தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது சிறுகதை, இந்த சிறுகதைக்கு முதலில் நான் வைத்திருந்த பெயர் தேவர்களும் கால்களும், அதையும் விட வளர்சிதை மாற்றம் என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருக்கலாம்...
வில்லின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் நாணைப்போல அந்த கிராமமுமில்லா நகரமுமில்லா நகரின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் அந்த இரட்டை சாலை தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருக்கும் தேவர்கள் வாழும் கல்லூரி சாலை, பல்கலைகழகம், கலைக்கல்லூரி, பொறியியல்கல்லூரி, பாலிடெக்னிக், மேலாண்மை கல்லூரி, உடற்பயிற்சி கல்லூரி என அந்த சாலையின் வலப்புறம் முழுதும் கல்லூரிகள், இடப்புறமோ விடுதிகளோடு, மரணவிலாஸ், மெரைன், ப்ளைட் என்று ஆங்காங்கே சில பெட்டிகடைகள் டீ கடைகளோடு, அந்த இரட்டை சாலையின் மையத்தில் உள்ள குழல் விளக்கு கம்பங்கள் மாணவர்களின் குறி பார்த்து எறியும் திறமையின் மௌன சாட்சிகளாய் , மாலை முழுதும் தேவர்களும் தேவதைகளும் மரங்களின் அடியில் பல பிரச்சினைகளை அலசியபடி 'அப்புறம்' 'அப்புறம்' என்ற அர்த்தம் பொதிந்த பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் கடலை போடும் அழகே அந்த சாலையின் அழகின் ரகசியம்.
நேற்று வரை ஃபைவ் லேம்ப்ஸ், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, ராம்நகர் என பேசிக்கொண்டிருந்தவர்கள் GRE நுழைவுத்தேர்வுக்கான புத்தகம் வாங்கிய உடனே கலிபோர்னியாவும்,நியூயார்க்கும் அவர்களின் வாயில் புகுந்து வந்தன, இது தான் கடைசி வருடம் என ஒவ்வொரு வெள்ளிகிழமையும் சவேரா சென்று பீர் அடித்துவிட்டு சிக்கன்-65 வர தாமதமானதற்கு பார் பணியாளரிடம் சண்டை போட்டு இராத்திரி முழுவதும் 'முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒர்ரி முஸ்தபா' என பாடி கத்தி அழுது களைத்து அதே சவரா உணவகத்திற்கு மறு நாள் மதிய உணவிற்கு தோழியோடு செல்லும் போது சீக்கிரம் சிக்கன்-65 கொண்டு வந்த பணியாளனை எரிச்சலாக பார்த்து மூன்று மணி நேரம் மதிய உணவு உண்ணும் போதாவது காதலை சொல்ல வேண்டுமென்ற கனவோடு தூங்கிக்கொண்டு சிலர், 'செமி கிராக் ஹாஸ்டல்' என மாணவிகள் செல்லமாக அழைக்கும் 'செமி சர்க்கிள் ஹாஸ்டலின்' ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவரும் கனவுலகிலிருக்க விடுதியின் உணவுக்கூடம் காலையில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது திடீரென அதிர்ந்தது கணேஷின் குரலால்.
"டேய் சின்ன பையா காலையிலே அங்கே என்னடா கரைச்சல் " ஆறுமுகம் என்கிற சமையலரின் சத்தத்திற்கு ஓடி வருகிறான் சின்னபையன் என்கிற உதவியாளன்
"கணேஷ் சார், இட்லி நல்லா இல்லைனு சத்தம் போடுறாரு அண்ணே"
"அவருக்கு இதே வேலையாயிடுச்சி, நெதம் நெதம் மெஸ்ல கரைச்சல் குடுத்துகிட்டு, நீ போயி 115ல மெஸ் ரெப் இருப்பாரு கூட்டிகினு வா"
"மெஸ் ரெப்பு சார், ரெப்பு சார்"
இன்னும் 10 மாதம் கழித்து பிரிய போகிற சோகத்தை நேற்றே பிழிந்து மானிட்டர் மப்பில் அழுது படுத்திய காட்ஸ் (இங்க பலருக்கும் சொந்த பெயர் மறந்து பட்ட பெயர் தான் கூப்பிட) காலைபரப்பி தூங்கிக்கிடக்க, தலை பாரத்தோடு கதவை திறந்தான் மெஸ் ரெப்,
"என்னடா காலையிலே..."
"சார் கணேஷ் மெஸ்ல சத்தம் போடுறாரு"
"யாரு கட்டை கணேஷா?"
"ஆமாம் சார்"
"என்னவாம்"
"இட்லி நல்லாயில்லையாம், ஆறுமுகம் அண்ணன் உங்களை கூப்பிட்டு வர சொன்னாரு"
"சரி நீ போ, நான் வரேன்"
சத்தம் போட்டு கொண்டிருந்த கட்டை கணேஷை சமாதானப்படுத்திய படி
"கட்டை என்னடா பிரச்சனை?"
"இட்லியை பாருடா, கல்லு மாதிரி இருக்கு, மனுஷன் சாப்பிடுவானா இதை?"
"சரி கொஞ்சம் இரு நான் குக் கிட்ட பேசறன்"
"என்னத்த பேசற இதைத்தான் ஒரு மாசமா பேசுற, மெஸ் ரெப் எலக்ஷன்ல நின்னப்ப என்ன சொல்லி ஜெயிச்ச நீ, மெனு மாத்துறன்னு சொன்னியே, மெனு மாத்தினயா?"
"ஏற்கனவே வார்டன் கிட்ட பேசிட்டேன், சீக்கிரம் மாத்திடலாம்"
"என்ன சீக்கிரமா மாத்திடலாம், இவ்ளோ நாள் என்ன பண்ண, வார்டனுக்கு பயந்துகிட்டயா, ஜால்ரா?"
"கட்டை வேண்டாம், சும்மா பிரச்சினை பண்ணனும்னு பேசறியா, மெஸ் எலக்ஷன்ல நீ தோத்ததை மனசுல வச்சிகிட்டு தெனம் மெஸ்ல பிரச்சினை பண்றியா?"
"யாரு பிரச்சினை பண்றது, மெனு மாத்துறேன் மாத்துறேன்னு சொன்னியே மொதல்ல அதை செய், மெனு என்னனு பசங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணியா? உன் இஸ்டத்துக்கு மெனு மாத்தலாம்னு நெனக்கிறியா? காமன் ஹால் மீட்டிங் போடு நான் அங்க பேசிக்கிறேன்?"
"டேய் யாரு சொன்னா என் இஸ்டத்துக்கு மெனு மாத்துறேன்னு, சரி விடு, இன்னிக்கு நைட் மீட்டிங் போட்டுடலாம்"
"நைட் பசங்க இருக்க மாட்டாங்க இப்பவே போடு"
"பசங்க நிறைய பேரு தூங்கறாங்க, இப்போ கூப்பிட்டா எவனும் வரமாட்டான்"
"அப்போ மதியம் போடு"
"சரி மதியம் காமன் ஹால் மீட்டிங்ல பேசலாம், இப்போ சத்தம் போடாம சாப்பிட்டு போ வேற இட்லி வாங்கிக்க"
"வேற இட்லி வாங்க எங்களுக்கு தெரியும் நீ போ"
மதியம் உணவு முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக காமன் ஹால் என்கிற தொலைகாட்சி அறையில் விடுதி மாணவர்கள் கூட்டம் சேர்ந்தது.
"பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, இங்கே நாம் கூடியிருப்பது நம் மெஸ் மெனுவைப் பற்றி டிஸ்கஸ் செய்ய" காட்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையில் இலேசாக தட்டி
"டேய் காட்ஸ், போ போய் உட்காரு" மெஸ்ரெப்
"பப்ஸ் கொஞ்சம் செக் பண்ணு பசங்க இன்னும் வராங்களானு, மீட்டிங் ஆரம்பிக்கலாம்" மெஸ்ரெப்
"ஓகே மச்சி நீ ஸ்டார் பண்ணு" பப்ஸ்
"ப்ரெண்ட்ஸ், இந்த இயர் நாம மெஸ் மெனு மாத்தனும்னு வார்டன் கிட்ட பேசினேன்"
"மெஸ் சாப்பாடு கேவலமா இருக்கு, குவாலிட்டி சுத்தமா நல்லா இல்லை" கட்டை கணேஷ்
"அதுவும் பேசிட்டேன் வார்டன்கிட்ட"
"ஆனா ஒன்னும் புண்ணியமில்லையே, நீ எப்பவுமே வார்டனுக்கு ஜால்ரா அடி" கணேஷ்
"கணேஷ், நீ எதுக்கு இப்போ தேவையில்லாம பிரச்சினை பண்ற, என்ன ஜால்ரா அடிக்கிறாங்க, இங்க பேசிக்கிட்டு இருக்கோமில்ல"
"இங்க பாரு நீ மெஸ்ரெப்பு ஆயி ஒரு மாசமாச்சி, என்ன கிழிச்ச" கணேஷ்
"டேய் கட்டை நீ போன வருசம் மெஸ் ரெப்பா இருந்து என்ன புடுங்கின?" பப்ஸ்
"பப்ஸ், கொஞ்சம் பேசாம இரு, கணேஷ் அடாவடியா பேசாத மொதல்ல மெனுவை டிஸ்கஸ் செய்வோம், அப்புறம் ஃபுட் குவாலிட்டி பத்தி வார்டன் கிட்ட பேசினேன், குவாலிட்டி இன்கிரீஸ் செஞ்சாலும், மெனு மாத்தினாலும் கண்டிப்பா மெஸ் பில் கூடும்னு சொன்னாரு"
"கூடட்டுமே, காமன் ஷேரிங் தானே, நாம கட்டுவோம்"
"எவ்ளோ கூடும்? " பாயிண்ட் பிரபு
"எப்படியும் இரு நூறு ரூபாய் மாசத்துக்கு கூடும் " மெஸ்ரெப்
"இருக்கட்டுமே, இரு நூறு தானே கூடும், நல்ல சாப்பாடு வேணும், அவ்ளோதான்" கணேஷ்
"என்ன சொல்றீங்க" மற்றவர்களையும் பார்த்து கேட்டான் மெஸ் ரெப்
"பரவாயில்லை நூறு,இரு நூறு ஜாஸ்தி வந்தாலும் நாங்க கட்டுறோம்" என பல குரல்கள் எழுந்தன
"மச்சி, அப்படியே மாசம் ரெண்டு தடவை சிக்கன் போட சொல்லுடா"
"சரி சொல்றேன்"
மெஸ் மெனுவை இறுதி செய்துவிட்டு கூட்டம் கலைந்தது.
அறை எண் 115ல் மெஸ்ரெப்பின் மந்திராலோசனை கூட்டத்தில்
"மச்சி, கட்டை கணேஷ் ஓவரா போறான்" காட்ஸ்
"அவன் தோத்த கடுப்புல ரொம்ப பிரச்சினை பண்றான், அவனை தட்டி வைக்கனும்" பப்ஸ்
"நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டிங்களா? இங்க பாரு டிபார்ட்மெண்ட் செகரட்ரி நம்ம கேங், ஜென்ரல் ரெப்பும் நாம தான், NSS செக்ரட்டரியும் நாம தான், கல்சுரல் பங்ஷன் நடத்தனும், ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தனும், கேம்ப் நடத்தனும், இதுல கட்டை கேங் கிட்ட சண்டை போட்டா இதையே சாக்கா வச்சி எதையும் நடத்த விடாம மேனேஜ்மன்ட் செய்துடுவாங்க, ஏற்கனவே எப்படிடா இந்த கல்ச்சுரல்சை நிறுத்தறதுனு காலேஜ்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க, அதனால கொஞ்சம் பொறுமையா போங்க"
"ஆமா நீ இப்படியே பருப்பு மாதிரி பேசு, அப்புறம் ஒருத்தவனும் நம்மள மதிக்க மாட்டான்" காட்ஸ்
கதவை தட்டி உள்ளே வந்தான் பாயிண்ட் பிரபு.
"வாடா பாயிண்ட்டு என்ன இந்த பக்கம்" மெஸ்ரெப்பு
"சும்மா தான் பாக்கலாம்னு வந்தேன்"
"என்ன பாயிண்ட்டு காலேஜ் முடிஞ்சி டெய்லி கடலை தானாமே" காட்ஸ்
"ஹா ஹா..."
"இல்ல எதுனா டவுட் கேட்பாங்க சொல்லி தருவேன்"
"டேய் பாயிண்ட்டு கிட்ட மெஷின் டிசைன் டவுட் கேளுங்கடா, பாயிண்ட் பாயிண்டா அடிப்பான் பாரு"
"பாயிண்ட்டு அது நம்ம பெரிசு ஆளு, அதனால பார்த்து கடலை போடு"
"எப்ப இங்க வந்தாலும் இப்படியே ஓட்டுறிங்க, சரி நான் அப்புறம் வரேன்" பாயிண்ட்
மந்திராலோசனை அப்படியே கடலை போடுவதையும், கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர் எனவே அங்கே போவதன் சாதக பாதகங்களையும் இடையிடையே கட்டை கணேஷ் கேங்கை தட்டுவதையும் பற்றி பேசி சில மணி நேரம் கழித்து மரணவிலாசில் டீ குடித்து மாலை உலாவை ஆரம்பித்தனர்.
"பப்ஸ், வண்டியெடுத்துக்கிட்டு வா, சும்மா ஒரு ரைட் போகலாம்"
இரு சக்கர வாகனத்தில் ஏறியபடி
"பிள்ளையார் பட்டியா?" பப்ஸ்
"இல்ல மச்சி கண்டனூர் பக்கம் போ, எப்பவும் பிள்ளையார் பட்டியே போனா போர் அடிக்கும்"
கண்டனூரையும் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்க இருள் கவிழ்ந்த நேரத்தில்.
"பப்ஸ் வண்டியை நிறுத்து, சைட்ல இருக்கே அந்த பாருக்கு போ"
"உனக்கு என்ன வேணும்?"
"எனக்கு பீர் மட்டும் போதும், உனக்கு"
"ஒரு எம்சி கட்டிங், மிக்சர் வாங்கிக்க, நல்ல வேளை காட்ஸ் கடலை போட போயிட்டான், அவன் வந்திருந்தா அவ்ளோதான் இன்னைக்கும் அழுது இம்சையை பண்ணிடுவான்"
"ஹா ஹா... "
கடையினுள் நுழைந்து கடைபணியாளனிடம்
"ஒரு கல்யாணி பீர், ஒரு எம்சி கட்டிங் குடுங்க" பப்ஸ்
கடைபணியாளன் திரும்பிய அந்த நொடியில் இருவரும் அதிர்ந்தனர், பணியாளனாக பாயிண்ட் பிரபு
"டேய் பாயிண்ட், இங்க என்னடா பண்ற"
"அது அது..."
"டேய் நீ என்ன என்ன பண்ற இங்க"
" தப்பா நெனச்சிக்காதிங்க, ஒரு நிமிஷம் இருங்க, சரக்கு தரேன்"
"டேய் அது இருக்கட்டும் என்ன செய்ற இங்க இப்போ நீ"
"மணி தம்பி, கடைய கொஞ்சம் பாத்துக்கோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்" பாயிண்ட் பிரபு சரக்கை எடுத்துக்கொண்டு பப்ஸையும் மெஸ் ரெப்பையும் அழைத்தான்
" வாங்க இந்த பக்கமா, உள்ள பார் கிடையாது, பின்னாடி அந்த கட்டடத்துல உக்காருவோம்" ... பாயிண்ட் பிரபு
"என்னடா பாயிண்ட், இங்க என்ன பண்ற அத சொல்லு" பப்ஸ்
"பார்ட்டைமா வேலை செய்றண்டா"
"ஏன்?"
"தினம் 10ரூவா தருவாங்க, அப்புறம் இந்த பணம் என் படிப்புக்கும் உதவியா இருக்கு, வீட்டுலருந்து வாங்குற பண பாரத்தை கொஞ்சம் கொறைக்கலாம்னு தான்"
"அதான் ஏன் டா"
"நான் உங்கள மாதிரி பணக்கார பசங்க இல்ல"
"டேய் நாங்க எங்கடா பணக்கார பசங்க, நாங்க மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் பேமிலி தான்டா"
"இல்லடா, நான் இங்க படிக்கறதே ஸ்காலர்ஷிப்ல தான், நம்ம காலேஸ் கவர்மென்ட் காலேஜ், அதனால் ஃபீஸ் கம்மி, இல்லைனா எனக்கெல்லாம் எஞ்சினியரிங்லாம் கனவு தான் டா. ஊருல கூட ஸ்கூல் நேரம் போக மீதி நேரம் லாட்டரி டிக்கெட் விப்பேன், நாங்க ரொம்ப ஏழை ஃபேமிலிடா இப்ப கூட அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கித்தான் படிக்கிறேன் டா"
"அதுக்காக..."
"நீங்க தெனம் சாப்பாடு நல்லா இல்லை சாப்பாடு நல்லா இல்லைனு மெஸ் தொட்டியில கொட்டுறிங்களே, அந்த சாப்பாடுதான் நான் இத்தனை வருஷத்தில சாப்புடுற நல்ல சாப்பாடு, மதியம் மெஸ் மெனு மாத்துற மீட்டிங்ல கூட நெறய பசங்க சொன்னாங்க, நூறு இரு நூறு பெரிய காசில்லை, சாப்பாடு நல்லா இருக்கனும்னு, எனக்கு நூறு இரு நூறு பெரிய காசுடா, நான் ஒரு ஒரு நூறு ரூபாய்க்கும் மாசம் அஞ்சு ரூபா வட்டி கட்டனும்"
"அடப்பாவி மீட்டிங்ல சொல்ல வேண்டியது தானே" மெஸ்ரெப்
"இல்ல, அங்கேயே ஆளுக்காளு இது பெரிய காசா அப்படினு பேசினாங்க, நான் அப்படியே அப்போஸ் செஞ்சாலும் என்னை விரோதியா பாப்பானுங்க, இல்லனா எல்லா காரணத்தையும் நான் சொல்லனும், அதான் நான் மீட்டிங்ல சொல்லை, அப்புறம் உன் ரூமுக்கு வந்தேன் சொல்லலாம்னு, உங்க கேங்கே அங்க இருந்து கலாட்டா செஞ்சிங்க, அதான் சொல்லலை, வந்துட்டேன், நீங்களும் என்னை பத்தி யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்கடா"
"சரி நாங்க யார்கிட்டயும் சொல்லலை, மெஸ் பில்லும் ஏறாது, கவலைப்படாதே" மெஸ்ரெப்
கனவு உலகின் மற்றொரு பரிமாணம் தெரிய வர அது வரை தரை காலில் படாமல் மிதந்த இரண்டு தேவர்களின் கால்களும் தரைக்கு இறங்கியது.