சுந்தரமூர்த்தி, சுமார் 18 ஆண்டுகள் தலைமறைவுக் குற்றவாளியாக இருந்து 2006-ம் ஆண்டு திருப்பூரில் கைது செய்யப் பட்ட நக்சலைட்...
டி.எஸ்.பி வெள்ளைத்துரை, அய்யோத்திகுப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததிலிருந்து வீரப்பன் கொலை வரை வெள்ளைத்துரையின் கை இருப்பது தெரிந்தது, இப்போது வெள்ளைத்துரை சுந்தரமூர்த்தியின் பாதுகாப்பு எஸ்கார்ட்டாக செல்வது மிகுந்த சந்தேகத்திற்குரியது மட்டுமல்லாமல் அந்த பேட்டியில் "இதே சுந்தரமூர்த்தி தப்பிக்க முயற்சிசெஞ்சு, என்கவுன்ட்டர் செய்யறதுக்கான சூழ்நிலை அமைஞ்சா, கண்டிப்பா சுடுவேன்!'' என்று வெள்ளைத்துரை சொல்லியிருப்பதும் என்கவுண்டர் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.
நக்சலைட்டுகள் ரவுடிகள் போன்றவர்கள் அல்ல, அவர்கள் அரசியல் கைதிகள், அவர்கள் அரசியல் கைதிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள், அவர்கள் ரவுடிகளை போன்றவர்கள் அல்ல...
நக்சலைட்டுகள் உருவாகக்கூடாதென்றால் அதற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்க வேண்டும், அடக்குமுறையும் துப்பாக்கிகள் தூக்குவதும் நிச்சயம் எந்த பலனையும் தருவதில்லை...
என்கவுண்டர்கள் எப்போதும் ஆதரிக்கப்படக்கூடாதவைகள்....
என்கவுண்டர்கள் நடந்தன, என்கவுண்டர்கள் நடக்கின்றன, என்கவுண்டர்கள் நடக்கும், ஆனால் ரவுடிகள் பிறந்து இறந்து கொண்டேயிருப்பார்கள், இறந்து பிறந்து கொண்டே இருப்பார்கள், எந்த என்கவுண்டர்களும் ரவுடிகளின் பிறப்பை தடுப்பதில்லை.
ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.
நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.