நட்சத்திரம் - இந்த பெற்றோர்கள் சிந்திப்பார்களா?

சிங்கப்பூரில் வேலை செய்ய வருபவர்கள் பல பிரிவுகளில் வருவார்கள், Employment Pass, S Pass, EDP, WP இதில் Employment Passல் வருபவர்கள் S$2500 க்கும் மேல் சம்பளம் வாங்குபவர்கள், S மற்றும் EDP களில் வருபவர்கள் அடுத்தடுத்த நிலை, கடைசியாக WP (Work Permitt).

இதில் WPயில் வருபவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஏறக்குறைய ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபாய் இடைத்தரகர்களிடம் கொடுத்து வருகின்றனர், தற்போது இவர்கள் Skill Evaluation Test என்பதை சென்னையிலேயே முடித்து விட்டு தான் வரவேண்டும் இதற்காக பயிற்சி தர சில நிறுவனங்கள் சென்னையிலேயே உள்ளனர், அந்த மூன்று மாத கால பயிற்சி காலம் கடுமையானது, அங்கேயே தங்கியிருந்து பயிற்சி எடுக்க வேண்டும், வெல்டிங்க், பிட்டர், கம்பி கட்டும் வேலை என பல வேலைகளுக்கும் பயிற்சி தரப்படும், ஏற்கனவே வாழ்க்கையில் பல அடிகள் பட்டு எப்படியாவது சிங்கப்பூர் வந்து பிழைக்க வேண்டுமென எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு பயிற்சி எடுப்பர், உள்ளங்கை தோல்கள் எல்லாம் உறிந்து விடும் நல்ல எதிர்காலத்திற்காக வட்டிக்கு கடன் வாங்கி வருவர், அங்கே குறைந்தது ரூ 15,000 சம்பளம் OTயில் இன்னும் நிறைய கிடக்கும் எப்படியும் மாதத்திற்கு ரூ.25,000 எடுக்கலாம் என்று நம்பிக்கையூட்டப்படுவார்கள்.

வந்து இறங்கினால் ஒரு நாளைக்கு 18 வெள்ளியிலிருந்து 21 வெள்ளிவரை தான் சம்பளம் நிர்ணயிக்கப்படும், அதுவும் வேலை செய்யும் நாட்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட தினக்கூலி தான், மாதம் 30 நாளும் வேலை செய்தால் மட்டுமே கிட்டத்தட்ட ரூ14,000 சம்பாதிக்க முடியும் OT எத்தனை நாள் கிடைக்குமென்று சொல்லமுடியாது, மேலும் 30 நாளும் வேலை உண்டா என்பதும் சந்தேகமே, முதல் ஓராண்டுகாலம் வாங்கிய கடனை அடைக்கவும் வட்டி கட்டவுமே தான் சரியாக இருக்கும்.

தங்குவதற்கு மட்டுமே இவர்களுக்கு நிறுவனம் இடமளிக்கும், தங்குமிடம் ஏதேனும் ஒரு கட்டிட வேலை நடந்தால் அதனருகில் கண்டெய்னர் மாதிரி தகரத்தால் அறைகள் (புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் காண்பிப்பார்களே அது மாதிரி) அமைத்து தருவார்கள், சில சமயங்கள் டார்மெட்டரி, அதிட்டம் இருந்தால் இரண்டு அறை கொண்ட கழக வீடுகள் கிடைக்கும் (ஆனால் இதில் குறைந்தது 8 பேராவது தங்குவார்கள்). காலையில் மிகப்பெரிய பிரச்சினையே குளியலறையும் கழிவறையும் தான், இருக்கும் கூட்டத்திற்கு தகுந்த அளவிற்கு கழிவறைகள் இருக்காது.

இவர்களின் சிங்கை வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு தவ வாழ்க்கை தான், ஒவ்வொரு வெள்ளியையும்(டாலர்) கணக்கு செய்து தான் செலவழிக்கின்றனர், ஹாக்கர் சென்டர் கடைகளில் ஒரு கோப்பை தேநீரின் விலை 70 சென்ட்கள் (ஏறக்குறைய 18 ரூபாய்கள்), ஒரு தேநீர் குடிப்பதற்கு முன் பலமுறை யோசிக்கின்றனர்,

வேலை செய்யும் போது இலேசான/ சற்று பலமான காயம் ஏற்பட்டால் அதை மறைத்துவிடுகின்றனர், இது வெளியே தெரிந்தால் பாதுகாப்பு பற்றிய தெளிதல் இல்லை என பயிற்சிக்கு அனுப்பிவிடுவர் அல்லது WP ரத்து செய்துவிடுவர் என்று, இரவெல்லாம் காய்ச்சலில் படுத்துவிட்டு மறுநாள் காலையில் ஒன்றுமே நடக்காத மாதிரி வேலைக்கு சென்று வருவார்கள்.

டெங்கு காய்ச்சல் வந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கிடக்கும் போதும் துணையாருமில்லை இங்கே, ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு அங்கேயிருக்கும் பெற்றோர்களுக்கு எட்டியிருக்கும்.

இத்தனையையும் தாண்டி தினம் காலை 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை வேலைசெய்து பின் தூங்கி எழுந்து ஓட்டமாக ஓடிக்கொண்டே இருப்பார்கள், சுகாதாரமில்லாத சில இடங்களில் டெங்கு கொசுக்கள் கடித்து டெங்கு காய்ச்சல் வந்து தன்னந்தனியாக மருத்துவமனையிலிருந்து எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள்.... இவர்களில் பெரும்பாலோர் கூடுமிடம் குட்டி இந்தியா, ஞாயிறு மாலை இங்குதான் கூடுவார்கள், கிட்டத்தட்ட எல்லா பொதுத் தொலைபேசிகளும் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும், ஒவ்வெரு தொலைபேசியிலும் பேசப்படும் பேச்சு மிகப்பெருமளவில் பணம் பற்றி தான்.

ஞாயிறு மாலை பெரும்பாலானவர்கள் குட்டி இந்தியாவிற்கு செல்ல தயங்குவார்கள் கூட்டம் தான் முக்கிய காரணம், கிட்டத்தட்ட மொத்த தொழிலாளிகளும் அங்கே இருப்பார்கள், அங்கே சில உணவு கடைகள் உண்டு, மற்ற நாட்களில் அங்கு சென்றால் AC வேலை செய்து கொண்டிருக்கும், சாப்பிட வருபவர்களி நன்றாக உபசரிப்பர் மேலும் உணவு வாழையிலையில் பரிமாறப்படும், ஏற்கனவே பல முறை அங்கு சாப்பிட்டிருந்தாலும் அன்று தான் முதல் முறையாக ஞாயிறு இரவு சாப்பிட சென்றேன், அங்கே AC இயங்கவில்லை, வாழை இலை இல்லை அதற்கு பதில் பட்டர் பேப்பர் எனப்படும் உணவுகட்டும் பொட்டல தாளில் பரிமாறினர், உபசரிப்பு முறை முந்தைய நாட்களுக்கு சற்றும் தொடர்பில்லாமலிருந்தது, ஆனால் சாப்பாட்டின் விலை மட்டுமே அதே விலைதான். எரிச்சலிலும் கோபத்திலும் நேராக முதலாளியிடமே சண்டை போட்டேன், தனியாக என்னை கவனிக்க சொன்னார் பிறகு தான் கூறினார் ஞாயிற்றுக்கிழமை இப்படித்தான் இருக்குமென்றார், எப்படி இப்படி ஒரு அலட்சியம் என்றேன், ஏதேதோ காரணங்கள் கூறினார் ஆனாலும் இது அந்த தொழிலாளிகளின் மீதான அலட்சியம், இது ஒரு உதாரணம் எல்லா அலட்சியங்களையும் தாங்கிக்கொண்டு சம்பாதிக்கின்றனர், ஆனால் அனுப்பும் பணம்?

மகன் சிங்கப்பூருக்கு சென்றவுடன் என்னமோ மகன் வெளிநாட்டில் காலாட்டிக்கொண்டு சம்பளம் வாங்குவது போலவும் ஆடம்பரங்கள் தூள் பறக்கின்றன, ஐம்பது ரூபாய் வரிசை வைத்த இடத்தில் ஐநூறு ரூபாய் வரிசை வைத்து பெருமை அடிக்கின்றனர், தற்போது கிடைக்கும் இந்த சில ஆயிரம் ரூபாய்கள் நிரந்தரமல்ல, சில ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துவிட்டால் அவன் என்ன செய்வான்? அப்போது என்ன வருமானம் என்று நினைக்காமல் அள்ளிவிடுகின்றனர்.

இத்தனை நாட்கள் இருந்த மாதிரியே இன்னும் கொஞ்ச நாட்களும் இருந்து முதலில் வாங்கிய கடனை அடைக்காமல் ஏதேதோ செலவு செய்துவிட்டு பார்த்தால் கடன் இரண்டு ஆண்டுகளில் வட்டி குட்டி போட்டு நிற்கும்.

32வயதை கடந்தவர்களின் வீட்டிலும் கூட திருமண பேச்சை எடுக்காமல் இருக்கின்றனர், எங்கே இவன் ஊருக்கு வந்தால் வருமானம் நின்றுவிடுமென்பதே இதில் முக்கிய காரணம்.

தொலைபேசியில் பேசும் அந்த சில நிமிடங்களும் என்னப்பா? நல்லா இருக்கியா? சாப்பிடுறியா? என்று கூட கேட்காமல் நேரடியாக இந்த செலவு இருக்கு அந்த செலவு இருக்கு இதற்கு பணம் வேண்டும் அதற்கு பணம் அனுப்பு என்று குடைச்சல், அதனாலேயே அடிக்கடி தொலைபேசுவதற்கு பலர் அஞ்சுகின்றனர். ஒரு நாள் மிக தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்கு பேசினால் "வேலை ரொம்ப கஷ்டமா இருந்தா ஊருக்கு வந்துடா" என்று பாசத்துடன் சொல்லும் பெற்றோர்கள் ஒரு புறமிருந்தால் காசு காசு என நச்சரிக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனரே!!!

உங்கள் மகன்கள் வெளிநாட்டில் காலாட்டிக்கொண்டு சம்பாதிக்கவில்லை, வாரம் முழுதும், வருடம் முழுதும் ஓய்வின்றிதான் சம்பாதிக்கின்றனர், அதே போல் அனாவசியமாக செலவும் செய்வதில்லை, டீ குடிக்க கூட யோசித்து தான் செய்கின்றனர், காசு தேவைதான், ஆனால் மகனை காயப்படுத்தி காசு தேவையா? ஆடம்பரம் தேவையா? மகன் அங்கே சொல்லொன்னா துயரப்பட்டு சம்பாதிப்பதில் ஆடம்பரம் தேவையா?

25 பின்னூட்டங்கள்:

said...

நிதர்சனத்தை அப்படியே படம்பிடித்திருக்கின்றீர்கள். படிக்கவே கஷ்டாமியிருக்கிறது. இதை அப்படியே எடுத்து தினமலர்ல போட்டா தேவலை... பார்க்கலாம்.

said...

Gulf story too, Same. Good one kuzhali.

Workers should aware about this. because after certain age/level you cann't change parents. better to aware and avoid such circumtances.

They should send money thru NRE account. (Still many sending all amount to their parents).

Like many should be done. other wise everything will spoil(after marriage it will be a disaster if things are going same)

said...

Worthy post. Good effort. Keep it up..purushotamare!

said...

"வெற்றிக்கொடி கட்டு" படத்தில் பார்த்திபன் வடிவேலு நகைச்சுவை காட்சிகளில் எனக்குப் பிடிக்காதது வடிவேலு டாய்லட்டை சுத்தம் செய்து சம்பாதித்ததை பார்த்திபன் கேலி செய்வதுதான்.

வடிவேலு பந்தா செய்தார் ஆகவே வேண்டும் அவருக்கு என்று கூறவும் முடியவில்லை. அதற்கானக் காரணத்தில் கூட அப்பாத்திரத்தின் உள்ளூடிய சோகம்தான் நினைவுக்கு வந்து படுத்தியது.

சென்னை மணப்பாக்கத்தில் பயிற்சி அளித்து சிங்கப்பூர் மலேசியா நாடுகளுக்கு அனுப்பும் ஒரு நிறுவனத்திற்கு நான் மொழி பெயர்ப்பு வேலைக்காகச் சென்றேன். இரண்டு சீனர்கள் வந்திருந்தனர். அவர்கள் பேசிய ஆங்கிலத்தை மொழி பெயர்க்கும் வேலை. வந்த சில நிமிடங்களிலேயே முதலில் வாக்களித்த சம்பளம் அளவுக்கு நிஜமாகக் கிடைக்காது என்பது தெரிந்து போயிற்று. ஆனால் என்ன செய்வது, பயிற்சி எடுத்தவர்கள் ஏற்கனவே செலவு பல செய்து முடித்துவிட்டிருந்தனர். விதியே என்று கொடுப்பதற்கு கையெழுத்திட வேண்டியதாயிற்று.

சீனர்கள் அசந்திருந்த சமயத்தில் நான் வேகமாகத் தமிழில் பேசி நம்மவர்கள் கேட்க வேண்டிய கேள்விகளை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

யதார்த்தம் சொல்லியிருக்கிறீர்கள் .நீங்கள் சொன்னதை விட 16 வெள்ளி மட்டுமே பெறும் தொழிலாளர்களை நான் அறிவேன் .இது தொடர்பாக இன்னும் நிறைய சொல்ல வேண்டும் போல் இருக்கிறது .சமயம் கிடைக்கும் போது பார்க்கலாம்.

said...

நீங்கள் சொல்வதில் 100% உண்மை இருந்தாலும், ஒரு முக்கியமான விஷயத்தினை நீங்கள் தொடவில்லை என்பது என் தாழ்மையான கருத்து.

இப்படி வெளிநாட்டில் படும் கஷ்டங்களை யாரும் தன் உறவினர்களிடமோ அல்லது நண்பர்களிடமோ சொல்கிறார்களா? விடுமுறையில் வரும்போது எல்லாவற்றையும் மறைத்து வாசனைத் திரவியங்களும் குளிர் கண்ணாடியுமாக அங்கு படும் எல்லா துன்பங்களையும் மறைத்து விட்டால் அங்குள்ளவர்கள் எப்படித்தான் தெரிந்துகொள்வது? (நீங்கள் எழுதியதைப் படிப்பது எத்தனை பேர்? என்னை மாதிரி வெளிநாட்டில் இருப்பவர் உண்மையை கூறினாலும் நம்ப மறுப்பவர் தாம் மிகவும் அதிகம்).

வெற்றிக்கொடி கட்டு படத்தில் வரும் 'வடிவேல்' போன்றவர்கள் தாம் செய்யும் வேலையை மறைப்பது ஒரு நல்ல உதாரணம்.

இப்படிக்கு
ஒரு துபாய் தமிழன்.

said...

நல்லா சொல்லியிருக்கீங்க குழலி.. தொழிலாளர்களின் வாழ்க்கை நிதர்சனத்தை படம் பிடித்து காட்டி இருக்கிறீர்கள், அன்பு சொல்வது போல் ஏதாவது செய்தித்தாளுக்கு அனுப்பினால் இன்னும் நிறைய மக்கள் படித்து விழிப்புணர்வு அடைவர்..

*****

நட்சத்திர பதிவுகள் அருமையாக இருக்கின்றன, ஒவ்வொரு பதிவுக்கு பிறகும் உங்களின் பிம்பம் மாறிக்கொண்டே வருகிறது (என்னளவிளாவது), மிகுந்த மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் குழலி :-)

*****

சிங்கப்பூர் சுற்றுலாவைப் பற்றி ஏதாவது எழுதும் எண்ணம் இருக்கின்றதா ???

*****

said...

சிங்கப்பூர் சுற்றுலாவைப் பற்றி ஏதாவது எழுதும் எண்ணம் இருக்கின்றதா ???

நீங்கள் வருவதற்காக கேக்கறீங்களா? அல்லது இங்கு அப்படி வருகின்றவர்களைப்பற்றி கேட்கின்றீர்களா... என்று தெரிந்தால் அதற்ற்கேற்றால்போல் எழுதலாம்!

said...

உண்மையாகவே கடல் கடந்து வரும் பணம் காலாட்டி சம்பாதிப்பதால் வருகிறது என்பதுதான் நிறைய பேருடைய நினைப்பு. ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் இதுபோன்ற விஷயங்கள் பற்றி அலசப் படுவதே இல்லை. `புதுக்கோட்டை சரவணன்’ வெற்றிக் கொடி கட்டு’ போன்ற படங்கள் கூட யதார்த்ததை மிகைப் படுத்தி காட்டுவதாகவே பொருள் கொள்ளப் படுகிறது. உண்மை நிலை அதை விட மோசம் என்பது உங்களைப் போன்ற சிலர் பதிவுகளில் ஆங்காங்கே கொட்டும்போதுதானே என்போன்றவர்களுக்கே தெரிகிறது. வெகுஜன ஊடகங்களில் இது சம்பந்தமாக யாராவது கட்டுரைகள் எழுதினால் நன்றாக இருக்கும். அனுபவப்பட்டவர்கள் சொந்தக்காரர்களிடம் உண்மை நிலையைச் சொல்லவே முடியாது. பணம் சார்ந்த உதவிகளைத் தவிர்ப்பதற்காக மிகைப்படுத்தி சொல்லுவதாகவே கருதப் படும்.
அடுத்த தலைமுறையினர், வாழ்க்கையில் செட்டிலாவதை விட வெளிநாடுகளில் செட்டில் ஆவதற்கென்றே படிப்பை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள்.

said...

இன்னும் சொல்ல நிறைய இருக்குதுங்க, ஜோ சொன்ன மாதிரி, நான் தொட்டது சிறு பகுதியே, BCom படித்த தன் பையன் அக்கவுன்டன்டாக வேலை செய்ய சவுதி சென்று விசாவில் இருந்த பெயர் குளறுபடியால் ஒரு வாரம் சிறையிலிருந்து அக்கவுன்டன்ட் வேலை செய்யாமல் தெரு கூட்டி அதன் பிறகும் வீட்டிற்கு சொல்லாமல் ஒரு கட்டத்தில் பொறுக்கமுடியாமல் தீட்டு துணியை கூட்டிக்கொண்டிருக்கிறேன் என வெடித்த போது குடும்பமே கலங்கிய கதையும் இருக்கின்றது.

கொஞ்சம் பெற்றோர்கள் மனது வைத்து பொறுமை காத்தால் எல்லாம் சுகமாக நடக்கும்.

said...

//அனுபவப்பட்டவர்கள் சொந்தக்காரர்களிடம் உண்மை நிலையைச் சொல்லவே முடியாது. பணம் சார்ந்த உதவிகளைத் தவிர்ப்பதற்காக மிகைப்படுத்தி சொல்லுவதாகவே கருதப் படும்.
//
நிறைய உண்மை இதில் இருப்பதாக நினைக்கின்றேன்...

said...

குழலி,
எதுக்கு வெளிநாடு நம்ம மும்பையிலேயே இந்த சோகங்கள பார்த்திருக்கேனே. தென்தமிழக மாவட்டங்களில் இருந்து குறிப்பாக திருநெல்வேலி, ராமனாதபுரம், க.குமரியை அடுத்துள்ள கிராமங்களில் இருந்து பெரும் கனவுகளுடன் மும்பை வந்து கனவுகள் கானல் நீராக தாராவி போன்ற நரகத்தில் தினமும் வெந்து மடியும் எத்தனை இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனா குழலி சோகத்தையே கடந்த மூன்று பதிவிகளில் சொல்லிவிட்டீர்கள். போதும். சந்தோஷமாய் ரெண்டு பதிவுகளைப் போடுங்களேன். ப்ளீஸ்.

said...

// சந்தோஷமாய் ரெண்டு பதிவுகளைப் போடுங்களேன். ப்ளீஸ்.
//
சரிங்கய்யா அடுத்த பதிவின் தலைப்பு "செல்லம் ஐ லவ் யூ டா"

said...

நிஜங்களின் நிதர்சனம் மனதை வலிக்கிறது. என்ன செய்வது என்ற நிராசையும் வாட்டுகிறது :(

said...

A Very good post, neat narration, Congrats Kuzhali.

I was thinking of writing a similar writeup on Dubai... paarppoom.

said...

Good one.
More by Anbu earlier
Valaippoo 1
Valaipoo 2
Valaippoo 3

said...

குழலி, அருமையான பதிவு...மேலும், கட்டிட தொழில் மட்டுமல்ல வேறு எந்தவொரு தொழிலிலும் (பொறியியல், மென்பொருள், ஐடி) அந்தந்த தொழிலுக்குத் தகுந்த மாதிரி வேலை பளு உள்ளது. வெளிநாட்டில் யாரும் காலை ஆட்டிக் கொண்டு சம்பாதிப்பது கிடையாது.

அதை நம்மூர் நண்பர்களிடம் கூறினால் கூட..."செலவு பண்றதுக்கு பயந்துகிட்டு பஞ்ச பாட்டு பாடிட்டு போறான் பாரு...அப்படித்தான் கூறுவார்கள்.

எப்போதாவது அதிசயமாக வெற்றிக்கொடு கட்டு போன்ற திரைப்படங்கள் வருகின்றன. அதே போல் சமீப காலங்களில் வரும் "இந்தி" திரைப்படங்களில் "தேசிக்களின் வாழ்க்கை" மிகைப்படுத்திக் காட்டப்படுகிறது. அதனால் தான் திருமணம் முடிந்து வெளியூர் வரும் மனைவிமார்கள் "மிகைப்படுத்திக் கொண்ட" எதிர்பார்ப்புகளுடன் வருகிறார்கள்.

சமீபத்திய "சலாம் நமஸ்தே" ஒரு தவறான வழிகாட்டுதலான திரைப்படம்.

மற்றபடி "நட்சட்திர வாரம்" சூப்பர். தொடர்ந்து மின்ன வாழ்த்துக்கள்.

said...

சிங்கப்பூரில் WPல் வரும் சகோதரர்களின் வாழ்வு கொடுமையானதுதான். இதைப் பற்றி நிறைய பதிவுகள் வரவேண்டும்., மலேசியச் சிறைகளிலும்., சிங்கப்பூர் சிறைகளிலும் அடைக்கப் பட்டவர்கள் பற்றிய செய்தி நாளிதழ்களில் வருவதுடன் நின்று போகிறது. இவர்கள்., எப்படி வரவேண்டும், படும் பாடுகள் என்னன்ன என்பதைத் தெளிவாக விளக்கி பொது ஊடகங்களில் எழுதுங்கள் விதயம் தெரிந்தவர்கள்.

said...

தோண்டியெடுத்து இங்கு சுட்டி கொடுத்ததற்கு நன்றி பரி. நான் போன வருஷம் ஒருபாட்டம் பொழம்பி தீர்த்தேன் - இந்தமுறை நம்ப குழலி. ஆனால் அது இன்று நேற்றல்ல. மாலன் அவர்கள் நேற்றைய "சொல்லாதசொல்"லில் குறிப்பிட்டுள்ளபடி:

1937ல் சிங்கையில்் எழுதப்பட்ட பயணக்கட்டுரையில் உள்ள இந்தியக் கப்பற் பிரயாண வழிநடைச் சிந்தில் வர்ணிக்கப்படும் 'ஏஜெண்டுகளின் ஊழல்' இன்றளவும் மாறவில்லை என்பது திகைப்பைத் தருகிறது...

said...

செந்தில் தனிமடல் அனுப்பியுள்ளேன், படிக்கவும்...

நன்றி

said...

நல்ல பதிவு குழலி.

said...

சிங்கப்பூர் மனித வள அமைச்சு(Minstry Of Manpower) சிறப்பாக செயல்பட்டு வருகின்றது, பல சமயங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு MOM தலையீட்டால் நிவாரணங்கள் கிடைக்கப்பெறுகின்றன.

இந்திய தூதரகத்தை நம்புவதைவிட MOMஐ நம்பலாம்.

மேலும் சிங்கப்பூர் தொழிளாலர் நல சட்டங்கள் கடுமையானவை, MOMல் தொழிளாலர் பிரச்சினைகள் புகார் செய்யப்பட்டால் அந்த நிறுவனங்கள் கடும் நடவடிக்கையை எதிர்நோக்க நேரிடும், மேலும் maid abuse கடுமையான குற்றம், இந்த குற்றத்திற்காக பலர் தண்டிக்கப்படும் செய்திகள் நாளிதழ்களில் வருகின்றன.

பெரும்பான்மையான ஏமாற்றங்கள் இடைத்தரகர்களால் வருபவையே, அரசாங்கம் தொழிளாலர் நலனில் அக்கறை கொண்டுள்ளது.

இங்கு வேலை செய்யுமிடத்திலான பாதுகாப்பிற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகின்றது, பதிவின் நோக்கம் எத்தனையோ கஷ்டங்களுக்கிடையில் சம்பாதிக்கும் பணத்தை ஆடம்பரமாக செலவு செய்யும் பெற்றோர்களை சிந்திக்க சொல்லியே....

நன்றி

said...

குழலி,
அருமையான பதிவு.

நானும் அன்பு சொன்னதையே
// இதை அப்படியே எடுத்து தினமலர்ல போட்டா தேவலை... //

வழிமொழிகின்றேன்.

said...

Ella nadilumee ithee pirasanaikal undu, pala perror panaththaijee perithaka ninaikkurarkal unmai ,DUBAI Thamilan kooriyathupol
nadu thirumpuvor adikkum "PANTHA" ulgam thankathada raja.Palar sonnathupol naam nijam peesinalum;nammpuranka illappa.
Nalla vidayam
nanari Johan-paris

said...

அவசியமான பதிவு குழலி

இது குறித்து இன்னும் எழுதுங்கள்