தேர்தல் 2006 - கடலூர் – முக்கூடலூர்

கடலூர், பழைய தென்னாற்காடு மாவட்டம் தற்போதைய கடலூர் மாவட்டத்தின் தலைநகர், கடலூர் தொடர்பான சில தகவல்களை பார்த்துவிட்டு பிறகு தொகுதி நிலவரத்திற்குள் நுழைவோம், தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, உப்பனாறு என்று மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் என்பதால் கூடலூர் என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டு கடலூராக மாறியது இதனை ஆங்கிலத்தில் எழுதும் போது cuddalore என்றே எழுதுகிறோம், இது முற்காலத்தில் நடு நாடு என்று அழைக்கப்பட்டது, கடலூர் மழை மறைவு பிரதேசம் மாதிரி ஒரு வளர்ச்சி மறைவு பிரதேசம், இன்றைக்கு சென்னைக்கு கிடைத்த தலைநகர் வாழ்வு கடலூருக்கு தான் கிடைத்திருக்க வேண்டும் ஆங்கிலேயா ஏகாதிபத்தியத்தை நிறுவிய இராபர்ட் கிளைவு முதலில் இருந்தது கடலூரில் தான், கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக கடலூர் செய்ன்ட்.டேவிட் கோட்டை செயல்பட்டது அதன் அருகிலேயே 24கிலோ மீட்டர் தூரத்தில் பிரெஞ்சு காலனி தலைமையிடம் பாண்டிச்சேரி இருந்தது, பிரெஞ்சு படைகளினாள் கடலூர் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானது, தலைமையிடம் தாக்குதலை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பது இயலாது என சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை பாண்டிசேரி நகரம் கடலூர் நகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு வகையில் தடையாகவே உள்ளது, கடலூரில் விற்கப்படும் பெட்ரோல் 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பாண்டிச்சேரி எல்லையில் விற்கப்படும் பெட்ரோலிலிருந்து ஓரிரு ரூபாய் அதிகமாக இருக்கும், மதுவும் பாதிக்கு பாதி விலை பாண்டிச்சேரியில், வரிச்சலுகையினால் எல்லா பொருட்களுக்கும் விலை பாண்டிச்சேரியில் சற்று குறைவாகவே இருக்கும் அதனால் கடலூர் வரவு செலவுகளில் பாதி பாண்டிச்சேரியில் நடைபெறும்.

108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரம் (திருவஹீந்தபுரம்) கோவில் வரலாற்று புகழ் பெற்றது, அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு இலங்கைக்கு பறந்த போது அதிலிருந்து விழுந்த மலைதான் திருவந்திபுரம் (கேப்பர் மலை) என்றும் சொல்வார்கள், திருப்பாதிரிபுலியூர் பெரிய கோவிலும் வரலாற்று புகழ் பெற்ற கோவில், கல்லில் கட்டி கடலில் எறிந்த தேவாரம் தந்த அப்பர் (எ) திருநாவுக்கரசர் கரையேறியது கடலூரில்.

முற்காலத்தில் இது நடு நாடு என்று அழைக்கப்பட்டது, பிறகு தென்னாற்காடு மாவட்டமாகி தற்போது கடலூர் மாவட்டமாகியுள்ளது.

தமிழகத்தின் நான்கு துறைமுகங்களில் கடலூர் துறைமுகமும் ஒன்று, தமிழகத்தின் ஐந்து மத்திய சிறைச்சாலைகளில் கடலூர் சிறைச்சாலையும் ஒன்று, மனிதர்கள் சுவசிக்க தகுதியில்லாத நச்சு காற்று வீசுமிடத்தில் தமிழகத்திலேயே முதலிடம், அதிக அளவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலைகள் கடலூரின் காற்றை,நீரை, மண்னை நச்சு படுத்தி வருகின்றன, இது தொடர்பான எனது முந்தைய பதிவு மடியில் இரசாயன குண்டு, நகைக்கடைகளின் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே இரண்டாவது இடம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் பிறந்த ஊர், பிரபல கடத்தல்காரன் மஸ்தான் கடலூரை சேர்ந்தவர் என கேள்விப்பட்டுள்ளேன், கடலூரின் குற்ற வரலாறு என்றால் முதன் முதலில் நீதிமன்றங்களில் நீதிபதியின் முன்பே வைத்து வெட்டும் கலாச்சாரம் தொடங்கியது கடலூரில், சாராய சங்கிலிக்கொலைகள் சில கிராமங்களில் ஆண்களே இல்லாத அளவிற்கு மாறி மாறி கொலைகள் செய்து பழிவாங்கிக்கொண்டனர், சாதி மோதல்களுக்கு பிரபலமான கடலூரில் பாமக, விடுதலை சிறுத்தைகளின் கை கோர்ப்பு, தலித் வன்னிய மக்களுக்கிடையே ஆரம்பித்துள்ள புரிதல்களினால் தற்போது சாதி மோதல்கள் இல்லை

விவசாயம், மீன் பிடித்தல், கைத்தறி நெசவு ஆகியவை முக்கிய தொழில்கள் கல்விக்கூடங்களின் எண்ணிக்கை தரம் ஆகியவைகளில் முண்ணனியில் இருப்பவை கிறித்துவ மிசனரி பள்ளிகளே, நூற்றாண்டுகால பாரம்பரிய கிறித்துவ பள்ளிகள் கடலூர் மக்களுக்கு கல்வியறிவளித்ததென்றால் மிகையாகாது, பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் 50மீட்டர் தொலைவில் இருக்கும் இருந்தாலும் எத்தனையோ மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முயற்சித்தும் இரயில்வே மேம்பாலம் கட்ட முடியாமல் வியாபாரிகள் தடுக்கின்றனர்.

நூறு நாட்கள் ஓடும் திரைப்படங்களெல்லாம் கடலூரில் காண முடியாது, எனக்கு தெரிந்து தொன்னூறு நாட்களுக்கு மேல் ஓடியபடங்கள் என்றால் விஜய டி ராஜேந்தரின் சம்சாரசங்கீதமும் , ராமராஜனின் கரகாட்டகாரனும், மேலும் இங்கு திரையரங்குகளின் எண்ணிக்கையும் மிக குறைவு (நகரினுள் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை ஆறு) 20 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட கிருஷ்ணாலயா திரையரங்கம் கடலூர் நகரத்தில் தொடங்கப்பட்ட கடைசி திரையரங்கம், பேருந்து நிலையத்தின் அருகிலிருந்த முத்தையா திரையரங்கம் தற்போது வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளது, இதே கால இடைவெளியில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் நகரங்களில் கிட்டத்தட்ட 20 திரையரங்குகள் உள்ளன, ஆனாலும் கடலூரில் நடிகர்களின் ரசிகர் மன்றங்களுக்கு எந்த குறைவும் இல்லை.

கடலூர் நகரம், துறைமுகம் தவிர்த்து மீதி அனைத்தும் கிராமங்கள் அடங்கிய தொகுதி, நகர வாக்குகளும் கிராம வாக்குகளும் சரி சமமாக இருப்பதால் இரண்டு மக்களின் வாக்குகளையும் பெறுபவர் தான் வெற்றியடைய முடியும் என்ற நிலை, வன்னியர்கள் அதிக அளவிலும், தலித்கள் அதற்குக் அடுத்த அளவிலும், மீனவர்கள் பிற சமூகத்தினர் என்ற வரிசையில் எண்ணிக்கை உள்ளது. இங்கு திமுக, அதிமுக,பாமக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் என்ற வரிசையில் கட்சிகளின் பலம் உள்ளது, 1989ல் காங்கிரஸ் தனித்து நின்றபோது 20,000 வாக்குகள் பெற்றதும் அதில் 10,000 வாக்குகள் இன்னமும் காங்கிரசிடமே இருப்பதும் காங்கிரசின் கூட்டணியின் முக்கிய பங்கை உணர்த்தும், சீனுவாசப்படையாட்சி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார் வன்னிய சமூகம் இவரின் பின் நின்றது அதன் பிறகு அவரது மகன் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள் காங்கிரசில் தொடர்ந்தார், ஆனால் பண்னையார்களுக்கு சேவகம் செய்த பண்னையார் விசுவாச மனோபாவம் வன்னிய மக்களிடமிருந்து மாறியதும் இன்னமும் காரைவிட்டு இறங்காமல் வாக்கு கேட்ட பி.ஆர்.எஸ்.வெங்கடேசனின் பண்ணையார் முறை வாக்கு சேகரிப்பும் பாமகவின் தோற்றமும் காங்கிரசின் வாக்கு வங்கியை வெகுவாக குறையச்செய்தது, பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் 1989, 1996ல் பாராளுமன்ற உறுப்பினராகவும் 1991ல் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் 2001ல் திமுக மற்ற இடங்களிலெல்லாம் தோற்ற போதும் வெறும் 34 வாக்குகளில் (தமிழகத்திலேயே இது வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆக குறைந்த வாக்கு வித்தியாசம்) வெங்கடேசன் வெற்றியை இள.புகழேந்தி (திமுக)யிடம் இழந்தார் வலுவான வாக்கு வங்கியுள்ள அதிமுக,காங்கிரஸ், பாமக கூட்டணி இருந்த போதும் வெங்கடேசனை எதிர்த்து அரசியல் செய்த பாமக ஒத்துழைக்காததும், அப்படியே பாமகவினர் வாக்கு கேட்டபோதும் ஏற்கனவே பண்ணையார் முறை அரசியலாலும், சொந்த சாதிக்கு எதிராக செயல்படுகின்றார் என்ற எரிச்சலும் சேர்ந்து கொண்டதால் பலர் வெங்கடேசனுக்கு வாக்களிக்காமல் தவிர்த்தனர், விளைவு விடுதலை சிறுத்தைகளின் பலத்த ஆதரவினாலும் திமுகவின் செல்வாக்கினாலும் புகழேந்தி சட்டமன்றம் சென்றார்.

புகழேந்தியின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம் பலத்த எதிர்ப்புக்கிடையில் ஆரம்பித்தது, செள.பத்மனாபன் 1989ல் கடலூர் திமுகவின் முக்கியபுள்ளி, அனைவரும் எளிதாக அனுக முடிந்த அரசியல்வாதி, தைரியசாலி, எதையும் நேருக்கு நேர் பேசுபவர், புகழேந்தியின் தந்தை இரெ.இளம்வழுதி கலைஞரின் ஆரம்பகால நண்பர், கலைஞருக்கு தோள் கொடுத்தவர், 1989 தேர்தலில் சௌ.பத்மனாபன் திமுக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த சமயத்தில் கட்சிக்கு அறிமுகமே இல்லாத இள.புகழேந்தி போட்டியிட்டார், வெகுண்டெழுந்த பத்மனாபன் கலைஞரை எதிர்த்து கலைஞரிடமே நேரடியாக வாதம் செய்து பேசினார் (ஏற்கனவே நான் இதை கேள்விப்பட்டிருந்த போதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு பேருந்தில் வந்த போது இந்த விடயத்தை என் இருக்கைக்கு முன் அமர்ந்திருந்த இருவர் பேசிக்கொண்டு வந்தனர்) திமுகவை விட்டு வெளியேறி சுயேட்சையாக பானை சின்னத்தில் போட்டியிட்டார் சொந்த பலத்தினால் 5000 வாக்குகள் பெற்றார், இதன் பிறகு பாமக உதயமான பொது பத்மனாபன் பாமகவில் சேருவார் என எண்ணியபோது பாமகவில் சேராமல் அமைதி காத்தார், அதன் பின் மதிமுக உருவானபோது மதிமுகவில் சேர்ந்து மாவட்ட செயலாளர் ஆனார், சென்ற தேர்தலில் மற்ற தொகுதிகளில் இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் பெற்ற மதிமுக கடலூரில் மட்டும் ஏழாயிரத்தி சொச்சம் வாக்குகள் பெற்றது, இதில் 5000 வாக்குகள் பத்மனாபனுக்கான வாக்குகள் பத்மனாபன் நின்றால் மட்டுமே கிடைக்கும்வாக்குகள், பத்மனாபன் போட்டியிடாத போது திமுகவிற்கு போகும் வாக்குகள் இவை. மதிமுக-அதிமுக கூட்டணியில் பத்மனாபன் கடலூரில் போட்டியிட்டிருந்தால் களம் தூள் பறந்திருக்கும்.

கடலூரில் 1980க்கு பிறகு முதன் முறையாக அதிமுக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது, இரட்டை இலை 26 வருடங்களுக்கு பிறகு (ஒரே ஒரு பாராளுமன்ற தேர்தல் தவிர்த்து) சுவர்களில் தெரிகிறது, அதிமுகவின் பலமென்றால் அது மீனவ மக்கள் தான் முதலில் மீனவ சமுதாய தலைவர் ஹிலால் பாமக சென்ற பிறகும், மற்றொரு அதிமுக தலைவர் இரகுபதியின் மறைவிற்கு பிறகும் இந்த மீனவ மக்களை அதிமுக பக்கமே வைத்திருக்க சரியான தலைவர்கள் அதிமுகவிற்கு அமையவில்லை என்பது அதிமுகவிற்கு ஒரு குறைதான், தற்போதைக்கு முருகுமணி போன்ற ஒரு சிலர் தவிர்த்து பெரும்பாலன அதிமுகவினர் யாரும் மக்களுக்கு அறிமுகமானவர்களாகவே தெரியவில்லை, தற்போதைய அதிமுக வேட்பாளர் 'சேவல்' குமாருக்கு போஸ்டர் குமார் என்று ஒரு பெயருண்டு, அதாவது சுவரொட்டி அரசியல் செய்பவரென, எதற்கும் எல்லாவற்றிற்கும் 5000 சுவரொட்டி அடித்து ஒட்டிவிடுவார்.

தற்போதைய திமுக வேட்பாளர் தௌலத் நகர் அய்யப்பன், சென்ற முறை பாராளுமன்றத்திற்கு போட்டியிட விரும்பியபோதே சட்ட மன்ற தேர்தலின் போது வாய்பளிக்கப்படுமென சமாதானப்படுத்தப்பட்டவர், மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர், பணபலம் மிக்கவர், திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியும் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் , தொகுதியிலும் எந்த கெட்ட பெயரும் இல்லையென்றாலும் அய்யப்பனுக்கு வாய்பளிக்கவே இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுளது, திருவாரூர் அசோகன் மாதிரி முறுக்காமல் இவர் தேர்தல் வேலை செய்து வருகிறார், இள.புகழேந்தி மீது தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற அதிருப்தி இருந்தது அதுவும் தற்போதைய வேட்பாளர் அய்யப்பனிடத்தில் இல்லை.

விடுதலை சிறுத்தைகளின் பலம்மிகுந்த பகுதிகளில் கடலூரும் ஒன்று, விடுதலை சிறுத்தைகளின் முந்தைய முக்கிய தலைவர் திருவள்ளுவன் (இவர் திருமா வடமாவட்டங்களுக்கு வருவதற்கு முன்பிருந்தே இங்கு தலித் அரசியில் நடத்துபவர்) விடுதலை சிறுத்தையிலிருந்து வெளியேறி விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவளிப்பது சிறுத்தைகளின் முகாமில் சிறிய ஓட்டையை போட்டுள்ளது.

திமுகவின் வலுவான வாக்கு வங்கியும் பாமகவின் 17,000 வாக்குகளும் காங்கிரசின் 10,000+ வாக்குகளும் (இவைகளில் பாதி பாதி வந்தால் கூட போதுமானது) திமுக,பாமக,காங்கிரஸ் என கணிசமான வாக்கு வங்கியுள்ள முக்கூடல் கூட்டணி திமுகவின் பலமாக உள்ளது, அய்யப்பன் எந்த பதிவியும் வகிக்கவில்லையென்றாலும் மக்களுக்கு அறிமுகமான வேட்பாளர்

பாரம்பரிய அதிமுக மீனவ வாக்குகள், விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள், சுய உதவி குழுக்கள் வீடு வீடாக அமர்ந்து பிரச்சாரம் செய்வது சேவல் குமாருக்கு பலம்

முந்தைய திமுக சட்ட மன்ற உறுப்பினர் பெரிதாக ஏதும் செய்யாதது திமுகவிற்கு பலவீனமாக அமைந்தது,

நடிகர் விவேக் ஓபராய், தொண்டு நிறுவனங்கள் சுனாமி சமயத்தில் ஆற்றிய பணிகளை கொச்சை படுத்தியது கழகங்களின் மீது வெறுப்பு கொள்ள வைத்துள்ளது, விவேக் ஓபராய் வீடுகள் கட்டி தர முன்வந்தும் தமிழக அரசு நிலம் ஒதுக்காகதது சேவல் குமார் மீனவ கிராமங்களின் உள்ளே நுழைந்து வாக்கு கேட்கமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது ஆனாலும் இந்த பாரம்பரிய அதிமுக வாக்குகள் திமுக விற்கு செல்லுமா என்பது சந்தேகமே, ஆனாலும் கடலூர் நகரம் முழுதும் பாதிக்கப்படவர்கள், படாதவர்கள் என அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் நிவாரண உதவி எந்த அளவிற்கு நிவாரண குளறுபடிகளை மறக்கடிக்க செய்யும் என தெரியவில்லை.

கலைஞர், ஜெயலலிதா என யார் நின்றாலும் அவர்களை தோற்கடிக்க கூடிய இருவர் கடலூரில் உண்டு, ஒருவர் விவேக் ஓபராய், மற்றொருவர் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், நீண்ட காலமாக எந்த சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராலும் செய்ய முடியாமலிருந்த இரயில்வே மேம்பால பைபாஸ் சாலை, செம்மண்டலம் திருப்பாபுலியூர் கெடிலம் பாலம் போன்றவைகளும் சுனாமி, வெள்ள மீட்பினாலும் மக்கள் உள்ளத்தில் குடி கொண்டார், அரசியல்வாதிகள், நடிகர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் பேனர் பார்த்திருந்தவர்களுக்கு கடலூரில் பல இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றி அறிவுப்பு டிஜிட்டல் பேனர்கள் ஆச்சரியமளிக்கும், இன்றைய கடலூரின் இரட்டை ஹீரோக்கள் விவேக் ஓபராய் மற்றும் கடலூர் ஆட்சித்தலைவர்.

முக்கூடல் பலத்தினால் கடலூரில் திமுக வெற்றியின் அருகில், எட்டி பிடிக்க முடியாத அளவில் அதிமுக பின் தங்கியுள்ளது

19 பின்னூட்டங்கள்:

said...

//"கடலூரில் விற்கப்படும் பெட்ரோல் 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பாண்டிச்சேரி எல்லையில் விற்கப்படும் பெட்ரோலிலிருந்து ஓரிரு ரூபாய் குறைவாக இருக்கும், "
சரியா இல்லையே மாத்து அப்பு --
//
மாத்திட்டேனப்பு

நன்றி

said...

ம்..அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒரு கலெக்டர் எதுவும் செய்தால் அது கலெக்டரின் தனிப்பட்ட சாதனை. இதுவே, தி.மு.க. ஆட்சியில் கலெக்டர் ஒரு ஸ்லேட், குச்சு கொடுத்தால் கூட அது அரசின் சாதனை. நல்ல நடுநிலைமை பதிவு குழலி!

said...

//நூறு நாட்கள் ஓடும் திரைப்படங்களெல்லாம் கடலூரில் காண முடியாது, எனக்கு தெரிந்து தொன்னூறு நாட்களுக்கு மேல் ஓடியபடங்கள் என்றால் விஜய டி ராஜேந்தரின் சம்சாரசங்கீதமும் , ராமராஜனின் கரகாட்டகாரனும்//

கமல்ஹாசனின் "அபூர்வ சகோதரர்கள்" கிருஷ்ணாலயாவில் 102 நாட்கள் ஓடியது என்று நினைக்கிறேன்.

சௌ.பா நின்றிருந்தால் நிச்சயமாக கடும்போட்டி இருந்திருக்கும்.btw சக்தி உங்க க்ளாஸ்மேட்டா?

said...

//ம்..அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒரு கலெக்டர் எதுவும் செய்தால் அது கலெக்டரின் தனிப்பட்ட சாதனை. இதுவே, தி.மு.க. ஆட்சியில் கலெக்டர் ஒரு ஸ்லேட், குச்சு கொடுத்தால் கூட அது அரசின் சாதனை. நல்ல நடுநிலைமை பதிவு குழலி!
//
அவசரப்படாதிங்க மாயவரத்தான் தற்போதைய கடலூர் சட்ட மன்ற உறுப்பினர் திமுக காரர், அதனால் திமுக சட்ட மன்ற உறுப்பினரால் வந்தது என்றும் கூட சொல்லலாமே ஏன் சொல்லவில்லை, ஏனெனில் பாலம் கட்டித்தந்த மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றி என்று தான் டிஜிட்டல் பேனர்கள் பார்த்தேனே தவிர பாலம் கட்டிதந்த செல்வி.ஜெயலலிதாவுக்கு நன்றி என்றோ இள.புகழேந்திக்கு நன்றியென்றோ டிஜிட்டல் பேனர்கள் பார்க்கவில்லை....

மாயவரத்தான் உம்மை சொல்லி குற்றமில்லை....

said...

ச்சூ...ச்சூ...கொசுத்தொல்ல தாங்கலப்பா!

அடடா...யாரோ நடுநிலைமை பத்தி பேசற மாதிரி இருக்கே!!!:-))

said...

ஓஹோ.. நடுநிலைமையை டிஜிட்டல் பேனர்கள் மூலம் தான் முடிவு செய்வீற்களோ குழலி?

said...

பொட்டிக்கடை.. பன்றித் தொல்லையைவிட கொசுத்தொல்லை எவ்வளவோ பரவாயில்லை.

said...

கடலூரைப்பற்றிய இன்னொரு தகவல் மறந்துவிட்டேன்(அதிமுக அனுதாபிகள் இருட்டடிப்பு செய்துவிட்டேன் என்றும் கூறிக்கொள்ளலாம்).....

எம்ஜிஆர், ஜெயலலிதாவை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி கொ.ப.செ. பதவியளித்தது கடலூரில் தான் (ஜெயா அதிமுக கரை போட்ட வெள்ளை புடவையில் செங்கோலை எம்ஜிஆருக்கு தரும் படம் கடலூரில் எடுத்தது அந்த படம் இருந்தால் யாரேனும் தந்து உதவுங்கள்)

said...

குழலி..நியாயப்படி பார்த்தால் முதலில் நீங்கள் எனக்கு கொடுத்த பதில் பின்னூட்டத்தில் உள்ள கடைசி வரியை நான் தான் சொல்லியிருக்க வேண்டும். எடுத்துக் கொடுத்தமைக்கு நன்றி.

குழலி...உம்மை சொல்லி குற்றமில்லை.

said...

குழலி,
நீங்கள் கேட்ட புகைப்படம்

மாயவரத்தான்,

பன்றியின் தொல்லை கொஞ்சம் சிரமமானது தான். எதுக்கும் கொஞ்சம் உஷாராகவே இருக்கவும்!

said...

குழலி,
கலக்கலான கடலூர் நிலவரத்துக்கு நன்றி!

said...

mislinked!!!

said...

நண்பர் குழலி,

கடலூரைப் பற்றிய தங்கள் வினாவுக்கு
நயனத்தில் மறுமொழி எழுதியிருக்கிறேன்.
பார்க்கவும்.
நன்றி.
அன்புடன்
நாக.இளங்கோவன்

said...

- குத்து விழுந்துக்கிட்டே இருக்கு போல. அடுத்து ஏதாவது அம்மா கட்சி ஜெயிக்கற தொகுதியப் பத்தி எழுதி, +குத்து வாங்கிக் கொள்ளும்படி, கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்

said...

//மீனவ சமுதாயதலைவர் ஹிலால்//

குழலி,
அதிமுக வின் முதல் கடலூர் ச ம உ வான ஹிலால் துறைமுகம் பகுதி முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்.மீனவ நண்பர். பின்னர் ஒருமுறை ஜா.அணி சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்.

said...

நயனம் பதிவில் இட்ட பின்னூட்டம்

//2004ல் திமுகவின் வாக்குகளில் மதிமுகவின் இருப்பு -7119
//
உங்கள் கணிப்பில் தவறுவது இங்கே.... உள்ளூர்காரர்கள் தவிர்த்து வேறு யார் கணித்தாலும் இந்த வாக்குகள் மதிமுகவின் வாக்குகளாக கணிப்பார்கள், குறிஞ்சிப்பாடியில் 2000 வாக்குகளும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி என அண்டை தொகுதிகளில் மதிமுகவின் வாக்குகள் வெறும் 2000 ஆனால் கடலூரில் ஏழாயிரம் என்றால் அதற்கு காரணம் மதிமுக மாவட்ட செயலாளர் செள.பத்மனாபன், இவர் 1989ல் சுயேட்சையாக நின்று 5000வாக்குகள் பெற்றவர், இவைகள் திமுக வாக்குகள் முன்னாள் திமுக காரர், சொந்தகாரர், சாதிக்காரர் என்று இந்த வாக்குகள் பத்மனாபன் நின்றால் மட்டுமே விழும் வாக்குகள் பத்மனாபன் களத்தில் இல்லாத நிலையில் அது திமுகவிற்கு விழும் வாக்குகள், இரண்டாவதாக சிறுத்தைகளின் முகாமில் திருவள்ளுவன் மூலமாக விஜயகாந்த் போட்டுள்ள ஓட்டை, அதிமுகவின் மற்றொரு பலவீனம் அமைப்புரீதியாக பிரபலங்கள் இல்லாதது....

//குறிஞ்சிப்பாடியைப் பொறுத்தவரை சசி ஒப்புக்கொள்ள
மாட்டார்.
//
நானும் ஒப்புகொள்வது இயலாது, ஏனெனில் குறிஞ்சிப்பாடியில் கட்சி மீறிய சாதிப்பாசம் எம்.ஆர்.கே.பியிடம் சென்ற தேர்தலிலேயே எதிர்கூட்டணியில் இருந்த போதும் பாமக எம்.ஆர்.கே.பி.க்கு உதவியது, விடுதலை சிறுத்தைகள் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் திருமாவளவன் போட்டியிட்டதால் விழுந்த வாக்குகள் திருமா போட்டியில் இல்லையென்றால் அத்தனை வாக்குகள் விழாது, எம்.ஆர்.கே.பி.யின் ஒரே பலவீனம் அவரின் வளர்ச்சி பிடிக்காத உள்குத்து வேலை செய்யும் உள்ளூர் திமுகவினர் என்பது மட்டுமே.... ஆனால் இது கூட்டணி பலம், சொந்த செல்வாக்கு, சாதிப்பாசம் எதிரணியில் பலமில்லாத கட்சி, வேட்பாளர் என்ற நிலையில் பன்னீர் தோற்பது திமுகவிற்கு எதிராக ஏதேனும் பெரும் அலையடித்தால் மட்டுமே உண்டு

said...

//- குத்து விழுந்துக்கிட்டே இருக்கு போல. அடுத்து ஏதாவது அம்மா கட்சி ஜெயிக்கற தொகுதியப் பத்தி எழுதி, +குத்து வாங்கிக் கொள்ளும்படி, கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்
//
ஹி ஹி இதற்கு மட்டுமா விழுகின்றது, அட்சய திருதைக்கும், பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சி கட்டுரைகளுக்கும் கூடத்தான் - விழுகின்றது, இவையெல்லாம் கட்டுரைக்காக விழுவதில்லை, குழலி என்ற பெயரை பார்த்தவுடன் - குத்து விட்டுவிட்டு பிறகுதான் சிலர் படிக்க ஆரம்பிப்பர் அல்லது படிக்காமல் போய்விடுவார்களாக்கும்....

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா

said...

good analysis kuzalil keep it up

said...

Kuzhali,

A way to organize all your articles into categories has been found and the necessary template changes are listed in my blog
http://bunksparty.blogspot.com

Will be glad if you can use it and organize your blog.