சிலைகளுக்கு வலிப்பதில்லை ஆனால்...

சில நாட்களுக்கு முன் நடை பெற்ற அம்பேத்கார் சிலை உடைப்பு பற்றியும் அதை தொடர்ந்து எழுந்த கலவரங்களும் வலைப்பதிவில் பெரிதான விவாதத்தை ஏற்படுத்தவில்லை, வெகு சில பதிவுகள் மட்டுமே அதைப்பற்றி வெளிவந்தன, இது வழக்கம் போல வெறும் இன்னொரு சிலை உடைப்பு என்றளவிலேயே இங்குள்ள மக்களால் எடுத்துக்கொள்ளப்பட்டதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது, ஆனால் இது வெறும் இன்னொரு சிலை உடைப்பு அல்ல, சமூகம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த/செய்கின்ற அநீதிகளுக்கு கொடுக்கும் விலை, இந்த சமூக அமைப்பு மாறதவரை இந்த மாதிரியான விலைகளை நாம் கொடுத்துக்கொண்டே இருப்போம், இது கலவரமல்ல, இது ஒரு எதிர் கலவரம், சமூகம் தொடுத்த தாக்குதலுக்கு ஒரு சிறிய பதிலடி, பொதுவாக இது மாதிரியான நிகழ்ச்சிகளின் போது வெகுசன ஊடகங்கள் மிக மேலோட்டமான ஒரு செய்தியையும் கட்டுரையையும் அளிக்கும், ஆனால் ஜீனியர் விகடனில் ஜென்ராம் அவர்கள் எழுதிய கட்டுரை ஒரு புதிய கோணத்தை மக்களுக்கு எடுத்து சென்றிருக்கும், அந்த கட்டுரையின் சில கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும் அந்த கட்டுரையை இங்கே பதிவிடுகின்றேன், ஜீனியர்விகடனில் வெளியாகும் ஜென்ராமின் கட்டுரைகள் மிக ஆழ்ந்த சிந்தனைகளோடும் பிரச்சினையின் உண்மையான காரணங்களையும் பேசுகின்றது. ஜென்ராம் நமது சக வலைப்பதிவாளரான ஸ்டேஷன் பெஞ்ச் ராம்கி அவர்களுக்கு வாழ்த்துகள்.

வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட கப்பலில் ஒரு சிறிய தீப்பொறி விழுந்தாலே போதும்; கப்பல் எரிந்து சாம்பலாகிவிடும். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சில தலித் இளைஞர் களின் மனநிலையும் கிட்டத்தட்ட அந்தக் கப்பலின் நிலையில் இருந்திருக்கிறது. அதனால்தான் உத்தரப் பிரதேசத்தில் இருக்கும் கான்பூரில் உள்ள அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட செய்தி வந்தவுடன், மகாராஷ்டிர மாநிலத்தின் பல நகரங்களில் வன்முறை வெடித்திருக்கிறது. இரண்டு ரயில்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. ஏராளமான பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கும்பலைக் கலைப்பதற்கு காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகியிருக்கிறார்கள்.


"ஒரு சிலைக்கு ஏற்படுத்தப்படுகின்ற சேதம் பெரும் வன்முறைக்குக் காரணமாகலாமா? பெரும் கலவரத்துக்குக் காரணமாகும் அளவுக்கு சிலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?" &நகர்ப்புறத்தில் இருக்கும் பெரும்பாலான படித்த, நடுத்தர மக்களின் கேள்வி இதுவாகத் தான் இருக்கிறது. "தேர்தல் வந்துவிட்டால் பகுத்தறிவு, சமதர்மம், தர்க்க நியாயம் என்ற அனைத்துப் பண்புகளும் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுகிறது... மக்களுக்கு முக்கியமில்லாத ஒரு பிரச்னையை மிகவும் அவசியமான ஒரு பிரச்னையாகப் பெரிதாக்கி, கொந்தளிக்கும் நிலையை அரசியல்வாதிகள் உருவாக்கி விடுகிறார்கள்" என்ற கருத்தும் அவர்களிடம் பரவலாக உள்ளது. இந்த எண்ணம் தற்போது ஊடகங்கள் மூலமாக சாதாரண மக்களிடத்திலும் படிப் படியாக வேகமாகப் பரவி வருகிறது. இதில் உண்மை இல்லை என்று எப்படி முழுமையாக உதறித் தள்ளிவிட முடியாதோ அதேபோல் இந்தக் கருத்தை முழுமையாக அப்படியே ஏற்றுக் கொள்வதும் இயலாது.

முதலில் சிலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வியைப் பலர் முன்வைக்கிறார்கள். சோவியத் யூனியன் சிதறும்போது ஆங்காங்கே இருந்த லெனின் சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டன. இராக்கில் பாக்தாத் நகரம் அமெரிக்க ஆங்கில கூட்டுப் படையின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன், சில இராக்கியர்கள் சதாம் உசேனின் சிலையை அகற்றினார்கள். ஆப்கானிஸ்தானில் புத்தர் சிலையைத் தாலிபான்கள் தகர்த்தார்கள். ‘பண்பாட்டுப் புரட்சி’ என்ற பெயரில் காந்தி சிலைகளுக்கு இடதுசாரி தீவிரவாதிகள் குண்டு வைத்தனர்.

சென்னையில் ஓர் ஆட்சியில் அகற்றப்பட்ட கண்ணகி சிலை, அடுத்த ஆட்சியில் மீண்டும் நிறுவப்பட்டது. தாங்கள் வணங்கும் தெய்வங்களின் சிலைகள் சிலருக்கு முக்கியம். அதேபோல சில வரலாற்று நாயகர்களின் சிலைகள் வேறு சிலருக்கு முக்கியம். ஏனெனில், தாங்கள் மானத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடித்தளத்தை இந்தத் தலைவர்கள்தான் போராட்டங்களின் மூலமாகப் பெற்றுத் தந்தார்கள் என்று மக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள்.

சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டால் கலவரம் வெடிக்கிறது. எனவே சிலைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் காவல்துறை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் ஏராளமான சிலைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது காவல்துறைக்கு கடினமான செயல் என்பதால், சிலைகளை எல்லாம் ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் வைக்கலாம் என்று சிலர் யோசனை சொல்கிறார்கள். ஆனால், இவர்கள் வாழ்ந்து மறைந்த அரசியல் மற்றும் சமூகத் தலைவர்களுடைய சிலைகளுக்கு மட்டுமே இத்தகைய பரிந்துரையை வழங்குகிறார்கள். அனைத்து மத கடவுள்களின் சிலைகளையோ அல்லது வழிபாட்டுத் தலங்களையோ ஊருக்கு வெளியே ஒரு பொதுவான இடத்தில் கட்டி பாதுகாப்பளிக்கலாம் என்று இவர்கள் பேசுவதில்லை.

கான்பூரில் சேதப்படுத்தப்பட்ட சிலைக்கு மகாராஷ்டிர மாநிலத்தில் ஏன் கலவரம் நடக்கிறது? தொழில்துறையில் வளர்ச்சி பெற்ற இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரம் என்றழைக் கப்படும் மும்பை, இந்த மாநிலத்தின் தலைநகர். அதிக அளவிலான முதலீடும், தொழில் வளர்ச்சியும், அதிசய உலகங்களும் இந்த மாநிலத்தில் உள்ளன. இருந்தும் இங்கு அவ்வப்போது நிகழும் வன்செயல்கள் இதுபோன்ற வளர்ச்சியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. இந்த மாநிலத்தில் உள்ள தலித் மக்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நன்றாக அறிந்து கொள்கிறார்கள். சட்டங்கள் எத்தனை வந்தாலும் நடைமுறையில் இன்னும் தாங்கள் மற்றவர்களுடன் சமமாக நடத்தப்படவில்லை என்ற புரிதல் அவர்களுக்கு இருக்கிறது. இந்த அறிவு அவர்களிடம் அடக்கப்பட்ட கோபமாக எப்போதும் கனன்று கொண்டே இருக்கிறது.

கடந்த 2006-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று மகராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தின் பஞ்சாயத்துத் தலைவியான சுனிதா பாபுராவ் என்ற பெண்மணியால் அவரது கிராமத்தில் தேசியக் கொடியை ஏற்ற முடியவில்லை. இவர் பிறப்பால் தலித் என்பதே இதற்குக் காரணம். இப்படி ஏற்கெனவே சமூகரீதியாக பல பிரச்னைகளைச் சந்தித்து வரும் தலித் இளைஞர்களிடம், அரசாங்கத்தின் செயலற்ற தன்மை அல்லது அரசாங்கத்தின் ஒருபக்க சார்பு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயல்பான கோபத்தை ஜனநாயகரீதியில் பிரதிபலிப்பதற்கு தலித் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் தலைமை தவறுகிறது. மற்ற அரசியல் கட்சிகளைப் போலவே தலித் அரசியல் கட்சித் தலைமையிலும் சுயநலமும் சந்தர்ப்பவாதமும் தலைதூக்கியுள்ளன. இதன் காரணமாக தலித் இயக்கம் பல குழுக்களாகப் பிரிந்து நிற்கின்றன. வழிகாட்டுவதற்கு சரியான தலைமை இல்லாத நிலையில், இளைஞர்கள் தங்கள் கோபத்துக்கு வடிகாலாக வன்செயல்களில் இறங்குகிறார்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தின் நகரங்களில் நடந்தவை மட்டுமே வன்முறை அல்ல. கான்பூரில் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டதும் ஒரு வன்செயலே. எவ்வளவுதான் நியாயமான காரணங்கள் இருந்தாலும் வன்முறையை ஒரு வழிமுறையாக நாகரிக சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயமில்லாத நிலைப்பாட்டில் இருப்பவர்களே முதன்முதலில் வன்முறையைக் கையில் எடுக்கிறார்கள். ஒரு சக மனிதனை ஆயுதத்தால் தாக்குவது மட்டுமே வன்முறை அல்ல; அவனை சாதி, மதம், மொழி, இனம், பொருளாதார நிலை போன்ற எந்தக் காரணம் கொண்டும் வெறுப்பதும் வன்முறைதான். அப்படி மனதளவில்கூட வன்முறை எண்ணம் இல்லாமல் இருப்பதே அஹிம்சை தத்துவத்தின் உயிர்நாடி.

மக்கள், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை எந்த அரசாங்கமும் அரசமைப்புச் சட்டமும் ஆதரிப்பதில்லை. மிகுந்த நம்பிக்கையோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் சிலர்கூட ஆளுவோருடன் அணி சேர்ந்து நிற்கும்போது, அவர்களது கவனத்தைத் தங்கள் பிரச்னைகளின் பக்கம் இழுப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விடுகிறார்கள். ஒருவேளை, வன்முறை மூலம் சமூகத்தில் நீதி நிலைநாட்டப் பட்டாலும் அது அநீதியான முறையில் கிடைத்த நீதியாகவே கருதப்படும். வன்செயலும் கலவரமும் அராஜகமும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அவை கண்டிக்கத்தக்கவையே. ஏனெனில், ஒரு சமூகத்துக்கு வன்முறையால் கிடைக்கும் நன்மை தற்காலிகமானது; ஆனால், அதனால் சமூகத்துக்கு இழைக்கப்படும் தீங்கோ நிரந்தரமானது!

10 பின்னூட்டங்கள்:

said...

Kuzhali,

P.Sainath wrote an excellent article about the same issue in "The Hindu".It's worth reading.

http://www.hindu.com/2006/12/08/stories/2006120804231000.htm

Excerpts:

Few in the media asked why so many — sometimes up to a million — human beings come to observe his death anniversary each year. Is there one other leader across the world who draws that number 50 years after his death? To an event that speaks to the hearts of people? To a function not owned or organised by any political party or forum? There was no effort to look at why it is the poor and the dispossessed who come here. No mention that this was a man with a Ph.D from Columbia University who returned to lead what is today the greatest battle for human dignity on planet earth.

said...

இப்ப நீ என்ன சொல்லவற சண்முகமணி? மஹராஷ்ராவில் நடந்தது மட்டும் தான் தப்பா? இல்ல இங்க நடந்த சிலை இடிப்பும், அதை தொடர்ந்து நடக்கும் ஒவ்வா செயல்களும் தப்பா ரைட்டா? நம்ம ஊர் பிரச்சனையை விட்டுவிட்டு அங்க போயிட்டீங்க??!

//மிகுந்த நம்பிக்கையோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் சிலர்கூட ஆளுவோருடன் அணி சேர்ந்து நிற்கும்போது அவர்களது கவனத்தைத் தங்கள் பிரச்னைகளின் பக்கம் இழுப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விடுகிறார்கள்.//

இது மக்களால் நடத்தப்படும் கலவரம் இல்லைங்க தல, அவர்கள் பிரதிநிதிகள் தங்கள் நிலைப்பாட்டுக்காக ஏவிவிடும் வண்முறைகளாகவே எனக்கு தோணுது!!

//ஒரு சமூகத்துக்கு வன்முறையால் கிடைக்கும் நன்மை தற்காலிகமானது; ஆனால், அதனால் சமூகத்துக்கு இழைக்கப்படும் தீங்கோ நிரந்தரமானது! //

இது கரெட் தான்!!!

said...

நல்லா தோசை சுடுவீங்களோ நீங்க?

அதாவது, நடுவுல மாவு ஊத்தி, அதை அப்பிடியே சுத்தி, சுத்தி பெருசா இழுக்கற கலையை நல்லா செஞ்சிருக்கீங்க!

உங்க எழுத்துகளின் நேர்மையை பறைசாற்றும், வரலாற்று சிறப்பு மிக்க , உங்கள் ஆண்மையைக் காட்டும் மிகச் சிறந்த பதிவுகளில் ஒன்று!!

ஊர்ப் பிரச்சினையை விடுத்து , இந்தியப் பிரச்சினையை எடுத்தாண்ட உங்கள் தேசிய நோக்கினைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

ஓ! மறந்தே போனேன்!

உங்கள் கட்சி இப்போது மத்தியில் மட்டும்தானே இருக்கிறது!

தமிழகத்தில்தான் உங்களை ஓரம் கட்டியாயிற்றே!

நடத்துங்க சாமி!

said...

சிலைகள் நிறுவப்படும் காரணம் ஒன்றென்றாலும், சில நாயக/நாயகியர்களின் சிலைக்கு அதியுயர் மரியாதைகள் கிடைப்பதுவும், மற்ற சிலருக்கு ஏளனமும் அவமரியாதை ஏற்படுவதும் நடக்கிறது. இதற்கு ஒரு காரணம் பரந்துபட்டு வரும் பார்ப்பனீயக் கருத்துத் திணிப்புகள். கூடவே அதிகாரத்தின் வலுத்த பக்கம் இன்னும் உயர்சாதீயக் காரர்களின் கைகளிலேயே இருக்கிறது என்பதும் ஒரு காரணம்.
உபரி வினைப்பாடுகள்:
விநாயகர் சிலை, அந்த ஊர்வலங்கள், அது கிளப்பும் அடிதடிகள் இவற்றின்போதெல்லாம் மறைந்திருந்து களிக்கும் இந்து அமைதி விரும்பி, பொதுநல விரும்பி, மனிதவுரிமைக் குஞ்சுகள் திடீரென இப்போது கிளம்பிவிடும்.

said...

///மக்கள், சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதை எந்த அரசாங்கமும் அரசமைப்புச் சட்டமும் ஆதரிப்பதில்லை. ///

அது சொந்த செலவுல சூனியம் / கவர்னர் ஆட்சி ரெண்டுக்கும் வழியாகும் ( காங்கிரஸ் கூட்டனியில் இல்லாதவங்களுக்கு)


//மிகுந்த நம்பிக்கையோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளில் சிலர்கூட ஆளுவோருடன் அணி சேர்ந்து நிற்கும்போது, அவர்களது கவனத்தைத் தங்கள் பிரச்னைகளின் பக்கம் இழுப்பதற்கு வன்முறையைத் தவிர வேறு வழியில்லை என்று கருதி விடுகிறார்கள். //

சரியான கூற்று !!!

//ஒருவேளை, வன்முறை மூலம் சமூகத்தில் நீதி நிலைநாட்டப் பட்டாலும் அது அநீதியான முறையில் கிடைத்த நீதியாகவே கருதப்படும். //

ஆம் !!!

///வன்செயலும் கலவரமும் அராஜகமும் யாரால் நிகழ்த்தப்பட்டாலும் அவை கண்டிக்கத்தக்கவையே. ஏனெனில், ஒரு சமூகத்துக்கு வன்முறையால் கிடைக்கும் நன்மை தற்காலிகமானது; ஆனால், அதனால் சமூகத்துக்கு இழைக்கப்படும் தீங்கோ நிரந்தரமானது!//

ஆழமான வரிகள் !!! வன்முறையை கையில் எடுத்தவர்கள் நீண்டகாலம் அதை வைத்திருப்பதில்லை...!!!! தீங்கு ஏற்படும் என்பது முழுக்க சரியல்ல...நன்மைகளுக்கும் வாய்ப்பிருக்கு !!

said...

A sign of an educated person is what others can learn from him.Education is not just getting degrees.There have been lots of self educated people.It is a pity that educated people in India cause more trouble.Babu Jagajeevan Ram had worked hard in Independant movement and had been a fixture in Indian politics and Government and held various positions including temporary Prime Ministership.He was invited to unveil a statue and he did by pressing a remote button.Because he was from scheduled caste the high caste students got water from the river Ganges and washed the statue.This happened in Banarass Hindu University!
The next day Jagajeevan came to Tamilnadu for a function and saw the status and in his words said "I wish we have had a Periyar".We know even Tamilnadu has to go a long way.
The only way things are going to improve is that we all make efforts to read about Mahatma Babu Jyothi BaPulae,Sadhu Maharaj,Swami Narayana Guru,Baba Saheb Ambedkar and Periyar.We can all benefit and so can our friends.

said...

//நம்ம ஊர் பிரச்சனையை விட்டுவிட்டு அங்க போயிட்டீங்க??!//

//நல்லா தோசை சுடுவீங்களோ நீங்க?

அதாவது, நடுவுல மாவு ஊத்தி, அதை அப்பிடியே சுத்தி, சுத்தி பெருசா இழுக்கற கலையை நல்லா செஞ்சிருக்கீங்க!//

//ஊர்ப் பிரச்சினையை விடுத்து , இந்தியப் பிரச்சினையை எடுத்தாண்ட உங்கள் தேசிய நோக்கினைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.//

அடடா அடடா அடடா, கொழலி, வாழப்பழத்துல ஊசிங்கறது இதுதான் பார்த்தேரா? தமிழ்நாட்டைப்பத்தி மட்டும் எழுதிட்டிருந்தா குறுகிய பார்வை, பிரிவினைவாந்தி தேசியத்துரோகி அப்படிம்பாங்க. ஏனுங்க, பிற நேரத்துல அகண்ட பாரதம் இந்தியனாய் இருன்னு pan-Indian டயலாக் விடுவீங்க, இப்ப இந்தியாவின் பிற பகுதியில நடக்கறதைப்பத்தி கொழலி எழுதுனா மட்டும் panல தோசை சுடறதாப் படுதா? அதுவும் இழுத்து இழுத்து சுடறதா? அது எப்படிங்க சிலர் எழுதுறது மட்டும் எவ்வளவுதான் கேடித்தனமான ஜல்லியா இருந்தாலும் நேர்மை நியாயம் வீரம் விளக்கெண்ணெய்ன்னு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணத் தோணுது, சிலர் எழுதுறது மட்டும் மூணடிக்கு மூணடி மசாலா தோசையாத் தோண்டுது, அடச்சே, தோணுது?

said...

வாழ்த்துக்களுக்கு நன்றி குழலி..

தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று அறிய முடிகிறது. மிக்க நன்றி..

// அந்த கட்டுரையின் சில கருத்துகளில் எனக்கு மாறுபாடு இருந்தாலும் அந்த கட்டுரையை இங்கே பதிவிடுகின்றேன்,//

மாறுபாடு புரிந்து கொள்ளக் கூடியதே. இது குறித்து என்னால் பகிரங்கமாக விவாதிக்க இயலாது என்பதையும் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பொதுவாக இதழ் வெளியாவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னதாகவே பத்திகள் எழுதப்படுகின்றன என்பதை உங்கள் பதிவில் பின்னூட்டம் இட்ட நண்பர் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன். திருவரங்கம் சம்பவமும் அதன் தொடர்ந்த பின்விளைவுகளும் இந்த கட்டுரையைத் தாங்கிய ஜூனியர் விகடன் வெளியான பின்நிகழ்ந்தவை. கயர்லாஞ்சி வன்கொடுமை குறித்தெல்லாம் ஏற்கனவே எழுதி இருந்ததால் மீண்டும் இந்தக் கட்டுரையில் பதிவு செய்யவில்லை.

இந்தக் கட்டுரையைப் பதிவு செய்தமைக்கு மீண்டும் எனது நன்றி.

said...

நல்ல பதிவு.

பொது இடத்தில் சிலைகள் வைப்பதை நிறுத்துவது இந்த மாதிரி செயல்களுக்கு நல்ல தீர்வாகும்.

கடவுள்களுக்கு சிலை வைப்பது பொது இடத்தில் அவ்வளவாக நடப்பது இல்லை. சிவனுக்கும், ஏசுவுக்கும், அல்லாக்கும் நிலம் வாங்கி கோயில் கட்டி அதர்க்குள்தான் வைக்கிறார்கள் (பெரும்பாலும்).

அதேபோல் தலைவர்களுக்கும், அந்த தலைவனின் அடியார்கள், ஒரு ஹால் கட்டி, சிலையை அதர்க்குள் வைக்கலாம். கட்டும் ஹால் வேறு நல்ல விஷயங்களுக்கும் பயன்படட்டுமே (லைப்ரரி, கருத்தரங்கம்,..).

இந்த சிலை உடைப்பு எல்லாம் சாதாரணன் செய்யும் வேலை இல்லை. கொழுப்பெடுத்த விஷமித் தலைகள் தூண்டிவிட்டு அதனால் ஆதாயம் தேடும் செயல் இது.

said...

குழலி

//சில வரலாற்று நாயகர்களின் சிலைகள் வேறு சிலருக்கு முக்கியம். ஏனெனில், தாங்கள் மானத்துடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடித்தளத்தை இந்தத் தலைவர்கள்தான் போராட்டங்களின் மூலமாகப் பெற்றுத் தந்தார்கள் என்று மக்கள் அவர்களைப் போற்றுகிறார்கள்//

ஆணித்தரமான வாதம்.

வாழ்த்துக்கள்.

-வேல்-