திமுக, பாமக வடமாவட்ட அரசியல் என்ற சென்ற பதிவின் தொடர்ச்சி இங்கே...
சென்ற பதிவில் கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கான அழுத்தம் பற்றி கூறியிருந்தேன், அந்த அழுத்தமென்னவென்றால் திமுகவிற்கு பாமகவை வெற்றிபெறவைப்பதைவிட பாமகவிற்கு திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயம் நிறைய உள்ளது, உதாரணத்திற்கு கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் பாமக போட்டியிட்டது அதை சுற்றியுள்ள நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளிலெல்லாம் திமுக போட்டியிட்டது, பண்ருட்டியில் பாமக தோல்வியுற்றால் அது பாமகவின் தோல்வியாக மட்டுமே கருதப்படும், பண்ருட்டியில் பாமக தோல்வியுற்றால் கூட்டணி கட்சியான திமுகவின் பலம் கேள்விக்குள்ளாக்கப்படாது, ஆனால் நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி போன்ற தொகுதிகளில் திமுக தோல்வியுற்றால் அதை திமுகவின் பலம் குறைந்ததாகவோ, முழுக்க முழுக்க திமுகவின் தோல்வியாகவோ பார்க்கப்படாது, ஆனால் பாமக கூட்டணி வைத்தும் தோல்வியுற்றால் அந்த தோல்வியின் பெரும் பங்கு பாமகவை வந்து சேரும், அதனால் அடுத்த தேர்தல்களில் பாமகவின் bargaining power குறைந்துவிடும், இதே நிலை தான் விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கும், கடந்த தேர்தலில் தொல்.திருமா அவர்களின் பேட்டியை பார்த்தால் தெரிந்திருக்கும், நமது பலம் நமது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறுவதில் தான் இருக்கிறது, எனவே அதற்கு எந்த தொய்வும் வராமல் விடுதலை சிறுத்தைகள் பாடுபடவேண்டுமென்றார், சொந்த கட்சி தோற்றால் அவர்களின் சொந்த தோல்வி, அதில் திமுக, அதிமுகவிற்கு பங்குள்ளதாக சொல்லப்படாது, ஆனால் கூட்டணி கட்சிகள் தோல்வியுற்றால் அப்போதும் பாமக, விடுதலைசிறுத்தைகளின் பலம் குறைந்துவிட்டதாக சொல்லப்படும், இதனாலேயே கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு திமுக, அதிமுகவை விட அழுத்தம் அதிகம்.
திமுகவின் பலமும் பலவீனமும் அதன் மாவட்ட அளவிலான தலைவர்களே, அதாவது மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள செல்வாக்கான திமுக பிரமுகர்கள், வீரபாண்டி ஆறுமுகத்தை தாண்டி திமுகவின் தலைமையால் சேலம் மாவட்டத்தில் எந்த முடிவும் எடுக்க இயலாது, கோ.சி.மணி, துரைமுருகன், பிச்சாண்டி, ஐ.பெரியசாமி என ஒரு பெரிய பட்டியல் உண்டு, இவர்களின் மீது தலைமையால் பெரிய அளவில் எதையும் திணிக்க இயலாது, உதாரணமாக சரத்குமார் 1999ல் திமுக வேட்பாளராக மாவட்ட செயலாளரின் எதிர்ப்பையும் மீறி தலைமையால் அறிவிக்கப்பட்டார் ஆனால் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், இதற்கு திமுகவினரின் உள்ளடி வேலையே என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் சரத்குமார், அதைத் தொடர்ந்து சரத்குமாரை மேல்சபை உறுப்பினராக ஆக்கியது திமுக தலைமை, ஆனால் உள்ளடி வேலை செய்தவர்கள் மீது தலைமை பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது எடுக்க முடியவில்லை.
வடமாவட்டங்களில் பாமக அரசியலில் எதிர்கொள்வது இந்த தலைவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் தான், உதாரணத்திற்கு திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் பொன்முடியை எதிர்த்து தீவிர அரசியல் செய்வது பாமக, வேலூர், தர்மபுரியில் எல்லாம் திமுக பாமக மோதல்கள் அதிகளவில் இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் மட்டும் பெரிய அளவிலான மோதல் இல்லாததற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் பாமகவினருக்கும் உள்ள புரிந்துணர்வுகள், சேலம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை பாமக-திமுக கூட்டணி கைப்பற்றியதும் உள்ளடி வேலைகள் ஏதும் இல்லாததே.
கூட்டணியில் பாமகவிற்கான அழுத்தம் அதிகம் என்பதால் திமுகவை எதிர்த்து உள்ளடி வேலைகள் குறைவாக இருந்த போதும் பாமக கூட்டணி கட்சியை எதிர்த்து மாவட்ட திமுக ஏன் உள்ளடிகளில் இறங்கவேண்டுமென்று பார்த்தால் அதில் ஒரு முக்கியமான விடயம் அடங்கியுள்ளது, ஒரு முறை ஒரு தொகுதி பாமகவிடம் சென்று அவர்களும் அதை வென்று விட்டால் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு சென்றாலும் பாமகவினர் சிட்டிங் தொகுதி என்று கூறி அதே தொகுதியை மீண்டும் மீண்டும் கேட்பார்கள், அந்த தொகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக பாமக வின் கை ஓங்கும், இப்படியாக பல தொகுதிகள் வடமாவட்டங்களில் உள்ளன, தொடர்ந்து பண்ருட்டி, விருத்தாசலம், ஆண்டிமடம், வந்தவாசி, திண்டிவனம், எடப்பாடி, தாராமங்கலம் என பல தொகுதிகளை அடையாளம் காணலாம், மாவட்ட திமுகவினர்கள் சிலரை பொறுத்தவரை கூட்டணிக்கட்சிக்கு தொகுதி என்றான பின் அது எப்படியும் திமுகவிற்கு இல்லை, அதனால் அது அதிமுகவிற்கு செல்வதும் பாமகவிற்கு செல்வதும் அவர்களை பொறுத்தவரை பெரிய விடயமில்லை, ஆனால் அந்த தொகுதியில் பாமக வென்றுவிட்டால் மீண்டும் அதே கூட்டணியானாலும் அதிமுக கூட்டணியானாலும் அதே தொகுதியை கேட்பார்கள், இதனால் அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு சவாலாக பாமக ஆட்கள் இருப்பார்கள் என்பதே, உதாரணமாக இன்றைக்கு பண்ருட்டி உள்ளூர் அரசியலில் பாமக வேல்முருகனை தவிர்க்க முடியாது, கூட்டணியில் இருந்தாலும் இவர் தோற்றிருந்தால் அடுத்த முறை இதே தொகுதியை கேட்பதற்கு பாமக தயங்கும், ஆனால் இதே தொகுதியில் தொடர்ந்து சில முறைகள் வெற்றிபெற்றுள்ளதால் வருங்காலத்திலும் எந்த கூட்டணியென்றாலும் பண்ருட்டி தொகுதியை பாமக கேட்கும், இது மாதிரியான காரணங்களே திமுகவின் உள்ளடிகளுக்கு காரணம்.
இப்படியான உள்ளடிகள் அதிமுக-பாமக கூட்டணியில் பெரும்பாலும் ஏன் ஏற்படுவதில்லை என்றால் அதிமுகவை பொறுத்தவரை இது மாதிரியான வலுவான தலைவர்கள் மாவட்ட அளவில் இல்லாமலிருப்பது, மேலும் அதிமுகவை பொறுத்தவரை உள்ளூர் அரசியலில் பாமகவினர் அச்சுருத்தலாக இருப்பதில்லை(ராசிபுரம், திண்டிவனம், சிதம்பரம் போன்ற ஒரு சில இடங்களை தவிர), மேலும் பாமகவின் வளர்ச்சி அதிமுகவை பெரும்பாலும் பாதிப்பதில்லை, அதிமுக தலைமையின் மீதிருக்கும் அதிகபட்ச பயம் எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுக தொண்டர்களிடம் திமுக எதிர்ப்பு என்பது இரத்தத்திலேயே ஊறியது, அதனால் கூட்டணிகட்சி போட்டியிட்டாலும் அதிமுகவினரை பொறுத்தவரை திமுகவினர் வெற்றிபெறக்கூடாது என்று வெறியோடு இயங்குவது, இவைகளே கீழ்மட்ட அளவில் பாமக-அதிமுக கூட்டணியினர் உறுத்தல்கள் இல்லாமல் இணைந்து செயல்பட முடிகின்றது.
மேல்மட்டத்தில் திமுக-பாமக தலைமையின் கருத்தியல்கள், கொள்கைகள் பெரும்பாலும் ஒத்திருப்பது, மேல்மட்டத்தில் இந்த கூட்டணி இயல்பாக தெரிந்தாலும் மாவட்ட, உள்ளூர் அரசியலில் மேற்கூறிய காரணங்களால் மாவட்ட அளவிலான தலைவர்கள், தொண்டர்கள் இணைந்து செயல்படும்போது நிறைய உறுத்தல்கள் உள்ளன, இதுவே "திமுகவில் கலைஞர் அன்பழகன் தவிர மற்றவர்கள் சரியில்லை, அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா தவிர மற்றவர்கள் நல்லவர்கள், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உயிரை கொடுத்து வேலைசெய்வார்கள் " என்று மருத்தவர் இராமதாசின் வார்த்தைகளாக பேட்டியில் வெளிவந்தது.
திமுக-பாமக தலைமைகள் இந்த கூட்டணி உடைபடாமல் தடுக்க வேண்டுமெனில் செய்யவேண்டியவைகள், மருத்துவர் இராமதாசின் ஆக்ரோசமான வார்த்தைகளுக்கான காரணங்களாக நான் நினைப்பது அடுத்த பதிவில்