாக படிப்பதைவிட நிதானமாக படித்து ருசிக்கலாம்...

ஈழம் தொடர்பாக கருணாநிதியை திட்டுவது ஏன்? உடன்பிறப்புகளே சிந்திப்பீர்...

தொடர்ச்சியா ஈழ விசயத்தில் மற்றவர்களை விட்டுவிட்டு கருணாநிதியை கடுமையாக திட்டுவதற்க்கு கருணாநிதியின் மீதான எந்த காழ்ப்புணர்ச்சியோ சொந்த இதர எரிச்சல்களோ இல்லை, ஈழ விசயத்தில் கருணாநிதியால் ஏதாவது செய்திருக்க இயலும் என்ற ஒரே காரணம், அதை பதவிக்காகவும் ஊழல் பணத்துக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் ஈழக்குருதியை குடித்து விட்டார் என்பதே அத்தனை கோபங்களுக்கும் முதல் காரணம்....

இதோ சாட்சியாக கோத்தபாய ராஜபக்சேவின் பேட்டி... திருமா 4 நாள் உண்ணாவிரதம் இருந்த போது இலங்கை அரசிடம் ஏற்படாத பதட்டம் கருணாநிதி உண்ணாவிரதம் என்ற உடன் ஏற்பட்டிருக்கின்றது என்றால் பொறுப்பு திருமாவுக்கு அதிகமா கருணாநிதிக்கு அதிகமா? அப்போ திட்ட வேண்டியது யாரை... உடன்பிறப்புகளே சிந்திப்பீர்...

இதோ கோத்தபய ராஜபக்சேயின் பேட்டியில் இருந்து சில வரிகள்

----------------------------

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம்.

---------------------------------

இதற்க்கும் கூட இந்திய அரசும் இலங்கை அரசும் இணைந்து கருணாநிதியை ஏமாற்றிவிட்டது என்றும் கூட சொன்னாலும் சொல்வீர்கள்

http://meenakam.com/?p=14892

உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி, தமிழக முதல்வர் கருணாநிதி கடந்த வருடம் மேற்கொண்ட உண்ணாவிரதத்தை இந்திய சிறிலங்கா அதிகாரிகள் எவ்வாறு ஒரு குழுவாக இணைந்து முறியடித்தனர் என்பதை சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

Indian Defence Review இற்காக திரு சசிக்குமார் என்பவருக்கு அளித்த விரிவான செவ்வியிலேயே இந்த ஏமாற்று நாடகத்தின் பின்னணியை கோத்தபாய போட்டு உடைத்துள்ளார். புலிகளை வெற்றிகரமாகத் தோற்கடிக்க முடிந்தமைக்கான ஒன்பது காரணங்கள் என்ற தலைப்பில் வெளியான இந்தச் செவ்வியின் சில பகுதிகளை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

இந்த செவ்வியில் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் தொடர்பாக கோத்தபாய ராஜபச்ச தெரிவித்திருப்பதாவது:

கடந்த வருடம் ஏப்ரல் 24 ம் திகதி, தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி உடனடிப் போர்நிறுத்தம் வேண்டி சென்னையிலுள்ள அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். இச்சம்பவம் நடப்பதற்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு, இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர மேனன் என்னை அவசரமாகத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். இந்தியத் தூதுக்குழு ஒன்று அவசரமாக கொழும்பு வரவிருப்பதாகத் தெரிவித்தார்.

நான் உடனடியாகவே ஜனாதிபதி ராஜபச்சவின் அலுவலகத்திற்குச் சென்று அவரின் அனுமதியைப் பெற்று 5 நிமிடத்திற்குள்ளாகவே மீண்டும் மேனனைத் தொடர்பு கொண்டேன்.

முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தைத் தொடங்கி ஆறு மணி நேரத்திற்குள் நாம் யுத்த தவிர்ப்பு பிரதேசத்திற்குள் (No Fire Zone) ஷெல் தாக்குதல்கள் உட்பட சகல தாக்குதல்களையும் நிறுத்துவதாக அறிக்கையை வெளியிட்டோம். இந்த அறிக்கையைத் தொடர்ந்து முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து எழுந்திருக்கக்கூடிய பெரிய ஆபத்தை நாம் தவிர்த்துக் கொண்டோம். இந்தியா சிறிலங்கா அதிகாரிகள் குழவாக மேற்கொண்ட இராஜதந்திர நடவடிக்கையின் ஒரு சிறந்த உதாரணமாக இது உள்ளது என இந்தச் செவ்வியில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இச்சம்பவம் தொடர்பாக இதுவரை வெளியிடாத சில உண்மைகளை வெளியிட்டிருக்கிறார்.

வன்னியில் பேரழிவு யுத்தம் நடந்த காலப்பகுதியில் இந்திய இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கூட்டுச் செயற்பாடுகள் பற்றி கோத்தபாய விரிவாக எடுத்துக் கூறியுள்ளதாவது:

இந்திய நிலைப்பாடு என்பது இந்த யுத்தத்தில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சக்தியாக இருந்தது. 1987 ஆண்டு ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையின்போது இந்திய விமானப்படை வடமராட்சியில் உணவுப் பொட்டலங்களைப் போட்டது. அதன் பின்னான காலத்தில் இப்படியான நிலை ஏற்படக்கூடாது என்பதில் கவனமாகவே இருந்தோம்.

மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் தொடர்புகளைப் பேணுவதிலும் இந்தியாவிற்கு உடனுக்குடன் நிலமைகளை தெளிவாக்குவதிலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

எமது பக்கத்தில் நானும், பசில் ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தியத் தரப்பில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளிவிவகாரத்துறையின் செயலாளர் சிவசங்கர மேனன் மற்றும் பாதுகாப்புத் துறைச் செயலாளர் விஜய் சிங் ஆகியோருடன் இணைந்து செயற்பட்டோம்.

நாம் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தொடர்பிலிருந்தோம். சிக்கலான விடயங்கள் எழும்போதெல்லாம் நாம் கூடிப் பேசி பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டோம். இதனால் எமது இராணுவம் எந்தவிதமான தடைகளும் இன்றி தமது இராணுவ நடவடிக்கையைத் தொடர முடிந்தது என கோத்தபாய இந்திய அதிகாரிகளுடன் இருந்த இறுக்மான உறவையும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் இந்தியா காட்டிய ஈடுபாட்டையும் விரிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

கோத்தபாயவின் இந்த சுய வாக்குமூலம் இவ் உண்ணாவிரதம் தொடர்பாக பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த வருடம் முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தபோது அன்றைய தினம் அதிகாலை எவருக்கும் அறிவிக்காது, தான் அண்ணா சமாதிக்கு முன்னர் திடீரென உண்ணாவிரதத்தை ஆரம்பித்ததாகத் தெரிவித்திருந்தார். தமிழக இந்திய ஊடகங்களும் அவ்வாறே எழுதியிருந்தன.

ஆனால் கோத்தபாயவின் நேர்காணலில் உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முதல்நாளே இது தொடர்பாக இந்திய அதிகாரிகள் தன்னைத் தொடர்பு கொண்டு ஒரு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்ததாகத் தெரிவித்துள்ளமை இந்த உண்ணாவிரதம் என்பதே இந்திய அரசும் தமிழக முதல்வரும் இணைந்து நடத்திய நாடகமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

மேலும் கோத்தபாய தனது நேர்காணலில், இந்திய அதிகாரிகளுடன் ஏற்பட்ட சந்திப்பை அடுத்து சகல இராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக தாம் அறிக்கை விட்டதன் மூலம் தமிழகத்திலிருந்து எழுந்திருக்ககூடிய ஆபத்தை தவிர்த்துக் கொண்டதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் முதல்வர் தனது உண்ணாவிரதத்தை முடிக்கும்போது, வன்னியில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்றும் இது தொடர்பாக மத்திய அமைச்சர் சிதம்பரம் தனக்கு அறிவித்துள்ளதாகவும் கூறியே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். திமுக ஆதரவு ஊடகங்களும் முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வன்னியில் யுத்த நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகவே பிரச்சாரப்படுத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோத்தபாயவின் நேர்காணலைப் பார்க்கும்போது எழும் கேள்வி – இந்த உண்ணாவிரதம் முதல்வர் கருணாநிதியும் இந்திய அதிகாரிகளும் இணைந்து நடத்திய கூட்டு நாடகமா அல்லது இந்திய அதிகாரிகள் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து கருணாநிதியை இத்தனை சுலபமாக ஏமாற்றிவிட்டார்களா என்பதுதான்

நாளை காரைக்குடியில் தெளி குறும்பட வெளியீடு

தெளி குறும்பட வெளியீடு



ஏப்ரல் 30, 2010 அன்று காலை காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மண்டபத்தில் காலை 10:30 முதல் மாலை 5.00 வரை ஓவியர் உமாபதி அவர்களின் ஓவியக்கண்காட்சியும் அதன் பின்

மாலை 6:00 மணிக்கு தோழர் வே.பன்னீர் அவர்கள் இயக்கிய தெளி குறும்பட தகட்டை திரையுலக படத்தொகுப்பு மேதை திரு.B.லெனின் அவர்கள் வெளியிடுகிறார்...

தெளி இயக்குனர் தோழர் வே.பன்னீர் அவர்களுக்கும் தோழர் ஓவியர் உமாபதி அவர்களுக்கும் தமிழ்வெளி தன் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றது...

தெளி குறும்படம் பற்றிய மா.காளிதாஸ் அவர்களின் விமர்சனம் கீழே, தெளிவாக தெரிய படத்தின் மேல் அமுக்கவும்...





விழாவில் கலந்துகொள்பவர்கள் மற்ற விபரங்கள் கீழிருக்கும் படத்தில் அமுக்கி பெரிதாக்கி தெரிந்து கொள்ளலாம்



ரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்? வெளிநாட்டு டூர்கள், விளம்பரங்கள் பற்றி சில டிப்ஸ்

ரூபாய் 21,999* 4நாள் 3 இரவுகள் சிங்கப்பூர் டூர்

இப்படி ஒரு விளம்பரம் பார்க்கின்றீர்கள்.. ஆகா இவ்வளவு குறைந்த விலையில் சிங்கப்பூர் செல்ல இயலுமா... என்று ஆர்வத்துடன் சிங்கப்பூர் செல்லலாம் என்று கணக்கு போட்டுவிட்டு உள்ளே போவீர்கள்... இருந்தாலும் ஒரு சந்தேகம் இருக்கும் ஒரு வேளை விமான கட்டணம் இல்லாமலோ என்று தோன்றும், கீழே இந்த விலையில் என்னென்னவெல்லாம் இனைக்கப்பட்டிருக்கும் என்ற இடத்தில் போக வர விமான பயணச்சீட்டும் இருக்கும் என போட்டிருக்கும், அடி சூப்பர் ஏர் டிக்கெட்டோடு சேர்த்தே இவ்வளவுதானா என்றிருக்கும்... அதற்க்கும் கீழே விலைக்கு பக்கத்திலேயே போட்டிருக்கும் *குறி பற்றிய குறிப்பு கொடுத்திருப்பார்கள்... அதில் என்னென்னவெல்லாம் இந்த கட்டணத்திலிருந்து விலக்கப்பட்டிருக்குமென்று...

Airport Tax excluded (விமான நிலைய பயன்பாட்டு கட்டணம் நீங்கலாக) அதை படித்தவுடன் அட என்ன டாக்ஸ் எவ்ளோ வரப்போகுது என்றால் அங்கே தான் சிக்கலே இந்த டாக்ஸ் விமானகட்டணத்தை போல இரண்டு மூன்று பங்கு.. சென்னை சிங்கப்பூர் விமாணகட்டனும் வெறும் 2500-4000ரூபாய் தான் ஆனால் இந்த ஏர்போர்ட் டாக்ஸ் ஏறக்குறைய ரூபாய்10,500 இரண்டாவதாக விசா கட்டணம் எக்ஸ்க்ளூடட் என்பார்கள் விசா கட்டணம் ரூபாய்1200-1500 இதெல்லாம் சேர்த்தால் 21,999 + 10,500 + 1500 = 33,999 ரூபாய்... இவைகளை Hidden Charges என்பார்கள்...

இது மட்டுமின்றி சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கான கட்டணங்கள் சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவு பணம் எடுக்கும், ஆக முக்கியமான இடங்கள் மட்டும் பார்க்கவேண்டுமென்றாலும் அது ஒரு குறிப்பிட்ட தொகு எடுக்கும், மேலும் இந்த இடங்களுக்கு செல்ல போக்குவரத்து செலவு பார்க்க வேண்டும்

எனவே எந்த விளம்பரமாக இருந்தாலும் கவனிக்க வேண்டியவை
1. ஏர்போர்ட் டாக்ஸ் சேர்த்துள்ளதா
2. விசா கட்டணமும் சேர்த்துள்ளதா
3. அங்கே சுற்றிபார்க்கும் இடங்கள் டூர் அட்ராக்சன்ஸ் டிக்கெட்டும் சேர்த்துள்ளதா. அப்படியென்றால் எவை எவை?

இல்லையென்றால் அது பற்றி முகவர்களிடம் கேளுங்கள் அதன் பின் முடிவுக்கு வாருங்கள்

நமது வலைப்பதிவர் இளையகவி மற்றும் நண்பர்கள் நடத்தும் www.S-TeamHolidays.com நிறுவனம் கேரளா, சிங்கப்பூர் / மலேசியா / இந்தோனேசியா மற்றும் பல பேக்கேஜ் டூர்கள் நடத்துகிறார்கள்... டூர் தொடர்பான தகவல்கள், செக் லிஸ்ட் மற்றும் எந்த சந்தேகமென்றாலும் தயங்காமல் இவர்களிடம் கேளுங்கள்... இலவசமாக டிப்ஸ்கள் தருவார்கள்...

B.Ganeshkumar
+ 91 98949 16242
+ 91 90432 16661
gtalk :- contact.s.teamholidays(at)gmail.com
Yahoo:- steam.holidays(at)yahoo.com
Msn :- steam.holidays(at)hotmail.com

சீமானின் நாம் தமிழர் இயக்க மாநாடு நேரடி ஒளிபரப்பு

சீமான் அவர்களின் நாம் தமிழர் இயக்கத்தின் அரசியல் கட்சிக்கொடி அறிமுக அறிவிப்பு மாநாடு இப்பொழுது (10.04.2010) தஞ்சையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது... இதன் நேரடி ஒளிபரப்பை இங்கே காணலாம்


சீமான் உணர்ச்சிப்பெருக்கோடு பேசிக்கொண்டுள்ளார்...

வாழ்த்துகள் சீமான், தமிழகத்திலும் உலக தமிழர்களிடத்திலும் உங்களுக்கு நிறைய பணிகள் காத்திருக்கின்றன... சவாலான பணிகள் வென்று வர வாழ்த்துகிறேன்...

இப்படிக்கு யார் தமிழ் என்றாலும் தமிழன் என்றாலும் ஓடிவரும் ஒரு தம்பி...

என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன் டா? என்னாது டா வா?

சென்னை வலைப்பதிவர் சங்கம் என்பதை தமிழ் பதிவர்கள் சங்கம் என மாற்றியுள்ளார்களாம், யார் வேண்டுமானாலும் சங்கத்தில் சேரலாமாம் அதனால் நானும் சேரப்போகிறேன்... சங்கத்து கைப்புள்ளைகளா என்னை சேர்த்துப்பிங்க தானே?


சங்கத்தில் சேருவதால் ஏற்படும் நன்மைகள்

1. யாராவது நம்மை அடித்தால் என் சங்கத்து ஆளை அடிச்சது எவன் டா என்று 2 கைப்புள்ளைகள் நமக்கு சப்போர்ட்டா வரலாம்

2. நல்லாட்சி நடத்தும் கலைஞர் அய்யா அவர்களுக்கு ஒரு பாராட்டுவிழா நடத்தி அதில் நமீதா டான்ஸ் வைத்து அதனால் வீடு ப்ளாட் எதுனா கிடைக்கும் வாய்ப்புண்டு

3. தப்பிதவறி சங்கத்துல எதுனா பொறுப்பு வந்துடுச்சினா கிடைக்கிற லெட்டர் பேடை வைத்து என் பையன் டிராயிங் போடவோ என் பொண்டாட்டி காய்கறி பொருள் வாங்க சீட்டு எழுதி தரலாம்.

4. கைக்காசு போட்டாவது லெட்டர் பேட் அடிச்சி, விசிட்டிங் கார்டு வைத்து இளிச்சவாயன் எவனாவது மாட்டினால் எவ்ளோ பெரிய ஆளு நானுன்னு மொக்கை போடலாம்..

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம் சமூகத்தில் சங்கம் வைப்பதற்குள்ளேயே ரத்த களறி ஆகிவிடும் போலுள்ளது, எல்லோரும் கருத்து சொல்லிட்டாங்க என் பங்குக்கு நானும் சொல்லிடறனே, அட கருத்தை சொல்லி என்ன நாட்டையா திருத்தப்போறோம்.

வலைப்பதிவாளர்கள் சங்கம் என்பது கண்டிப்பாக பத்திரிக்கையாளர் சங்கத்துடனோ தொழிற்சங்கத்துடனே இணை வைத்து பேச இயலாது, வலைப்பதிவு என்பது பெரும்பாலோனோருக்கு பொழுது போக்கு அதனால் இந்த சங்கம் இன்னொரு பேனா நண்பர்கள் குழுமம் போன்றோ "வெண்ணிலா கபடி குழு" போன்றோ தான், எனவே சங்கம் ஆரம்பிப்பதாலோ ஆரம்பிக்காமல் விடுவதாலோ ஒண்ணும் பெரியதாக கிடைக்கப்போவதோ இழக்கப்போவதோ இல்லை.

மற்ற சங்கங்களுக்கும் இந்த சங்கத்திற்க்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு, இணைய வெளி என்பது சுதந்திரமான ஒன்று என்பது மட்டுமல்ல ஒருவரே டபுள் டிரிப்புள் ஆக்டிங் எல்லாம் கொடுக்க முடியும், உதாரணத்திற்க்கு தானைத்தலைவருக்கு பாராட்டுவிழா நடத்தி சங்கத்துக்கு இடம் வாங்கப்போகிறோம் ஆதலால் சங்கம் தானைத்தலைவரை விமர்சித்து பதிவுகள் வரக்கூடாது என்று சங்கத்தின் சார்பில் அறிக்கை வாசித்துவிட்டு இந்த பக்கம் வந்து "உண்மை கலைஞர்" "பொய் புலவர்" என்று ஏதோ ஒரு பெயரில் தானைத்தலைவரை செக்க சாத்து சாத்தி அறிக்கைவாசித்தவரே பதிவெழுத இயலும், மேலும் இந்த பதிவரை புறக்கணி அந்த தளத்தை புறக்கணி என்றெல்லாம் சங்கம் கட்டுபடுத்தினால் சங்கத்தை புறக்கணித்துவிடுவார்கள், ஏனெனில் இந்த சங்கம் பதிவர்களின் வாழ்வியலையோ தொழிலையோ சார்ந்துள்ளது அல்ல.

இந்த சங்கம் ஒரு மதத்தை போன்றோ கட்சியை போன்றோ இறுக்கமானதாக(tightly coupled) இருந்தால் அது தானாகவே காணாமல் போய்விடும், சங்கம் பதிவர்கள் மீது செலுத்தும் ஆளுமையோ பிணைப்போ தளர்வானதாக இருக்க வேண்டும் (loosely coupled) அப்படி இருந்தால் மட்டுமே தொடர்ச்சியாக இருக்க இயலும்.

தற்போது வரை இணைய கதை கவிதை, கட்டுரை போட்டிகள்பெரும்பாலும்(மணற்கேணி மற்றும் சில முயற்சிகள் தவிர்த்து) தனிநபர் முயற்சிகளாகவே உள்ளன, தனி நபர்கள் சோர்வடையும் போது அந்த முயற்சிகளில் தொடர்ச்சி இருக்காது, பணம், வேலை பளு பகிர்தல் போன்றவையும் விட முயற்சிகளின் தொடர்ச்சி முக்கியம்.


இங்கே சிங்கை வலைப்பதிவர்கள் முயற்சியால் நடைபெற்ற மணற்கேணி போட்டி நிகழ்வுகளில் பதிவர்களின் ஒருவனாக நானும் பங்கெடுத்தவன் என்ற முறையில் தெரிந்ததை சொல்கிறேன்.அந்த போட்டிக்காக சிங்கை வலைப்பதிவர்கள் ஒவ்வொருவரும் பெரும் முயற்சி எடுத்துள்ளார்கள், இணைய தளம் வடிவமைப்பில் ஆரம்பித்து தலைப்புகள் விவாதித்தது, நடுவர்கள் தேர்ந்தெடுத்து தொடர்பு கொள்ளல், போட்டி பற்றி பலருக்கும் தனிப்பட்ட முறையில் எடுத்து சொல்வது போட்டி கட்டுரைகளை கையால் எழுதப்பட்டு ஸ்கேன் செய்து வந்தவைகள், PDF வடிவத்தில் வந்தவைகளை எல்லாம் கை வலிக்க டைப் அடித்தது, பணம் நன்கொடை, தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்களை அழைத்து வர அவர்களுக்கு பயணம் தொடர்பான உதவிகள் செய்தல், அடுத்த மாதம் அவர்கள் வரும்போதான நிகழ்ச்சி ஏற்பாடுகள், ஒருங்கிணைப்புகள் மேலும் இதில் விடுபட்ட மேலும் பல பணிகள் என அத்தனையும் தனி நபர்களோ ஒரு சிலராலோ நிச்சயம் செய்ய இயலாது, இவை அனைத்தும் சிங்கை வலைப்பதிவர் குழுமம் என்ற 20க்கும் மேற்பட்ட பதிவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக அளித்ததாலேயே சாத்தியமாகின்றது. இது எல்லாவற்றையும் விட இதை குழுமமாக செய்யும்போது ஒரு தொடர்ச்சி இருக்கும், இந்த ஆண்டு இந்த முயற்சிகளில் ஈடுபட்டவர்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் சிங்கப்பூரில் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த முயற்ச்சி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடக்கும், இதுவே குழுமமாக இல்லாமல் போனால் தனி நபர்கள் ஆர்வம் இழக்கும் போது அந்த முயற்ச்சி அதோடு நின்றுவிடும்.

மேலும் தமிழ் மெண்பொருட்கள் தயாரித்தல் என்பது தனி நபர் முயற்ச்சிகளாகவோ அல்லது சில நிறுவனங்களின் முயற்சிகளாகவோ உள்ளன, தனிநபர் மற்றும் நிறுவன முயற்சிகள் அவரவர்களுக்கே சொந்தமாகுமேயொழிய தமிழ் சமுதாயத்துக்கு சொந்தமாகாது, தமிழில் ஒரு நல்ல OCR, பிழைதிருத்தி போன்ற மென்பொருட்கள் இல்லை, தமிழ் OCR உருவாக்க முயற்சித்த போது 30,000 ரூபாய் செலவும் அதைவிட முனைப்பான முயற்ச்சியும் தேவைப்படுமென தெரிய அந்த முனைப்பு அப்படியே கிடக்கின்றது, இது போன்றவைகளை சங்கமாக இருந்தால் எளிதாக செய்யலாம் மேலும் சங்கமாக இருந்தால் முதலிலிருந்து வேறொருவர் ஆரம்பிக்காமல் விட்ட இடத்திலிருந்து புதியவர் தொடங்கலாம்.

இது மாதிரி முயற்சிகள் தவிர்த்து சங்கம் அமைத்தால் சட்டபாதுகாப்பு, ஆட்டோ பாதுகாப்பு என்றெல்லாம் சொல்வது நடைமுறை சாத்தியமில்லை, கருணாநிதியை,ஜெயலலிதாவை மற்றும் பலரை கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி பதிவுகள் எழுதுகிறோம், இதையே தினம் கருணாநிதி பதிவு படிக்கிறார் அவரை விமர்சித்து எழுதுபவர் மீது காண்டாகி நடவடிக்கை எடுக்கிறார் என்றால் சத்தம் போடாமல் எழுதிய பதிவுகளை அழித்துவிட்டு வாயையும் டேஷ்ஷையும் மூடிக்கொண்டு போய் கொண்டே இருக்கலாமேயொழிய சங்கத்து சிங்கங்களை கூப்பிட்டு பஞ்சாயத்துக்கு போவது சற்று கடினமே.

வலைப்பதிவர்களுக்காக ஒரு குழுமம் அல்லது சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று கண்களில் கனவு மின்ன பைத்தியக்காரனிடம் பேசிய பாலபாரதி இன்று சங்கம் அமைக்க போகிறார்கள் என்றவுடன் "என்னால் ஒரு தலைமையின் கீழ் செயல்பட முடியாது என்றே தோன்றுகிறது. இணையவெளி என்பதே ஒரு சுதந்திரமான இடம் என்று எண்ணுகிறேன். சுய சுதந்திரம் பாதிப்புக்குள்ளாக்கும் எந்தவொரு விசயத்தையும் என்னால் அனுமதிக்க முடியாது." என்று எழுதுவதற்க்கு பின்னால் எத்தனையோ "சொந்த" "தனிப்பட்ட" காரணங்கள் இருக்கலாம் இவைகளையெல்லாம் விலக்கிவிட்டு பார்த்தால் சங்கம் என்ன செய்யப்போகிறது என்பதற்க்கு சரியானதொரு விளக்கத்தை தந்துவிட்டு போய்கொண்டே இருக்கலாம். சங்கம் "டைட்டானால்" மல்லாக்க படுத்துக்கொள்ளும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சங்கத்தால் பிடிக்காத பதிவர்களை புறக்கணிக்க சொல்ல முடியும் என்றால் தமிழ்மணம் தளத்தை எத்தனையோ முறை சிலர் புறக்கணிக்க சொன்னார்கள், ஆனால் இன்னமும் தமிழ்மணம் சிறப்பாக செயல்படுகிறது அது போல இணையத்தில் சாத்தியமில்லை, இணையவெளி முன்பு போல யாகூ குழுமங்கள் போன்றோ அல்லது கிராமமோ அல்ல ஊரைவிட்டு தள்ளிவைத்தவர்கள் வீட்டிற்க்கு தலையில் முக்காடு போட்டுக்கொண்டு போய் தான் பார்க்க வேண்டும் என...

ஆனால் இதை பார்ப்பனர்கள் சதி, ஆரிய அடிவருடிகளின் சதி என்று பாலிடிக்ஸ் செய்வதிலும் மூத்த பதிவர்களை வெத்தலை பாக்கு வைத்து அழைக்கவில்லை கலக்கவில்லை என்பதும் சங்க வேலைகளில் முனைப்பாக இருப்பவர்களின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் போன்ற எதிர்ப்புகளையும் ஓரங்கட்டிவிட்டு உண்மையிலேயே என்னடா என்று யோசித்தால் எதிர்ப்புக்கு காரணமாக வெளிப்படையாக சிலர் சொல்லவில்லையென்றாலும் கீழ் கண்ட காரணங்களை வைத்து எதிர்க்கிறார்களோ என்றும் தோன்றுகிறது.

1. இந்த சங்கத்தை வைத்து பணம் சம்பாதிக்க போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்...
- இந்த சங்கத்தை ஆரம்பித்து 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கேபிள் சங்கர் படமா எடுக்கப் போகிறார்? இதில் புழங்கப்போகும் பணம் சிறுசா பெருசா என்பதெல்லாம் இப்போது தெரியாது, பெரிய பணம் புழங்க வாய்ப்பும் மிக குறைவு, அப்படியே புழங்கினாலும் சரியான ஆடிட்டிங் போன்றவைகள் இருந்தால் தான் தொடர இயலும். தொடக்கத்தில் சங்கத்து சிங்கங்கள் கைக்காசை இழக்காமல் இருக்க வேண்டிக்கொள்கிறேன்

2. இந்த சங்கத்தை வைத்து பிரபலமடையப்போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்...
- இருக்கலாம் வாய்ப்புகள் உண்டு, ஒரு வேலையை இழுத்து போட்டு செய்பவர்களுக்கு அதற்கான அங்கீகாரமாக இவர்கள் பெயர் நாலு பேருக்கு தெரிய வாய்ப்புண்டு, சென்ற முறை சென்னை பதிவர் பட்டறை நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய பாலபாரதி மற்றும் பல சிறந்த பட்டறை ஏற்பாட்டாளர்கள் பெயர் ஹிந்து உள்ளிட்ட நாளிதழ்களில் வந்தது இது அவர்களின் உழைப்புக்கு கிடைக்கும் மரியாதை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும், மேலும் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு போன்ற தளங்களின் பெயர்களும் வெளிவந்தது.

3. இந்த சங்கத்தை வைத்து வலைப்பதிவுகளுக்கு அத்தாரிட்டி ஆகப்போகிறார்கள் இதை ஆரம்பிப்பவர்கள்
- இணைய பெருவெளியில் இந்த அத்தாரிட்டிகளுக்கெல்லாம் வேலையே இல்லை, ஏற்கனவே கடந்த 7 ஆண்டுகால தமிழ் இணையத்தில் பல அத்தாரிட்டிகள் வந்து போயுள்ளார்கள்,

4. இந்த சங்கத்தை வைத்து ஆதாயமடையப்போகிறார்கள்
- இதற்க்கு முன் வலைப்பதிவுகளின் பிரபலத்தை வைத்துக்கொண்டு கிடைத்த அறிமுகங்களை வைத்துக்கொண்டு சிலர் என்னென்ன எல்லாம் சொந்த ஆதாயங்கள் அடைந்தார்களோ(விரிவாக இதுப்பற்றி பேச விரும்பவில்லை) அவைகள் எல்லாம் இவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புண்டு

இவைகளையெல்லாம் தாண்டி தான் பதிவர் சங்கம் என்றில்லை எந்த சங்கமும் வைக்க இயலும்.

அப்போ சங்கம் ஆரம்பிச்சா எந்த தப்புமில்லையா என்றால் சங்கம் சில குழும ஆக்கிரமிப்புக்குள்ளாகவோ சார்பு நிலைப்பாடெடுக்கவோ, அதிகார பீடங்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவோ சிலருக்கு உதவலாம், கட்சிகளை போன்று கட்டம் கட்டுதல், வலைப்பதிவு அத்தாரிட்டி ஆகுதல் என போகலாம், ஆனால் இதையும் கடந்து தான் முயற்சிகளை எடுக்கல் இயலும் என நம்புகிறேன். நம்பிக்கையோடு ஆரம்பிக்கலாம், பிடிக்கவில்லையென்றால் சங்கத்தை விட்டு விலகுவதோ, சங்கத்தை உடைப்பதோ அல்லது புது சங்கம் ஆரம்பிப்பதோ ஏதோ ஒன்றை செய்துவிட்டு போகலாம்.

இணைய சுதந்திரம் பாதிக்கப்படுதல், குழு ஆக்கிரமிப்பு போன்றவைகளை சரியாக நிர்வகித்து சங்கம் சரியான தெளிவான வேலைதிட்டத்துடன், சார்பின்றி, தன்முனைப்பு குறைவாக்கிக்கொண்டு பதிவர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தாமல் இருந்தால் பல முயற்சிகளை தொடர்ந்து செய்யவும் பல தமிழ் கணிணி செயலிகளும் கிடைக்க வாய்ப்புண்டு.

பின்குறிப்பு:
வலைப்பதிவுகளுக்கு ஒரு சங்கம் தான் இருக்கனுமென்ற அவசியமில்லை, திமுக,அதிமுக,மதிமுக என்றெல்லாம் இருப்பது போல பல சங்கங்கள் ஆரம்பிச்சிக்க வேண்டியது தான்