இந்திய சுதந்திரம் - பெரியார்

கீற்று.காம் இணையதளத்திலிருந்து பெரியார் பேசுகிறார் பகுதியிலிருந்து எடுத்தளிக்கப்பட்டுள்ளது. (நன்றி கீற்று.காம்)

இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும், மனிதத்தன்மைக்கும் நியாயத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாததுமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும் - அவற்றுள் அவசரமாய்த் தீர்க்கப்பட வேண்டியதும், இந்தியர்கள் காட்டுமிராண்டிகள் அல்லரென்பதையும், மனிதத் தன்மையும் நாகரிகமுடையவுமான சமூகம் எனவும் உலகத்தாரால் மதிக்கப்பட வேண்டியதற்குச் செய்ய வேண்டியதும் - மற்றும் உலகத்திலுள்ள பெரும்பான்மையான நாட்டார்களைப்போலவே அன்னிய நாட்டினர்களின் உதவியின்றித் தங்கள் நாட்டைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், ஆட்சி நிர்வாகம் செய்யவும் தகுதியுடையவர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானாலும் - முதலாவதாய்ச் செய்யப்பட வேண்டிய காரியம் இரண்டு உண்டு என்று உறுதியாய்க் கூறுவோம்.

அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள பல சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கேவலமாகவும், உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும்.

இரண்டாவதானது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு, பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும், ஆண்களுக்கு அடிமையாக இருக்கக் கடவுளாலேயே சிருஷ்டிக்கப் பட்டவர்கள் என்றும் கற்பித்து, அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதை ஒழிக்க வேண்டியதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் - எந்தக் காரணத்தை முன்னிட்டும் - இந்தியாவில் இனி அரை நிமிடம்கூட இருக்கவிடக் கூடாதவைகளாகும்.

இந்தக் காரணத்தாலேதான், நாம் மேற்கண்ட இரண்டு கொடுமைகளும் அழிக்கப்படாமல் - இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் கேட்பதோ, இந்தியாவின் பாதுகாப்பையும் ஆட்சி நிர்வாகத்தையும் இந்திய மக்கள் “நாங்களே பார்த்துக் கொள்ளுகிறோம்” என்று சொல்லுவதோ, மற்றும் இந்தியாவுக்கு அன்னியருடைய சம்பந்தமே சிறிதும் வேண்டாம் என்று சொல்லுவதோ - ஆகிய காரியங்கள் முடியாதென்றும், அவை சுத்த அறியாமைத்தனமான தென்றும், இல்லாவிட்டால் - சுயநல சூழ்ச்சியே கொண்ட நாணயத் தவறான காரியமாகுமென்றும் சொல்லி வருகிறோம் என்பதோடு - இப்படிச் சொல்லும் விஷயத்தில் நமக்குப் பயமோ, சந்தேகமோ கிடையாது என்றும் சொல்லுவோம். ஆதலால்தான், இவ்வித முட்டாள்தனமானதும், சூழ்ச்சியானதுமான முயற்சிகளை நாம் எதிர்க்க வேண்டியவர்களா யிருக்கின்றோம்.

தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும் மூடத்தனமும் மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, ‘நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்’ என்று காலந் தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை. ஒருவன், அதாவது பிறரைத் தீண்டாதார் எனக் கருதிக் கொடுமைப்படுத்துகின்றவர்களை அத்தீண்டாதார்களுக்கு இருக்கும் உண்மையான கஷ்டத்தை உணரச் செய்ய வேண்டுமானால், இப்போதைய வெள்ளைக்கார அரசாங்கத்தின் கீழ் அனுபவிக்கும் கொடுமைகள் போதாது என்றும், சிறிதும் சுதந்திரமும் சமத்துவமும் அற்றதும், சதா இராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமான ஏதாவது ஒரு கொடுங்கோல் ஆட்சி இருந்தால் தான், இம்மாதிரி கொடுமைப்படுத்துகின்ற மக்களுக்கு உணர்ச்சி வந்து, புத்தி வருமென்றும் நமக்குச் சிற்சில சமயங்களில் தோன்றுவதுமுண்டு.

ஆனால், இந்தியாவை இம்மாதிரி மூர்க்கத்தனமும் நாணயக் குறைவும் மாத்திரம் சூழ்ந்து கொண்டிருக்காமல், மூடத்தனமும் சேர்ந்து கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதால், இன்னமும் எவ்வளவு இழிவும், கொடுமையும் ஏற்பட்டாலும் இம்மாதிரியான மக்களுக்கு உண்மையான துன்பத்தை உணரத்தக்க நிலைமை வருவது கஷ்டமாக இருக்கும். என்றாலும், இந்நிலை மாறுதலடையக் கூடும் என்ற உறுதியை உண்டாக்கத்தக்க நம்பிக்கை கொள்வதற்கு இடமில்லாமல் போகவில்லை.

இனி, பெண்கள் விஷயத்தில் அவர்களுடைய சுதந்திரத்தையும் உணர்ச்சியையும் கட்டிப் போட்டிருக்கும் கொடுமையானது - இது போலவே, இந்தியர்களுக்குச் சுதந்திர உணர்ச்சியே இல்லை என்பதைக் காட்டவும், அவர்கள் அடிமைகளின் குழந்தைகள் என்பதை ஒப்புக்கொள்ளவும் ஆதாரமானதென்றுதான் சொல்லவேண்டும்.

எப்படியெனில், இவ்விரண்டைப் பற்றி இந்திய விடுதலைவாதிகள், சுதந்திரவாதிகள், சுயேச்சைவாதிகள், தேசியவாதிகள், மக்கள் நல உரிமைவாதிகள் என்கின்ற கூட்டத்தார்களுக்குச் சிறிதும் உண்மையான கவலை இல்லாவிட்டாலும், மேற்கண்ட கூட்டத்தார்களில் 100-க்கு 90 பேர்களுக்கு மேற்பட்டவர்கள் சுயநலங் கொண்ட நாணயமற்றவர்களாகவே காணப்படினும் - இவர்களது முயற்சி இல்லாமலும் சிலசமயங்களில் மேற்கண்ட சுயநல சூழ்ச்சிவாதிகளின் எதிர்ப்பிற்கும், இடைஞ்சலுக்கும் இடையிலும் வேறு ஒரு வழியில் கொடுமைகள் அனுபவிக்கும் மேற்கண்ட இரு வகையாருக்கும் விமோசனம் ஏற்படுவதற்கு அறிகுறிகள் ஆங்காங்கு காணப்படுகின்றதைப் பார்க்கச் சிறிது மகிழ்ச்சி அடைகின்றோம்.

('பகுத்தறிவு’ - 1938)

-----------------------------
நீதிமன்றங்களின் செயல்பாடுகள் மேலும் மேலும் நம்பிக்கையிழக்க வைக்கின்றன, நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக செயல்படுகின்றன, இன்றோ சட்டத்தின் முன்னும் எல்லோரும் சமமல்ல, தெய்வத்தின் முன்னும் எல்லோரும் சமமல்ல ஆனால் வெள்ளையனின் முன் எல்லோருமே அடிமைகள் தான் என்ற சம உரிமையாவது ஆகஸ்ட்-15,1947க்கு முன் கிடைத்தது, இப்போது அதற்கும் வழியில்லை, சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் கூட எல்லோரும் சமமில்லாத போது இந்த சுதந்திரம் எதற்காக? யாருக்காக? யாருக்கோ கிடைத்த சுதந்திரத்தை எப்படி கொண்டாட முடிகிறது?

ஆளுக்கொரு நீதி இங்கே, சாதிக்கொரு நீதி இங்கே, தொடர்புடைய சுட்டிகளும் இங்கே

நீதி வேண்டுமா? பேருந்தை கொளுத்து, கலவரம் செய்....
இந்தியாவின் புனித பசு

3 பின்னூட்டங்கள்:

said...

தன் இனத்தாரை விட வேறு யாருக்கும் திறமையில்லை என்றும், மற்ற இனத்தவர்களுக்குத் திறமை வந்து விடக்கூடாது என்று நினைப்பவர்களுக்கும்......
என்றுதான் பெரியார் சொல்கிறார்

said...

//சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் கூட எல்லோரும் சமமில்லாத போது இந்த சுதந்திரம் எதற்காக? யாருக்காக? ///

Don't you know the answer??

Hope u know..

said...

//சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் கூட எல்லோரும் சமமில்லாத போது இந்த சுதந்திரம் எதற்காக? யாருக்காக? யாருக்கோ கிடைத்த சுதந்திரத்தை எப்படி கொண்டாட முடிகிறது?//

நல்ல கேள்வி!!!