இந்த கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ அல்ல, சில நேரங்களில் சுயவிமர்சனங்கள் தேவைப்படுகின்றன, அப்படியானதொரு சுயவிமர்சனம் தான் இது...
மதங்கள் எப்படி தோன்றியிருக்கும் அது எப்படி மிகவும் இறுக்கமானதாக மூர்க்கமானதாக மாறியிருக்கும் என்பது பற்றி பல நேரங்களில் விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதை எனக்கு தற்போது முழுமையாக செய்முறையாக விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் சில பெரியாரிஸ்ட்கள்...
எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொறுந்தக்கூடிய கருத்தோ நியாயமோ இருக்கவே முடியாது, எனவே எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது, ஆனால் எல்லா மதங்களும் சொல்வது அவர்களின் புனித நூல்கள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் எப்போதுமே பொறுந்தும் என்பதே...
புரியாத சடங்குகள் பற்றிய புரிதலை கொடுத்தது ஒரு ஜென் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஒரு ஜென் துறவி தம் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பார், அப்போது அவர் வளர்த்துக்கொண்டிருந்த பூனை இதற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது, எனவே ஜென் துறவி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு அந்த பூனையை பிடித்து கட்டி போட சொன்னார். ஒரு நாள் ஜென் துறவியும் இறந்து போக கொஞ்ச நாளில் பூனையும் இறந்து போக புதிதாக பொறுப்புக்கு வந்த துறவி வகுப்பு எடுக்கும் முன் சீடர்களை பார்த்து கேட்டாராம் ஏன் இன்று பூனையை கட்டி போடவில்லை என்று, அதற்கு பூனை செத்து போயிவிட்டது என்றார்களாம், அதனாலென்ன இன்னொரு பூனையை வாங்கிக்கொண்டு வந்து கட்டி போடுங்கள் உங்களுக்கு தெரியாதா வகுப்பு எடுக்கும் முன் பூனையை கட்டிப்போடுவது நம் பெரிய துறவி ஏற்படுத்திய வழக்கமென்று...இந்த கதை சடங்குகள் எப்படி ஒரு புரிதலின்றி நடத்தப்படுகின்றது என்பதை புரியவைக்கும்.
ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.
விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை
கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணை ஒரு பெரியாரிஸ்ட் திருமணம் செய்கிறார் அதெப்படி கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம் நீயெல்லாம் ஒருபெரியாரிஸ்ட்டா என இன்னொரு பெரியாரிஸ்ட் விமர்சிக்கிறார், அப்படியென்றால் ஒரு பெரியாரிஸ்ட் இன்னொரு பெரியாரிஸ்ட்டை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் போல அடடே இப்படி தானே ஒரே மதத்திற்குள் மட்டுமே திருமண உறவுகள் என்று மதங்கள் தங்களை இறுக்கிக்கொள்கின்றன.
பெரியார் திருமணத்தை பற்றியும் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைக்கிறார் அவர் பெண் விடுதலை என்ற நோக்கில் இதை நெறி செய்கிறார், ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள் (சிலர் இதை பெண்களிடம் நூல்விட பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேறு கதை), பெண் விடுதலை என்பதன் அடிப்படையிலேயே பெரியார் அதை சொல்லியிருப்பார் அவரே திருமணமும் செய்திருக்கார், ஆனால் இவர்கள் பெண் விடுதலையை தூக்கிப்போட்டுவிட்டு திருமணமும் குழந்தையும் வேண்டாமென்று பெரியாரின் கருத்துகளை உதிர்த்துவிட்டு வார்த்தைகளாக மட்டுமே பின்பற்றிகிறார்கள் வேதங்களை பின்பற்றுவது போல.
எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது, இப்படியாக சிறு வயதிலிருந்தே மதத்தை போல பழக்கப்படுத்தப்படும்போது(புரிந்து தெளிந்து ஏற்றுகொள்பவர்களை குறிப்பிடவில்லை) எப்படி மதவாதிகளால் அவர்கள் மதத்தை தாண்டி பார்க்க இயலாதோ அதே போல இவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.
மிஷனரி கல்வி நிறுவங்கள், இந்து மடம் கல்வி நிறுவங்கள் போன்றவற்றில் மதப்பிரச்சாரம் வலிந்து திணிக்கப்படுகிறது என்று விமர்சித்துக்கொண்டே பெரியார் மணியம்மை கல்லூரியில் மாணவிகளின் பெட்டிகள் திறந்து பார்க்கப்படுகின்றன சாமி படம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று, மாணவிகள் கடவுள் நம்பிக்கையுடன் உள்ள சின்னங்களை அணிய அனுமதிப்பதில்லை(கல்லூரியில் இல்லையென்றாலும் விடுதியிலாவது அணுமதிக்கலாமே?)படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.
ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?
இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.
பெரியாரின் எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும் பெரியாரின் எழுத்துகளையே தங்கள் தலைமை திணித்துள்ள வாரிசை ஏற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள், மதவாதிகள் எல்லாவற்றையும் அவர்களின் வேத நூலில் இருந்தே எடுத்து நியாயப்படுத்துவதை போல.
தமிழ் ஓவியா அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு ஒருவர் உரையாடியில் கேட்டார்
--------------------
10:11 PM நண்பர்: thala
tamiloveiya post la periyar solli irukiratha potirukare athu nijama?
10:13 PM me: யெஸ்
100% அவர் சொன்னது தான்
நண்பர்: kodumai :)) ithuku karunanithi better
-------------------
மற்றொரு நண்பர் உரையாடியில் பேசியது
1:05 PM நண்பர்: என்ன கொடுமை தலைவா இது
me: edhu?
நண்பர்: இப்படி பட்ட மீனிங்கா பெரியார் சொன்னார்? தமிழ் ஓவியா பதிவு பற்றி
me: எதை சொல்றீங்க
1:06 PM அதுக்கு தான் சொன்னேன் தாலிபான் என்று தல
1:07 PM நண்பர்: பெரியாரும் ஒரு கும்பலை இப்படி ஆக்கி வைத்திருக்கிறாரே என்று
வருத்தம் வருகிறது :(
1:08 PM me: இல்லை
நண்பர்: இயக்கத்துக்குள் பகுத்தறியக்கூடாதா??
me: உலகத்தில் எதுவுமே எக்காலத்துக்கும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும்
பொறுத்தமான சரியான ஒன்று உலகில் எப்போதுமே இல்லை
1:09 PM பெரியாரின் எழுத்துகள் மட்டுமின்றி எல்லோருடையதும் அபப்டித்தான்
நண்பர்: மந்தையாய் வாழ்வதே இயக்கம் மாதிரி அர்த்தமாயிடுச்சே தமிழ் ஓவியா சொல்வது
:(
me: சூழ்நிலைகளையும் எம்மாதிரியான தருணங்களில் சொல்லப்பட்டது
என்பது முக்கியம்
---------------------
ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.
ஒரு முறை திரு.வீரமணி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது கீழ் வெண்மணி கொடுமை நடந்த பின் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்ய சொல்லி அறிக்கை விட்டாரே சரியா என்று கேட்ட போது திரு வீரமணி அவர்கள் கூறியது என்னவெனில் அதை அப்படியே இன்றைக்கு சொன்னது போல எடுத்துக்கொள்ள கூடாது, எந்த சூழலில் அதை சொன்னார் என்று கவனிக்க வேண்டும், அப்போது தான் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்துள்ளார், அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமென திட்டத்தில் பலர் இதை காரணமாக வைத்து பிரச்சினைகள் செய்தனர் என்றார். அப்போது புரிந்து கொண்டேன் பெரியாரை பிழையாமை வேண்டும் என்று ஆனால்
தமிழ் ஓவியா அவர்கள் பெரியார் கூறிய இயக்க கட்டுப்பாடு பற்றி கூறிய கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை சொல்லாமல் மொட்டையாக பெரியார் வார்த்தைகளை போட்டதால் பெரியார் மிக மோசமான கருத்தை சொன்னதான தோற்றம் நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது, பெரியார் ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம். பெரியார் எந்நிலையில் அதை கூறினார், திராவிடர் கழகம் என்ற சமூக விடுதலை இயக்கத்தை அதன் அடிப்படையிலிருந்து அதை விலக்கி அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு கருவியாக அண்ணாதுரை அவர்கள் பயன்படுத்த விரும்பியதும் அதற்கு திராவிடர் கழகத்தினுள்ளேயே பெரும் ஆதரவு உருவாகியதுமான (பின்னே அதிகாரம் பெறுவதென்றால் ஆதரவுக்கா பஞ்சம்) நிலையில் கருத்தாடல்கள், அறிவுஜீவித்தனம், விவாதம் என்ற பெயரில் கழகத்தின் அடிப்படையான சமூக விடுதலை இயக்கம் என்பதிலிருந்து விலகி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற அண்ணாதுரைக்கு ஆதரவு திரட்டப்படுவதுமான சூழலில் பெரியார் இப்படியான கருத்துகளை தெரிவித்தார், அப்படியான ஒரு சூழலா இன்று இயக்கத்தில் உள்ளது? இவர்கள் தங்கள் தலைமையின் மீதான விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்த பெரியாரின் எழுத்துகளை பயனபடுத்துகிறார்கள்...
இந்த மாதிரியாக நடந்துகொள்ளும் பெரியாரிஸ்ட்கள் புரிந்து ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டிய பெரியாரியத்தை மதங்களை போல பழக்கத்திலும் புரிந்து கொள்ளாமலும் பின்பற்றுவது பெரியாரியத்தையும் இன்னொரு மதமாக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் என்றே தோன்றுகிறது, கருப்பு சட்டை போடுவதும் 'மானமிகு' என்று அழைத்துக்கொள்வதையும் சடங்காக்கிவிடாதீர்கள்...