கேசவன் சார் - கோட்டா கதை
"சார், ஏ.பி. சார்"
குரல் கேட்டு கதவை திறந்தார் அப்பா, கேசவ் சார் குரல்தான் அது, அப்பாவோட ஸ்கூல்ல ஒன்னா வேலை செய்யிற மேக்ஸ் வாத்தியார், அவர் பையன் கூட எங்க ஸ்கூல்தான், இங்கிலிஷ் மீடியம் அவன்.
"வாங்க வாங்க கேசவ் சார், உட்காருங்க"
அம்மா வந்து வரவேற்றார்
"வாங்க சார், டீ சாப்புடுங்க"
"இல்லமா இப்போதான் சாப்புட்டு வந்தேன்"
பொதுவாக யார் வேண்டாமென்றாலும் வற்புறுத்தி எல்லோரையும் டீ சாப்பிட சொல்லும் அம்மா கேசவ் சாரை அதுக்கு மேல ஒரு தடவை கூட டீ சாப்பிட சொல்லலை.
"என்னப்பா படிச்சிக்கிட்டு இருக்க, லீவ் நாள்ல கூட படிக்கிற"
"என்ட்ரன்ஸ் எக்சாமுக்கு படிக்கிறேன் சார்"
"ம்.... என்ட்ரன்ஸ்லாம் டஃப்பா இருக்கும், நல்லா படி"
"சொல்லுங்க சார், நல்லா சொல்லுங்க, கோச்சிங் க்ளாஸ் போயிட்டு வர்ற நேரம் போக மீதி நேரம் பூரா கிரிக்கெட்டு கிரிக்கெட்டு தான் சார் இவனுக்கு"
அப்பா எப்பவும் இப்படித்தான் ஊட்டுக்கு வர்றவங்ககிட்ட என் மானத்தை வாங்குறதே வேலை இவுருக்கு, எவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு படிச்சாலும் வர்றவங்ககிட்ட கொறை சொல்றதே வேலை.
அடிபட்ட அவமானமாக அம்மாவை பார்த்தேன், இதென்ன புதுசா, எப்பவும் நடக்கறது தானே கண்டுக்காத என்பது போல அம்மா பரிவாக பார்த்தார்.
சென்ட்டர்ல வக்கிற மாடல் டெஸ்ட்ல பர்ஸ்ட் ரெண்டு ரேங்க்ல வந்தா பேரை போர்டுல எழுதிப்போடுவாங்க, இந்த வாட்டியும் மணிமேகலைக்கிட்ட பர்ஸ்ட் ரேங்க்கை உட்டுறகூடாது எப்பிடியாவது பர்ஸ்ட்டு வந்துடனும், வைராக்கியத்தோடு ரூம்ல போய் படிக்கலாம்னாலும் ஹால்ல என்ன பேசிக்கிறாங்கங்கறதுலயே ஆர்வம் இருக்கு
"எந்த கோச்சிங் சென்ட்டர்க்கு போறான் பையன்"
"முனிசிபால்ட்டி ஸ்கூல்ல அசோசியேசன்ல நடத்துறாங்களே அங்க தான் சார் போறான், ஒங்க பையனும் +2 தானே, எங்க சேத்துருக்கிங்க"
"மெட்ராஸ்ல எக்ஸெல் கோச்சிங் சென்ட்டர்ல சேத்துருக்கேன், அய்யாயிரம் ஃபீஸ் புடுங்கிட்டாங்க, அண்ணன் வீட்லருந்து கோச்சிங் போறான்"
"இவனும் சொன்னான், ஆனா அவ்ளோ பணமும் கட்ட முடியாது, மெட்ராஸ்ல தங்கி படிக்கவும் யாருமில்லை, இவன் எப்பிடியாவது படிச்சி இஞ்சினியர் ஆயிட்டான்னா என் கடனே தீர்ந்துடும் சார்"
"ஒங்குளுக்கு என்ன சார் கொறச்சல், எங்கள மாதிரியா, அதான் கெவர்மெண்ட்டே கோட்டா குடுக்குதே அப்புறம் என்ன சார்"
அம்மா மட்டும் சரேலென உள்ளே சமயலறைக்கு சென்றார், அப்பாவோ மேலே என்ன பேசுறதுனு தெரியாம தெகச்சி போயிட்டார்.
"சரி அத உடுங்க சார், என்ன இந்த பக்கம் காத்து அடிக்குது"
"ஒன்னுமில்ல, உண்ணாமலை யுனிவர்சிட்டி செட்டியார் பி.ஏ. கஜேந்திரன் ஒங்க சொந்தக்காரர்தானே"
"நெருங்கிய சொந்தமெல்லாம் இல்லை, எங்க மச்சான் பொண்ணெடுத்த ஊருல ஏதோ சொந்தம்"
"இல்ல, என் பையனுக்கு உண்ணாமலையில ஒரு பி.இ. சீட்டு வாங்கனும், அதான் செட்டியார் பி.ஏ.வை வச்சி சீட்டு வாங்கிடலாம்னு"
"அட அங்க எல்லாமே காசுதான் சார், யாரை புடிச்சாலும் நடக்காது, நம்ம சொந்தகாரன், ஜாதிகாரன் இருந்தா கூட எவனும் ஹெல்ப் பண்ணமாட்டாங்க"
"அது தெரியுங்க, நம்பகமா காசு தந்து சீட் கன்ஃபார்ம் பண்ணனுமில்லை, வேற யாரு மூலமாவது போயி காசும் போயி சீட்டும் கெடைக்கலைனா"
"நான் வேணா என் மச்சான்கிட்ட சொல்றேன் சார், அந்த லிங்க்ல செட்டியார் பி.ஏ.வை புடிக்க முடியுதானு பாப்போம், ஆனா நான் என் பையன்கிட்ட சொல்லிட்டேன் ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன் இல்லனா பாலிடெக்னிக்குல சேத்துடுவன்னு"
"அட ஒங்குளுக்குதான் கோட்டாவே இருக்கு, நீங்க எதுக்கு சார் பேமெண்ட் சீட்டுக்கு போகப்போறிங்க"
அம்மா உள்ளே பாத்திரத்தை உருட்டும் சத்தம் அதிகமாகவே கேட்டது
கேசவ் சார் போன பிறகு அம்மா அப்பாவிடம் சண்டைக்கு போனார்,
"அதான் மொதல்லயே ஒங்களுக்கு கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு குத்தி காமிச்சாரே, அப்புறமும் எதுக்கு ஃப்ரீ சீட்டு கெடைச்சாதான் படிக்க வைப்பேன்னு சொன்னிங்க, திரும்பவும் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லிட்டு போறாரே, நீங்க எப்பவும் இப்புடித்தான் எகனை மொகனையா வாயவுட்டு வாங்கிக்கட்டிக்கறது"
"அட விடு சுந்தரா, இவர் ஸ்கூல்லயே இப்படித்தான் என்னையும் பி.கே. சாரையும் சொல்லுவாரு, ஒங்களுக்கு என்னா சார் கோட்டா இருக்கு கோட்டா இருக்குனு சொல்லுவாரு"
ஏதோ மொனவிக்கிட்டே அம்மா உள்ள போனாங்க
------------------
மூச்சிரைக்க சைக்கிள நிறுத்திட்டு உள்ள ஓடிவந்தேன்
அம்மா வாசல்லயே இருந்தாங்க, என்னை பார்த்துட்டு சைக்கிள் நிறுத்துற நேரம் கூட பொறுக்க முடியாம கேட்டாங்க
"என்னடா எவ்ளோ மார்க்கு?"
அம்மா பாஸானு கூட கேக்கலை, எனக்கு பாஸ் பண்றதுலாம் ஒரு மேட்டரேயில்லைனு அம்மாவுக்கு தெரியும்
"தொள்ளாயிரத்து தொண்ணுத்தி ரெண்டுமா"
சட்டென்று அம்மா முகம் இருண்டது
"என்னடா ஆயிரம் மார்க்கு கூட வாங்கலையா? இந்த மார்க்குக்கு சீட்டு கெடைக்குமாடா"
என் சத்தம் கேட்டு அப்பாவும் தங்கச்சியும் வந்தாங்க
"அம்மா நீ டென்ஷனாகாத, தமிழ், இங்கிலிஷ்லதான் மார்க்கு கம்மி, சப்ஜெக்ட்ல எல்லாத்துலயும் நூத்தி எண்பதுக்கும் மேல, மேக்ஸ்ல நூத்தி எண்பத்தஞ்சி"
அம்மா, அப்பா, தங்கச்சி என எல்லார் மொகத்திலயும் அப்போதான் நிம்மதி வந்துச்சி
"சரி சரி செவப்புகோடு வாங்குன கதையா இதுல மார்க்கு வந்துருக்குனு என்ட்ரன்ஸ்ல உட்டுடாத"
அப்பாவுக்கு எப்பவும் திருப்தி இருக்காது, நாலாவதுல ஒரு தடவை ரொம்ப வெளையாட்டுத்தனமா இருந்து ஃபெயிலாயி ரேங்க்கார்டுல மார்க்குக்கு அடியில செவப்பு கோடு போட்டு இருந்ததை இன்னும் சொல்லிகாமிச்சிக்கிட்டே இருப்பார்
"அப்பா"
"என்னடா?"
"கேசவன் சாரை பார்க்கும்போது சொல்லுங்க, கணக்குல பெயிலா போனா கோட்டா இல்லைனாலும் இஞ்சினியர் சீட்டு கெடைக்காதுன்னு"
"என்னடா சொல்லுற"
"கேசவன் சார் பையன் கணக்குல ஃபெயிலு"
அன்றைக்கு தெரியாது கோட்டா ஜல்லியடிக்கிற நிறைய கேசவன் சாருங்களை வாழ்க்கையில பாக்கப்போறேன்னு