தேர்தல் முடிந்தவுடன் எழுத நினைத்த பதிவு நாளாகிவிட்டது, தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியுமோ இல்லையோ பத்திரிக்கைகள் புண்ணியத்தில் விஜயகாந்த் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது என்றால் சட்டென்று சொல்வார்கள் 28 இலட்சமென்று, அவர் கட்சி வாங்கிய வாக்குகள் 8.32%, அதாவது நூற்றுக்கு எட்டு வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள், பொதுவாக சதவீதத்தில் பேசும் நம் பத்திரிக்கைகளுக்கு என்ன ஆனது வாக்கு எண்ணிக்கை கணக்கில் பேசுகின்றனர், ஏன் வேறு யாருமே இதற்கு முன் முதல் தேர்தலில் 8% வாக்குகள் பெறவில்லையா? என்றெல்லாம் கேட்டால் பத்திரிக்கைகள் விஜயகாந்த்தை வைத்து செய்யும் அரசியல் தெரியும்.
சில புள்ளிவிபரங்களோடு இந்த கட்டுரை உள்ளது, முழுதும் படிக்க முடியாதவர்கள் பதிவின் கடைசியில் சில கேள்விகள் உள்ளன, அதை மட்டுமாவது படிக்க வேண்டுகிறேன்.
இந்த தேர்தலின் போது இருந்த சூழல் முதலில் கணக்கிலெடுத்தால் பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசின் மீது 1996ல் இருந்தது போன்ற மிகப்பெரும் எதிர்ப்பெதுவும் இல்லை, அதே சமயம் 1991 போல திமுக மீதான எதிர்ப்பு (ராஜீவ் காந்தி கொலை அனுதாப அலை) எதுவும் இல்லை, பொதுவாக தமிழக தேர்தல்கள் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை விட யார் தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதுவே வெற்றி தோல்வியை முடிவு செய்யும், 1996 தேர்தலில் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படக் கூடாது அதனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் வாக்குகள் சிதறக்கூடாது என்றே திமுகவிற்கு முன்னெப்போதும் வாக்களிக்காதவர்கள் கூட திமுகவிற்கு வாக்களித்தனர், இது பாமக, மதிமுக போன்ற கட்சிகளையும் பாதித்தது, ஆனால் தேர்தல் அலையின் போது தோல்வியின் பக்கத்தில் இருக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளே அவர்களின் உண்மையான வாக்கு வங்கி பலம், இந்த தேர்தலில் அது மாதிரியான அலை ஏதும் இல்லாததால் மக்களிடம் யார் வரக்கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லாததால் அவர்களின் விருப்பம் போல வாக்குகள் விழுந்தன, அப்படி திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென விஜயகாந்த் பக்கம் சென்றவர்கள் அதிகம், அதிமுக மீது 1996ல் இருந்த வெறுப்போ, திமுக மீது 1991ல் இருந்த வெறுப்போ இந்த தேர்தலில் இருந்திருந்தால் விஜயகாந்த்க்கு விழுந்த வாக்குகள் குறைந்திருக்கும்.
2006 சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 70.82% வாக்குபதிவு இருந்தது, 2001 சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு 59.07%, முந்தைய தேர்தலைவிட 11.75% கூடுதல் வாக்கு பதிவு. மூன்று கோடியே முப்பது இலட்சத்து அய்யாயிரத்து நானூற்று தொன்னூற்றிரண்டு (3,30,05,492) பதிவான வாக்குகளில் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள்.
முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை.
பாமகவிற்கு கிட்டத்தட்ட இதே போன்றதொரு சூழல் நிலவியது 1989 பாராளுமன்ற தேர்தலில்(1991,96 தேர்தல்களில் அலை வீசியது, 2001,2006 தேர்தல்களில் கூட்டணி இருந்ததால் அவைகளை இந்த ஆய்வில் கணக்கில் எடுக்க வில்லை) , மதிமுகவிற்கு 2001 தேர்தலில் இந்த சூழ்நிலை நிலவியது.
1989 பாராளுமன்ற தேர்தல் புள்ளி விபரம்
பதிவான வாக்குகள் 2,67,63,788
செல்லத்தக்க வாக்குகள் 2,63,99,730
செல்லாத வாக்குகள் 3,64,058
இதில் பாமக பெற்ற வாக்குகள் 7.06% (15,61,371) 33 இடங்களில் போட்டியிட்டது (32 தமிழகம், 1 பாண்டிச்சேரி)
போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.06%
1991 ராஜீவ்காந்தி கொலை அனுதாப அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.00% (1 இடம் வெற்றி, 29 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)
1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வா 7.61% வாக்குகளும் பெற்றது. (4 இடங்களில் வெற்றி, 17 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)
மாநிலம் முழுவதற்கும் மொத்தமாக போட்டியிடாத இடங்களுக்கும் சேர்த்து (தமிழகம் 5.82% + பாண்டிச்சேரி 6.63%)
2006 தேர்தல் புள்ளி விபரம்
பதிவான வாக்குகள் 3,30,05,492
செல்லத்தக்க வாக்குகள் 3,29,91,555
செல்லாத வாக்குகள் 5,828
போட்டியிட்ட இடங்களில் விஜயகாந்த் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 8.45%
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 1.39% கூடுதலாக பெற்றுள்ளது.
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 0.84% கூடுதலாக பெற்றுள்ளது.
1இடத்தில் அதுவும் விஜயகாந்த் மட்டும் வெற்றி, 9 இடங்களில் மட்டுமே விஜயகாந்த் கட்சி பிணைத்தொகை திரும்ப பெற்றுள்ளது
223 இடங்களில் விஜயகாந்த் கட்சி பிணைத்தொகையை இழந்துள்ளது.
வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள ஒரு கட்சி (33 பாராளுமன்ற தொகுதிகள் என்றால் மாநிலத்தில் 85% இடங்களில் போட்டியிட்டுள்ளது) பெற்ற வாக்குகளைவிட மாநிலம் முழுவதும் செல்வாக்குள்ளதாக நம்பவைக்கப்படும் ஒரு கட்சி பெற்ற அதிக வாக்குகள் வெறும் 1.39%, பத்திரிக்கைகள் போடும் கணக்கில் பார்த்தால் கூட இன்றைக்கு கூடுதலாக வாக்கு பதிவையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இருபது இலட்சம் வாக்குகள் வந்து சேரும், ஆனாலும் இன்று பத்திரிக்கைகள் விஜயகாந்த் பெற்ற வாக்கு சதவீதத்தை சொல்லாமல் 28 இலட்சம் 28 இலட்சம் என ஏதோ ஒரு இமாலய சாதனை போல் பிம்பம் ஏற்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது. மேலும் 232 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி 223 தொகுதிகளில் பிணைத்தொகையை பறி கொடுத்துள்ளது, வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே பிணைத்தொகை மீள கிடைத்துள்ளது. ஆனால் பாமக 1991,96 தேர்தல்களில் முறையே 29, 17 இடங்களில் பிணைத்தொகையை மீளப்பெற்றுள்ளது.
கிட்டத்தட்ட இதே நிலைதான் மதிமுக வுடன் விஜயகாந்த் கட்சியை ஒப்பிட்டு நோக்கும் போதும், தமிழகத்தில் நான்காம், ஐந்தாம் இடத்திலிருக்கும் பாமக, மதிமுக கட்சிகளைவிட பெரிய அளவில் தேர்தலில் எந்த சாதனையும் செய்யாத விஜயகாந்திற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பர பிம்பமும் விஜயகாந்த்தை பத்திரிக்கைகள் தூக்கிவிட முயற்சிப்பதன் உள்நோக்கத்தையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இப்போது என் முன் இருக்கும் கேள்விகள்
1) வெறும் 8.45% பலமுள்ள விஜயகாந்த்தை எப்படி அவரைப்போல மூன்று பங்கு பலமுள்ள ஜெயலலிதா, கருணாநிதியோடு போட்டியாளராக காண்பிக்கின்றார்கள்?
2) காங்கிரசின் வாக்கு பலம் எந்த நிலையிலும் 10% குறைந்ததில்லை என்னும் போது எந்த கணக்கை வைத்து விஜயகாந்த்தை மூன்றாவது பெரிய கட்சி என்கிறார்கள்?
3) திரைப்பட பிரபல செல்வாக்கினால் ஆந்திராவில் கட்சி ஆரம்பித்த என்.டி.ராமராவ் சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார், இங்கே தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் ஆட்சியை பிடித்தார், இப்படி எதுவுமே இல்லாமல் வெறும் 8% வாக்குகள் பெற்றவரை பத்திரிக்கைகள் சாதனையாளராக காண்பிப்பதின் உள் நோக்கமென்ன?
4) கூட்டணி இல்லாமல் பிறகட்சிகளை போட்டியிட அறைகூவல் விடும் விஜயகாந்த்துக்கு எல்லோரும் தனித்தனியாக போட்டியிட்டால் வட மாவட்டங்களில் 1,2,3 இடங்களை திமுக, அதிமுக, பாமகவும் தென்மாவட்டங்களில் அதிமுக, திமுக, காங்கிரசும், மேற்கு மாவட்டங்களில் திமுக,அதிமுக, மதிமுக வும் பங்கிட்டுக்கொள்ளும் என தெரியாதா? டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்களும், சில தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், புதியதமிழகமும் பங்கிட்டுக்கொண்டால் ஒற்றை இலக்க தொகுதிகளில் கூட மூன்றாம் இடம் கூட கிடைக்காது என்பது விஜயகாந்த்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் தெரியாதா?
5)முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை என்னும் போது பத்திரிக்கைகள் எப்படி அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன?
6) சில நாட்களுக்கு முன் நடைபெற்ற புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் காரைக்கால் நகராட்சி தலைவராக தேமுதிக கட்சியின் பிரபாவதி வெற்றி பெற்றார், இதை பத்திரிக்கைகள் மிகப்பெரிதாக பேசின இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் பத்திரிக்கைகள் கேள்வி கேட்ட போது முதல்வர் கூறினார் பிரபாவதி காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் தான் தேமுதிகவில் போட்டியிட்டார் என்றார், இதற்கு தேமுதிகவின் வெற்றியை சிறுமை படுத்திவிட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தார், அதே பிராபாவதி விகடனுக்கு அளித்த பேட்டி கீழே, அதில் தான் செய்த சமுதாயப்பணிதான் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றது என கூறியுள்ளார், இப்போது விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த், பிரபாவதியை கட்சியை விட்டு நீக்குவாரா?
7)சென்ற ஆண்டு புதிதாக கட்சி ஆரம்பித்தவுடன் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய முயன்றபோது ஏகப்பட்ட குழப்பம், சரியாக விதிகளை கடைபிடிக்கவில்லை என்று, இப்போது 8.32% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்து "முரசு" சின்னத்தை தக்க வைக்க வாய்ப்பிருந்தும் சரியாக தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று தேவையான நடைமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக, தன் கட்சியின் வெற்றியை, அங்கீகாரத்தை கூட பதிவு செய்யாமல் இருந்துவிட்டு இப்போது திமுகவின் சதியால் முரசு சின்னம் கிடைக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் வேறு, தன் சொந்த கட்சியின் எதிர்காலத்தின் முக்கியமான விடயத்திலேயே அலட்சியமாக இருந்தவர் முதல்வரானால் என்ன நிர்வாகத்திறமையோடு இருப்பார்?
8) பத்திரிக்கைகள் இழந்து போன தங்கள் சமூகத்தின் 'ராஜரிஷி' பட்டத்தை ரஜினியிடம் முயற்சித்து பின் வீணாகி இப்போது விஜயகாந்த்தை கொண்டு மீட்கலாம் என நினைப்பது தான் இத்தனை தூரம் தூக்கிபிடிக்க காரணமோ?
இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு கோடியே தொன்னூறு இலட்சம் நகர்புறவாக்களர்களும், இரண்டு கோடியே அறுபத்தியெட்டு இலட்சம் கிராமப்புற வாக்காளர்களும் உள்ளனர், நகர் புற வாக்காளர்களுக்கு ஆளுக்கு ஒரு ஓட்டும் , கிராமப்புறத்தில் ஆளுக்கு நான்கு ஓட்டு (பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்) களும் ஆக மொத்தம் (2.68X4 = 10.72 கோடி) மொத்தத்தில் கிட்டத்தட்ட 12.68 கோடி வாக்குகள், இதில் விஜயகாந்த் ஒரு இலட்சம் வேட்பாளர்கள் நிறுத்தியுள்ளார், ஆளுக்கு 50வாக்குகள் என மொத்தம் 50 இலட்சம் வாக்குகள் பெற்றால் கூட "இரட்டிப்பானது விஜயகாந்த் பலம்" என பத்திரிக்கைகள் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை வசதியாக மொத்தம் 12.68 கோடி வாக்குகள் என்பதை மறைத்துவிட்டு.
References:
http://www.eci.gov.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1991/StatisticalReport_Tamil_Nadu91.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1996/StatisticalReport_TN96.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2001/Stat_Rep_TN_2001.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2006/StatReport_TN_2006.pdf
http://www.vikatan.com/jv/2006/oct/04102006/jv0304.asp
சன் தொலைக்காட்சி (அக்டோபர் 04, 2008 இரவு 8.00 மணி செய்திகள்)