அந்த ஊருக்கு தற்போதுதான் மினி பஸ் புண்ணியத்தில் நேரடியாக பேருந்து போக்குவரத்து உள்ளது, அதற்கு முன் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் இறங்கி 4கி.மீ., நடந்துதான் போக வேண்டும் அந்த கிராமத்திற்கு, கிராமம் என்றவுடன் பாரதிராஜா திரைப்படங்களில் வரும் கிராமங்களைப்போல பசுமையான கிராமம் அல்ல, மழையை எதிர்பார்க்கும் புஞ்செய் நிலங்கள் தான், ஏரிக்கருகில் இருக்கும் சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே நஞ்செய் நிலங்கள், ஊரின் பெரும்பாண்மையானோர்கள் ஒரே சாதிதான், எல்லோருமே ஒரு வகையில் பங்காளிகளாகவோ மாமன் மச்சான்களாகவோ இருப்பார்கள்.
வெளியூரில் இருக்கும் சொந்தக்காரர்கள் வருவதென்றால் சாலையில் மாட்டுவண்டியுடன் காத்திருப்பார்கள் ஊர்க்காரர்கள், வழிப்பயணம் அத்தனை சுலபமானது அல்ல, மண் சாலை, அதிலும் ஆங்காங்கே பெரிய பெரிய பாறைகள் தலை நீட்டிக்கொண்டிருக்கும் அதில் வண்டி ஏறி இறங்கும்போது எங்கே வண்டி சாய்ந்துவிடுமோ என்று வண்டியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும், வழியில் உள்ள நிலங்களில் பல நேரங்கள் கரம்பாக (பயிர் ஏதுமில்லாமல்) கிடக்கும், மழைபெய்திருந்தால் கம்பும் கேழ்வரகும் விளைவிக்கப்படிருக்கும், ஏரி ஓரங்களில் விளைந்துகிடக்கும் கறிவேப்பிலைகளை மூட்டை மூட்டையாக எடுத்து கடலூருக்கும் இன்ன பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பார்கள் ஆனாலும் இதில் பெரிய வருமானம் ஏதுமில்லை, நகரத்து சொந்த காரர்கள் அந்த ஊருக்கு சென்றால் அந்த பிள்ளைகள் மிகவும் ஆனந்தபடுவார்கள் தினமும் கம்பங் கூழும், கேழ்வரகு கூழும் சாப்பிட்டவர்கள் அந்த சில நாட்களில் மட்டும் அரிசிசோறும், இட்லியும் சாப்பிடுவார்கள்.
அந்த ஊரில் ஆண்களை "டி" என்றும் பெண்களை "எலே" என்றும் கூப்பிடுவார்கள்
நிஜம்-1
பஞ்சாயத்து தலைவரின் வீடுதான் ஊரின் முதல்வீடு, அங்கேஅன்று இரவு ஊரே கூடியிருந்தது, மாமன் மச்சான்களுக்கிடையேயான நிலப்பிரச்சினை தொடர்பான பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது, வாதியின் தங்கையை பிரதிவாதியும், பிரதிவாதியின் தங்கையை வாதியும் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள்.
பஞ்சாயத்தில் நிலப்பிரச்சினையோடு சேர்ந்து இவர் வீட்டு ஆடு அவர் நிலத்தில் மேய்ந்ததும் அவர் வீட்டு குழந்தை இவர் வீட்டு முற்றத்தில் ஆய் போனதுமான குற்றசாட்டுகள் மாறி மாறி பேசப்பட்டு வந்தன, நடு நிசி தாண்டியும் பஞ்சாயத்து முடிவுக்கே வரவில்லை இதில் ஊரே இரண்டுபட்டு கிடந்தது, ஊரில் அத்தனை பேருக்கும் இவர்கள் மாமனாகவும், பெரியப்பனாகவும் இருந்தனர், ஒரே வீட்டில் அண்ணன் மாமனையும் தம்பி பெரியப்பனையும் ஆதரித்து பிரிந்து நின்ற கதையும் நடந்தது.
ஏற்கனவே இரு தரப்பும் கத்தி,வேல்கம்பு ஆயுதங்களை சேகரித்து வைத்திருந்தனர், வீட்டுமாடியில் கருங்கற்கள் கிரஷரில் இருந்து ஏற்றிக்கொண்டு வந்து கொட்டப்பட்டிருந்தன, இவர்கள் மோதிக்கொள்ளாமல் இருப்பதற்கான கடைசி முயற்சியாக நடந்த பஞ்சாயத்தும் தோல்வியடைந்தது,
"ஏ நாளைக்கு பாத்துகலாம் டி, யாரு உசுர யாரு எடுக்குறாங்க " என்று கூறி பஞ்சாயத்தை விட்டு எழுந்த து மாமன் கோஷ்டி, மாமன் கோஷ்டி கொஞ்சம் வலுவானதும் கூட, மறு நாள் மோதல் நடந்தால் நிச்சயம் பெரியப்பன் கோஷ்டியில் பல தலைகள் உருளும், அரிவாள்கள் தீட்டப்பட்டன, பஞ்சாயத்து தலைவர் வீட்டிலேயே (பெரியப்பனுக்கு ஒரு வகையில் இவர் ஆதரவும் கூட) பெரியப்பன் கோஷ்டி படுத்துக் கொண்டது, அதிகாலை நாலரை மணிக்கு வெளியில் மூத்திரம் விட வீட்டை வெட்டி வெளியே வந்தான் பெரியப்பன் கோஷ்டியிலிருந்து ஒருவன், அந்த நேரத்தில் யாரோ சர சர வென இருட்டில் ஓடும் சத்தம் கேட்க, "யாருடி அது, யாருடி" என்று கத்தியபடி குரல் கொடுக்க, பெரியப்பன் கோஷ்டி சர சர வென வெளியே வர அங்கே ஓடிக்கொண்டிருந்தது பெரியமாமன், என்ன செய்கிறார்கள் என அதிகாலையில் உளவு பார்க்க வந்திருந்தார், நிமிட நேரத்தில் எல்லாம் முடிந்தது, அரிவாள்களால் குதறப்பட்ட மாமன் மண்ணில் வீழ்ந்தார், சில மீட்டர் தூரத்தில் இருந்த மாமன் வீட்டிற்கு மாமனின் அலறல் எட்டியது, என்ன ஏதென்று சற்றும் நிதானிக்காமல் அடுத்தடுத்து மாமனின் இரு தம்பிகளும் வேகமாக ஓடிவர இருவரையும் வெட்டி எறிந்தது பெரியப்பன் கோஷ்டி, அதில் ஒருவர் இறக்க, ஒருவர் பிழைத்துக் கொண்டார்.
இரண்டு கொலைகளை சில நிமிடங்களில் செய்த பெரியப்பன் கோஷ்டி உடனடியாக கள்ளகுறிச்சி சங்கராபுரம் சாலையை நோக்கி ஓடினார்கள், அனைவரும் பேருந்தில் ஏறும் முன் பெரியப்பன் தன் கோஷ்டியை பார்த்து சொன்னது "நல்லா கேட்டுக்குங்க டி, நம்ம மச்சானுங்க செத்துட்டானுங்க, சொந்தத்தில எழவு வுழுந்துடிச்சி, எவனும் பதினாறு நாளைக்கு தலைக்கு எண்ணெய் வக்காதிங்க, கசப்பு சாப்பிடாதிங்க, எல்லாம் எங்கனயாவது தலமறவாயிருங்கு பொறவு பாக்கலாம்" (கசப்பு என்று குறிப்பிடப்படுவது கசாப்பு அதாவது அசைவம்) என்று கூறியபடி தப்பியோடினர்.
ஊரில் உள்ள ஆண்,பெண் என அத்தனை பேரும் ஏரிகளிலும் கருவ காட்டுக்குள்ளம் பதுங்கி கொள்ள ஊரின் உள்ளே புகுந்த காவல்துறை நடக்கவே சிரமப்பட்ட எழுபதுக்கும் மேல் வயதுள்ள கிழடுகளையெல்லாம் சிறைபிடித்து உள்ளே வைத்து நடத்திய வன்முறையில் வெளியில் வந்த சில நாட்களிலேயே அவர்களில் சிலர் இறந்த கதையும் உண்டு.
தன் கணவனை கொன்ற அண்ணனை பழிவாங்க சபதமேற்றார் தங்கை, ஆனால் நல்ல வேளையாக அதன் பிறகு இரு குடும்பங்களுக்கிடையில் நடந்த திருமண உறவினால் தொடர் கொலைகள் விழாமல் தடுக்கப்பட்டன.
நிஜம் - 2
அந்த சாலையில் நின்றது தனியார் பேருந்து, பின் படிகட்டி வழியாக இறங்கிக்கொண்டிருந்தார் அந்த பாட்டி, அந்த பாட்டி இறங்கும் முன்பே வண்டி எடுக்கப்பட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்து இலேசான காயமடைந்து விட்டார், இதைப்போய் ஊரில் சொல்ல, அந்த தனியார் பேருந்து திரும்பிவருவதற்காக ஒரு கோஷ்டி காத்திருந்தது. அதே பேருந்து திரும்பி வந்தவுடன் அதில் ஏறினார்கள் இந்த கோஷ்டியினர், வண்டி வேகமெடுத்து செல்ல ஓட்டுனரை நெருங்கிய சிலர் பேருந்தை ஓட்டுக்கொண்டிருந்த ஓட்டுனரின் கைகளை சட்டென்று பிடித்து பின்னால் கட்டிவிட்டனர், அவர்கள் கைகளை கட்டிய சமயம் வண்டி நின்று கொண்டிருக்கவில்லை ஓடிக்கொண்டிருந்தது, வண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது, ஓட்டுனரின் கைகளை கட்டிய கோஷ்டிக்கும் பலமான அடி, வண்டி கவிழ்ந்ததில் ஒரு உயிரிழப்பு, அதே பேருந்தில் காலையில் தான் திருமணம் முடிந்து ஊருக்கு சென்று கொண்டிருந்த திருமண கோஷ்டியிலிருந்த மாப்பிள்ளை உயிரிழந்துவிட்டார்.
தங்கையின் கணவனை மச்சான் என்றும் பார்க்காமல் வெட்டி கொன்றுவிட்டு எழவு விழுந்துவிட்டது அதனால் தலைக்கு எண்ணெய் வைக்காதீர்கள் என்பவர்களை என்ன சொல்வது?
ஓடும் வண்டியின் ஓட்டுனரின் கைகளை கட்டினால் தானும் சேர்ந்து விபத்து அடைவோம் என்பது கூட தெரியாமல் ஓட்டுனரின் கைகளை கட்டியவர்களை என்ன சொல்வது?
அறிவுகெட்ட மடையன்கள் என்று கூறுவதா? முரட்டு பசங்க என்று கூறுவதா? எப்படி இவர்களுக்கு இத்தனை விழிப்புணர்ச்சியில்லாமல் போனது? எப்படி இவர்களுக்கு இத்தனை அறியாமை?
இவர்களை அறிவுகெட்ட மடையன்கள் , காட்டான்கள் என்று கூறினால் இப்படி அவர்கள் இருந்ததற்கு இருப்பதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா? சமுதாயத்தின் பங்கு இதில் எத்தனை? அவர்கள் இப்படி அறியாமையாக இருக்க யார் காரணம்? ஏன் காலம் காலமாக இந்த அறியாமை? விழிப்புணர்ச்சியின்மை? கல்வியின்மை?
இத்தனை அறியாமையுடன் இருக்கும் மக்களை எத்தனை எளிதில் பிரித்தாள முடியும், எத்தனை எளிதில் சுரண்டமுடியும், இது தான் காலம் காலமாக நடந்து வருகின்றது, இவர்களின் அறியாமையை பயன்படுத்தி சுரண்டலும் , சுரண்டுவதற்காகவே இவர்களை விழிப்புணர்சியில்லாமலும் வைத்திருக்கின்றனர், இதில் அரசியல்வாதிகள், உள் சாதி பணக்காரர்கள், வேற்று சாதி பணக்காரர்கள் என அத்தனை பேரும் அடக்கம்.
அந்த கிராமத்திலிருந்து படித்து வெளிவருபவர்களும் ஊரை மொத்தமாக தலைமுழுகிவிடுகின்றனர், இருப்பது ஒரு பள்ளிக்கூடம் அதுவும் ஐந்தாவது வரை மட்டுமே, மதிய உணர்விற்காகத் தான் அந்த பள்ளியே நடக்கின்றது, சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் அந்த ஊர் மாணவர்கள், அந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஏழெட்டு ரசிகர்மன்றங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை, தற்போது விஜயகாந்த் மாநாட்டிற்கு கைக்காசை செலவழித்து சென்று வந்துள்ளனர் சிலர்.
அவன் அப்படித்தாம்லே, அவன் காட்டானாத்தான் இருந்தான், அப்புடித்தான் வச்சிருந்தாங்க, இப்போதான் முக்கி முனகி வரான் அதுக்குள்ள காட்டானுங்க, முரடனுங்க, முட்டாபயலுங்கனு சொல்லி அவனுங்களை அப்படியே இருக்க வச்சிட கூடாது. இந்த பயபுள்ளைகளும் அந்த பயபுள்ளைகளும் இப்போதான் அடிச்சிக்காம இருக்கனும்னு நெனக்கிறான்க, அதுக்குள்ள நேத்து நீ அடிச்சிக்கிட்டியே, முந்தா நாள் வெட்டிக்கிட்டயே இன்னைக்கு என்ன பச்சோந்தி, செவப்போந்தினு சொன்னா அவனுங்க என்ன செய்வாங்க, வேணாம்யா எது சரி, எது தப்புனு அலசி ஆராய்ஞ்சி பாக்குற அளவுக்கு அவனுங்களுக்கு புத்தியில்லதான், அந்த அளவுக்கு நாகரீகமில்லாதவங்க தேன், டை கட்டிக்கிட்டு "வாட் நான்சன்ஸ்" அப்படினு மத்தவங்க பேச வரதுக்கு எத்தனை வருசம் ஆச்சி, அதுல கொஞ்சமாவது நேரம் தர்றது இல்லையா, அதுக்குள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு போயி புடுங்கினா என்ன செய்வான் அவன்.
ஏதோ ஒரு படத்துல விவேக் காமெடி அது,
"எலேய் நம்ம சங்கு சாமிய பத்தி தப்பா பேசுறான், நீ என்னலே சிரிக்கிறனு" கத்தியால குத்திட்டு
"அடேய் பங்காளி அவசரப்பட்டு செத்துட்டியேடா" அப்படினு அழும்போது எல்லாம் சிரிச்சாங்க, ஆனால் நான் மட்டும் சிரிக்கல ஏன்னா எனக்கு அதன் வலி தெரியும்.
தேவர் மகனில் கமல், சிவாஜி பேசிய வசனத்தை கொஞ்சம் நெனச்சி பாக்கலாம்
சிவாஜி : "வெட்டருவா வேல்கம்ப தூக்கிட்டு வெற்றிவேல் வீர வேலுன்ணு அலஞச பயலுக திடீர்ன்னு அவன கூப்பிட்டு விஞ்ஞானம் கத்துக்க வான்னா அவன் எப்படி வருவான் மெதுவாத் தான் வருவான்"
கமல்: "மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போலயிருக்கே?"
சிவாஜி :" போ..செத்து போ..யாரு வேணாங்குறது .எல்லா பய புள்ளையும் ஒரு நாள் செத்து போக வேண்டியது தான் .ஆனா சாகுறதுக்குள்ள நாம என்ன சாதிச்சோம்கிறது தான் முக்கியம் இன்னிக்கு நீ வெதை போடுற வெத வெதச்சவுடன பழம் சாப்பிட முடியுமோ ? நாளைக்கு உன் மகன் சாப்புடுவான் .அப்புறம் அவன் மகன் சாப்புடுவான் .அத பாக்குறதுக்கு நீ இருக்க மாட்ட .ஆனா வெத..நீ போட்டது .இது என்ன ஒவ்வொருத்தனுக்கும் பெருமையா .இல்ல..கடம"