திமுக தலைவர் பதவி பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது
இன்று திமுக தலைவர் பதவி வழக்கம் போல பத்தாவது முறையாக ரெனியூ செய்யப்பட்டது...
என்ன இருந்தாலும் திமுக வின் உட்கட்சி சனநாயகம் சும்மா தூள் தான், இதே பாருங்க அதிமுகனா பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமா செல்வி ஜெயலலிதாவுக்கு, பாமக தலைவர் பதவி முதலில் தீரன் அப்புறம் கோ.க.மணி அது யாரா இருந்தாலும் மருத்துவரய்யா கை காண்பிப்பவருக்கு தான், ஆனா பாருங்க திமுக தான் உட்கட்சி சனநாயகத்தை பேணும் ஒரே கட்சி, கலைஞரை எதிர்த்து தலைவர் பதவிக்கு யாரும் மனுதாக்கல் செய்யலைன்னா கலைஞர் என்னங்க செய்வார்... எப்படியோ உட்கட்சி சனநாயகத்தை காப்பாத்திட்டாங்க...ஆமாம் மூணு வருசம் முன்னால தலைவர் தேர்தல் அன்னைக்கு அறிவாலயம் பரபரப்பா இருந்ததாமே? சேலம் வீரபாண்டியாரால... இன்னைக்கு ஒன்றுமில்லையா?
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திமுகவின் தலைவராக 10வது முறையாக முதல்வர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுச் செயலாளராக அன்பழகனும், புதிய பொருளாளராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டனர்.
திமுக உள்கட்சித் தேர்தல்கள் நடந்து வருகின்ரன. இன்று தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் தேர்வு நடைபெற்றது.
தலைவர் பதவிக்கு கருணாநிதி, பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகன், பொருளாளர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் ஆகியோரது பெயர்களில் மட்டும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் கூடியது. கூட்டத்தில் அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அதில், தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக அன்பழகன், பொருளாளராக ஸ்டாலின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து மூன்று பேருக்கும் ஆளுயர மாலைகள் அணிவிக்கப்பட்டன. முதல்வர் கருணாநிதிக்கும், அமைச்சர் அன்பழகனுக்கும், மு.க.ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி ஆசி பெற்றார்.
பின்னர் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக முன்னணியினர், இயக்குநர் பாக்யராஜ், போட்டி மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் உள்ளிட்டோர் நீண்ட வரிசையில் நின்று மூன்று தலைவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வாழ்த்தினர்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் காலில் விழுந்து ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.