இந்த வார த(பி)த்துவங்கள்

இன்னைக்கு தூங்குனா நாளைக்கு எந்திரிக்கலாம்
நாளைக்கு தூங்குனா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?

பஸ்ல கலெக்டரே ஏறினாலும்
மொத சீட்டு டிரைவருக்கு தான்

சைக்கிள் கேரியர்ல டிபன் வச்சி எடுத்துகிட்டு போகலாம்
டிபன் கேரியர்ல சைக்கிள வச்சி எடுத்துகிட்டு போக முடியுமா?

டிக்கெட் வாங்கிட்டு உள்ள போனா அது சினிமா தியேட்டர்
உள்ள போயி டிக்கெட் வாங்கினா அது ஆப்பரேசன் தியேட்டர்
(சில படங்களை காசு கொடுத்து உள்ள போயி பார்க்கும் போது ஆப்பரேசன் தியேட்டருக்கு போன மாதிரி இருக்கும்)

என்னதான் மீனுக்கு நீந்த தெரிஞ்சாலும் அதால
மீன் குழம்புல நீந்த முடியுமா?

அயர்ன் பாக்ஸ்ல அயர் செய்ய முடியும்
ஆனா பென்சில் பாக்ஸ்ல பென்சில் செய்ய முடியுமா?
இது தான் வாழ்க்கை

நீ என்ன தான் காஸ்ட்லி மொபை வச்சிருந்தாலும்
அதுல எவ்வளவு தான் ரீசார்ஜ் செய்து வச்சிருநதாலும்
உனக்கு நீயே கால் செஞ்சிக்க முடியாது
இது தான் வாழ்க்கை

க்ரீம் பிஸ்கெட்டுல க்ரீம் இருக்கும்
ஆனா நாய் பிஸ்கட்டுல நாய் இருக்குமா?

ஒரு எறும்பு நினைச்சா ஆயிரம் யானையை கடிக்கலாம்
ஆனா ஆயிரம் யானை நினைச்சாலும் ஒரு எறும்பை கடிக்க முடியாது.

குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம்
குப்புற படுத்துகிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது

என்னதான் கராத்தேல பிளாக் பெல்ட் வாங்கியிருந்தாலும்
சொறிநாய் துரத்தினா ஓடித்தான் ஆகனும்
(ஹி ஹி.... )

சேர் உடைஞ்சா உக்கார முடியாது
கட்டில் உடைஞ்சா படுக்க முடியாது
ஆனா முட்டை உடைஞ்சாதான் ஆம்லெட் போட முடியும்
(அதனால உனக்கு கஷ்டம் வந்தா ஆம்லெட் போட தான்னு நினைச்சிக்கோ...)

உலகம் தெரியாம வளர்பவன் வெகுளி
கிரிக்கெட் தெரியாமல் விளையாடுபவன் கங்குலி
(மன்னிச்சிக்கோ வாத்தியாரே....)

வழக்கம் போல தமிங்கிலத்தில் தட்டச்சியது மட்டும் நான்...

நெசமாவா ராசா?

இந்த வார குமுதம் ரிப்போர்ட்டரில் படித்தது...
கொஞ்சமே கொஞ்சம் இங்கே, மிச்சத்தை இங்கே படிக்கலாம்...

Image hosted by Photobucket.com
............................................
............................................
............................................

Image hosted by Photobucket.com


நெசமா ராசா இது?


நன்றி
குமுதம் ரிப்போர்ட்டர்

இந்த வார த(பி)த்துவங்கள்

அடையார் ஆனந்த பவனோட பிராஞ்ச் நிறைய இடத்துல இருக்கும், ஆனா அடையார் ஆலமரத்தோட பிராஞ்ச் அடையார்ல மட்டும் தான்.

பாய்சன் 10 நாள் ஆனா பாயாசம் ஆகாது, ஆனால்
பாயாசம் 10 நாள் ஆனா பாய்சன் ஆகிடும்.

காருக்குள்ள டயர் இருந்தா அது ஸ்டெப்னி,
அதே நம்ப மேல அந்த டயர் ஏறினா நாம சட்னி

உள்ள போற வரைக்கும் தான் பிராந்தி
வெளியிய வந்தா அதுக்கு பேரு வாந்தி

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் ஒரு நூல் அளவுதான் வித்தியாசம்
என்னால ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தன்னம்பிக்கை
என்னால மட்டும் தான் ஃபுல்லா அடிச்சிட்டு ஸ்டெடியா நிக்க முடியும்னு சொல்றது தலைக்கனம்

செல்லுல பேலன்ஸ் இல்லனா கால் பண்ண முடியாது
ஆனா மனுசனுக்கு கால் இல்லனா பேலன்ஸ் பண்ண முடியாது

இரயில் எவ்வளவு வேகமா போனாலும் கடைசி பெட்டி கடைசியில தான் போகும்.

பஸ் போயிட்டா பஸ் ஸ்டாண்ட் அங்கயேதான் இருக்கும்
ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள்ஸ்டேன்ட் கூடவே போகும்

வாயால 'நாய்'னு சொல்ல முடியும்
ஆனா நாயால 'வாய்'னு சொல்ல முடியுமா?

அரிசி கொட்டினா வேற அரிசி வாங்கலாம்
பால் கொட்டினா வேற பால் வாங்கலாம்
தேள் கொட்டினா வேற தேள் வாங்க முடியாது

ஃபைல்ஸ்னா உட்கார்ந்து பார்க்கனும்
ஆனால் பைல்ஸ்னா பார்த்து உட்காரனும்

மின் மடலில் வந்ததை தமிழில் தட்டச்சியது மட்டும் நான்.

நட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்

நட்சத்திரம் - சிய சியா - போய் வருகின்றேன்

நானூறு மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கடைசி 50 மீட்டர் ஓடும் பொழுது மனம் வெற்றிக் கோட்டை தொடு தொடு என கூவும் ஆனால் நம்மை யாரோ கட்டி பின்னால் இழுப்பது போன்று தோன்றும் கிட்டத்தட்ட அந்த நிலைதான் தற்போது, நீண்ட நாள் பிரியப் போகின்ற காதலியிடம் எல்லாவற்றையும் அப்போதே பேச துடிக்கும் காதலனைப்போல என்னென்னவோ பேச நினைத்தேன் இந்த நட்சத்திர வாரத்தில், இத்தனை நாள் அலுவகத்திலிருந்து சரியான நேரத்தில் வந்து கொண்டிருந்த நான் நட்சத்திர வாரத்தில் நிறைய வேலை வந்துவிட்டது, ஏற்கனவே சில பதிவுகள் எழுதி வைத்து பதிவிட்ட போதும் நான் பேச நினத்ததெல்லாம் பேச முடியவில்லை.

ஒரு முயற்சி ஒரு வேண்டுகோள் என்ற இந்த பதிவில் வட மாவட்ட மக்களின் வாழ்க்கை பற்றிய பதிவுக்காக எழுதிய இது கதையல்ல நிஜத்தை நட்சத்திர வாரத்திற்காக சுட்டுவிட்டேன், அதிகபட்சமாக நான் கண்ட வறுமையென்ன வென்றால் கல்லூரியில் படிக்கும் போது பைக் வாங்க ஆசைப்பட்டு முடியாமல் போனது, ஆனால் என்னை சுற்றியும் சமூகத்திலும் நடக்கும் விடயங்களை என்னால் பார்க்க முடிகின்றது, வற்றிய மார்பும், சதை இல்லாமல் தோல் மட்டுமே போர்த்திய தேகத்தையும் ஒடுக்கு விழுந்த கண்ணங்களோடு கடுமையாக வேலை செய்யும் மக்களை பார்க்கும் போது என் சுகமான வட்டத்தையும் தாண்டியுள்ள வாழ்க்கையையும் அதன் சோகத்தையும் வறுமையையும் சின்ன வயதிலிருந்தே என்னால் உணரமுடிந்தது.

நிறைய படித்தும் நிறைய திறமை உழைப்பு இருந்தும் அவருடைய தொழில் வாழ்க்கையில் உச்சத்திற்கு போக வேண்டிய நம் தெருவிலிருக்கும் அண்ணன் ஒருவர் இன்றும் இளைஞர்கள் முன்னேற்றத்திற்கும் விழிப்புணர்விற்கும் களப்பணியாற்றிக் கொண்டுள்ளார், அவர் எனக்கு அறிமுகப்படுத்தியவர்கள் தான் பெரியார், மார்க்ஸ்,லெனின்,ஸ்டாலினும் சானித்தாளில் அச்சடிக்கப்பட்டிருந்த கம்யூனிச சித்தாந்தங்களும் அந்த வயதில்(இந்த வயதிலும்) லேசாக புரிந்தும் புரியாமலும் இருந்தது, சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை தரம், அதற்கெல்லாம் பெரிதாக ஒன்றும் செய்ய இயலாத என் ஆற்றாமை சுய கோபம், இவர்களை இப்படியே வைத்திருக்க நினைக்கும் கூட்டமும் அதன் அபவாதங்களும் இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு வேளை என் எழுத்தில் தாணு குறிப்பிட்டது போன்ற பிண்ணனியாக ஒலிக்கும் கோபமாக தெரிகிறதோ என்னவோ?

எழுத்தாளர் சிவசங்கரி ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டார், 47 நாட்கள் நாவல் கதைகளம் ஒரு பிராமண குடும்பம், இந்த கதை களத்தை தேர்ந்தெடுத்ததன் காரணமாக அவர் குறிப்பிட்டது அவர் வாழ்ந்த சூழல் அது, எனவே எளிதாகவும் இயல்பாகவும் அந்த கதைகளன் எழுத வந்ததாகவும் இரண்டே மாதங்களில் முழுநாவலும் எழுதினாராம், குடியை மையமாக வைத்து எழுதப்பட்ட வேறு நாவலை முடிக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் எட்டு ஆண்டுகளாம், நாஞ்சில்நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலின் கதைகளம் நாஞ்சில் பூமி, அதை தங்கர்பச்சான் சொல்லமறந்தகதையாக எடுத்தபோது அதன் களம் வடமாவட்ட சூழல், இதைப்பற்றி கேள்வி எழுப்பியபோது தங்கர்பச்சான் சொன்னது நான் வாழ்ந்த சூழலைத்தான் இயல்பாக காண்பிக்க முடியும், ஒரு வேளை இதே காரணங்கள் தான் ஒரு இனத்தின் சாயல் என் எழுத்துகளில் தெரிய காரணமாக இருக்கலாம்.

இன்று நாம் இங்கு இணைந்திருப்பது தமிழால், தமிழ் என்பது வெறும் தொடர்பு சாதனமா?, ஒரு நூல் வெளியீட்டு விழாவில் மலேசிய எழுத்தாளர் ஒரு நிகழ்ச்சியை தன் பேச்சில் குறிப்பிட்டார், மொரீஷியசில் சில ஆண்டுகளுக்கு முன் அந்த நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள் அரசாங்கத்தால் நீக்கப்பட்டது(அல்லது அதன் வரிசையில் கீழே தள்ளப்பட்டதா என தெரியவில்லை), அப்போது அங்கே தமிழர்கள் வீதியில் இறங்கி போராடினர், இரண்டு நாட்கள் மொரீஷியஸ் முழுதும் இயங்க முடியா நிலைக்கு சென்றுவிட்டது, பிறகு அரசாங்கம் மீண்டும் பழைய படியே ரூபாய் நோட்டில் தமிழ் இருக்கும் என்ற பின்பே போராட்டம் கைவிடப்பட்டது, இதில் என்ன ஆச்சரியம் இருக்கு என்கிறீர்களா? அந்த மொரீஷியஸ் தமிழர்களுக்கு தமிழ் எழுத பேச தெரியாது, அந்த ரூபாய் நோட்டில் தமிழால் எழுதப்பட்டது என்ன என்று கூட தெரியாது, அவர்கள் எந்த அமைப்பினாலும் இணைக்கப்பட்டிருக்கவில்லை, ஆனால் அந்த ரூபாய் நோட்டில் இருக்கும் தமிழ்தான் தங்கள் அடையாளமாக அவர்கள் நினைத்ததால், அந்த அடையாளத்தை, அங்கீகாரத்தை இழக்க விரும்பாததால் யாரும் தூண்டாமலே தானாகவே அந்த தமிழர்கள் சாலையில் இறங்கினர்.

இராணி வழக்குரைஞர் மு.திருச்செல்வம் அவர்கள் இலங்கை நீதிமன்றங்களில் தமிழுக்காகவும், தமிழர்களுக்காவும் நடத்திய சட்ட போராட்டங்கள், வாதங்களை 'ஈழத்தமிழர் இறைமை' என்ற பெயரில் தமிழில்மொழி பெயர்த்த மறவன்புலவு சச்சிதானந்தன் அவர்களின் நூலில் மிகத்தெளிவாக தமிழினத்தை ஆதிக்கம் செய்ய, அடிமைபடுத்த எவ்வாறு முதலில் தமிழ் மொழியின் மீது சட்டங்களை திருத்தி தாக்குதல் நடத்தியதையும் அதைத் தொடர்ந்த தமிழர்களின் அடையாளத்தை அழிக்கும் முயற்சியாக மேற்கொண்ட சட்டதிருத்த நடவடிக்கைகள் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன, தமிழ் ஒரு தொடர்பு மொழி மட்டும் தானே என்று புலம்புபவர்கள் முடிந்தால் அதை படித்து பாருங்கள், நல்ல வேளை அண்ணா, கலைஞரினால் இன்று இப்படி இந்தி மேலாதிக்கத்தை பற்றி எழுத வேண்டிய நம் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஒரு இனத்தை ஆக்கிரமிக்க, அவர்களின் அங்கீகாரத்தை, சுயத்தை அழிக்க முதலில் நடத்தப்படும் தாக்குதல் அவர்களின் மொழியின் மீது தான் என்பது உலகெங்கும் நிரூபிக்கப்பட்ட ஒன்று, தம் மொழியை இழப்பபவன் தன் அடையாளத்தை, தன் சுயத்தை இழக்கின்றான், தமிழ் வெறும் தொடர்பு மொழி மட்டும் தான் என விமர்சிப்பதையும் கூட தமிழ் வலைப்பதிவுகளில் தான் செய்கின்றனர், அறிந்தோ அறியாமலோ அவர்களுக்குள் இருக்கும் தமிழ் ஆர்வம் தான் அவர்களை தமிழ் வலைப்பதிவு ஆரம்பிக்க வைத்துள்ளது, அந்த வலைப்பதிவை தமிழ் ஆர்வலர்கள் உருவாக்கிய தமிழ்மணத்தில் இணைக்க வைத்ததும் அவர்களுக்குள்ளேயே உள்ள தமிழ் ஆர்வம் தான், உங்களுக்கு ஒரு வேண்டுகோள் அரசியலுக்காக உங்களுக்கு யாரையாவது எதிர்க்க வேண்டுமெனில் தயவு செய்து தமிழையும் தமிழ் உணர்வையும் பயன்படுத்தி அங்கதம் செய்யாதீர்கள்.

நட்சத்திர வாரத்தில் பேச முடியத பலதையும் வரும் காலங்களில் பேசலாம்... நான் வால் நட்சத்திரமோ, எரிநட்சத்திரமோ, அல்லது ஒன்றுமேயில்லையென்றாலும் இந்த நட்சத்திர வாரத்தினால் கூடுதல் கவனிப்பு கிடைத்துள்ளது.

சரிங்க போயிட்டு வரேன், பதிவுகளை படித்த, கருத்துகளை பறிமாறி கொண்ட, என்னையும் நட்சத்திரமாக்கிய, எனக்கும் தளம் அமைத்து கொடுத்த தமிழ் மணங்களுக்கும் என் சில பதிவுகளை பதிக்கும் முன்பே படித்து பார்த்து மெருகூட்டிய நண்பருக்கும் நன்றி நன்றி நன்றி

சிய சியா

நட்சத்திரம் - சமாஜ்வாடி கட்சியும் பாமகவும்

சமாஜ்வாடி கட்சி வடமாநிலங்களில் குறிப்பாக உத்திர பிரதேசத்தில் வலுவான கட்சி சில முறை ஆட்சி செய்த கட்சியும் கூட, அதன் பின்புலங்கள் பார்த்தால் அது கட்டமைக்கப்பட்டதே பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் இசுலாமிய மக்களின் முன்னேற்றத்திற்காக, இந்த மூன்று இனங்களின் இனைவு ஒரு பலமான சக்தியாக உ.பி. அரசியலில் உள்ளது,இதே நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் பாமகவும், அதன் நிறுவனராக மருத்துவர் இராமதாசு இருந்தாலும் பாமகவின் தோற்றத்திற்கு முக்கிய பணியாற்றியவர்கள் இசுலாமிய தலைவர் பழனிபாபாவும் தென் மாவட்டங்களில் வலுவாக இருந்த தலித் தலைவர் பசுபதி பாண்டியனும்.

பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, இசுலாமிய இனத்தவர்களின் வாழ்க்கை நல்ல நிலையில் இல்லை(இன்று வரை), முக்கியமாக இந்த இனங்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியில்லாத நிலை, இவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டது தான் பாமக.

மருத்துவர் இராமதாசுவும் தன்னை ஒரு வன்னிய இனத்தலைவராக மட்டும் முன்னிறுத்தாமல் பிற்படுத்தப்பட்ட இனத்தின் தலைவராக முன்னிறுத்திதான் பாமகவை ஆரம்பித்தார், இன்றைய நிலையில் பாமகவின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 14பேர் மட்டுமே வன்னியர்கள்(எண்ணிக்கையில் ஒன்றிரண்டு கூட குறைய இருக்கலாம்) மற்ற அனைவரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர்களே.

இம் மூன்று இனங்களின் இணைவு உ.பி.யில் செய்த விழிப்புணர்ச்சி புரட்சியைப் போல் தமிழகத்திலும் செய்ய தலைப்பட்டார்கள் இராமதாசுவும்,பழனிபாபாவும், பசுபதி பாண்டியனும், ஆனால் எதிர்பார்த்த அளவு இதற்கு வெற்றி கிடைக்கவில்லை, இன்னும் சரியாக சொல்வதென்றால் பாமக ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்திற்கும் அதன் வளர்ச்சியை எதிர்பார்த்த அளவிற்கும் தற்போது இல்லை என்பதே உண்மை.

பழனிபாபா கொலையான பிறகு அந்த இடத்தை இசுலாமிய தலைவர்கள் யாரும் நிரப்பவில்லை, தற்போதைய நிலையில் பெரும்பாலான இசுலாமியர்களின் நிலையும் வாழ்க்கை தரமும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை, அவர்களில் பெரும்பாலானோர் சுரண்டப்படும் நிலையிலேயே உள்ளனர், என்ன ஒரு வித்தியாசமென்றால் அவர்கள் சுரண்டப்படுவது அவர்கள் இனத்தின் பெரும் பணக்காரர்களால், தற்போதுள்ள தமிழக இசுலாமிய தலைவர்கள் மீதான குற்றச்சாட்டாகவே இதை வைக்கின்றேன், இந்த தலைவர்கள் விழிப்புணர்ச்சியின்றியும், வாழ்க்கை முன்னேற்றமின்றியும், கல்வியறவு இல்லாமலும் இருக்கும் இம் மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற முயலாமல் மதத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் தந்து அது தொடர்பாகவே இயங்குகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

பசுபதி பாண்டியனின் விலகலுக்கு பிறகு தலித் இனத்தினரின் பங்களிப்பு குறைந்துவிட்டது இவையெல்லா வற்றையும் விட ஊடகங்கள் பாமகவின் இந்த தோல்விக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதே பிரச்சினையை முன்பு திமுக எதிர்கொண்டது, ஆனால் அந்த காலகட்டத்தில் ஊடகங்களுக்கு பலமில்லை, ஊடகங்களால் பெரும்பான்மை மக்களை நெருங்க முடியவில்லை, ஊடகங்கள் சித்தரிக்க முயன்ற பிம்பம் யாருக்கும் தெரியவில்லை, ஆனால் திமுகவிற்கு இருந்த ஆள்பலத்தினால் தெருமுனை கூட்டங்கள் மூலமாக திமுக மக்களை நெருங்கியது, ஆனால் தற்போது ஊடகங்கள் சாதாரண பொது மக்களின் மூளை வரை செல்கின்றது, இதை பயன்படுத்தி ஊடகங்கள் பிற்படுத்தப்பட்ட, தலித் தலைவர்களின் மீது வன்முறையை அரங்கேற்றி வருகின்றது.

வடமாவட்ட கடலோர மீனவ இன மக்களின் வாழ்க்கை தரம் மிகக் குறைவான நிலையிலேயே உள்ளது, இன்றைய நாள் வரை அந்த சமுதாயத்தில் பெரும் மாற்றம் ஏதும் வரவில்லை, இராமதாசு அவர்களின் முயற்சியால் மீனவ இனத்தின் முக்கிய பிரமுகர்கள் பாமகவில் சேரும்படி செய்தார், தொடக்க காலத்தில் ஹிலால் என்கிற மீனவ சமுதாயத்தின் முக்கிய பிரமுகர் பாமகவிலிருந்தார், இதனால் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டிருந்த வன்னிய, மீனவர்கள் மோதல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தது, பாண்டிச்சேரி பாமக உறுப்பினர் பேராசிரியர் இராமதாசு மீனவ இனத்தை சேர்ந்தவர், இன்றைக்கும் பாமகவில் வன்னிய இனத்திற்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பவர்கள் தலித் இனத்தை சேர்ந்தவர்களே, இராமதாசு அவர்கள் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களை அரவணைத்து ஒரு இனக்கமான சூழ்நிலைக்காக பாடுபட்டவர் எத்தனையோ முறை உள்ளுக்குள்ளேயே அழுத்தங்கள் தரப்பட்ட போதும் அவர் விரும்பியது ஒரு இணக்கமான சூழலையே.

வன்னிய இன வட்டத்திலிருந்து இராமதாசு வெளியே வரும்போதெல்லாம் மீண்டும் மீண்டும் அவரை ஒரு வன்னிய இனத் தலைவராக மட்டுமே சித்தரிக்கும் வேலையை ஊடகங்கள் தொடர்ந்து செய்து வந்தன, வன்னியர் சங்கம் மரம் வெட்டியதை வேறு விதமாக சித்தரித்து காட்டியும், மறக்காமல் இருக்கும் படியும் தொடர்ந்து பார்த்துக் கொண்டன, மேலும் இதையே காரணமாக காட்டி தொடர்ந்து இவர்களின் மீது மற்றைய பிற்படுத்தப்பட்ட மக்களும் அவ நம்பிக்கை கொள்ளும் நிலையை ஏற்படுத்துகின்றன.

பழனிபாபா இறப்பு, ஹிலால் இறப்பு, பசுபதி பாண்டியனின் விலகலுக்கு பிறகு மற்றைய இனத்தவர்களின் பங்களிப்பும் ஊடகங்களின் தொடர் வன்முறையினாலும் மீண்டும் மீண்டும் பாமக வன்னிய வட்டத்தில் சுருக்கப்பட்டது, இதனால் பகுஜன் சமாஜ் கட்சி மாதிரி ஒரு பலமாக வர வேண்டிய கட்சி இன்னமும் நான்காவது இடத்திலேயே தமிழகத்தில் உள்ளது.

பாமகவின் அத்தனை போராட்டங்களும், திருமாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட தமிழ் பாதுகாப்பு பேரவையின் போராட்டங்களும் கொச்சை படுத்தப்பட்டன, புகைப்பிடிப்பதற்கு மற்றும் குடிப்பதற்கு எதிரான பிரச்சாரங்களை ரஜினிக்கு எதிரான பிரச்சினையாக மாற்றியதில் முக்கிய பங்காற்றியது தினமலர், ஆனால் அதன் பின் விளைவுகளாக ரஜினியின் மாயபலம் உடைத்தெறியப்பட்டது என்னமோ நல்லதற்கு தான், தமிழ் இல்லாமல் வெறும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்ட பெயர் பலகைகள் தார் பூசி அழிக்கப்படும் என்று கூறியதை சில ஆர்வக்கோளாறு தொண்டர்கள் இரண்டு மொழிகளிலும் எழுதியிருந்ததை அழித்ததை மட்டும் படமாக எடுத்து வெளியிட்டு தங்கள் எரிச்சலை தீர்த்துக் கொண்டன, தார் பூசியதை மாய்ந்து மாய்ந்து எழுதி தீர்த்த ஊடகங்கள் ஊரெங்கும் ஆங்கில-தமிழ் சொற்கள் பற்றிய டிஜிட்டல் பேனர்கள் வைத்திருந்ததை ஏன் எழுதவில்லை,பேஷன் ஷோக்கள், துரித உணவகங்களுக்கு(பள்ளி,கல்லூரிகளுக்கு அருகில் இருக்கும் இவைகளால் அதீத உடல் பருமன் பிரச்சினையை ஏற்படுத்துகின்றன என கூறி) தடை ஏற்படுத்த கோரி நடந்த போராட்டங்கள் வெளிக்கொணரப்படவேயில்லை, பிரபாகரனை கைது செய்து கொண்டு வரவேண்டுமென்று சட்டசபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சட்டசபையில் கருஞ்சட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்ததற்கு புலிகளிடம் பெட்டி வாங்கிவிட்டார்கள் என அசிங்கப்படுத்தி பார்த்தது இந்த ஊடகங்கள், சம்பாதிக்கும் பணத்தை குடியில் அழிக்கும் மக்களை காக்க கிராமப்புற மதுக்கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தியதையும் கேவலப்படுத்தி பார்த்தன இந்த ஊடகங்கள், கூட்டணி மாற்றங்கள்(கூட்டணியில் இவர்களை சேர்த்துக்கொண்டவர்களை ஒன்றும் சொல்ல மாட்டார்கள்), கடைசியாக இப்போது குஷ்பு, கற்பு பிரச்சினையை கருத்து சுதந்திரத்தை பறிக்கின்றார்கள் என்று விமர்சனம், கற்பை இன்னமும் வியாபாரத்திற்கான சரக்காக வைத்துக்கொண்டுள்ள இந்தியாடுடே இந்த வாரமும் இந்த பிரச்சினை தொடர்பான விவாதகளம் அமைத்து தமக்கு ஏற்ப கருத்து சொல்பவர்களை வைத்து விவாதம் நடத்தியுள்ளது (இது பற்றி எழுதுவதென்றால் தனியாக பெரும் பதிவே எழுத வேண்டும்) இதன் முக்கிய நோக்கம் கற்பாவது கருத்து சுதந்திரமாவது பச்சை வியாபர நோக்கம், மேலும் பசுமை தாயகத்தின் சுற்றுப்புற சூழல் பணியை கேவலப்படுத்தி பார்ப்பதிலும் முதலிடம் வகிக்கிறன ஊடகங்கள், பசுமை தாயகம் சுற்று சூழலுக்கு தரும் முக்கியதுவத்தையும் அதே நக்கலுடன் பழிக்கப்படுகின்றது.

சில வாரங்களுக்கு முன் அன்புமணி அமுக்கிய 56 கோடி என்று தலைப்பிட்டு தத்துபித்தென்றி உளறி தன் முகத்தில் கரி பூசிக்கொண்டது குமுதம் ரிப்போர்ட்டர், அன்புமணி மகள்கள் தில்லியில் தமிழ் பாடம் படிக்கவில்லை என கிட்டத்தட்ட எல்லா பத்திரிக்கைகளும் வாசகர் கடிதம் என்ற பெயரில் தங்கள் வன்முறையை நிறைவேற்றின, இதை மறுத்து துக்ளக் பத்திரிக்கைக்கு அன்புமணி அவர்கள் எழுதிய கடித்தத்தின் தலைப்பை திரித்து "மாணவர்கள் ஆங்கிலப்புலமை பெற வேண்டும்" - மத்திய அமைச்சர் டாக்டர் அன்புமணியின் மனைவி எழுதுகிறார்...என்று 'சோ'தனமான தலைப்பை வழங்கி தம் அசிங்கமான முகத்தை காட்டிக்கொள்கின்றார் இதன் சுட்டி இங்கே , 'சோ'வைப்பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம், ஊடகவன்முறையின் அவதாரமாகவே திகழ்கின்றார், அதற்கு அவர் போடும் புத்திசாலி கோமாளி வேடமும் நிறைய உதவுகின்றது,

//வருமானத்துக்காகவோ, புகழுக்காகவோ எந்தவொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கோ அல்லது நிறுவனங்களுக்கோத் தன்னையோ தனது பத்திரிக்கையையோ இதுவரை அடகு வைக்காமல், தைரியமாக எல்லாரைப் பற்றியும், எவற்றைப் பற்றியும் எழுதுபவர்// என தன்னை பற்றிய பிம்பத்தை ஏதோ ஒரு சிலரிடம் ஏற்படுத்தி வைத்திருந்தாலும் எந்த மடத்தில் அடகு வைத்தார் என மற்ற அனைவருக்கும் தெரியும் ஏன் அவர்களுக்கே கூட தெரிந்திருக்கலாம்.
இன்னும் பல பல பேசலாம் 'சோ'வைப்பற்றி... நிச்சயம் நேரம் கிடைக்கும் போது இன்னும் பல பல பேசலாம் 'சோ'வைப்பற்றியும் அவரின் 'சோ'த்தனமான செயல்களையும்.


பண்ருட்டி அருகிலிருக்கும் கிராமத்திலிருந்து பாமக பயிற்சி முகாமிற்கு பெற்றோர் ஒப்புதலுடன் சென்ற மாணவியை ஏதோ கட்டாயப்படுத்தி அழைத்து போனதாக (வேற வேலை இல்ல பாருங்க இவங்களுக்கு...) திரித்த பத்திரிக்கைகள் கடைசியில் அந்த பெற்றோர்களின் பேட்டி அளித்து சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்தனர் தொழுநோய் பற்றிய உண்மை தகவலை பேசிய அன்புமணியின் தகவலே தவறென திரித்த ஊடகங்கள் பிறகு இதைப்பற்றி பேசவே பேசாமல் மூடிக்கொண்டன, தற்போது ஓநாயாராகவும் நரியாராகவும் அன்புமணியின் நிர்வாகத் திறமையை விமர்சனம் செய்து வருகின்றன, பிரதமர் அன்புமணியின் நிர்வாகத்தில் அதிருப்தியாக உள்ளதாக கதை கட்டி வருகின்றன, அன்புமணிக்கு சுகாதார துறையின் மீதான ஆர்வமும் தொடர்ந்து பல மணி நேர உழைப்பும் எத்தனை பேருக்கு தெரியும்?

இன்னும் இந்த ஊடக வன்முறையை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது, Ramwatcher மாதிரி எத்தனை வாட்சர் வைத்தாலும் பத்தாது.

குஷ்புவின் மீது பல இடங்களில் வழக்கு போடுவதையும், இந்தியாடுடே பிரபுசாவ்லா மற்றும் எடிட்டர் ஆனந்த் நடராஜன் மீதும் வழக்கு போடுவதையும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதாக தலையங்கத்தில் புலம்பும் பிரபுசாவ்லாவுக்கு வழக்கு போடுவது சட்டத்திற்கு உட்பட்டது தான் என்பதாவது தெரியுமா?

அதிகாரம் இல்லாதபோதே இப்படியென்றால் அதிகாரத்திற்கு வந்தால் எப்படி என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களிடம் ஒரு வித பீதியை தோற்றுவிக்க முயல்கின்றனவே இந்த ஊடகங்கள், இதற்கு உண்மையன நோக்கம் கற்பு, கருத்து சுதந்திரம் பற்றிய கவலையா அல்லது ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்திற்கு வரக்கூடாது என்ற எண்ணமா?

இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதென்றால் இது பாசிசமென்றால் இத்தனை வருடமாக இராமதாசுவையும் திருமாவையும் திரித்தும், பொய்யான தோற்றத்தை உருவாக்கி காட்ட முயலும் ஊடகங்கள் அவர்களுக்கு பிடிக்காத இராமதாசு திருமாவின் இருப்பை கேள்விக்குறியாக்குகின்றனவே இது ஊடகங்களின் பாசிச செயல் அல்லவா?

திமுக உருவாக்கியுள்ள மீடியா சாம்ராஜ்யத்தை போன்று இவர்களும் உருவாக்கினால் தான் குறைந்த பட்சம் தம் பக்கமுள்ள நியாயங்களையாவது சொல்ல முடியும்,

தற்போது திருமாவுடன் இணைந்து பணியாற்றுவதையும் பொறுக்க மாட்டாமல் இருவரையும் சேர்த்து கேவலப்படுத்திக் கொண்டுள்ளன.

வன்னிய இனத்திலுள்ள சிலரின் உள் அழுத்தங்கள் எத்தனை தூரம் இந்த இரு இனங்களின் இணைப்பிற்கு ஊறு விளைப்பதுவோ கிட்டத்தட்ட அதே அளவிற்கு இந்த இரு இனங்களின் இணைப்பிற்கு ஊறுவிளைக்க கூடியது சில தலித்துகள் இந்த இணைப்பினை சந்தேகக்கண் கொண்டும், நம்பிக்கையில்லாமலும் பார்ப்பது (இரண்டும் ஒன்றென்று சொல்ல வரவில்லை ஆனால் இரண்டும் ஏற்படுத்தும் விளைவு ஒன்றுதான்), இதை மிகச்சரியாக பயன்படுத்தும் நிலையில் உள்ளன ஊடகங்கள், அதனால்தான் தொடர்ந்து மறக்க நினனக்கும் வடுக்களையும் காயங்களையும் மீண்டும் மீண்டும் கீறிப்பார்க்கின்றன, இந்த இணணவு உடைய வேண்டுமென நினைக்கும் சில ஆதிக்க சக்திகள் தொடர்ந்து நேற்று அப்படி பேசினாயே, முந்தா நாள் இப்படி பேசினாயே என்று கீறி கீறி இரத்தம் குடிக்க முயல்கின்றன. அதற்கு பலியாகாமல் இரு பக்கத்தினரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சமாஜ்வாடி பாமக பற்றிய ஒப்புமை எங்கேயோ இணையத்தில் படித்ததோ நண்பர் சொல்ல கேட்டதோ மற்றதெல்லாம் நம்ம சரக்கு

நட்சத்திரம் - எது இன்று உன்னுடையதோ

"எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்."


கீதையில் எனக்கு மிகப்பிடித்த வார்த்தைகள், இந்த பூமி, இந்த உலகம் எனக்கு என் முன்னோர்கள் தந்தது, இதை அப்படியே என் சந்ததிகளுக்கு தரவேண்டும், இந்த உலகம் எனக்கு சொந்தமானது அல்ல, இங்கே வாடகைக்குத் தான் தங்கியுள்ளேன், நான் இங்கிருந்து கிளம்பும்போது எப்படி எனக்கு கிடைத்ததோ அது மாதிரி இந்த உலகத்தை தரவேண்டும், ஆனால் தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றேன்? நீர், மண், காற்று என அத்தனையையும் மாசுபடுத்திய நான் தற்போது வின்வெளியிலும் குப்பை கொட்டிக்கொண்டுள்ளேன்.

நீண்ட நாட்களாக எனக்கு உரைக்காத ஒன்று நண்பர் கூறிய பிறகு உரைத்தது, சாலைவழிப் பயணத்தின் போது கிட்டத்தட்ட சாலைகள் முழுக்க ஓரங்களில் பிளாஸ்டிக் குப்பைகள், எங்கும் பிளாஸ்டிக் எதிலும் பிளாஸ்டிக் குப்பைகள், இந்த பிளாஸ்டிக் குப்பைகள் உருவாக்கும் சுற்றுப்புற சூழல் மாசுபாடு மிக அதிகம்.

அதை எரிக்கும் போது வெளிவரும் நச்சு வாயு கடுமையான சுகாதாரப் பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.

மேலும் பிளாஸ்டிக் மக்குவதற்கு 10 இலட்சம் ஆண்டுகள் வரை கூட எடுக்கின்றது, இந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகள் மண்ணில் புதைவதால் மழை நீர் நிலத்தில் இறங்குவதை தடுக்கின்றது.

எல்லாவற்றிற்கும் மேலாக பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக பல இடங்களில் பயன்படுத்தப்படும் ஃபோம் கோப்பைகளும் ஃபோம்களும் பிளாஸ்டிக்கை விட மோசமானது, அவைகள் எத்தனை இலட்சம் ஆண்டுகள் ஆனாலும் மக்காது, நீண்ட நாட்கள் வரை ஃபோம் மக்கவே மக்காது என்ற உண்மை எனக்கு தெரியாது.

Length of Time for Trash to Decompose

aluminum can 350 years
banana peel 2 months
baseball bat (wooden) 20 years
baseball glove (leather) 40 years
car tire do not know - maybe never
cardboard milk carton 5 years
corn on the cob 18 years
cotton diaper 4 months
disposable diaper 500 years
glass bottle do not know - maybe never
newspaper 20 years
notebook paper 3 months
painted wooden stake 13 years
plastic sandwich bag 400 years
plastic six-pack ring 450 years
polystyrene foam cup do not know - maybe never
rope 3-14 months
steel can 100 years
tin can 100 years
toothbrush 400 years
traffic ticket 2-4 weeks
wool mitten 5 years


இந்த முறை பெய்த மழையில் பல இடங்களில் கழிவுநீர் வடிகால்கள் சரியாக வேலை செய்யவில்லை, சாக்கடைகள் எல்லாம் பிளாஸ்டிக் குப்பைகளால் அடைத்துக்கொண்டுவிட்டன, எனவே மழை நீர் வெளியேறாமல் சாலைகளுக்கும் வீடுகளுக்கும் வந்தன, மண்ணில் புதைந்துள்ள இந்த பிளாஸ்டிக் குப்பைகள் மழைநீர் உள்ளே புகுந்து நிலத்தடி நீர்மட்டத்தை உயரவிடாமல் தடுக்கின்றன.

இந்த படம் சாக்கடையின் அருகில் எடுத்த படம், முழுக்க முழுக்க பிளாஸ்டிக் குப்பைகள்.

Image hosted by Photobucket.com

தென்பெண்ணை ஆற்றின் உள்ளும் கரையோரத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குப்பைகள் இந்த படத்தில்.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com



இதில் என்ன பிரச்சினையென்றால் எய்ட்ஸ் பயம், அல்லது குறைந்த பட்சம் எய்ட்ஸ் வந்தால் குணப்படுத்த முடியாது என்ற ஒரு விழிப்புணர்ச்சியாவது பலரிடம் உள்ளது, ஆனால் இந்த உலகை பிளாஸ்டிக் குப்பையால் அழித்துக் கொண்டுள்ளோம் என்ற உணர்வு / குற்ற உணர்ச்சி கூட நம்மிடம் இல்லை, இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்ற மனப்பாண்மை உள்ளது, அல்லது இந்த பிரச்சினையை பற்றி ஒரு Seriousness இல்லை என்பதும் உண்மை.

அன்றாட வாழ்க்கையில் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருக்கவே முடியாத சூழல் இப்போது, ஆனால் அதன் பயன்பாடுகளை குறைப்பதும், மீள்சுழற்சி(re-cycling) முறையில் பிளாஸ்டிக்கை மீண்டும் பயன்படுத்துவதும் இன்றியமையாதது.

மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தனித்தனியே பிரித்து போடும்படி நகராட்சி அறிவுறுத்தியும் குப்பைத் தொட்டியில் போடாமல் அதனருகில் பிளாஸ்டிக் குப்பைகளை போட்டிருக்கும் படம் இது.

Image hosted by Photobucket.com


இதைப்பற்றிய குறைந்த பட்ச விழிப்புணர்ச்சி கூட வரவில்லை, அதைப்பற்றி ஊடகங்களும், நாமும் கொஞ்சம் கூட சிந்திக்கவில்லை, எய்ட்ஸ் விழிப்புணர்ச்சி பிரச்சாரத்திற்கு இணையாக பிளாஸ்டிக் விழிப்புணர்ச்சியும் தற்போதைய அவசரத்தேவையாக இருக்கின்றது, இல்லையென்றால் நாளை நம் சந்ததிகளுக்கு விட்டு செல்லும் உலகம் என்கிற இந்த வீடு பிளாஸ்டிக் குப்பைகளால் அழிக்கப்பட்டிருக்கும்.

உடனடித்தேவை பிளாஸ்டிக் குப்பை பற்றிய குற்ற உணர்ச்சியும் விழிப்புணர்ச்சியும்

நட்சத்திரம் - செல்லம் ஐ லவ் யூ டா

நம்ம அண்ணாத்தே ஒருத்தர் இருக்காருங்க, நம்ம விட ஒரு அஞ்சு ஆறு வயசு பெரியவரு, நிறைய படிச்சவரு, பேருக்கு பின்னாடி MSc,MPhil,BEd,AMIE அப்படினு நிறைய பட்டமுண்டு, நிறைய புத்தக படிப்பும் படிச்சவர், எல்லா வெசயமும் பேசுவாரு, நமக்கு சின்ன வயசில அவருதாங்க குரு மாதிரி, எல்லா விசயமும் பேசுவாரு எல்லா லாஜிக்கும் பேசுவாரு விஜயகாந்த் படத்தில இடிக்கிற லாஜிக்க தவிர, சும்மாவா தாயகம், கஜேந்திரா படம்லாம் 10ரூபாய் கலெக்ஷன் ஆச்சினா அது நம்ம அண்ணாத்தயால தான், அண்ணாத்த கிட்ட எத்தனை சிக்கலான கணக்கு கொடுத்தாலும் போடுவாரு ஆனால் அண்ணாத்த கிட்ட 1+1 என்னனு நேரடியா கேட்ட பதில் சொல்ல தடுமாறுவாரு, அதான் எல்லாத்தையும் குறுக்க யோசிக்கிறவரு அதையும் குறுக்க யோசிக்க ஆரம்பிச்சிடுவாரு. அதனால அவருக்கு ஊருல வச்சிருக்கிற பட்ட பேரு "புடுங்கி ஆழ்வார்" , "ஏன்டா உன் வயசென்ன, அவன் வயசென்ன அவனோடு சேந்து நீ சுத்திகினு இருக்க, அவன் பெரிய புடுங்கி ஆழ்வார், நீ சின்ன புடுங்கி ஆழ்வாரா?" என்று இலவச அறிவுரைகள் வேறு எனக்கு அப்போப்போ யாராவது தருவாங்க.

போன வருடம் வந்தாருங்க சிங்கப்பூருக்கு சுத்தி(சுற்றி) பாக்க, அப்போ தான் நம்ம இன்னொரு நண்பருக்கு திருமணம் நிச்சயமாயி இருந்தது, தெனம் தெனம் கடலை தான், அட ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிச்சி மறு நாள் காலையில எட்டரை மணி வரைக்கும் பேசிக்கிட்டு இருந்தாருனா பார்த்துக்கோங்க, சும்மாவா சிங்டெல் நிறுவனம் அவ்வளோ லாபம் சம்பாதிக்குதுனா !!!

அன்னிக்கு ராத்திரி புலி நேரத்தில்(Tiger Time) Tiger என்பது ஒரு பியரின் பெயர் நம்ம அண்ணாத்தேயும் நம்ம நண்பரும் பேச ஆரம்பிச்சாங்க, நாம வழக்கம் போல ஒரு கோக் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தோம், ஏதேதோ பேசி கடைசியா வந்து நின்ன இடம் காதல்திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? எது சிறந்தது என்று, அட இதைத்தான் 'அட வாங்கய்யா' என்று சாலமன்பாப்பையாவும் 'அப்புடித்தான்' என்று லியோனியும் இன்ன பலரும் பேசி பேசி முடிச்சிட்டாங்களேனு ஒரு அலுப்பு (யெய்யா இளம் காதல் கவிஞர் சிங்.செயக்குமாரரே நல்லா கேட்டுக்குங்க) ஆனாலும் நம்ம அண்ணாத்தே தான் புடுங்கியாழ்வார் ஆச்சே எதுனா வித்தியாசமா சொல்லுவாருனு காதை தீட்டிக்கிட்டேன்.


மொத கேள்வி நம்ம நண்பர பார்த்து அண்ணாத்தே கேட்டது, "ஏன் தம்பி உங்களுக்கு நிச்சயமான பொண்ண எத்தனை நாளா தெரியும்"னு

"அது வந்து ஒரு மாசமா தெரியும்"

"அதுக்கு முன்னால தெரியாதில்ல"

"ஆமாம்"

"சரி இந்த ஒரு பொண்ணுதான் பார்த்திங்களா? இல்ல வேற பொண்ணுங்களும் பார்த்திங்களா?"

"ஒரு 4,5 பொண்ணு பார்த்திருப்பேன்"

"சரி அந்த 4,5 பொண்ணுல ஏதோ ஒரு பொண்ணை நிச்சயம் பண்ணியிருந்தாலும் இதே மாதிரிதான பேசுவிங்க?"

அண்ணாத்த எங்க வர்றாருனு எனக்கு புரிஞ்சிபோச்சி

"ம்... சொல்லுங்க..."

"ஆமாம்..."

"அந்த பொண்ணுகிட்டயும் நீ இல்லாமல் நான் இல்லை, நீ தான் என் உயிர்னு டயலாக் விடுவிங்க தானே?"

"ஆமாம்...."

"அப்போ உங்களுக்கு அந்த பொண்ணு மேல லவ் இல்ல, உங்க மனைவி அல்லது மணைவியா வரப்போறவங்க மேல தான் லவ்வு"

"என்ன சொல்றிங்க, அந்த பொண்ணுதானே என் மனைவியா வரப்போறவங்க"

அண்ணாத்தே பேச்சு எனக்கு புரியும்.. ஆனா பாவம் நம்ம ஆளுக்கு அடிச்ச பீரெல்லாம் இறங்க ஆரம்பிச்சிடுச்சி

"சரி தம்பி தெளிவாவே சொல்லுறேன், அதாவது நீங்க அந்த பொண்ணை லவ் பண்ணலை, உங்களுடைய மனைவிங்கற ரோலை(Role)த் தான் லவ் பண்ணுறிங்க, இந்த பொண்ணுனு இல்லாம வேற எந்த பொண்ணு உங்க மனைவிங்கற ரோலை ப்ளே(play) பண்ணினாலும் லவ் பண்ணுவிங்க"

"ம்...."

"சரியா சொன்னா அந்த பெண் மீதான ஈர்ப்பைவிட அந்த பெண்ணின் ரோல் மீதான ஈர்ப்புதான், வேற பொண்ணை நிச்சயம் செஞ்சிருந்தாலும் அந்த பொண்ணுகிட்டயும் கண்ணே, மணியேனு கொஞ்சியிருப்பீங்க"

"ம்..."

"அந்த பெண்ணினுடைய சுயம் உங்களை கவரவில்லை, ஆனால் காதல் கல்யாணத்தில அந்த பொண்ணோட சுயம் உங்களை கவரும்"

கடுப்பான நண்பன் அனைத்து விரல்களையும் மடக்கி கை முட்டியை உயர்த்தினான், ஆஹா அண்ணாத்தே சிங்கப்பூர் வந்து அடி படப்போறாருடானு நெனச்சேன்.

டப்பென்று சுண்டு விரலை மட்டும் உயர்த்தி போயிட்டு வந்துடறேன் என மூச்சாக்கு போனான்.

அவன் இல்லாத அந்த நேரத்தில நம்ம அண்ணாத்த கிட்ட ஒரு விடயம் சொன்னேன், அது பதிவு முடிவுல வச்சிக்கலாம்.


முகம் கழுவி தெளிவாக வந்திருந்தான். குடித்த புலி பால் சாரி சாரி புலி பீர் மயக்கம் முகத்தில் இல்லை.

"அண்ணே நீங்க ரொம்ப படிச்சவரு நிறைய தெரிஞ்சவரு, உங்க அளவுக்கு நான் இல்ல"

இப்படி சொன்னவுடன் என்னை ஒரு முறை திரும்பி பார்த்து புன்னகைத்தார், கேட்டுக்கோடா என்னமோ எல்லாம் புடுங்கியாழ்வார்னு சொல்லுறாங்க இங்க பார்த்தியா இந்த தம்பி என்ன சொல்றான்னு என்பது போலிருந்தது.

"நீங்க சொன்ன மாதிரியே எனக்கு என் மனைவி அப்படிங்குற ரோல் மேல தான் பாசம், ஆனா பாத்திங்கனா நான் ஒரு நாலஞ்சு பொண்ணு பார்த்தேன், அந்த பொண்ணும் அப்படித்தான் நாலஞ்சு மாப்பிள்ளை பார்த்தாங்க, மனைவி அப்படிங்கற ரோல் மேல மட்டும் தான் ஈர்ப்புனா இந்த பொண்ணை மட்டும் பார்த்த உடனே எனக்கு எப்படி பிடித்தது? அப்போ அந்த மனைவிங்கற ரோலையும் தாண்டி அந்த பொண்ணை ஏதோ ஒரு விதத்தில எனக்கு பிடித்திருந்ததால் தானே"

ஆஹா அப்படி போடு என நினைத்துக்கொண்டேன், மேலும் பேசினான்

"நிச்சயிக்கப்பட்ட திருமணம் செஞ்சவங்களில் பலரை பார்த்திங்கனா மேட் ஃபர் ஈச் அதர் மாதிரி இருப்பாங்க, நாமளே நினைப்போம் இந்த மாதிரி பொண்ணு இவனுக்கு வரலைனா இவன் காலி, இந்த பொண்ணுக்கு இந்த மாதிரி பையன் தான் கரெக்ட்டுனு நெனக்கிறோமா!!!"

"ஆமாம்..."

"அது எப்படி? கல்யாணம் செய்த அப்புறம் அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு மேட் ஃபார் ஈச் அதரா மாறிடுறாங்க இல்லையா?"

"அட... ஆமாம்"

"இப்போ நாம இந்த அப்பா அம்மாக்கு தான் பிறக்கனும்னு கேட்டா பிறக்குறோம், இல்லையே ஆனால் எல்லா அப்பா அம்மாவுக்கும் அவங்க பசங்களை பிடிச்சிருக்கு இல்லயா?"

"ம்...."

"இதுவும் அது மாதிரிதான் அண்ணாத்தே"

இன்னும் நிறைய பேசினான் அது இங்கே தேவையில்லை, அண்ணாத்தையை அவர் ஹோட்டல்ல விட்டுட்டு வீட்டுக்கு போகும் போது கேட்டான்

"ஆனாலும் அண்ணாத்த சொன்னதுல உண்மையிருக்கு இல்லயா?"

"இங்க பாரு, நீ பிரகாஷ்ராஜ் ஸ்டைல்ல 'செல்லம் ஐ லவ் யூ டா னு' அந்த பொண்ணுகிட்ட சொல்லும்போது உனக்கு ஷாக் அடிக்குதா உடம்புல"

"ஆமாம்..."

" 'ஐ டூ லவ்யூடா' னு அவங்க சொல்லும் போது ஷாக் அடிக்குதா "

"ஆமாம்..."

"அப்புறமென்ன அவ்ளோதான், இத்தெல்லாம் ஆராயக்கூடாதுடா, அனுபவிக்கனும், ஆராய ஆரம்பிச்ச அனுபவிக்க முடியாது, அனுபவிக்கனும்னா ஆராயக்கூடாது, போ... போ... போய்கிட்டே இரு"

ஆமா... அண்ணாத்த கிட்ட நான் என்ன சொன்னேன்னு கேக்குறிங்களா?

"அண்ணாத்தே உன்னிய மாதிரி தெளிவா ஆதரிச்சோ, எதிர்த்தோ ஒரு முடிவோட இருக்குற பசங்களுக்கு நீ பேசுற பேச்சால ஒரு பெரச்சினையுமில்ல, ஆனால் முக்காவாசி பசங்க ரெண்டுத்துலயும் இல்லாம குழம்பிக்கிட்டு மதில்மேல் பூனை மாதிரி இருப்பானுங்க ஆனா அவனுங்களும் தெரிஞ்சோ தெரியாமலோ சரியா வாழ்க்கையை நடத்திக்கிட்டு போறானுங்க, நீ அவனுங்களுக்கு இத்த சொல்றன், அத்த சொல்றேன்னு மதில் மேல் பூனையா இருக்குற பசங்களை கன்பியூஸ் பண்ணிடாதா"

என்னங்க நாஞ்சொன்னது சரி தான?!


பின்குறிப்பு
--------------
நம்ம அண்ணாத்த ப்ளாக்குலாம் படிக்கிறதில்லை அதான் தில்லா போட்டுட்டேன்.

நட்சத்திரம் - இந்த பெற்றோர்கள் சிந்திப்பார்களா?

சிங்கப்பூரில் வேலை செய்ய வருபவர்கள் பல பிரிவுகளில் வருவார்கள், Employment Pass, S Pass, EDP, WP இதில் Employment Passல் வருபவர்கள் S$2500 க்கும் மேல் சம்பளம் வாங்குபவர்கள், S மற்றும் EDP களில் வருபவர்கள் அடுத்தடுத்த நிலை, கடைசியாக WP (Work Permitt).

இதில் WPயில் வருபவர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஏறக்குறைய ஒரு லட்சத்தி ஐம்பதினாயிரம் ரூபாய் இடைத்தரகர்களிடம் கொடுத்து வருகின்றனர், தற்போது இவர்கள் Skill Evaluation Test என்பதை சென்னையிலேயே முடித்து விட்டு தான் வரவேண்டும் இதற்காக பயிற்சி தர சில நிறுவனங்கள் சென்னையிலேயே உள்ளனர், அந்த மூன்று மாத கால பயிற்சி காலம் கடுமையானது, அங்கேயே தங்கியிருந்து பயிற்சி எடுக்க வேண்டும், வெல்டிங்க், பிட்டர், கம்பி கட்டும் வேலை என பல வேலைகளுக்கும் பயிற்சி தரப்படும், ஏற்கனவே வாழ்க்கையில் பல அடிகள் பட்டு எப்படியாவது சிங்கப்பூர் வந்து பிழைக்க வேண்டுமென எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு பயிற்சி எடுப்பர், உள்ளங்கை தோல்கள் எல்லாம் உறிந்து விடும் நல்ல எதிர்காலத்திற்காக வட்டிக்கு கடன் வாங்கி வருவர், அங்கே குறைந்தது ரூ 15,000 சம்பளம் OTயில் இன்னும் நிறைய கிடக்கும் எப்படியும் மாதத்திற்கு ரூ.25,000 எடுக்கலாம் என்று நம்பிக்கையூட்டப்படுவார்கள்.

வந்து இறங்கினால் ஒரு நாளைக்கு 18 வெள்ளியிலிருந்து 21 வெள்ளிவரை தான் சம்பளம் நிர்ணயிக்கப்படும், அதுவும் வேலை செய்யும் நாட்களுக்கு மட்டும் கிட்டத்தட்ட தினக்கூலி தான், மாதம் 30 நாளும் வேலை செய்தால் மட்டுமே கிட்டத்தட்ட ரூ14,000 சம்பாதிக்க முடியும் OT எத்தனை நாள் கிடைக்குமென்று சொல்லமுடியாது, மேலும் 30 நாளும் வேலை உண்டா என்பதும் சந்தேகமே, முதல் ஓராண்டுகாலம் வாங்கிய கடனை அடைக்கவும் வட்டி கட்டவுமே தான் சரியாக இருக்கும்.

தங்குவதற்கு மட்டுமே இவர்களுக்கு நிறுவனம் இடமளிக்கும், தங்குமிடம் ஏதேனும் ஒரு கட்டிட வேலை நடந்தால் அதனருகில் கண்டெய்னர் மாதிரி தகரத்தால் அறைகள் (புதுக்கோட்டையிலிருந்து சரவணன் திரைப்படத்தில் காண்பிப்பார்களே அது மாதிரி) அமைத்து தருவார்கள், சில சமயங்கள் டார்மெட்டரி, அதிட்டம் இருந்தால் இரண்டு அறை கொண்ட கழக வீடுகள் கிடைக்கும் (ஆனால் இதில் குறைந்தது 8 பேராவது தங்குவார்கள்). காலையில் மிகப்பெரிய பிரச்சினையே குளியலறையும் கழிவறையும் தான், இருக்கும் கூட்டத்திற்கு தகுந்த அளவிற்கு கழிவறைகள் இருக்காது.

இவர்களின் சிங்கை வாழ்க்கை கிட்டத்தட்ட ஒரு தவ வாழ்க்கை தான், ஒவ்வொரு வெள்ளியையும்(டாலர்) கணக்கு செய்து தான் செலவழிக்கின்றனர், ஹாக்கர் சென்டர் கடைகளில் ஒரு கோப்பை தேநீரின் விலை 70 சென்ட்கள் (ஏறக்குறைய 18 ரூபாய்கள்), ஒரு தேநீர் குடிப்பதற்கு முன் பலமுறை யோசிக்கின்றனர்,

வேலை செய்யும் போது இலேசான/ சற்று பலமான காயம் ஏற்பட்டால் அதை மறைத்துவிடுகின்றனர், இது வெளியே தெரிந்தால் பாதுகாப்பு பற்றிய தெளிதல் இல்லை என பயிற்சிக்கு அனுப்பிவிடுவர் அல்லது WP ரத்து செய்துவிடுவர் என்று, இரவெல்லாம் காய்ச்சலில் படுத்துவிட்டு மறுநாள் காலையில் ஒன்றுமே நடக்காத மாதிரி வேலைக்கு சென்று வருவார்கள்.

டெங்கு காய்ச்சல் வந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கிடக்கும் போதும் துணையாருமில்லை இங்கே, ஆனால் இதெல்லாம் எந்த அளவிற்கு அங்கேயிருக்கும் பெற்றோர்களுக்கு எட்டியிருக்கும்.

இத்தனையையும் தாண்டி தினம் காலை 8.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை வேலைசெய்து பின் தூங்கி எழுந்து ஓட்டமாக ஓடிக்கொண்டே இருப்பார்கள், சுகாதாரமில்லாத சில இடங்களில் டெங்கு கொசுக்கள் கடித்து டெங்கு காய்ச்சல் வந்து தன்னந்தனியாக மருத்துவமனையிலிருந்து எத்தனையோ கஷ்டங்கள், நஷ்டங்கள்.... இவர்களில் பெரும்பாலோர் கூடுமிடம் குட்டி இந்தியா, ஞாயிறு மாலை இங்குதான் கூடுவார்கள், கிட்டத்தட்ட எல்லா பொதுத் தொலைபேசிகளும் பயன்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கும், ஒவ்வெரு தொலைபேசியிலும் பேசப்படும் பேச்சு மிகப்பெருமளவில் பணம் பற்றி தான்.

ஞாயிறு மாலை பெரும்பாலானவர்கள் குட்டி இந்தியாவிற்கு செல்ல தயங்குவார்கள் கூட்டம் தான் முக்கிய காரணம், கிட்டத்தட்ட மொத்த தொழிலாளிகளும் அங்கே இருப்பார்கள், அங்கே சில உணவு கடைகள் உண்டு, மற்ற நாட்களில் அங்கு சென்றால் AC வேலை செய்து கொண்டிருக்கும், சாப்பிட வருபவர்களி நன்றாக உபசரிப்பர் மேலும் உணவு வாழையிலையில் பரிமாறப்படும், ஏற்கனவே பல முறை அங்கு சாப்பிட்டிருந்தாலும் அன்று தான் முதல் முறையாக ஞாயிறு இரவு சாப்பிட சென்றேன், அங்கே AC இயங்கவில்லை, வாழை இலை இல்லை அதற்கு பதில் பட்டர் பேப்பர் எனப்படும் உணவுகட்டும் பொட்டல தாளில் பரிமாறினர், உபசரிப்பு முறை முந்தைய நாட்களுக்கு சற்றும் தொடர்பில்லாமலிருந்தது, ஆனால் சாப்பாட்டின் விலை மட்டுமே அதே விலைதான். எரிச்சலிலும் கோபத்திலும் நேராக முதலாளியிடமே சண்டை போட்டேன், தனியாக என்னை கவனிக்க சொன்னார் பிறகு தான் கூறினார் ஞாயிற்றுக்கிழமை இப்படித்தான் இருக்குமென்றார், எப்படி இப்படி ஒரு அலட்சியம் என்றேன், ஏதேதோ காரணங்கள் கூறினார் ஆனாலும் இது அந்த தொழிலாளிகளின் மீதான அலட்சியம், இது ஒரு உதாரணம் எல்லா அலட்சியங்களையும் தாங்கிக்கொண்டு சம்பாதிக்கின்றனர், ஆனால் அனுப்பும் பணம்?

மகன் சிங்கப்பூருக்கு சென்றவுடன் என்னமோ மகன் வெளிநாட்டில் காலாட்டிக்கொண்டு சம்பளம் வாங்குவது போலவும் ஆடம்பரங்கள் தூள் பறக்கின்றன, ஐம்பது ரூபாய் வரிசை வைத்த இடத்தில் ஐநூறு ரூபாய் வரிசை வைத்து பெருமை அடிக்கின்றனர், தற்போது கிடைக்கும் இந்த சில ஆயிரம் ரூபாய்கள் நிரந்தரமல்ல, சில ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்துவிட்டால் அவன் என்ன செய்வான்? அப்போது என்ன வருமானம் என்று நினைக்காமல் அள்ளிவிடுகின்றனர்.

இத்தனை நாட்கள் இருந்த மாதிரியே இன்னும் கொஞ்ச நாட்களும் இருந்து முதலில் வாங்கிய கடனை அடைக்காமல் ஏதேதோ செலவு செய்துவிட்டு பார்த்தால் கடன் இரண்டு ஆண்டுகளில் வட்டி குட்டி போட்டு நிற்கும்.

32வயதை கடந்தவர்களின் வீட்டிலும் கூட திருமண பேச்சை எடுக்காமல் இருக்கின்றனர், எங்கே இவன் ஊருக்கு வந்தால் வருமானம் நின்றுவிடுமென்பதே இதில் முக்கிய காரணம்.

தொலைபேசியில் பேசும் அந்த சில நிமிடங்களும் என்னப்பா? நல்லா இருக்கியா? சாப்பிடுறியா? என்று கூட கேட்காமல் நேரடியாக இந்த செலவு இருக்கு அந்த செலவு இருக்கு இதற்கு பணம் வேண்டும் அதற்கு பணம் அனுப்பு என்று குடைச்சல், அதனாலேயே அடிக்கடி தொலைபேசுவதற்கு பலர் அஞ்சுகின்றனர். ஒரு நாள் மிக தாமதமாக அலுவலகத்திலிருந்து வந்து வீட்டிற்கு பேசினால் "வேலை ரொம்ப கஷ்டமா இருந்தா ஊருக்கு வந்துடா" என்று பாசத்துடன் சொல்லும் பெற்றோர்கள் ஒரு புறமிருந்தால் காசு காசு என நச்சரிக்கும் பெற்றோர்களும் இருக்கின்றனரே!!!

உங்கள் மகன்கள் வெளிநாட்டில் காலாட்டிக்கொண்டு சம்பாதிக்கவில்லை, வாரம் முழுதும், வருடம் முழுதும் ஓய்வின்றிதான் சம்பாதிக்கின்றனர், அதே போல் அனாவசியமாக செலவும் செய்வதில்லை, டீ குடிக்க கூட யோசித்து தான் செய்கின்றனர், காசு தேவைதான், ஆனால் மகனை காயப்படுத்தி காசு தேவையா? ஆடம்பரம் தேவையா? மகன் அங்கே சொல்லொன்னா துயரப்பட்டு சம்பாதிப்பதில் ஆடம்பரம் தேவையா?

நட்சத்திரம் - லீ சியாங் லுங் வந்து வரவேற்பாரா?

இது சில விதி விலக்குகளின் கதை (அல்ல நிஜம்) எனவே இதை பொதுவில் வைத்து பார்க்க வேண்டாம்.

சிங்கப்பூர் ஒரு சொர்க்கபுரி தான், அழகான நாடு, அவசரமான நாடு, பாதுகாப்பான நாடு, சுதந்திரமான (கட்டுப்பாட்டுடன் கூடிய) நாடு, சிறிய நாடு.

இந்த 'சிறிய' நாடு எல்லோருக்கும் தெரிந்தது தான், இந்த 'சிறிய' நாடு என்பதில் எத்தனை சிறிய நாடு என்னும் போது அவரவர்கள் கற்பனை குதிரையை தட்டிவிடுவார்கள், இந்தியா போன்ற பரந்த நிலப்பரப்பை உடைய நாட்டிலிருந்து வந்த நான் முதன் முதலில் சிங்கப்பூர் வந்து இறங்கும் வரை இந்த 'சிறிய' என்பது தமிழ்நாட்டின் பரப்பளவு அல்லது குறைந்தது இலங்கையின் பரப்பளவாகவாவது இருக்கும் என நினைத்தேன், ஆனால் சிங்கையின் பரப்பளவு வெறும் 683.ச.கி.மீ. மட்டுமே, அறுநூத்த்த்தி எண்பத்து மூன்றா என யோசிக்கும் முன் சென்னை புறநகர் பகுதியையும் சேர்த்து அதன் பரப்பளவு 1,025ச.கி.மீ. என்பது தெரிந்தால் சிங்கப்பூர் சென்னையின் அளவில் பாதிக்கு கொஞ்சம் அதிகம் அவ்வளவே.

IT படித்திருந்தாலும் அவன் (உரிமையில சொல்லிக்கிறேன்) மிகுந்த முயற்சிகளுக்கிடையில் தான் 5 ஆண்டுகளுக்கு முன் குறைந்த சம்பளத்திற்கு சிங்கப்பூர் வந்தான், இதற்கிடையில் நிறுவனங்கள் மாறியதில் ஓரளவிற்கு நல்ல சம்பளமும் கிடைத்தது, தன் வீட்டு கடன்களையும், கடமைகளையும் முடித்து விட்டு திருமணத்திற்கு தயாரானான்.

ஊருக்கு சென்று பெண்பார்த்து நிச்சயம் செய்த பின் திருமணத்திற்கு முன் இருந்த இடைவெளியில் நிறைய பேசி சிங்டெல் நிறுவனத்தை வாழவைத்தார்கள்.

திருமணமும் இனிதே முடிந்து சில வாரங்களுக்குப் பின் சிங்கை சாங்கி விமான நிலையத்தில் வந்திறங்கி அதன் அழகை ரசித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து வாடகை காரை அழைத்தபோது அவரின் மனைவி கேட்டார் "ஏன் டாக்சி எடுக்குறிங்க, உங்க கார் எங்கங்க?, வீட்டில இருக்கா?"

ஒரு நிமிடம் குழம்பியவன் "காரா? இல்லையே என்னிடம் காரெல்லாம் இல்லை" என்ற போது மனைவியின் முகம் சுருங்கியதை கவனித்தான், வாடகை கார் அவன் தங்கியிருந்த வீட்டை அடைந்தது, கழகவீடுகள் எனப்படும் Housing Development Board வீடுகளில் ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தான், இந்த வகை வீடுகள் பல அடுக்குமாடியில்(குறைந்தது 12 மாடிகளாவது இருக்கும்) இருக்கும் வீடுகள்.

வீட்டினுள் வந்தவுடன் அடுத்த கேள்வி அவன் மனைவியிடமிருந்து "இந்த வீட்டிலா தங்கப்போகின்றோம்" என்றார் சந்தேகத்தோடு

மொத்தமாக குழம்பினான், அந்த வீடு இரண்டு படுக்கையறைகள் ஒரு சமையலறை, ஒரு புழங்கும் அறை மற்றும் AC வசதி கொண்ட வீடு தான், ஆனாலும் இந்த கேள்வி அவனை மிகவும் குழப்பியது.

எங்கே செல்வதென்றாலும் பேருந்து, ரயில்(MRT) அல்லது வாடகைக் கார்தான், செலவுகளையும் சற்று நிதானித்துதான் செய்யமுடியும், பணத்தை அள்ளிவிட்டால் பத்து நாட்களில் வாங்கும் சம்பளம் தீர்ந்துவிடும்.

ஏனோ தெளிவில்லாமலும் உற்சாகமில்லாமலும் இருந்தார் அவன் மனைவி.

சிறிது நாள் கழித்துதான் தெரியவந்தது அவன் மனைவியின் வெளிநாட்டு வாழ்க்கையைப் பற்றிய வேறு கற்பனையிலிருந்தது.

திரைப்படங்களிலும், ஏற்கனவே வேறு நாடுகளில் செட்டில் ஆன தோழிகள் கதை கதையா அளந்து விட்டு ,அந்த பெண்ணை ஒரு கனவுலகில் மிதக்க விட்டதும் அவர்கள் கொடுத்த பில்ட்-அப் பில் வெளி நாடு வந்தால் நீச்சள் குளத்துடன் கூடிய பெரிய வீடு, அழகான தோட்டம், சொந்த கார் எப்போதும் கணவனோடு எங்கேயாவது வெளியில் சென்று வந்து சுற்றி கொண்டிருக்கலாம் என்ற கற்பனை உடைந்ததில் கடுமையான ஏமாற்றத்திற்குள்ளானார். (நானும் முதல் முறை சிங்கப்பூர் வந்தபோது வீடு,கார் பற்றி அப்படித்தான் நினைத்திருந்தேன்)

விளைவு ஏமாத்திட்டிங்க என்ற வசவும், அதைத் தொடர்ந்து கணவனை அலட்சியமாக பேசுதலும் கணவன் குடும்பத்தினரிடம் எரிந்து விழுதலும் அரங்கேறியது, இத்தனைக்கும் அவன் மனைவி மத்திய தர குடும்பத்திலிருந்து வந்தவர் தான்.

அவனுக்கு சரியாக சமைத்து கூட கொடுக்காமலும் அவன் வீட்டிற்கு தொலைபேசியில் பேசக்கூட அனுமதிக்காமலும், கிட்டத்தட்ட ஒரு ஹிஸ்டீரியா நோயாளி போல் நடக்க ஆரம்பித்தார், இத்தனைக்கும் மேலே தற்கொலை மிரட்டல்கள் வேறு, முதல் நாள் என்னை மன்னிச்சிடுங்க, உங்களை மிகவும் கஷ்டப்படுத்திட்டேன் என்று அன்பாக பேசுபவர் மறு நாளே மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற ஆரம்பித்தார், இந்த நிலையில் கர்ப்பமடைந்து அந்த கர்ப்பம் சில மாதங்களில் கலைந்தும் போனது. கணவனின் குடும்பத்தை கேவலமாக பேசுவது, இத்தனை வருஷம் சிங்கப்பூர்ல சம்பாதிச்ச பணத்தில் என்ன சேர்த்து வச்சிருக்கீங்க, ஏன் உங்க வீட்டுக்கு கொடுத்தீர்கள் என குடைச்சல் வேறு.

இதே மாதிரி சில நிகழ்ச்சிகளை ஊரிலும் பார்த்துள்ளேன், கிராமத்தில் பெரிய குடும்பத்தில் திருமணம் செய்து கொண்டு போனால் வேலையாட்கள் அது இது என ராணி மாதிரி இருக்கலாம் என்று கற்பனையில் மிதந்து ஆனால் பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு எதிர்பார்த்த மகாராணி வாழ்க்கை இல்லாததால் செய்யும் அராஜகமும், நகரத்தில் வாழ்க்கைப் பட்டால் அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என கனவு கண்டு அது நிறைவேறாமல் போனதில் தினம் தினம் சண்டை சச்சரவுகளோடு குடும்ப வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டுமுள்ளனர் சிலர்.

சிங்கப்பூர் மற்ற அமெரிக்க, ஐரோப்பிய வெளிநாட்டு வாழ்க்கையிலிருந்து பல விதத்திலும் மாறுபட்டது, பங்களா மாதிரியான வீடுகளும், சொந்த காரும் IT ஆட்கள் அவர்களின் சம்பளத்தில் வாங்குவது சற்றும் சாத்தியமில்லாதது, கார் விலைக்கு இணையாக Certificate of Entitlementக்கும் அழ வேண்டும், மேலும் சாலை வரி, பார்க்கிங் கட்டணம் என கார் வைத்திருப்பது அதிகபட்ச செலவிழுக்கும் ஒன்று, சிங்கப்பூர் அழகான ஊர்தான் இருந்தாலும் சுவிஸ் மாதிரியான அழகை எதிர்பார்த்தால் ஏமாற்றம் தான்.

கண்டமேனிக்கு காசை விட்டெறிந்து செலவு செய்ய முடியாது, சற்று அடக்கித் தான் வாசிக்க வேண்டும், இல்லையென்றால் சேமிப்பு என்பதே இல்லாமல் போய்விடும்.

தன் கணவன் ஒரு சாதரண மாத சம்பளம் வாங்கும் IT வல்லுனன் என்பதை உணராமல், வெளிநாட்டு வாழ்க்கை எப்படியோ இருக்கும், பிரதமர் லீ சியாங் லுங் வந்து தங்களை வரவேற்பார் போல என்று வெளிநாட்டு வாழ்க்கையை கற்பனை செய்தவரின் தவறா? இல்லை சிங்கப்பூர் வாழ்க்கை அப்படித்தான் என தெளிவாக சொல்லி தயார் செய்யாத நண்பனின் தவறா?

அடுத்த பதிவும் சிங்கை ஸ்பெஷல் தான்...

நட்சத்திரம் - இது கதையல்ல நிஜம்

அந்த ஊருக்கு தற்போதுதான் மினி பஸ் புண்ணியத்தில் நேரடியாக பேருந்து போக்குவரத்து உள்ளது, அதற்கு முன் கள்ளக்குறிச்சி சங்கராபுரம் சாலையில் இறங்கி 4கி.மீ., நடந்துதான் போக வேண்டும் அந்த கிராமத்திற்கு, கிராமம் என்றவுடன் பாரதிராஜா திரைப்படங்களில் வரும் கிராமங்களைப்போல பசுமையான கிராமம் அல்ல, மழையை எதிர்பார்க்கும் புஞ்செய் நிலங்கள் தான், ஏரிக்கருகில் இருக்கும் சில ஏக்கர் நிலங்கள் மட்டுமே நஞ்செய் நிலங்கள், ஊரின் பெரும்பாண்மையானோர்கள் ஒரே சாதிதான், எல்லோருமே ஒரு வகையில் பங்காளிகளாகவோ மாமன் மச்சான்களாகவோ இருப்பார்கள்.

வெளியூரில் இருக்கும் சொந்தக்காரர்கள் வருவதென்றால் சாலையில் மாட்டுவண்டியுடன் காத்திருப்பார்கள் ஊர்க்காரர்கள், வழிப்பயணம் அத்தனை சுலபமானது அல்ல, மண் சாலை, அதிலும் ஆங்காங்கே பெரிய பெரிய பாறைகள் தலை நீட்டிக்கொண்டிருக்கும் அதில் வண்டி ஏறி இறங்கும்போது எங்கே வண்டி சாய்ந்துவிடுமோ என்று வண்டியை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டியிருக்கும், வழியில் உள்ள நிலங்களில் பல நேரங்கள் கரம்பாக (பயிர் ஏதுமில்லாமல்) கிடக்கும், மழைபெய்திருந்தால் கம்பும் கேழ்வரகும் விளைவிக்கப்படிருக்கும், ஏரி ஓரங்களில் விளைந்துகிடக்கும் கறிவேப்பிலைகளை மூட்டை மூட்டையாக எடுத்து கடலூருக்கும் இன்ன பல ஊர்களுக்கும் அனுப்பிவைப்பார்கள் ஆனாலும் இதில் பெரிய வருமானம் ஏதுமில்லை, நகரத்து சொந்த காரர்கள் அந்த ஊருக்கு சென்றால் அந்த பிள்ளைகள் மிகவும் ஆனந்தபடுவார்கள் தினமும் கம்பங் கூழும், கேழ்வரகு கூழும் சாப்பிட்டவர்கள் அந்த சில நாட்களில் மட்டும் அரிசிசோறும், இட்லியும் சாப்பிடுவார்கள்.

அந்த ஊரில் ஆண்களை "டி" என்றும் பெண்களை "எலே" என்றும் கூப்பிடுவார்கள்

நிஜம்-1

பஞ்சாயத்து தலைவரின் வீடுதான் ஊரின் முதல்வீடு, அங்கேஅன்று இரவு ஊரே கூடியிருந்தது, மாமன் மச்சான்களுக்கிடையேயான நிலப்பிரச்சினை தொடர்பான பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்தது, வாதியின் தங்கையை பிரதிவாதியும், பிரதிவாதியின் தங்கையை வாதியும் திருமணம் செய்து கொண்டிருந்தார்கள்.

பஞ்சாயத்தில் நிலப்பிரச்சினையோடு சேர்ந்து இவர் வீட்டு ஆடு அவர் நிலத்தில் மேய்ந்ததும் அவர் வீட்டு குழந்தை இவர் வீட்டு முற்றத்தில் ஆய் போனதுமான குற்றசாட்டுகள் மாறி மாறி பேசப்பட்டு வந்தன, நடு நிசி தாண்டியும் பஞ்சாயத்து முடிவுக்கே வரவில்லை இதில் ஊரே இரண்டுபட்டு கிடந்தது, ஊரில் அத்தனை பேருக்கும் இவர்கள் மாமனாகவும், பெரியப்பனாகவும் இருந்தனர், ஒரே வீட்டில் அண்ணன் மாமனையும் தம்பி பெரியப்பனையும் ஆதரித்து பிரிந்து நின்ற கதையும் நடந்தது.

ஏற்கனவே இரு தரப்பும் கத்தி,வேல்கம்பு ஆயுதங்களை சேகரித்து வைத்திருந்தனர், வீட்டுமாடியில் கருங்கற்கள் கிரஷரில் இருந்து ஏற்றிக்கொண்டு வந்து கொட்டப்பட்டிருந்தன, இவர்கள் மோதிக்கொள்ளாமல் இருப்பதற்கான கடைசி முயற்சியாக நடந்த பஞ்சாயத்தும் தோல்வியடைந்தது,

"ஏ நாளைக்கு பாத்துகலாம் டி, யாரு உசுர யாரு எடுக்குறாங்க " என்று கூறி பஞ்சாயத்தை விட்டு எழுந்த து மாமன் கோஷ்டி, மாமன் கோஷ்டி கொஞ்சம் வலுவானதும் கூட, மறு நாள் மோதல் நடந்தால் நிச்சயம் பெரியப்பன் கோஷ்டியில் பல தலைகள் உருளும், அரிவாள்கள் தீட்டப்பட்டன, பஞ்சாயத்து தலைவர் வீட்டிலேயே (பெரியப்பனுக்கு ஒரு வகையில் இவர் ஆதரவும் கூட) பெரியப்பன் கோஷ்டி படுத்துக் கொண்டது, அதிகாலை நாலரை மணிக்கு வெளியில் மூத்திரம் விட வீட்டை வெட்டி வெளியே வந்தான் பெரியப்பன் கோஷ்டியிலிருந்து ஒருவன், அந்த நேரத்தில் யாரோ சர சர வென இருட்டில் ஓடும் சத்தம் கேட்க, "யாருடி அது, யாருடி" என்று கத்தியபடி குரல் கொடுக்க, பெரியப்பன் கோஷ்டி சர சர வென வெளியே வர அங்கே ஓடிக்கொண்டிருந்தது பெரியமாமன், என்ன செய்கிறார்கள் என அதிகாலையில் உளவு பார்க்க வந்திருந்தார், நிமிட நேரத்தில் எல்லாம் முடிந்தது, அரிவாள்களால் குதறப்பட்ட மாமன் மண்ணில் வீழ்ந்தார், சில மீட்டர் தூரத்தில் இருந்த மாமன் வீட்டிற்கு மாமனின் அலறல் எட்டியது, என்ன ஏதென்று சற்றும் நிதானிக்காமல் அடுத்தடுத்து மாமனின் இரு தம்பிகளும் வேகமாக ஓடிவர இருவரையும் வெட்டி எறிந்தது பெரியப்பன் கோஷ்டி, அதில் ஒருவர் இறக்க, ஒருவர் பிழைத்துக் கொண்டார்.

இரண்டு கொலைகளை சில நிமிடங்களில் செய்த பெரியப்பன் கோஷ்டி உடனடியாக கள்ளகுறிச்சி சங்கராபுரம் சாலையை நோக்கி ஓடினார்கள், அனைவரும் பேருந்தில் ஏறும் முன் பெரியப்பன் தன் கோஷ்டியை பார்த்து சொன்னது "நல்லா கேட்டுக்குங்க டி, நம்ம மச்சானுங்க செத்துட்டானுங்க, சொந்தத்தில எழவு வுழுந்துடிச்சி, எவனும் பதினாறு நாளைக்கு தலைக்கு எண்ணெய் வக்காதிங்க, கசப்பு சாப்பிடாதிங்க, எல்லாம் எங்கனயாவது தலமறவாயிருங்கு பொறவு பாக்கலாம்" (கசப்பு என்று குறிப்பிடப்படுவது கசாப்பு அதாவது அசைவம்) என்று கூறியபடி தப்பியோடினர்.

ஊரில் உள்ள ஆண்,பெண் என அத்தனை பேரும் ஏரிகளிலும் கருவ காட்டுக்குள்ளம் பதுங்கி கொள்ள ஊரின் உள்ளே புகுந்த காவல்துறை நடக்கவே சிரமப்பட்ட எழுபதுக்கும் மேல் வயதுள்ள கிழடுகளையெல்லாம் சிறைபிடித்து உள்ளே வைத்து நடத்திய வன்முறையில் வெளியில் வந்த சில நாட்களிலேயே அவர்களில் சிலர் இறந்த கதையும் உண்டு.

தன் கணவனை கொன்ற அண்ணனை பழிவாங்க சபதமேற்றார் தங்கை, ஆனால் நல்ல வேளையாக அதன் பிறகு இரு குடும்பங்களுக்கிடையில் நடந்த திருமண உறவினால் தொடர் கொலைகள் விழாமல் தடுக்கப்பட்டன.

நிஜம் - 2

அந்த சாலையில் நின்றது தனியார் பேருந்து, பின் படிகட்டி வழியாக இறங்கிக்கொண்டிருந்தார் அந்த பாட்டி, அந்த பாட்டி இறங்கும் முன்பே வண்டி எடுக்கப்பட்டதால் நிலை தடுமாறி கீழே விழுந்து இலேசான காயமடைந்து விட்டார், இதைப்போய் ஊரில் சொல்ல, அந்த தனியார் பேருந்து திரும்பிவருவதற்காக ஒரு கோஷ்டி காத்திருந்தது. அதே பேருந்து திரும்பி வந்தவுடன் அதில் ஏறினார்கள் இந்த கோஷ்டியினர், வண்டி வேகமெடுத்து செல்ல ஓட்டுனரை நெருங்கிய சிலர் பேருந்தை ஓட்டுக்கொண்டிருந்த ஓட்டுனரின் கைகளை சட்டென்று பிடித்து பின்னால் கட்டிவிட்டனர், அவர்கள் கைகளை கட்டிய சமயம் வண்டி நின்று கொண்டிருக்கவில்லை ஓடிக்கொண்டிருந்தது, வண்டி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது, ஓட்டுனரின் கைகளை கட்டிய கோஷ்டிக்கும் பலமான அடி, வண்டி கவிழ்ந்ததில் ஒரு உயிரிழப்பு, அதே பேருந்தில் காலையில் தான் திருமணம் முடிந்து ஊருக்கு சென்று கொண்டிருந்த திருமண கோஷ்டியிலிருந்த மாப்பிள்ளை உயிரிழந்துவிட்டார்.

தங்கையின் கணவனை மச்சான் என்றும் பார்க்காமல் வெட்டி கொன்றுவிட்டு எழவு விழுந்துவிட்டது அதனால் தலைக்கு எண்ணெய் வைக்காதீர்கள் என்பவர்களை என்ன சொல்வது?

ஓடும் வண்டியின் ஓட்டுனரின் கைகளை கட்டினால் தானும் சேர்ந்து விபத்து அடைவோம் என்பது கூட தெரியாமல் ஓட்டுனரின் கைகளை கட்டியவர்களை என்ன சொல்வது?

அறிவுகெட்ட மடையன்கள் என்று கூறுவதா? முரட்டு பசங்க என்று கூறுவதா? எப்படி இவர்களுக்கு இத்தனை விழிப்புணர்ச்சியில்லாமல் போனது? எப்படி இவர்களுக்கு இத்தனை அறியாமை?

இவர்களை அறிவுகெட்ட மடையன்கள் , காட்டான்கள் என்று கூறினால் இப்படி அவர்கள் இருந்ததற்கு இருப்பதற்கு அவர்கள் மட்டும் தான் காரணமா? சமுதாயத்தின் பங்கு இதில் எத்தனை? அவர்கள் இப்படி அறியாமையாக இருக்க யார் காரணம்? ஏன் காலம் காலமாக இந்த அறியாமை? விழிப்புணர்ச்சியின்மை? கல்வியின்மை?

இத்தனை அறியாமையுடன் இருக்கும் மக்களை எத்தனை எளிதில் பிரித்தாள முடியும், எத்தனை எளிதில் சுரண்டமுடியும், இது தான் காலம் காலமாக நடந்து வருகின்றது, இவர்களின் அறியாமையை பயன்படுத்தி சுரண்டலும் , சுரண்டுவதற்காகவே இவர்களை விழிப்புணர்சியில்லாமலும் வைத்திருக்கின்றனர், இதில் அரசியல்வாதிகள், உள் சாதி பணக்காரர்கள், வேற்று சாதி பணக்காரர்கள் என அத்தனை பேரும் அடக்கம்.

அந்த கிராமத்திலிருந்து படித்து வெளிவருபவர்களும் ஊரை மொத்தமாக தலைமுழுகிவிடுகின்றனர், இருப்பது ஒரு பள்ளிக்கூடம் அதுவும் ஐந்தாவது வரை மட்டுமே, மதிய உணர்விற்காகத் தான் அந்த பள்ளியே நடக்கின்றது, சில கிலோமீட்டர்கள் தள்ளி இருக்கும் உயர்நிலை பள்ளிக்கு தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் அந்த ஊர் மாணவர்கள், அந்த ஊரில் பள்ளிக்கூடம் இல்லையென்றாலும் ஏழெட்டு ரசிகர்மன்றங்களுக்கு மட்டும் குறைச்சல் இல்லை, தற்போது விஜயகாந்த் மாநாட்டிற்கு கைக்காசை செலவழித்து சென்று வந்துள்ளனர் சிலர்.

அவன் அப்படித்தாம்லே, அவன் காட்டானாத்தான் இருந்தான், அப்புடித்தான் வச்சிருந்தாங்க, இப்போதான் முக்கி முனகி வரான் அதுக்குள்ள காட்டானுங்க, முரடனுங்க, முட்டாபயலுங்கனு சொல்லி அவனுங்களை அப்படியே இருக்க வச்சிட கூடாது. இந்த பயபுள்ளைகளும் அந்த பயபுள்ளைகளும் இப்போதான் அடிச்சிக்காம இருக்கனும்னு நெனக்கிறான்க, அதுக்குள்ள நேத்து நீ அடிச்சிக்கிட்டியே, முந்தா நாள் வெட்டிக்கிட்டயே இன்னைக்கு என்ன பச்சோந்தி, செவப்போந்தினு சொன்னா அவனுங்க என்ன செய்வாங்க, வேணாம்யா எது சரி, எது தப்புனு அலசி ஆராய்ஞ்சி பாக்குற அளவுக்கு அவனுங்களுக்கு புத்தியில்லதான், அந்த அளவுக்கு நாகரீகமில்லாதவங்க தேன், டை கட்டிக்கிட்டு "வாட் நான்சன்ஸ்" அப்படினு மத்தவங்க பேச வரதுக்கு எத்தனை வருசம் ஆச்சி, அதுல கொஞ்சமாவது நேரம் தர்றது இல்லையா, அதுக்குள்ள சுப்ரீம் கோர்ட்டுக்கு போயி புடுங்கினா என்ன செய்வான் அவன்.

ஏதோ ஒரு படத்துல விவேக் காமெடி அது,

"எலேய் நம்ம சங்கு சாமிய பத்தி தப்பா பேசுறான், நீ என்னலே சிரிக்கிறனு" கத்தியால குத்திட்டு
"அடேய் பங்காளி அவசரப்பட்டு செத்துட்டியேடா" அப்படினு அழும்போது எல்லாம் சிரிச்சாங்க, ஆனால் நான் மட்டும் சிரிக்கல ஏன்னா எனக்கு அதன் வலி தெரியும்.

தேவர் மகனில் கமல், சிவாஜி பேசிய வசனத்தை கொஞ்சம் நெனச்சி பாக்கலாம்


சிவாஜி : "வெட்டருவா வேல்கம்ப தூக்கிட்டு வெற்றிவேல் வீர வேலுன்ணு அலஞச பயலுக திடீர்ன்னு அவன கூப்பிட்டு விஞ்ஞானம் கத்துக்க வான்னா அவன் எப்படி வருவான் மெதுவாத் தான் வருவான்"

கமல்: "மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா? அதுக்குள்ள நான் செத்துருவேன் போலயிருக்கே?"

சிவாஜி :" போ..செத்து போ..யாரு வேணாங்குறது .எல்லா பய புள்ளையும் ஒரு நாள் செத்து போக வேண்டியது தான் .ஆனா சாகுறதுக்குள்ள நாம என்ன சாதிச்சோம்கிறது தான் முக்கியம் இன்னிக்கு நீ வெதை போடுற வெத வெதச்சவுடன பழம் சாப்பிட முடியுமோ ? நாளைக்கு உன் மகன் சாப்புடுவான் .அப்புறம் அவன் மகன் சாப்புடுவான் .அத பாக்குறதுக்கு நீ இருக்க மாட்ட .ஆனா வெத..நீ போட்டது .இது என்ன ஒவ்வொருத்தனுக்கும் பெருமையா .இல்ல..கடம"

நட்சத்திரம் - வரலாற்றில் மறைக்கப்பட்ட பேரரசன்

முன்குறிப்பு:

சில ஆண்டுகளுக்கு முன் கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கோப்பெருஞ்சிங்கன் என்கிற அரசனை பற்றிய ஒரு ஆராய்ச்சி நூலை படித்தேன், கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்களுடன் எழுதப்பட்ட அந்த நூலின் பெயர், ஆசிரியர் பெயர், பதிப்பகத்தின் பெயர் எதுவும் நினைவில்லை ச்ச்எனினும் சில நாட்களுக்கு முன் அதை நூலகத்தில் தேடியபோது கிடைக்கவில்லை, எனவே அந்த நூலில் கூறப்பட்டிருந்தவற்றை என் நினைவிலிருந்தும் மற்றவற்றை வரலாற்று நூல் ஆதாரங்களுடனும் எழுதுகின்றேன்.

கோப்பெருஞ்சிங்கன் (கி.பி. 1229-1278)

தற்போதைய ஆரணியின் அருகிலுள்ள படவேடு என்கிற ஊர் அந்த நாட்களில் படைவீடு என்று அழைக்கப்பட்டது அங்கே நிலை கொண்டிருந்தது கோப்பெருஞ்சிங்கனின் படை.

கருத்த மேனியுடன் ஆஜானுபகவான தோற்றத்துடன் இருந்த அரசன் கோப்பெருஞ்சிங்கன் தன் படை நிலைகொண்டு இருந்த இடத்திற்கு சென்று அணிவகுத்து நிற்கும் தன் படையை பார்வையிடுகின்றான்.தீர்க்கமான அவன் கண்கள் செக்கச்செவேல் என சிவந்திருந்தது, உள்ளம் எங்கும் சுதந்திர வேட்கை சுடர் விட்டெறிந்து கொண்டிருந்தது.

வெற்றி வேல், வீர வேல் என்ற முழக்கங்களுக்கிடையில் படையினை பார்வையிடுகின்றான், படையின் ஒவ்வொரு வீரனும் சுதந்திர தாகத்துடன் தன் நாட்டு சுதந்திரத்திற்காக எதையும் எதிர்கொள்ள தயாராக கட்டுக்கோப்பாக நின்ற படையை பார்த்த நிமிடத்தில் சுதந்திரத்திற்காக தாங்கள் மோதப்போகும் சோழப்படையின் எண்ணிக்கையை விட சிறியதாக இருந்தாலும் நிச்சயம் சுதந்திர தாகம் தீரும் என்ற நம்பிக்கையில் தன் கூடாரத்திற்கு சென்றான்.

அன்றிரவு முழுதும் தூங்காமல் ஏதேதோ சிந்தனைகள், தன் தளபதிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள், ச்ச்தம் மூத்தோர்கள் மகேந்திரவர்மனும் நரசிம்ம வர்மனும் கட்டிக் காத்த பல்லவ பேரரசு சோழர்களின் அரசியல் சதுரங்க விளையாட்டால் சிதைக்கப்பட்டு சிதறிய கதைகள் கேட்டு வளர்ந்த போதே சோழப்பேரரசை வென்று அதன் அடிமையாக இருக்கும் இந்த அரசை மீட்டு மீண்டும் பல்லவ பேரரசை நிறுவ வேண்டுமென உறுதி பூண்டான், சத்திரியனாக மட்டும் இருந்தால் போதாது, இதற்கு சாணக்கியத் தனமும் வேண்டுமென்ற கொள்கையில் உறுதியாக இருந்தான். தான் எழுதப்போகும் சோழப்பேரரசின் முடிவுரையை நாளைய வரலாறு பேசும், பல்லவ குலத்தின் மாவீரனொருவன் சோழப்பேரரசை முடித்து மீண்டும் பல்லவ பேரரசை நிலைநிறுத்தியதை வரலாறு பாராட்டும் என்று எல்லோரிடமும் கூறிக்கொண்டிருந்தான், சோழப்பேரரசுக்கும் சேந்தமங்கலப் போரில் முடிவுரை எழுதினான், ஆனால் அன்று கோப்பெருஞ்சிங்கன் எண்ணியிருக்க மாட்டான் சோழ மாயை இருபதாம் நூற்றாண்டிலும் கூட வரலாற்று ஆசிரியர்கள் கண்களை மறைத்திருக்குமென்று.

கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1229 முதல் 1278 வரை தென்னாற்காடு மாவட்டம் சேந்தமங்கலத்திலிருந்து அரசாண்டான்(ர்)(வரலாற்று நூல்களில் அவன்,இவன் என்று பேசினாலும் நாம் இனி அவர் என்றே அழைப்போம்) சில வரலாற்று ஆசிரியர்கள் ஆரணி அருகிலிருக்கும் படைவீடு(படவேடு) தான் இவரின் தலை நகரம் என்கிறார்கள். வெகு சில ஆண்டுகள் மட்டுமே தமிழகத்தை ஆண்ட பல அரசர்களின் பெயர்கள் தெரிந்த அளவிற்கு கூட கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுகாலம் அரசாண்ட இவரின் பெயர் வெளியில் தெரியவில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவ ஆட்சி சோழர்களின் அரசியல் சித்து விளையாட்டால் சிதறுண்டபிறகு பல்லவ குலத் தோன்றல்கள் அரையன்,காடுவெட்டி, காடவர் என்ற பெயர்கள் கொண்டு சிற்றரசர்களாக சோழ அரசிற்கு கப்பம் கட்டி அரசாண்டனர், அப்படி வந்தவர் தான் கோப்பெருஞ்சிங்கன், வீரமும் விவேகமும் கொண்ட கோப்பெருஞ்சிங்கன் ஆண்ட காலத்தில் சோழப்பேரரசராக முதலில் மூன்றாம் இராசராசனும், பிறகு மூன்றாம் ராசேந்திரனும் ஆண்டனர், மதுரையில் பாண்டியர்கள் சோழப்பேரரசிலிருந்து விடுபட்டு சுதந்திர பேரரசாக உருவாகின்றனர், மேற்கே போசளர்(ஹொய்சாளர்)கள் பேரரசாக பலத்துடன் ஆட்சியிலிருக்கின்றனர் இதில் போசளர்களுக்கும் சோழர்களுக்கும் திருமண உறவு முறை உள்ளது.

இந்த நிலையில் கோப்பெருஞ்சிங்கன் தன்னை சுதந்திர அரசனாக அறிவித்துக் கொள்கின்றார், சோழப்பேரரசுக்கு முடிவுரை எழுத பாண்டியர்கள் தெற்கேயும் காகதீயர்களும், கோப்பெருஞ்சிங்கனும் வடக்கேயும் முனைந்தனர், போசளர்கள் சோழர்களுக்கு ஆதரவாக இருந்தாலும் இந்த அரசியல் சித்து விளையாட்டின் நடுநாயகமாக இருந்தவர் கோப்பெருஞ்சிங்கன்.

பாண்டியர்களிடம் தோற்ற மூன்றாம் இராசராசன் போசளர்களோடு திருமண பந்தம் இருந்ததால் அவர்களின் உதவி கேட்கின்றார், சோழர் படை வடமேற்கு நோக்கி முன்னேற அதே சமயத்தில் போசளர்கள் அதன் மறுபுறத்திலிருந்து கோப்பெருஞ்சிங்கன்னனை தாக்க திட்டமிட்டனர், ஆனால் திட்டத்தில் ஏற்பட்ட சிறு குழப்பத்தால் தக்க சமயத்தில் போசளர் படை வந்து சேரவில்லை, அதை அறிந்த கோப்பெருஞ்சிங்கன் போசளர் படை வருவதற்கு முன்பே சோழப்பேரரசன் மூன்றாம் இராசராசனை கி.பி.1231ல் தெள்ளாறில் எதிர்கொண்டு போர் புரிந்து வெற்றி பெற்று சோழப்பேரரசனை சேந்தமங்களத்தில் சிறையிலடைத்தார். இதை சில வரலாற்று ஆசிரியர்கள் சோழமன்னன் தப்பியோடியபோது அவரை கைது செய்து சிறையிலடைத்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

வட நாட்டு அரசர்களையும், இசுலாமிய அரசர்களையும் பிற நாட்டு அரசர்களையும் பார்க்கும் போது பொதுவாகவே தமிழக அரசர்கள் மிகுந்த கருணையுடன் இருந்துள்ளனர்.பொதுவாகவே பெரிய அளவில் வாரிசுரிமைப்போர் தமிழகத்தில் நடந்தது என்றால் அது வீரபாண்டியனுக்கும் சுந்தரபாண்டியனுக்கும் கி.பி.1310ல் நடந்த ஒன்றே ஒன்றுதான், மேலும் போரில் தோல்வியுற்ற அரசர்களை மிகுந்த மரியாதையுடன் நடத்தினர், ஆனால் வட நாட்டு வரலாறிலும், இசுலாமிய அரசர்களும், இலங்கை மகாவம்ச வரலாறும் சீன வரலாறும் சொல்வது அரசுகட்டிலுக்காக சொந்த மகனையும், தாயையும், சகோதரனையும் கொடூரமாக கொன்றழித்தனர், அது மட்டுமின்றி தலைவேறு உடல்வேறாக கிடப்பவன் மட்டுமே பிரச்சினை தராத எதிரி என்று நம்பியதால் தோல்வியுற்ற மன்னர்களை உடனடியாக கொன்றழித்தனர், மேலும் எதிரிகளின் குழந்தைகள் 4 மாத கைக்குழந்தையாக இருந்தாலும் கூட கொல்வர் அல்லது கண்களை தோண்டி எடுப்பர்.

அதன்பின் போசளர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையால் சோழமன்னனை விடுவித்தார் கோப்பெருஞ்சிங்கன், மீண்டும் சோழப்பேரரசிற்கு திரைசெலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் போசளர்களால் ஆனது, ஆனாலும் தன் முயற்சியை விடாமல் பெரம்பலூரில் போசளர்களுடன் போர் செய்து போசளர்களை துறத்தியடித்தது மட்டுமின்றி அவர்களின் மகளிரையும் சிறைபிடித்து சென்றார். சோழர், பாண்டியர், போசளர்களை பல போர்களில் தோற்கடித்து மூன்று பேரரசுகளுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கினார்

தன் வாழ்நாள் முழுவதும் சுதந்திர போர்களிலேயே கழித்தாலும் நல்லாட்சி நல்கினார், அவர்காலத்தில் கலைகள் சிறந்து விளங்கின, சிதம்பரம் நடராசரின் மேல் அளவுகடந்த அன்பு கொண்டு சிதம்பரம் நடராசர் கோவிலின் தெற்கு கோபுரத்தை கட்டி எழுப்பினார், பல கோவில்களை கட்டியும், பல கோவில்களுக்கு கொடையும் வழங்கியதை கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன.இவருக்கு இருபத்தியேழுக்கும் மேலானா பட்டப்பெயர்கள் உண்டு அவற்றில் சில பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன், பரதமல்லன். பல கோவில்களை கட்டிய இவர் சில கோவில்களை இடித்தும் உள்ளார், சோழ நாட்டை போர் தொடுத்து வென்றபோது சோழ நாட்டில் சில கோவில்களை இடித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொண்டைமண்டலம் முழுவதும், சோழமண்டலத்தின் பெரும் பகுதியும் இவரின் கட்டுப்பாட்டில் இருந்தன,தெற்கே தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து வடக்கே கோதாவரி ஆறு வரையான இடங்களில் இவரின் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன.


கி.பி.1255ல் மீண்டும் விதி கோப்பெருஞ்சிங்கனை பார்த்து மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வடிவில் சிரித்தது, சேந்தமங்கலம் பாண்டியர்களால் முற்றுகையிடப்பட்டு மீண்டும் வேற்றரசுக்கு அடிமையானார் கோப்பெருஞ்சிங்கன், பாண்டிய மன்னர்களின் வடக்கத்திய போர்முனைக்கு தன் படைகளை நல்கி பாண்டிய அரசுடன் ஒரு சமாதான போக்கையே இறுதி வரை கடைபிடித்தார்.

சரி இனி சில வரலாற்று ஆசிரியர்கள் இவர் மீது எழுப்பும் குற்றசாட்டை பார்ப்போம்.

முதல் குற்றசாட்டு சோழனுக்கு அடங்கிய சிற்றரசன் எப்படி சோழப்பேரரசனையே சிறையிலடைப்பான் இது துரோகமல்லவா?

எது துரோகம்? தன்னை நம்பிய தன் மாமனார் எண்பத்திமூன்று வயது ஜாலாலுதின் கில்ஜி தம்மை வரவேற்க தனியாக வந்தவரை வெட்டிக்கொன்றாரே அலாவுதின் கில்ஜி அது வரலாற்றுத்துரோகம், தன்னை தத்தெடுத்து வளர்த்த தாய் மீனாட்சியை எதிர்த்து கலகம் செய்தானே விஜயகுமாரன் அது துரோகம் (சாண்டில்யன் அவர்கள் எழுதிய ராஜபேரிகை நாவலில் இந்த விஜயகுமாரன் தான் கதாநாயகன்)

பல்லவ வழித்தோன்றல் தன் மூத்தோர்களின் பேரரசை நிறுவ முயன்றதா துரோகம்? சோழர்களிடம் அடிமைப்பட்டிருந்த தன் நாட்டை விடுவிக்க போர்புரிந்தது துரோகமென்றால் இந்த துரோக குற்றச்சாட்டு பாய வேண்டியது முதலில் சோழர்களின் மீது தான். பல்லவர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள் பாண்டிய பல்லவப் போரில் நடத்திய அரசியல் சதுரங்கத்தில் முதலில் பாண்டியர்களை பல்லவர்களுக்கு துணையாக நின்று வீழ்த்தி பிறகு பல்லவர்கள் ஒப்பந்தத்தை மீறிவிட்டார்கள் எனக் கூறி போர்தொடுத்து வீழ்த்தினார்களே!! (பல்லவர்களுக்கும் சோழர்களுக்குமிடையேயானது என்ன ஒப்பந்தம்? அதில் பல்லவர்கள் என்ன மீறினார்கள் என நான் படித்தவரையில் கிடைக்கவில்லை, யாரேனும் கிடைத்தால் கூறுங்கள்)

அடுத்ததாக கோப்பெருஞ்சிங்கனை பற்றியும் அவரது அரைநூற்றாண்டு அரசைப்பற்றியும் சில வரிகள் மட்டுமே பல வரலாற்று புத்தகங்களில் காணக்கிடைக்கின்றது, அதில் பாதிக்கும் மேல் அவரின் மீதான எள்ளல்களாகவே இருக்கின்றன.

டாக்டர் கே.கே.பிள்ளை யின் தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் என்ற நூலிலிருந்து சில வரிகள்

"சோழர்,பாண்டியர் போசளர் ஆகியவர்கள் அனைவரையுமே வென்று வாகைசூடியதாக விருதுகள் பல புனைந்து கொண்டான் பாண்டிய மண்டல தாபனசூத்ரதாரன், சகேளதர சுந்தரன், கர்ணாடலஷிமீலுண்டாகன், காடகுலதிலகன், பெண்ணான தீ நாதன் என்பன அவற்றுள் சிலவாம்"
(வென்றது உண்மை தானே, வெல்லாமலா தஞ்சையிலிருந்து கோதாவரி வரை இவரின் கல்வெட்டுகள் கிடைக்கப்பெறுகின்றன? தெள்ளாறு, சேந்தமங்கலம், பெரம்பலூர் போர்களின் முடிவு கோப்பெருஞ்சிங்கனுக்கு தானே சாதகமாக இருந்தது.)

"பல்லவர்கள் அல்லது காடுவெட்டி பரம்பரையில் தான் தோன்றியதாக பெருமை பிதற்றினான்"
(பிதற்றினானா? பல்லவ குலம் ஒரே நாளில் வேரோடு அழிந்து போய்விட்டதா என்ன? இதைப்பற்றிய ஒரு பெரிய அத்தியாயமே முனைவர் பட்டத்திற்கான அந்த ஆராய்ச்சி நூலில் இருந்தது, மேலும் இவரின் கல்வெட்டுகள் பல்லவர் கல்வெட்டுகள் என்ற பிரிவின் கீழ்தானே வகைப்படுத்தப்பட்டுள்ளது)

இது மட்டுமின்றி பல வரலாற்று நூல்களில் கோப்பெருஞ்சிங்கன் அவருக்கு அவரே பட்டப்பெயர்கள் வைத்துக்கொண்டதாகவும் எள்ளல் தொனிக்கும் படி எழுதியுள்ளனர், இவருக்கு பட்டபெயர் விடயத்தில் எள்ளலாக எழுதினால் இராசராசன் முதல் பல அரசர்கள் பட்டப்பெயர்கள் வைத்திருந்ததை எப்படி எழுதுவது?

அரைநூற்றாண்டுகள் தமிழக அரசியலின் மையமாக இருந்த கோப்பெருஞ்சிங்கன் பற்றிய பதிவுகளும் இடமும் வரலாற்று நூல்களில் மிகச்சிலவே. ஏன் இப்படி? சில வரலாற்று ஆசிரியர்களுக்கும் சோழ மாயையா?

மேற்கோள் நூல்கள்
தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் - டாக்டர் கே.கே.பிள்ளை
தாய்நிலவரலாறு - பேராசிரியர் கோ.தங்கவேலு
தமிழகவரலாறு - சென்னை பல்கலைகழக இளங்கலை வரலாற்று பாடநூல்
whatisindia.com

நட்சத்திரம் - தமிழால் இணைந்தோம்

"பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொளிநீர்- கையகலக்
கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளொடு
முற்றோன்றி மூத்த குடி"

(புறப்பொருள் வெண்பாமாலை)

"ஓடும் , உட்காரும், தாவும், தாண்டிக்குதிக்கும் ஆனால் ஒரே அடியாக அடிச்சுவடு அற்று போகாது, இதுவே வரலாற்று இலக்கணம்"- ஏ.செ. தாயின்பி

இதற்கு எடுத்துக்காட்டாக திகழ்வது தமிழும் தமிழக வரலாறும், வரலாற்றின் வழிநெடுக தமிழின் மீதான பல்முனை தாக்குதல்கள் தொடர்கின்றன, வெளியார்களிடமிருந்து தாக்குதல்களும், உள்ளுக்குள்ளேயான தாக்குதல்களும் தொடர்ந்தாலும் அவ்வப்போது சோர்ந்து போனாலும் வீழ்ந்து போவதில்லை தமிழும் தமிழினமும்.

எண்ணூத்தி சொச்சம் ஜொலிக்கும் நட்சத்திரங்களிடையில் இந்த வாலை நட்சத்திரமாக்கி விட்டார்கள் தமிழ்மணம் நிர்வாகிகளும் மதியும், சென்ற வாரம் ஜொலித்து சென்றிருக்கும் உலகம் சுற்றும் வாலிபன் 'ஜோ' அதற்கு முன் ஜொலித்த தருமி,இளவஞ்சி,கோ.கணேஷ் மற்றும் இன்ன பல நட்சத்திரங்களின் இடையில் நான் என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை.

இன்று இந்த இணையத்தின் மூலமாக பல நட்புகள் கிடைத்துள்ளன, புவியியல் வரை கோடுகளை தாண்டி நாட்டின் எல்லைகள் தாண்டி நட்பு வட்டம் அமைந்துள்ளது இந்த தமிழால், தமிழ் உணர்வால், சில தனி மனிதர்களின் தமிழ் ஆர்வம் இத்தனை பெரிய நட்பு வட்டத்தை அமைத்து தந்துள்ளது. அதற்காக அவர்களுக்கு மிக்க நன்றி, அரசு, அரசியல் எழுத்தாளர்கள் என்பதையெல்லாம் தாண்டி இவர்களை மாதிரியானவர்களின் தமிழ் ஆர்வம் தான் தமிழை இன்னமும் வாழவைக்கின்றது, எத்தனை கருத்து மோதல்களும் இருந்தாலும் வரம்பு மீறாமல் பரிமாறிக்கொள்ளும் போது மிக நல்லதொரு நட்பு நிலைக்கின்றது, அது வலைப்பதிவர்களின் மத்தியில் உள்ள ஒரு நல்ல விடயமும் கூட.

சில மாதங்களுக்கு முன் என்னுடன் அலுவலகத்தில் ஒரு நண்பர் கூறினார் "நீங்கள்(நான்) இப்படி பழகுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை" இது பள்ளிகளிலும், கல்லூரியிலும் இன்னும் சில இடங்களிலும் சிலர் சொல்ல கேட்டதுண்டு, அன்று உள்ளிருந்த குரல் விழித்தது நான் இப்படி பழகுவேன் என்று நினைக்கவேயில்லை என்றால் எப்படி பழகுவேன் என்று நினைத்தார்? இதற்கு முன் பலர் இப்படி கூறியிருக்கின்றார்கள் என்றால் எப்படி அந்த தோற்றாம் உருவானது, எனது நிர்வாகத்தின் துணைத்தலைவர் அடிக்கடி கூறும் ஒன்று "put your feet in customer's shoes" அப்போது புரியும் உனக்கு என்று, இது தற்போது வாழ்க்கையிலும் சில காலமாக நேரமும் தனிமையும் கிடைக்கும் போது நடந்த விடயங்களை அசை போட்டு சுயபரிசோதனை செய்யும் பழக்கம் இலேசாக உருவாகியுள்ளது, அப்படி யோசித்ததும் அதன் பின் எனது நெருங்கிய நட்பு வட்டத்திடம் இதைப்பற்றி பேசிய போதும் 'easy going guy', பழகுவதற்கு எளிதானவன் என்று என்னைப்பற்றி நான் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் உடைந்தது.

இலேசாக கலைந்த தலை, சிரத்தை எடுத்து அணியாத ஆடைகள், எப்போதும் தூக்கத்திற்கு ஏங்குவது போன்ற கண்கள், எத்தனை மாதங்கள் பார்த்துக்கொண்டாலும் அறிமுகமாகிக் கொள்ளும் அந்த கணம் வரை புன்னகை பூக்காத பழக்கம், அலுவலக கூட்டங்களில் தன்னம்பிக்கையோடு (மண்டைகனம்?!) பேசும் பேச்சு பலரும் வெளிப்படையாக பேசத் தயங்கும் சில விடயங்களை பட்டென்று பேசிவிடுவது (இது பல சமயங்களில் பாதகத்தையும், சில சமயம் சாதகத்தையும் தந்துள்ளது) அறிமுகமானாலும் உடனடியாக சரளமாக பேசாமல் அமைதியாக அமர்ந்திருப்பது (ஆனால் வாடிக்கையாளர்களை பார்க்கும் போது விடயமே வேறு) என்று என்னை சுற்றி ஒரு வட்டத்தை வேலியாக போட்டுக் கொண்டிருந்துள்ளேன் அதை தாண்டி உள்ளே நுழைந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே, மேலும் தொடர்ந்து இதைப் பற்றி நண்பர்களுடன் அலசியபோது உடையிலிருந்து பல விடயங்களில் நான் மாற்றம் செய்ய வேண்டியிருக்கின்றது, அதிலும் தோற்றம் என்பது மிக முக்கியமானது, உடைகளிலும் பார்வையிலும் காட்டும் அலட்சியம் என்னுடைய சுயம் என்று கூறக்கூடாது, அது உன்னை பற்றி பிறர் எடை போட வைக்கும் முக்கிய காரணி என்றார்கள் என் நண்பர்கள்.

அவ்வப்போது என் உடன் இருந்தவர்கள் தட்டியும், சுட்டியும் காட்டியுள்ளார்கள், ஆனால் எனக்குதான் இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இருந்ததில்லை, என் தந்தையின் நண்பர் அவரும் ஒரு ஆசிரியர் நான் +2 படிக்கும் போது அவர் கூறிய வார்த்தைகளை இப்போதும் நினைத்து பார்க்கின்றேன், "எருமை நெனச்சிக்குமாம் தான் விடும் மூத்திரம் கடல் மாதிரி எவ்ளோ இருக்கு என்று" அப்போதே என் தலையில் இப்படி குட்டியுள்ளார், ஆனால் அப்போது அதை புரிந்து கொள்ளும் பக்குவம் தான் எனக்கு இல்லை.

Image hosted by Photobucket.com

இந்த பூமியின் உயிர் ஆதாரமான சூரியன் இந்த பூமிக்கு மட்டுமல்ல இந்த சூரியகுடும்பத்தின் எல்லாமுமான சூரியன் என்கிற இந்த நட்சத்திரம் பிரபஞ்சத்தின் பால்வழிவீதியில்(பால்வழிவீதியில் 400பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளன) ஒரு சிறுதுகள் மட்டுமே இது மாதிரி பல ஆயிரம் பால்வழிவீதிகள் இந்த பிரபஞ்சத்தில் உள்ளன, அத்தனை பெரிய உயிர் ஆதாரமான சூரியனே பிரபஞ்சத்தில் ஒன்றுமில்லாத ஒன்றாக இருப்பதை நினைத்தால் நான் எனது என்ற தலைக்கனம் கணப்பொழுதில் காணாமல் போகும்.

பாருங்கள் என்ன எழுதுவது என்று தெரியாமல் சுய புராணம் பாடிக்கொண்டுள்ளேன்,

நம்ம வடிவேலு குரலில் படியுங்கள்
"உங்களைலாம் நெனச்சா பாவமா இருக்கு"
பின்ன தினம் ஒரு பதிவு போடணுமே, என்ன பாடுபடப்போறிங்களோ?!

பீகார்,லல்லு, அரசியல்

ஒரு வழியாக பீகார் தேர்தல் முடிந்து குதிரை பேரத்திற்கு வாய்ப்பில்லாமல் ஒரு முடிவான முடிவை பீகார் மக்கள் அளித்துவிட்டனர், லல்லுவின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது, ஒவ்வொரு தேர்தலின் போதும் பலரும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த தேர்தல் முடிவு இந்த முறை ஏமாற்றமல் வந்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, ஊடகங்களும் இதை பலமாக கொண்டாடுகின்றன, பாஸ்வான், லல்லு மோதல் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு ஆட்டம் கொடுக்குமா, மத்திய அரசாங்கம் கவிழுமா என கேள்விகள் எழுப்புகின்றனர், பீகார் கனவு நிறைவேறியதைப்போல இதுவும் நிறைவேறுமா என்ற எண்ணத்துடன்.

இந்தியாவில் மேற்குவங்கம் தவிர்த்து வேறு எந்த மாநிலத்திலும் தொடர்ந்து 15 ஆண்டுகள் கடந்த 30 ஆண்டுகளில் ஒரே கட்சியின் ஆட்சி இருந்ததாக தெரியவில்லை (தமிழகத்தில் மட்டும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்து அதிமுக ஆட்சி இருந்தது ) கடந்த 15 ஆண்டுகள் லல்லுவின் ஆட்சி தனிப்பெரும்பாண்மையாக பீகாரில் இருந்தது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தேர்தலிலும் கூட லல்லு கட்சி 74 தொகுதிகளில் வென்று தனிப்பெறும் கட்சியாக இருந்தது, ஆனால் இப்போது ஆட்சியை இழந்து 54 தொகுதிகளில் மட்டுமே வென்றுள்ளது, லல்லு தோல்வி அடைந்துள்ளதால் பீகார் மக்களுக்கு புத்திவந்துவிட்டதாகவும், லல்லு வேண்டாம் என்று சொல்லும் அறிவை அடைவதற்கே பீகார் மக்களுக்கு 15 ஆண்டுகள் தேவைப்பட்டதாகவும் ஆங்காங்கே குரல்கள், எள்ளி நகையாடல்.


தமிழகத்திலே 2001ல் நடந்த தேர்தலில் திமுக தன் முந்தைய ஆட்சிகளின் சாதனையை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்தது, கருணாநிதியின் முந்தைய கால ஆட்சியைவிட 96-2001 ஆட்சி சிறப்பாகவே இருந்தது, இருந்தும் தோல்வி, இராஜஸ்தானில் இரண்டுமுறையும் ஓரளவிற்கு நல்ல ஆட்சி வழங்கிய காங்கிரஸ் மூன்றாம் முறையும் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறிய போதும் அதற்கு தோல்வி, எனவே பெரும்பாலும் மக்கள் ஆட்சி மாற்றத்தையே விரும்புவர்கள் அதுவும் இரண்டுமுறை தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால் மூன்றாம் முறை நிச்சயம் ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுக்கும், ஆனால் பீகாரில் மூன்று முறை ஆட்சி செய்ததுமில்லாமல் இந்த ஆண்டு தொடக்கத்தில் மற்ற கட்சிகளைவிட அதிக இடங்கள் பெற்றார் லல்லு, இந்த முறையும் முழுத் தோல்வி அடையாமல் 54 இடங்களி வென்றுள்ளார், மேலும் வெற்றி இடைவெளி பல இடங்களில் குறைவாகவே இருந்துள்ளது.

2005 தொடக்கத்தில் நடந்த தேர்தல் முடிவுகள்



























கட்சிவெற்றி
ஆர்ஜேடி74
ஜேடி(யு)55
பிஜேபி38
காங்.10
எல்ஜேபி30


தற்போதைய தேர்தல் முடிவுகள்


























கட்சிவெற்றி
ஆர்ஜேடி54
ஜேடி(யு)88
பிஜேபி55
காங்.9
எல்ஜேபி10


பீகார் மக்களுக்கு அறிவில்லை என்று அறிவுசீவி தனமாக பேசுவதற்கு முன் ஒரு நிமிடம் யோசியுங்கள், தொடர்ந்து மூன்று முறை தனிப்பெரும்பான்மை, நான்காவது முறை தனிப்பெரும் கட்சி, தற்போது 54 உறுப்பினர்கள், இது எப்படி என்று யோசிக்கமுடிகிறதா??

நான் சந்தேகிப்பது என்னவென்றால் நாமெல்லாம் பத்திரிக்கை வழியாகவும் ஊடகங்கள் வழியாகவும் பார்க்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு ஆனால் அங்கே உண்மையில் இருக்கும் பீகாரும் பீகார் அரசியலும் வேறு.

அங்கே லல்லுவையும், ஊழலையும், ஆட்கடத்தலையும் தாண்டி வேறு ஏதோ ஒரு அரசியல் இயங்கிக்கொண்டிருக்கின்றது, யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை விட யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது அங்கே இருந்திருக்கிறது அதுவே லல்லுவை மூன்று முறை ஆட்சி கட்டிலில் அமர்த்தியுள்ளது, அந்த இயங்கு அரசியல் என்ன? அந்த இயங்கு அரசியலுக்கு காரணம் என்ன?

அந்த இயங்கு அரசியல் பற்றிய முழு விவரங்களும் ஊடகங்களில் காண்பிக்கப் படவில்லை, காண்பிக்கவும் படாது, யாரேனும் உண்மை நிலவரத்தை நேர்மையாக எழுதினால் ஒழிய நமக்கும் அது புரியாது, மேலும் தற்போது பீகார் ஆட்சி மாற்றம் ஒரு முழுமையானதல்ல, இது ஒரு இடைவேளை( பிரேக்) அவ்வளவே, அந்த இயங்கு அரசியலுக்கான காரணங்கள் சரி செய்யப்படவில்லையென்றால் மீண்டும் லல்லுவோ, அல்லது வேறு யாரோ வருவார்கள், அப்போது நாம் மீண்டும் பீகார் மக்களுக்கு அறிவில்லை என்றும், மூளை மழுங்கிவிட்டது என்றும் கூறிக்கொண்டே இருப்போம், ஆனால் அது எதுவும் பீகார் மக்களையும் அதன் இயங்கு அரசியலையும் பாதிக்காது.

இயற்கை இனிமையானது



சிங்கப்பூர் புலாவுபினில் நண்பனால் எடுக்கப்பட்ட படம்.


Image hosted by Photobucket.com

இயற்கை இனிமையானது
உன்னைப் போலவே

இயற்கை பசுமையானது
உன்னைப் போலவே

இயற்கை புதுமையானது
உன்னைப் போலவே

இயற்கை புதிரானது
உன்னைப் போலவே

இயற்கை புரியாதது
உன்னைப் போலவே

இயற்கை அழகானது
உன்னைப் போலவே

இயற்கை ஆச்சரியமானது
உன்னைப் போலவே

இயற்கை ரகசியமானது
உன்னைப் போலவே

இயற்கை அன்பானது
உன்னைப் போலவே

இயற்கை வேகமானது
உன்னைப் போலவே

இயற்கை இதமானது
உன்னைப் போலவே

இயற்கை பலமானது
உன்னைப் போலவே

இயற்கை பலவீனமானது
உன்னைப் போலவே

ஒரு முயற்சி! ஒரு வேண்டுகோள்!!

இணைந்த கைகள் என்ற என் பதிவில் மருத்துவர் இராமதாசு மற்றும் தொல்.திருமாவின் தற்போதைய இணைப்பு பற்றி எழுதியிருந்தேன், அதில் உஷா அவர்கள்
//குழலி, அரசியலில் கைக்குலுக்கலும், கட்டியணைத்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதும், பின் பிரிந்துவிட்டு கன்னாபின்னாவென்று திட்டிக் கொள்வதும் , சமயம் வாய்த்தல் மீண்டும் இணைவதும், கேட்டாலும் அரசியலில் நிரந்தர நண்பர்களும்
இல்லை, எதிரிகளும் இல்லை என்று ராஜதந்திரமாய் பேசுவதும் காலக்காலமாய் நடப்பதுதானே? இன்று இதில் என்ன புதுமை
என்று நீங்கள் மெய்சிலிர்த்துப் போகிறீர்கள்?
//

என்று பின்னூட்டமிட்டிருந்தார், மேலும் இளவஞ்சி முகமூடியின் ஒரு பதிவில் சீட்டு பேரத்திற்கான கூட்டணி என்று குறிப்பிட்டிருந்தார், மருத்துவர் இராமதாசு மற்றும் திருமாவின் இணைப்பு இவர்களுக்கு (பின்னூட்டமிடாத இன்னும் பலருக்கும் கூட) சாதாரண ஒரு அரசியல் நிகழ்வு, ஓட்டுக்காக வைத்துக்கொண்ட கூட்டணி என்ற அளவிலேயே இது தோன்றியது, நான் (மற்றும் சிலர்) இந்த இருவரின் இணைப்பிற்கும் மகிழ்ந்த அளவு பிறர் மகிழவில்லை, அவர்களைப் பொறுத்தவரை ஒரு சாதாரண ஒரு அரசியல் நிகழ்வு அவ்வளவே.... ஏன் என்று யோசித்தேன்... இது வெறும் அரசியல் கூட்டணியையும் தாண்டி இந்த இணைப்பு காலம் காலமாக விரோதிகளாக அடித்துக்கொண்டிருந்த இரு சமூகங்களுக்கிடையேயான புரிதலுக்கான முயற்சி என்பது எனக்கும் மற்ற சிலருக்கும் புரிந்த அளவிற்கு பிறருக்கு புரியவில்லை, காரணம் அவர்களுக்கு அந்த சூழல், வடமாவட்டங்களில் குறிப்பாக வன்னிய தலித் மக்களின் சமுதாய,அரசியல் நிகழ்வுகள் பற்றிய சரியான புரிதல் இல்லாதது காரணமாக இருக்கலாம், இதற்கு நிச்சயம் அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள், ஊடகங்களும் சரியானபடி இதை எடுத்து சொல்லவில்லை என்பதையும் விட இரு சமூகங்களின் மீதும் தலைவர்களின் மீதும் வன்முறையை பிரயோகித்தது, பிரயோகித்துக்கொண்டிருக்கின்றது.

மேலும் மாயவரத்தான் என்னமோ இந்த தலைவர்கள் வந்த பிறகுதான் இரு சமூகங்களும் அடித்துக்கொண்டிருக்கின்றன என்று அர்த்தம் தொனிக்கும் பதிவொன்றை எழுதியுள்ளார், மருத்துவர் இராமதாசு பொது வாழ்வுக்கு வந்தது 1984, தொல்.திருமா அரசியலுக்கு வந்தது தொன்னூறுகளின் மத்தியில், ஆனால் இரு சமூகங்களுக்கிடையேயான புரிதல் இல்லா பகை நீண்ட கால வரலாறு கொண்டது, வெள்ளையர் காலத்திலும் அதற்கு முந்தைய அரசர்கள் காலத்திலும் கூட பகை இருந்து வந்தது, இத்தனை நீண்ட கால பகை வெறுமனே இந்த சமூக மக்களால் மட்டுமல்ல, வெளியிலிருந்து பலராலும் தூண்டிவிடப்பட்டு இந்த கனல் குறையாமல் பார்த்துக்கொண்டனர்.

இந்த இரு சமூகங்களும் இணைந்து பணியாற்றுவது நிச்சயம் சமூக ரீதியாகவும், அரசியல் ரீதியாகம் தூண்டிவிட்டுக்கொண்டிருப்பவர்களின் தலையில் விழுந்த அணுகுண்டு, இது வேண்டுமானால் பிற இடங்களில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், வடமாவட்டத்தை சேர்ந்த மாயவரத்தானுக்கு எப்படி தெரியவில்லை என்பது புரியவில்லை, ஒரு வேளை ரஜினி மாயை உண்மைகளை மறைத்து எழுத சொல்கிறதா அவருக்கு?

இதே பின்னூட்டங்களை இளவஞ்சி,உஷா அல்லாமல் எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு அலைந்து கொண்டிருக்கும் குறிப்பிட்ட சிலர் எழுதியிருந்தால் புறந்தள்ளிவிட்டு சென்றிருப்பேன், ஆனால் இந்த இருவரின் முந்தைய பதிவுகள் பின்னூட்டங்களை வைத்து பார்க்கும் போது இவர்களுக்கு இராமதாசும், திருமாவும் என்ன செய்தாலும் அதை காழ்ப்புணர்ச்சியோடு அணுகவேண்டுமென்ற நிலைப்பாடு கொண்டவர்கள் அல்ல என்பதே இது தொடர்பாக சிந்திக்கத் தோன்றியது.

எனவே காழ்ப்புணர்ச்சியோடு எழுதும் ப்ராக்சிகளுக்கும், அனானிகளுக்கும், சில பதிவர்களுக்கும் அவர்களின் வறட்டு வாதத்திற்கும் பதிலளிக்கின்றேன் பேர்வழி யென சண்டை போட்டுக்கொண்டிருப்பதை விட வட மாவட்டத்தின், முக்கியமாக இந்த இரு சமூகங்களின் சமூக,வாழ்க்கை,அரசியல், வரலாற்று நிகழ்வுகள் பற்றி ஒரு எழுத்து பதியப்பட வேண்டுமென ஆசைப்படுகின்றேன், அது கடந்த 30 ஆண்டுகால வட மாவட்ட நிகழ்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தும், அதற்கு முந்தைய 30 ஆண்டுகளைப் பற்றிய நிகழ்வுகளை பதிந்தும் அதற்கும் முந்தைய காலகட்டதை லேசாக தொட்டும் இருக்கலாம், சரி தவறு என தீர்ப்பளிக்காமல் , வடுக்களை கீறாமல் தடவி கொடுத்தும், நேரடி அனுபவங்கள், பிறரின் அனுபவங்கள், சில வடமாவட்ட அரசியல் பிரமுகர்களின் பேட்டிகளையும் இணைக்கலாம், ஆனால் இது அத்தனையும் ஒரு தனிமனிதனால் செய்வது மிகக் கடினமான ஒன்று மேலும் தனி மனிதனால் செய்யப்படும் போது நிச்சயம் முழுமை பெறாது மேலும் தனி மனிதன் பார்வையிலேயே இருக்கும், இது நிறைய உழைப்பை சாப்பிடும் வேலை, மேலும் தனி மனிதனால் இத்தனையும் சிறப்பாக செய்ய முடியாது, எனவே இதற்கு நண்பர்களின் கூட்டு முயற்சியையும் பங்களிப்பையும் வேண்டுகின்றேன், நிச்சயம் இது சில நாட்களிலோ சில மாதங்களிளோ முடிவுறுவதாக இருக்காது, சில வருடங்கள் கூட ஆகலாம் (நாமெல்லாம் முழு நேரமாக இதை செய்வதில்லை, ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்கின்றோம்) தகவல் திரட்டுவது இதில் மிகப்பெரிய வேலையாக அமையும், உங்களுடைய ஆலோசனைகள், கருத்துகள்,அறிவுரைகள், விமர்சனங்கள், கேள்விகள் முக்கியமாக வடமாவட்ட சூழலை அதிகம் அறியாதவர்கள் கேட்கும் கேள்விகள் இந்த பதிவுகள் எதை நோக்கி செல்ல வேண்டும் என்பதற்கு உதவியாக இருக்கும் இதற்காக தனியாக வலைப்பதிவு கூட தொடங்கலாம், இவை அனைத்தும் இன்னமும் எண்ண வடிவிலேயே இருக்கின்றது, பங்களிப்பு செய்ய விரும்பும் உள்ளங்களுடன் ஆலோசித்து பின் எப்படி செல்ல வேண்டும் எப்படி செய்ய வேண்டுமென முடிவெடுக்கலாம்.

ஊடகங்களின் தொடர் வன்முறையினால் மருத்துவர் இராமதாசு மீது காட்டப்பட்டிருந்த கோணத்தை எனது இந்த பதிவுமருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் வேறொரு கோணத்தை காண்பித்ததாக பின்னூட்டத்திலும், தனி மடலிலும் நேரிலும் சிலர் தெரிவித்தனர், இவர்கள் கொடுத்த ஊக்கமும், வீரவன்னியனின் சில பதிவுகள் மக்களின் வாழ்க்கையை பற்றி பேசியதும் இது மாதிரி ஒரு முயற்சியை சிந்திக்க தூண்டியது.

இது தொடர்பான உங்கள் ஆலோசனைகள், கருத்துகளை பின்னூட்டங்களாகவும், kuzhali140277(at)yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மடலாகவும் அனுப்பலாம், தற்போது வீட்டில் இணையத்தொடர்பு இல்லாததால் உடனடியாக பதில்கள் அளிப்பதில் கால தாமதம் ஏற்படும், அதற்கு மன்னிக்கவும்.

கோப்ராக்களும் அடிக்கப்படுமா?

சில தினங்களுக்கு முன் நடந்த பீகார் சிறை உடைப்பு சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன் நம்பவே முடியவில்லை, நடந்தது இந்தியாவிலா அல்லது நேபாளம்,லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளில் ஏதாவதொன்றா என்று எண்ணுமளவிற்கு நடந்தேறியது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட நக்சல்கள் நகரில் ஆயுதங்களுடன் ஊடுறுவி நகர் முழுவதையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்து அதன் பின் பொதுமக்களுக்கு வீட்டை விட்டு வெளிவரவேண்டாமென்றும் பொதுமக்கள் எங்கள் குறியல்ல என எச்சரிக்கை கொடுத்து பின் சிறையை தாக்கி சில நக்சல்களை விடுவித்து சில ரன்வீர் சேனா படையை சேர்ந்தவர்களை கடத்தி கொன்றுள்ளனர்

ரன்வீர் சேனா பீகாரில் நக்சல்களை எதிர்கொள்ள நிலப்பிரபுக்களினால் உருவாக்கப்பட்ட கூலிப்படை, அதன் நடுமண்டையில் அடித்துள்ளனர் நக்சல்கள், இனி நக்சல்கள் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சில நக்சல்கள் உண்மையிலேயே கொல்லப்படலாம், சிலர் கொல்லப்பட்ட பிறகு நக்சல்களாக மாற்றப்படலாம்.

மக்கள் யுத்தக் குழு என்ற நக்சல் இயக்கம் ஆந்திராவில் மிக பிரபலமானது, பீகாருக்கு சற்றும் குறைந்ததல்ல ஆந்திர மாநிலம்... இன்றும் ஒரு ஊரில் உள்ள நிலங்கள் முழுதும் ஒரே ஆளுக்கு சொந்தமாக பல இடங்களில் உள்ளது, நக்சல்களை எதிர்கொள்ள ரன்வீர் சேனாவைப் போலவே ஆந்திர நிலபிரபுக்களும், காவல்துறையும் சேர்ந்து உருவாக்கிய இயக்கங்கள் தான் கோப்ரா இயக்கங்கள் என சில வாரங்களுக்கு முன் வெளியான ஜீனியர் விகடனில் வெளிவந்த கட்டுரையில் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். ப்ளாக் கோப்ரா, கிங் கோப்ரா என்ற பெயர்களில் இந்த இயக்கங்கள் நக்சல் ஆதரவு பிரமுகர்களுக்கு (இவர்களில் பலர் ஆயுதம் ஏந்தி போராடுபவர்கள் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளது ஜீவி) பத்திரிக்கை வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் நேரிலும் எச்சரிக்கை கொடுத்து ஒரே வாரத்தில் சிலர் கொல்லப்பட்டனர், இதற்கும் காவல்துறைக்கும் தொடர்பில்லை என்று கூறினாலும் பலர் கோப்ரா இயக்க செயல்பாடுகளில் காவல்துறையின் பங்கை சந்தேகிக்கின்றனர், பீகாரில் உயர் சாதி நிலப்பிரபுக்களின் கூலிப்படையான ரன்வீர் சேனாவின் நடு மண்டையில் நக்சல்கள் அடித்தது போல ஆந்திராவிலும் கோப்ராக்களின் பற்கள் பிடுங்கப்படுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

ரன்வீர் சேனா, கோப்ரா போன்ற இயக்கங்களை உருவாக்காமல், நில உச்ச வரம்பு சட்டத்தை முறையாக அமல் படுத்துதலும், இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பை உருவாக்குதலும் உயர் சாதி ஆதிக்க வெறி பிடித்த நில பிரபுக்களை அரசாங்கம் கட்டுப்படுத்தினாலும் மட்டுமே இனி வரும் காலங்களில் நக்சல்கள் உருவாகாமல் தடுக்க முடியும் இல்லையென்றால் நக்சல்களும், ரன்வீர் சேனாக்களும், கோப்ராக்களும் சிறை உடைப்புகளும் தவிர்க்க முடியாதவையாகிவிடும்.

இணைந்த கைகள்

Image hosted by Photobucket.com

இந்த கைகள் இணையாதா
சிங்கமும் சிறுத்தையும் சேராதா
பாடுபடும் பாட்டாளிகள்
பாராளுதல் கூடாதா

காலம் காலமாய்
ஏய்க்கும் கூட்டம்
இந்த கைகள் இணைந்தால்
தம் கும்பி காயுமென

மூட்டிய கலவர தீயிலே
குடிசையும் குச்சியும்
எரிந்தபோதும்

அறிவு கெட்ட
சிங்கமும் சிறுத்தையும்
அடித்துக்கொண்டு
செத்தபோதும்

கண்கள் கலங்கி
கதறினேன்
இந்த கைகள் இணையாதா


உழைப்பாளிகள் உலகாள
கனவு இன்று நிசமாச்சி
இந்த கைகள் இணைந்தாச்சி
சிங்கமும் சிறுத்தையும் சேர்ந்தாச்சி
சிறு நரி கூட்டம் கலங்கிடுச்சி

பயந்து அலறிய
சிறு நரி இப்போ
ஊரெல்லாம் ஊளையிட்டது
கருத்து சுதந்திரம்
என்றே சொல்லி
சேறு எறிந்து
சிரிக்கின்றது.

சிறு நரிகளின்
சேட்டை தெரிந்ததால்
ஊளை சத்தம்
வீணாச்சி

ஊளை உளறல்
இப்போது அதன்
மரணஓலம் மட்டுமே

பின் குறிப்பு

விகடனில் இந்த படத்தை பார்த்து நேற்றே எழுதியது இப்போது பதிவில்

நன்றி

படங்கள் உதவி விகடன்.காம்

அட நாசமாபோனவனே!

இந்த பதிவிற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்தேன் ஒன்றுமே சிக்கவில்லை, சரி நம்ம முகமூடி அண்ணாத்தே சொன்ன மாதிரி அவருக்கு பகடி பதிவு போடுவது எளிதாக இருப்பது மாதிரி நமக்கு நாசமாபோன என்பது எளிதாக வாயில் வந்து விழுகிறதே என தான் இந்த தலைப்பு

Image hosted by Photobucket.com

தீபாவளிக்கு முந்தைய நாள், கடலூர் கிருஷ்னாலயா திரையரங்கில் இளைய தளபதி விஜய் நடித்த சிவகாசி திரைப்பட வெளியீட்டிற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன, சுவரொட்டி என்ன டிஜிடல் பேனர் என்ன, ஒரே கலக்கல் தான் போங்க, எங்க காலத்திலெல்லாம்(?!) துணிக்கு போடும் நீலத்தூளில் தான் பேனரும், கட்-அவுட்டும் எழுதுவார்கள் இப்போ எங்கெங்கு நோக்கினும் டிஜிட்டல் பேனர் தான், அதில் ரசிகர் மன்ற பொறுப்பாளர்களின் படங்களோடு சிவகாசி படத்திற்காக பெரிய பெரிய விஜய் படங்களோடு நிறைந்திருந்தது, ரசிகர் மன்ற பொறுப்பாளர்கள் படங்களைப் பார்த்தால் எல்லோரும் பதின்ம வயதினர் போல, சரியாக மீசைக்கூட வளர்ந்தில்லை, அது சரி இந்த டிஜிட்டல் பேனர் அடிக்க சொந்த காசா போட்டிருப்பார்கள்.... சரி விடுங்க அந்த எளவு இப்போ முக்கியமில்லை....

இந்த கூத்து நடந்து கொண்டிருந்த அதே வளாகத்தில் உள்ள தேநீர் கடைதான் நமக்கு போக்கிடம், தோழர்களுடன் உலகநடப்பிலிருந்து உள்ளூர் நடப்புவரையிலும் மேலும் பல வெட்டி விடயங்களை அலசுவோம் மணிக்கணக்கில் அங்குள்ள நாற்காலிகளில் அமர்ந்து கொண்டு, இந்த முறை அங்கு சென்றபோது மேசை நாற்காலிகள் ஏதுமில்லை, பக்கத்திலேயே ஒரு அறிவுப்பு பலகை, 'காவல் துறை அறிவிப்பு, டீ சாப்பிட்டவுடன் எழுந்து செல்லவும்' அப்படியும் கடைமுன் நமது தோழர்களுடன் அரட்டை அரங்கம் நடத்திக்கொண்டே இருக்கும் போது ஒரு காதை மட்டும் பிய்த்து அருகில் பேசிக்கொண்டிருந்த இன்னொரு கும்பலிடம் அனுப்பி வைத்தேன்.


அவர்கள் விஜய் ரசிகர்கள் போலும், விஜயின் அருமை பெருமைகளையும் நடிப்புத்(?!) திறனையும் புளங்காகித்தோடு பேசிக்கொண்டிருந்தனர், ரஜினிடாட்காம் யாஹீ குழும மடல்களை ரஜினி ரசிகன் அல்லாத ஒருவர் படித்தால் எத்தனை நகைச்சுவையாக இருக்குமோ அத்தனை நகைச்சுவையாக இருந்தது அவர்களின் புளங்காகித பேச்சு, இப்படியே சென்று கொண்டிருந்த பேச்சின் இடையில் திடீரென ஒரு குரல் "எனக்கு போர் அடித்தால் கில்லி படம் போட்டு பார்ப்பேன்" , "சோகமாக இருந்தால் ப்ரியமுடன் படம் பார்ப்பேன்" "ஃபீலிங்காக(?!) இருந்தால் காதலுக்கு மரியாதை பார்ப்பேன்" என அடுக்கிக்கொண்டே சென்றார்கள், என் காது ஓடி வந்து என்னிடம் சொன்னது அட நாசமாப்போனவனே வாழ்க்கையின் மொத்த உணர்ச்சிகளையும் விஜய் திரைப்படங்கள் என்ற பெரிய்ய்ய்ய்ய வட்டத்தினுள் வைத்திருக்கிறார்கள் எளவு நீயும் தான் இருக்கியே உணர்ச்சியில்லா ஜடம் ஜடம் என்று ஒரு பாட்டம் அழுது தீர்த்தது, எப்படி என் காதை சமாதானப் படுத்துவது என்று கொஞ்சம் சொல்லுங்களேன்....


'கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததடா' என்று ஒரு கும்மாங்குத்து பாடல் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது, நம்ம பக்கத்து வீட்டு தம்பி யும் அதை பார்த்துக்கொண்டிருந்தார், அந்த பாடலை காலையிலிருந்து பல தடவை பார்த்துவிட்டதால் சீனாதானா பாடல் எதிலாவது ஓடுகின்றதா என நான் மாற்றிய போது அந்த தம்பி அண்ணே விஜய் பாட்டே வைங்க என்றார், அம்மா சொன்னாங்க அந்த தம்பி விஜய் ரசிகர்னு, அடேடே தம்பி உனக்கு விஜய் புடிக்குமா என்றேன், ம்... ரொம்ப என்றார் அவர், அடுத்த கேள்வி ரஜினி புடிக்குமா என்றேன் (விஜய் புடிச்சா ரஜினியும் புடிக்கும் என்ற ஒரு நம்பிக்கை தான்... ஆனால் ரஜினி புடிச்சா விஜய் புடிக்குமா என்பது சந்தேகமே) ... ம்... புடிக்கும் என்றார் அந்த தம்பி, அடுத்த கேள்வியை போட்டேன் உனக்கு விஜய் ரொம்ப புடிக்குமா ரஜினி ரொம்ப புடிக்குமானு... அதற்கு அந்த தம்பி சொன்னார் விஜய் தான் ரொம்ப புடிக்கும் என்று ... ஏன் என்று கேட்டபோது நான் சின்ன வயசிலிருந்து விஜய் படம் பார்க்கின்றேன் ரஜினி படம் ஒன்னுதான் பார்த்தேன் என்றார் சின்ன வயசிலிருந்து விஜய் படம் பார்த்த அந்த தம்பி படிப்பது UKG.... ஆனாலும் சிறு பிள்ளைகளையும் ஒரே படத்தில் கவர்வது ரஜினியின் திறமை.... ஆனால் தொடர்ந்து படம் தந்தால் மட்டுமே விஜயுடன் போட்டி போட முடியும் இல்லையென்றால் வயசான ரசிகர்கள் மட்டுமே எஞ்சுவார்கள்... இது ரசிகர்களுக்கு புரிகிறதோ இல்லையோ ரஜினிக்கு நன்றாக புரிந்துள்ளது அதனால் தான் அரசியலை மூட்டை கட்டிவிட்டு சந்திரமுகிக்கு அடுத்து உடனே சிவாஜி படம் தர அறிவிப்பு செய்துள்ளார்.... இதை சொல்வதால் மரம்வெட்டி காடுவெட்டி என்றெல்லாம் பின்னூட்டங்களில் கூறினாலும் உண்மை இது தானே என்ன செய்வது.... என்னங்க நாஞ் சொல்றது சரிதானே....

படங்களுக்கு நன்றி
http://www.behindwoods.com/

மடியில் இரசாயன குண்டு

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது கட்டுரை இது, இக் கட்டுரையை வெளியிட்ட பாலஜிக்கும் தமிழோவியம் குழுவிற்கும் நன்றி

போபாலில் நடந்த கொடுமை இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை, மெத்தில் ஐசோ சயனைடு என்கிற விட வாயு கசிந்து உருக்குலைந்த மக்களும் இன்னமும் பிறந்து கொண்டிருக்கும் பாதிப்படைந்த குழந்தைகளும் அந்த கொடூரத்தின் சாட்சிகளாய் நம் முன்னே.



கடலூர் கெடிலம்,தென் பெண்ணை, உப்பனாறு என்ற மூன்று ஆறுகள் கடலில் சங்கமிக்கும் ஊர், தமிழகத்தின் தலைநகர் சென்னையை எளிதில் இணைக்கும் சாலைகளையும் மூன்றரை மணி நேர பயண தூரத்தையும் கொண்டது, இரயில் சந்திப்பு நிலையமும், துறைமுகமும் ஆக அத்தனை தரை வழி, கடல் வழிகளாலும் இணைக்கப்பட்ட போக்குவரத்திற்கு எளிதான ஒரு நகரம், தடையில்லா மின்சாரம் கிடைக்க அருகிலேயே நெய்வேலி அனல் மின் நிலையம், இத்தனையும் வரமென்றால் இந்த வரமே சாபமாகிவிட்டது கடலூருக்கு.


கடலூர் சிதம்பரம் சாலையில் கடலூர் பழைய நகரத்தின் எல்லையில் ஆரம்பிக்கும் சிப்காட் தொழிற்பேட்டை, இரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் பல கிராமங்கள் உள்ளன, எண்பதுகளின் இறுதியில் இந்த தொழிற்பேட்டை ஆரம்பிக்கப் பட்ட போது வேலைவாய்ப்புகள் பற்றிய உறுதிகளும் அதனால் நல்ல வாழ்க்கையை எதிர்பார்த்தும் இந்த இரசாயன தொழிற்சாலைகள் பற்றிய எதிர்ப்பு முனகல்கள் கூட எழவில்லை,இன்றைய நிலையில் கடலூருக்கு ஓரளவு வேலை வாய்ப்பும் தந்து கொண்டிருக்கின்றது இந்த சிப்காட், கடந்த சில ஆண்டுகளாக சாதி மோதல்கள் அதிகமில்லாமல் இங்கே நிலவி வரும் அமைதிக்கு இதுவும் ஒரு காரணம்.

அந்த பகுதியை பேருந்தில் கடக்கும் பத்து நிமிட நேரத்திலேயே அழுகிய முட்டை நாற்றத்தை போன்ற நாற்றம் மூச்சு திணற வைக்கும், சில சமயங்களில் அந்த இரசாயன தொழிற்சாலைகளிலிருந்து சில மணி நேரங்களுக்கு ஒரு முறை திறந்து விடப்படும் கழிவு வாயு மிகக் கடுமையான நாற்றத்தோடு மூச்சு திணற வைக்கும்.

அவ்வப்போது கிராமவாசிகள் இந்த கழிவு வாயுக்களினால் மயக்கமடைவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, அந்த நேரத்தில் மக்களிடையே சில முனகல்கள் ஏற்பட்டு பின் அடங்கிவிடும்.

SIPCOT Area Community Environmental Monitors (SACEM) இந்த பகுதியில் 12 விட வாயுக்கள் காற்றில் கலந்துள்ளதாக தெரிவிக்கின்றது, மேலும் இங்குள்ள காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றும் சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தரக் கட்டுப்பாட்டின் படி இங்கிருக்கும் காற்றில் உள்ள 12 வாயுக்களில் 7 வாயுக்கள் மிக ஆபத்தானவையாக குறிப்பிடப்படுகின்றன.


இந்த காற்றில் உள்ள Trichloroethylene என்கின்ற வேதிப்பொருள் புற்று நோய் ஏற்படுத்த கூடியது, இது US Environmental Protection Agency (USEPA) தரக்கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்பட்டதை விட 400 மற்றும் 900 மடங்கு அதிகமுள்ளதாக இரண்டு சோதனைகளில் தெரியவந்துள்ளது மேலும் Carbon disulphide, bromomethane, trichloroethene, 4-methyl 2-pentanone, acrolein, methylene chloride and hydrogen sulphide என்ற வேதிப்பொருட்களும் அமெரிக்க தரக்கட்டுபாட்டின் அளவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கொண்டு வந்துள்ளது, சில ஆண்டுகளுக்கு முன் 30 அடி ஆழத்தில் கிடைத்துக்கொண்டிருந்த நீர் இன்று சில நூறு அடி ஆழத்தில் கூட கிடைக்கவில்லை, ஒரு நாளைக்கு இங்குள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரின் அளவு இருபது மில்லியன் லிட்டர், கிடைக்கும் நிலத்தடி நீரும் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது, தொழிற்சாலை கழிவு நீர் நிலத்தடி நீரை அழிப்பதுடன் மீன் வளத்தையும் அழித்துள்ளது. இந்த நீரில் குளிப்பதால் தோல் அரிப்பு பிரச்சினைகள் வருகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB ) காற்றில் உள்ள மாசு அளவை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளும் எடுப்பதாக கூறினாலும் சோதனைகள் அதை உறுதி செய்யவில்லை.

அவ்வப்போது அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து போராடினாலும் எதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

மீன் பிடி தொழிலின் பாதிப்பினாலும் நம்மால் முடிந்தது ஊரை விட்டு கிளம்புவது மட்டுமே என்ற எண்ணத்தினாலும் பலர் சென்னைக்கு இடம் பெயர்கின்றனர்.

சிலருக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பிற்காகவும், எதிர்த்து போராட முடியாமலும் எம் மக்கள் சோர்ந்து கிடக்கின்றனர் மடியில் இராசாயன குண்டை கட்டிக்கொண்டு என்று வெடிக்குமோ என்ற பயத்தில்.

தகவல்களுக்கு நன்றி

flonnet.com
thesouthasian.org
sipcot.com
bhopal.net

எம் ஊரை காக்க உங்கள் புகாரை இந்த சுட்டியிலிருந்து அனுப்புங்களேன்.
petitiononline.com

சிறுகதை - தேவர்களும் கால்களும்

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது சிறுகதை, சிறுகதையை வெளியிட்ட பாலஜிக்கும் தமிழோவியம் குழுவிற்கும் நன்றி

வில்லின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் நாணைப்போல அந்த கிராமமுமில்லா நகரமுமில்லா நகரின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் அந்த இரட்டை சாலை தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருக்கும் தேவர்கள் வாழும் கல்லூரி சாலை, பல்கலைகழகம், கலைக்கல்லூரி, பொறியியல்கல்லூரி, பாலிடெக்னிக், மேலாண்மை கல்லூரி, உடற்பயிற்சி கல்லூரி என அந்த சாலையின் வலப்புறம் முழுதும் கல்லூரிகள், இடப்புறமோ விடுதிகளோடு, மரணவிலாஸ், மெரைன், ப்ளைட் என்று ஆங்காங்கே சில பெட்டிகடைகள் டீ கடைகளோடு, அந்த இரட்டை சாலையின் மையத்தில் உள்ள குழல் விளக்கு கம்பங்கள் மாணவர்களின் குறி பார்த்து எறியும் திறமையின் மௌன சாட்சிகளாய் , மாலை முழுதும் தேவர்களும் தேவதைகளும் மரங்களின் அடியில் பல பிரச்சினைகளை அலசியபடி 'அப்புறம்' 'அப்புறம்' என்ற அர்த்தம் பொதிந்த பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் கடலை போடும் அழகே அந்த சாலையின் அழகின் ரகசியம்.

நேற்று வரை ஃபைவ் லேம்ப்ஸ், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, ராம்நகர் என பேசிக்கொண்டிருந்தவர்கள் GRE நுழைவுத்தேர்வுக்கான புத்தகம் வாங்கிய உடனே கலிபோர்னியாவும்,நியூயார்க்கும் அவர்களின் வாயில் புகுந்து வந்தன, இது தான் கடைசி வருடம் என ஒவ்வொரு வெள்ளிகிழமையும் சவேரா சென்று பீர் அடித்துவிட்டு சிக்கன்-65 வர தாமதமானதற்கு பார் பணியாளரிடம் சண்டை போட்டு இராத்திரி முழுவதும் 'முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒர்ரி முஸ்தபா' என பாடி கத்தி அழுது களைத்து அதே சவரா உணவகத்திற்கு மறு நாள் மதிய உணவிற்கு தோழியோடு செல்லும் போது சீக்கிரம் சிக்கன்-65 கொண்டு வந்த பணியாளனை எரிச்சலாக பார்த்து மூன்று மணி நேரம் மதிய உணவு உண்ணும் போதாவது காதலை சொல்ல வேண்டுமென்ற கனவோடு தூங்கிக்கொண்டு சிலர், 'செமி கிராக் ஹாஸ்டல்' என மாணவிகள் செல்லமாக அழைக்கும் 'செமி சர்க்கிள் ஹாஸ்டலின்' ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவரும் கனவுலகிலிருக்க விடுதியின் உணவுக்கூடம் காலையில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது திடீரென அதிர்ந்தது கணேஷின் குரலால்.

"டேய் சின்ன பையா காலையிலே அங்கே என்னடா கரைச்சல் " ஆறுமுகம் என்கிற சமையலரின் சத்தத்திற்கு ஓடி வருகிறான் சின்னபையன் என்கிற உதவியாளன்

"கணேஷ் சார், இட்லி நல்லா இல்லைனு சத்தம் போடுறாரு அண்ணே"

"அவருக்கு இதே வேலையாயிடுச்சி, நெதம் நெதம் மெஸ்ல கரைச்சல் குடுத்துகிட்டு, நீ போயி 115ல மெஸ் ரெப் இருப்பாரு கூட்டிகினு வா"

"மெஸ் ரெப்பு சார், ரெப்பு சார்"

இன்னும் 10 மாதம் கழித்து பிரிய போகிற சோகத்தை நேற்றே பிழிந்து மானிட்டர் மப்பில் அழுது படுத்திய காட்ஸ் (இங்க பலருக்கும் சொந்த பெயர் மறந்து பட்ட பெயர் தான் கூப்பிட) காலைபரப்பி தூங்கிக்கிடக்க, தலை பாரத்தோடு கதவை திறந்தான் மெஸ் ரெப்,

"என்னடா காலையிலே..."

"சார் கணேஷ் மெஸ்ல சத்தம் போடுறாரு"

"யாரு கட்டை கணேஷா?"

"ஆமாம் சார்"

"என்னவாம்"

"இட்லி நல்லாயில்லையாம், ஆறுமுகம் அண்ணன் உங்களை கூப்பிட்டு வர சொன்னாரு"

"சரி நீ போ, நான் வரேன்"

சத்தம் போட்டு கொண்டிருந்த கட்டை கணேஷை சமாதானப்படுத்திய படி

"கட்டை என்னடா பிரச்சனை?"

"இட்லியை பாருடா, கல்லு மாதிரி இருக்கு, மனுஷன் சாப்பிடுவானா இதை?"

"சரி கொஞ்சம் இரு நான் குக் கிட்ட பேசறன்"

"என்னத்த பேசற இதைத்தான் ஒரு மாசமா பேசுற, மெஸ் ரெப் எலக்ஷன்ல நின்னப்ப என்ன சொல்லி ஜெயிச்ச நீ, மெனு மாத்துறன்னு சொன்னியே, மெனு மாத்தினயா?"

"ஏற்கனவே வார்டன் கிட்ட பேசிட்டேன், சீக்கிரம் மாத்திடலாம்"

"என்ன சீக்கிரமா மாத்திடலாம், இவ்ளோ நாள் என்ன பண்ண, வார்டனுக்கு பயந்துகிட்டயா, ஜால்ரா?"

"கட்டை வேண்டாம், சும்மா பிரச்சினை பண்ணனும்னு பேசறியா, மெஸ் எலக்ஷன்ல நீ தோத்ததை மனசுல வச்சிகிட்டு தெனம் மெஸ்ல பிரச்சினை பண்றியா?"

"யாரு பிரச்சினை பண்றது, மெனு மாத்துறேன் மாத்துறேன்னு சொன்னியே மொதல்ல அதை செய், மெனு என்னனு பசங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணியா? உன் இஸ்டத்துக்கு மெனு மாத்தலாம்னு நெனக்கிறியா? காமன் ஹால் மீட்டிங் போடு நான் அங்க பேசிக்கிறேன்?"

"டேய் யாரு சொன்னா என் இஸ்டத்துக்கு மெனு மாத்துறேன்னு, சரி விடு, இன்னிக்கு நைட் மீட்டிங் போட்டுடலாம்"

"நைட் பசங்க இருக்க மாட்டாங்க இப்பவே போடு"

"பசங்க நிறைய பேரு தூங்கறாங்க, இப்போ கூப்பிட்டா எவனும் வரமாட்டான்"

"அப்போ மதியம் போடு"

"சரி மதியம் காமன் ஹால் மீட்டிங்ல பேசலாம், இப்போ சத்தம் போடாம சாப்பிட்டு போ வேற இட்லி வாங்கிக்க"

"வேற இட்லி வாங்க எங்களுக்கு தெரியும் நீ போ"

மதியம் உணவு முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக காமன் ஹால் என்கிற தொலைகாட்சி அறையில் விடுதி மாணவர்கள் கூட்டம் சேர்ந்தது.

"பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, இங்கே நாம் கூடியிருப்பது நம் மெஸ் மெனுவைப் பற்றி டிஸ்கஸ் செய்ய" காட்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையில் இலேசாக தட்டி

"டேய் காட்ஸ், போ போய் உட்காரு" மெஸ்ரெப்

"பப்ஸ் கொஞ்சம் செக் பண்ணு பசங்க இன்னும் வராங்களானு, மீட்டிங் ஆரம்பிக்கலாம்" மெஸ்ரெப்

"ஓகே மச்சி நீ ஸ்டார் பண்ணு" பப்ஸ்

"ப்ரெண்ட்ஸ், இந்த இயர் நாம மெஸ் மெனு மாத்தனும்னு வார்டன் கிட்ட பேசினேன்"

"மெஸ் சாப்பாடு கேவலமா இருக்கு, குவாலிட்டி சுத்தமா நல்லா இல்லை" கட்டை கணேஷ்

"அதுவும் பேசிட்டேன் வார்டன்கிட்ட"

"ஆனா ஒன்னும் புண்ணியமில்லையே, நீ எப்பவுமே வார்டனுக்கு ஜால்ரா அடி" கணேஷ்

"கணேஷ், நீ எதுக்கு இப்போ தேவையில்லாம பிரச்சினை பண்ற, என்ன ஜால்ரா அடிக்கிறாங்க, இங்க பேசிக்கிட்டு இருக்கோமில்ல"

"இங்க பாரு நீ மெஸ்ரெப்பு ஆயி ஒரு மாசமாச்சி, என்ன கிழிச்ச" கணேஷ்

"டேய் கட்டை நீ போன வருசம் மெஸ் ரெப்பா இருந்து என்ன புடுங்கின?" பப்ஸ்

"பப்ஸ், கொஞ்சம் பேசாம இரு, கணேஷ் அடாவடியா பேசாத மொதல்ல மெனுவை டிஸ்கஸ் செய்வோம், அப்புறம் ஃபுட் குவாலிட்டி பத்தி வார்டன் கிட்ட பேசினேன், குவாலிட்டி இன்கிரீஸ் செஞ்சாலும், மெனு மாத்தினாலும் கண்டிப்பா மெஸ் பில் கூடும்னு சொன்னாரு"

"கூடட்டுமே, காமன் ஷேரிங் தானே, நாம கட்டுவோம்"

"எவ்ளோ கூடும்? " பாயிண்ட் பிரபு

"எப்படியும் இரு நூறு ரூபாய் மாசத்துக்கு கூடும் " மெஸ்ரெப்

"இருக்கட்டுமே, இரு நூறு தானே கூடும், நல்ல சாப்பாடு வேணும், அவ்ளோதான்" கணேஷ்

"என்ன சொல்றீங்க" மற்றவர்களையும் பார்த்து கேட்டான் மெஸ் ரெப்

"பரவாயில்லை நூறு,இரு நூறு ஜாஸ்தி வந்தாலும் நாங்க கட்டுறோம்" என பல குரல்கள் எழுந்தன

"மச்சி, அப்படியே மாசம் ரெண்டு தடவை சிக்கன் போட சொல்லுடா"

"சரி சொல்றேன்"

மெஸ் மெனுவை இறுதி செய்துவிட்டு கூட்டம் கலைந்தது.

அறை எண் 115ல் மெஸ்ரெப்பின் மந்திராலோசனை கூட்டத்தில்

"மச்சி, கட்டை கணேஷ் ஓவரா போறான்" காட்ஸ்

"அவன் தோத்த கடுப்புல ரொம்ப பிரச்சினை பண்றான், அவனை தட்டி வைக்கனும்" பப்ஸ்

"நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டிங்களா? இங்க பாரு டிபார்ட்மெண்ட் செகரட்ரி நம்ம கேங், ஜென்ரல் ரெப்பும் நாம தான், NSS செக்ரட்டரியும் நாம தான், கல்சுரல் பங்ஷன் நடத்தனும், ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தனும், கேம்ப் நடத்தனும், இதுல கட்டை கேங் கிட்ட சண்டை போட்டா இதையே சாக்கா வச்சி எதையும் நடத்த விடாம மேனேஜ்மன்ட் செய்துடுவாங்க, ஏற்கனவே எப்படிடா இந்த கல்ச்சுரல்சை நிறுத்தறதுனு காலேஜ்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க, அதனால கொஞ்சம் பொறுமையா போங்க"

"ஆமா நீ இப்படியே பருப்பு மாதிரி பேசு, அப்புறம் ஒருத்தவனும் நம்மள மதிக்க மாட்டான்" காட்ஸ்

கதவை தட்டி உள்ளே வந்தான் பாயிண்ட் பிரபு.

"வாடா பாயிண்ட்டு என்ன இந்த பக்கம்" மெஸ்ரெப்பு

"சும்மா தான் பாக்கலாம்னு வந்தேன்"

"என்ன பாயிண்ட்டு காலேஜ் முடிஞ்சி டெய்லி கடலை தானாமே" காட்ஸ்

"ஹா ஹா..."

"இல்ல எதுனா டவுட் கேட்பாங்க சொல்லி தருவேன்"

"டேய் பாயிண்ட்டு கிட்ட மெஷின் டிசைன் டவுட் கேளுங்கடா, பாயிண்ட் பாயிண்டா அடிப்பான் பாரு"

"பாயிண்ட்டு அது நம்ம பெரிசு ஆளு, அதனால பார்த்து கடலை போடு"

"எப்ப இங்க வந்தாலும் இப்படியே ஓட்டுறிங்க, சரி நான் அப்புறம் வரேன்" பாயிண்ட்

மந்திராலோசனை அப்படியே கடலை போடுவதையும், கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர் எனவே அங்கே போவதன் சாதக பாதகங்களையும் இடையிடையே கட்டை கணேஷ் கேங்கை தட்டுவதையும் பற்றி பேசி சில மணி நேரம் கழித்து மரணவிலாசில் டீ குடித்து மாலை உலாவை ஆரம்பித்தனர்.

"பப்ஸ், வண்டியெடுத்துக்கிட்டு வா, சும்மா ஒரு ரைட் போகலாம்"

இரு சக்கர வாகனத்தில் ஏறியபடி

"பிள்ளையார் பட்டியா?" பப்ஸ்

"இல்ல மச்சி கண்டனூர் பக்கம் போ, எப்பவும் பிள்ளையார் பட்டியே போனா போர் அடிக்கும்"

கண்டனூரையும் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்க இருள் கவிழ்ந்த நேரத்தில்.

"பப்ஸ் வண்டியை நிறுத்து, சைட்ல இருக்கே அந்த பாருக்கு போ"

"உனக்கு என்ன வேணும்?"

"எனக்கு பீர் மட்டும் போதும், உனக்கு"

"ஒரு எம்சி கட்டிங், மிக்சர் வாங்கிக்க, நல்ல வேளை காட்ஸ் கடலை போட போயிட்டான், அவன் வந்திருந்தா அவ்ளோதான் இன்னைக்கும் அழுது இம்சையை பண்ணிடுவான்"

"ஹா ஹா... "

கடையினுள் நுழைந்து கடைபணியாளனிடம்

"ஒரு கல்யாணி பீர், ஒரு எம்சி கட்டிங் குடுங்க" பப்ஸ்

கடைபணியாளன் திரும்பிய அந்த நொடியில் இருவரும் அதிர்ந்தனர், பணியாளனாக பாயிண்ட் பிரபு

"டேய் பாயிண்ட், இங்க என்னடா பண்ற"

"அது அது..."

"டேய் நீ என்ன என்ன பண்ற இங்க"

" தப்பா நெனச்சிக்காதிங்க, ஒரு நிமிஷம் இருங்க, சரக்கு தரேன்"

"டேய் அது இருக்கட்டும் என்ன செய்ற இங்க இப்போ நீ"

"மணி தம்பி, கடைய கொஞ்சம் பாத்துக்கோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்" பாயிண்ட் பிரபு சரக்கை எடுத்துக்கொண்டு பப்ஸையும் மெஸ் ரெப்பையும் அழைத்தான்

" வாங்க இந்த பக்கமா, உள்ள பார் கிடையாது, பின்னாடி அந்த கட்டடத்துல உக்காருவோம்" ... பாயிண்ட் பிரபு

"என்னடா பாயிண்ட், இங்க என்ன பண்ற அத சொல்லு" பப்ஸ்

"பார்ட்டைமா வேலை செய்றண்டா"

"ஏன்?"

"தினம் 10ரூவா தருவாங்க, அப்புறம் இந்த பணம் என் படிப்புக்கும் உதவியா இருக்கு, வீட்டுலருந்து வாங்குற பண பாரத்தை கொஞ்சம் கொறைக்கலாம்னு தான்"

"அதான் ஏன் டா"

"நான் உங்கள மாதிரி பணக்கார பசங்க இல்ல"

"டேய் நாங்க எங்கடா பணக்கார பசங்க, நாங்க மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் பேமிலி தான்டா"

"இல்லடா, நான் இங்க படிக்கறதே ஸ்காலர்ஷிப்ல தான், நம்ம காலேஸ் கவர்மென்ட் காலேஜ், அதனால் ஃபீஸ் கம்மி, இல்லைனா எனக்கெல்லாம் எஞ்சினியரிங்லாம் கனவு தான் டா. ஊருல கூட ஸ்கூல் நேரம் போக மீதி நேரம் லாட்டரி டிக்கெட் விப்பேன், நாங்க ரொம்ப ஏழை ஃபேமிலிடா இப்ப கூட அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கித்தான் படிக்கிறேன் டா"

"அதுக்காக..."

"நீங்க தெனம் சாப்பாடு நல்லா இல்லை சாப்பாடு நல்லா இல்லைனு மெஸ் தொட்டியில கொட்டுறிங்களே, அந்த சாப்பாடுதான் நான் இத்தனை வருஷத்தில சாப்புடுற நல்ல சாப்பாடு, மதியம் மெஸ் மெனு மாத்துற மீட்டிங்ல கூட நெறய பசங்க சொன்னாங்க, நூறு இரு நூறு பெரிய காசில்லை, சாப்பாடு நல்லா இருக்கனும்னு, எனக்கு நூறு இரு நூறு பெரிய காசுடா, நான் ஒரு ஒரு நூறு ரூபாய்க்கும் மாசம் அஞ்சு ரூபா வட்டி கட்டனும்"

"அடப்பாவி மீட்டிங்ல சொல்ல வேண்டியது தானே" மெஸ்ரெப்

"இல்ல, அங்கேயே ஆளுக்காளு இது பெரிய காசா அப்படினு பேசினாங்க, நான் அப்படியே அப்போஸ் செஞ்சாலும் என்னை விரோதியா பாப்பானுங்க, இல்லனா எல்லா காரணத்தையும் நான் சொல்லனும், அதான் நான் மீட்டிங்ல சொல்லை, அப்புறம் உன் ரூமுக்கு வந்தேன் சொல்லலாம்னு, உங்க கேங்கே அங்க இருந்து கலாட்டா செஞ்சிங்க, அதான் சொல்லலை, வந்துட்டேன், நீங்களும் என்னை பத்தி யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்கடா"

"சரி நாங்க யார்கிட்டயும் சொல்லலை, மெஸ் பில்லும் ஏறாது, கவலைப்படாதே" மெஸ்ரெப்

கனவு உலகின் மற்றொரு பரிமாணம் தெரிய வர அது வரை தரை காலில் படாமல் மிதந்த இரண்டு தேவர்களின் கால்களும் தரைக்கு இறங்கியது.