ஐ.ஐ.டி. யின் உள்வட்ட விளையாட்டுகள்

IITயின் B.Tech பிரிவுக்கு IIT-JEE என்ற நுழைவுத்தேர்வு வைத்து மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர், M.Tech பாடப்பிரிவுகளுக்கு பெரும்பாலும் GATE நுழைவுத்தேர்வு வைத்து தேர்வு செய்யப்படுகின்றனர், ஆனால் இவை இரண்டு மட்டுமில்லாமல் பல படிப்புகள் IIT களில் உள்ளன.

Project Assitant என்றொரு தற்காலிக பணி IITகளில் உண்டு, இதற்கு குறைந்த பட்ச தகுதியாக பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அந்த துறைத் தொடர்பான பட்டம் பெற்றிருக்க வேண்டும், இந்த தற்காலிக பணியிடத்திற்கு 1998ல் சம்பளம் ரூபாய் 5,500 (தற்போது எவ்வளவு என்று தெரியவில்லை), இந்த பணியிடத்திற்கு குறைந்த பட்ச படிப்பு தகுதி தவிர மற்றவை வெளிப்படை யாக இல்லை, யாரை project assistant ஆக தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்கு பேராசிரியர்களுக்கு முழு உரிமை உண்டு என்றே கருதுகின்றேன், மேலும் இந்த பணியிடத்திற்கான விளம்பரங்கள் பெரும்பாலும் பத்திரிக்கைகளில் வருவதில்லை, IITயின் துறை பலகைகளில் (department notice board) மட்டுமே பல சமயங்களில் வெளியிடப்படும், சுற்றி வளைத்து சொல்லாமல் நேரடியாக சொல்ல வேண்டுமெனில் IITயில் Project Assitant ஆக சேருவது பேராசிரியர்களின் கையிலுள்ளது.

M.S. என்றொரு படிப்பு IITகளில் உண்டு, இது M.Tech.ற்கு இணையான படிப்பு என்று கருதப்படுகின்றது, இதற்கும் Project Assitant போலவே குறைந்த பட்ச கல்வி தகுதிகள் வேண்டும், அதை தாண்டி GATE score வேண்டும், ஆனால் M.Tech படிப்பிற்கு தேர்வு செய்யப்படுவது போன்ற வெளிப்படையான தேர்வு முறை இங்கு இருக்கிறதா என்பது சந்தேகமே!, GATE score அதிகம் வைத்திருப்பவர்களை விட குறைவாக வைத்திருப்பவர்களுக்கும் இந்த படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்புண்டு, Project Assitant ஆக அந்த துறையில் சில ஆண்டுகள் வேலை செய்துள்ளவர்கள் GATE score வைத்திருந்தாலே M.S. படிப்பில் இடம் கிடைக்கலாம் பேராசிரியர்கள் நினைத்தால்.


சந்திப்பின் இந்த பதிவிலிருந்து கீழ்கண்ட புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது, அவருக்கான தகவல் ஆதாரம் Dalits at the Indian Institutes of Technology
// சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் பணிபுரியும் 427 ஆசிரியர்களில் இரண்டுபேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். 20 பேர் ஓ.பி.சி., மீதி 400 பேர் பிராமணர்கள்.//

Project Assitant வேலைக்கு சேர அனுமதிப்பது பேராசிரியர்கள் கையில், Project Assitant வேலை செய்திருந்தால் MS படிப்பில் இடம் கிடைக்கலாம்…. 1998ல் இருந்த இந்த நிலமை இப்போது மாறிவிட்டதா என்று தெரியவில்லை....

http://www.iitm.ac.in/Academics/Ordinances.html#MS

இது தொடர்பான விவரங்கள் அறிந்தவர்கள் மேலும் தகவல்களை தாருங்கள்....

34 பின்னூட்டங்கள்:

said...

சம்மந்தப்பட்டவர்கள், பதிலளிக்க வேண்டிய கருத்து.

said...

சந்திப்பின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்

//நான் ஐ.ஐ.டி. சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கிப் படித்திருக்கிறேன். அங்கு எப்படி மாணவர்கள் வருகிறார்கள், எப்படி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், பிற பணிகளில் எப்படி நியமிக்கப் படுகின்றனர், ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் எப்படிப் பணியாற்றுகிறார்கள், பதவி உயர்வு எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகிறது, துறைத்தலைவர்கள், டீன்கள் போன்ற பதவிகளுக்கு எப்படி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், ஆராய்ச்சிக்கான மான்யங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளப் படுகின்றன என அனைத்து விவரங்களையும் கண்கூடாகப் பார்த்திருகின்றேன். இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களைப் புனிதப் பசுக்களாக சித்தரிப்பது எல்லாம் பொய். எல்லாக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடந்து வரும் அற்ப அரசியலும், மொழி, சாதி, இனப் பாகுபாடுகளும், பெண்களின் மீதான பாலியல் வக்கிரங்களும் அங்கும் உண்டு. ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான்.
//
சில நாட்கள் ஐ.ஐ.டி. வளாகத்தில் சுற்றித்திரிந்தபோது நான் கண்டதை வைத்து எழுதியது ஐ.ஐ.டி.யின் உள்வட்ட விளையாட்டுகள்

said...

அங்கு நான் இட்ட பின்னூட்டம்: "இதில் உண்மை இருக்கலாம். கல்வி நிறுவனங்கள் பலவற்றில் - அமெரிக்க உயர்கல்விக்கூடங்களில் கூட- இதைப்பார்க்கலாம். அதற்காக இதை நியாயப்படுத்துகிறேன் என அர்த்தம் இல்லை. இந்த regime building கண்டிக்கப்பட, களையப்பட வேண்டிய ஒன்று. ஆனால் சாதி அணுகுமுறை நீங்க வேண்டும் என்று சொல்லாமல், பார்ப்பன ஆதிக்கம் நீங்க வேண்டும் என்று சொல்கையில், அப்படியென்றால் வேறொரு சாதி வந்து ஆதிக்கம் செய்தால் சரியா என்ற கேள்வி எழுகிறது.

பிறப்பின் அடிப்படையில் வரும் அனைத்து வேறுபாடுகளும் களையப்பட வேண்டும் என்று சொல்லி விட்டு Reverse discrimination செய்வது எப்படி சமூக நீதிக்கு ஒரு சரியான அணுகுமுறையாகும்? ஒரு சாதி அடிப்படையை விடுத்து வேறொரு சாதி அடிப்படையில் உரிமை மறுக்கப்படுவதும் சலுகை வழங்கப்படுவதும்தான் சமூக நீதியா?

சாதியற்ற சமூகம் வரவேண்டுமென்று அக்கறை இருந்தால் சாதி தாண்டிய வேறொன்றைத்தான் சலுகைக்கு அடிப்படையாய்க் கொள்ள வேண்டும்.
பொருளாதார அடிப்படையிலும் மற்றும் குடும்பத்தில் எத்தனை பேர் பட்டப்படிப்போ மேற்படிப்போ படித்துள்ளார்கள் எனப்பார்த்தும் weightage system கொண்டு வந்து அதனடிப்படையில் பின் தங்கியவருக்கு இட ஒதுக்கீடு செய்யலாம். இதன் மூலம் சாதி அடிப்படையில் reverse discrimination என்று இல்லாமல், சாதி தாண்டிய உண்மையான ஒரு சமூக நீதிக்கு வழி கிடைக்கும். சாதி 'உலர்ந்து உதிர'வும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நான் முன்பே எழுதியது போல இதைச்செய்வார்களா என்றால் மாட்டார்கள்.

சாதி அழிவதில் யாருக்கும் - குறிப்பாக அதன் மூலம் பயனடையும் எவருக்கும், இங்கு எழுதிக்கொண்டிருப்பவர்கள் உட்பட, விருப்பம் இல்லை- என்பதே உண்மை".

said...

"ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான்".

சாதுரியம் அதிகம், அளவு குறைவு என்கிறீர்களோ?

said...

When did you visit IIT and get these details.You have simply given some information which is
out of date.Regarding admissions to M.S see the link below.

http://www.iitm.ac.in/Academic%20Admissions/
You are so biased against IIT that you do not even want to make a prima facie enquiry.Are you not ashamed to write like that. This is
as good as yellow journalism.

said...

குழலி ஐ.ஐ.டி.யில் நடைபெறும் உள்வட்ட விளையாட்டை நன்கு அம்பலப்படுத்தியுள்ளீர்கள். சமகாலத்தில் நடைபெறும் சமூகரீதியான விவாதத்திற்கு நிச்சயம் உங்கள் பதிவும் வலுச்சேர்க்கும். என்னுடைய ஆதங்கம் எல்லாம் ஐ.ஐ.டி. குறித்து - அதன் பாதிப்பை நேரில் உணர்ந்தவர்கள் எழுதினால் பல வியக்கத்தக்க உண்மைகள் வெளிவரும். அத்தகைய நன்பர்களை நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். நன்றி குழலி.

said...


ஆனால் சாதி அணுகுமுறை நீங்க வேண்டும் என்று சொல்லாமல், பார்ப்பன ஆதிக்கம் நீங்க வேண்டும் என்று சொல்கையில், அப்படியென்றால் வேறொரு சாதி வந்து ஆதிக்கம் செய்தால் சரியா என்ற கேள்வி எழுகிறது.

அருண கிரி இந்திய சமூகத்தில் ஜாதியம் ஒழியவேண்டும் என்றால் இன்னும் 1000 ஆண்டுகள் கூட ஆகலாம். தற்போது ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுபவர்கள் யார் என்று கூர்ந்து கவனித்தால் அது உயர் ஜாதியினராகத்தான் இருக்க முடியும். இவர்களுக்கு முன்னேறி உயரே இருக்கும் போது, ஜாதியை வைத்துக் கொண்டிருப்பதால் இவர்களது முன்னேற்றத்திற்கு அது தடையாக இருக்கலாம் என கருதலாம். அதே சமயம் உயர் ஜாதியினர் தங்களுடைய பூணூலை கழற்றாமல் ஜாதி ஒழியவேண்டும் என்பது எப்படி என்றும் புரியவில்லை.
அடுத்து கீழ்த்தட்டு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் முன்னேற்றத்தின் முதல் படியில்தான் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு ஜாதி நிச்சயம் தேவை. இந்த அடையாளத்தை அழித்து விட்டால், இவர்களது சமூகமும் அழிந்து போகவேண்டியதுதான். எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதி அடையாளம் தற்போதைக்கு காக்கப்பட வேண்டிய ஒன்றே.
ஒரு சமூகத்தில் அனைவரும் முன்னேறி விட்டால் - ஒரு சமத்தன்மை நிலவினால் ஒழிய ஜாதி ஒழியாது!

said...
This comment has been removed by a blog administrator.
said...

//When did you visit IIT and get these details.
//
1998

//You are so biased
//
ஆமாம் 1998க்கு முன் வரை அப்படிதான் இருந்தேன். இதையெல்லாம் பார்த்த பிறகுதான் கொஞ்சம் தெளிந்தேன்.

//that you do not even want to make a prima facie enquiry.
//
ம்... ஐ.ஐ.டியில் படித்தவர்கள், நான் கூறிய Project Assitant ஆக இருந்து MS சேர்ந்தவர்கள் கூறியதை வைத்து தான் எழுதினேன்...

//You have simply given some information which is
out of date.Regarding admissions to M.S see the link below.
http://www.iitm.ac.in/Academic%20Admissions/
//
M.S. படிப்பிற்கான விளம்பரங்கள் செய்திதாள்களில் வரும் ஆனால் Project assistant கான விளம்பரங்கள் துறை பலகைகளில் இருக்கும்...இந்த சுட்டியிலும் கூட விளம்பரம் மட்டும் தானே உள்ளது? நான் கொடுத்த சுட்டியில் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகின்றார்கள் என்று உள்ளது

//Are you not ashamed to write like that. This is
as good as yellow journalism.
//
1998ல் இருந்த இந்த நிலமை இப்போது மாறிவிட்டதா என்று தெரியவில்லை.... என்ற வரிகளையும் சேர்த்து நேர்மையாக எழுதியதாகவே இது வரை கருதுகின்றேன்.... மேலும் இங்கே MS படிப்பில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், project assitant தற்காலிக பணிக்கு தேர்ந்தெடுக்கபடுவதற்கும் M.Tech. படிப்பில் கடைபிடிக்கப்படும் வெளிப்படை இல்லை என்பதே எனது குற்றச்சாட்டு.

said...

///உயர் ஜாதியினர் தங்களுடைய பூணூலை கழற்றாமல் ஜாதி ஒழியவேண்டும் என்பது எப்படி என்றும் புரியவில்லை.///
அண்ணாச்சி ஆடு கோழி பலி இடப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுதியது தப்புன்னா பூணூல பார்பனர்கள் கழட்டணும்னு நீங்க எதிர் பார்கிறதும் தப்புதான்.

said...

சாதி இல்லை என்றுவிட்டால் சாதி அழியாது.அது இருக்கும்வரை அதைப்பற்றி பேசித்தான் ஆகவேண்டும்.

அம்பிகள் அம்பி நண்பர்களை வைத்து ரெபரன்ஸ் வாங்கி டி.சி.எஸ் முதலான கம்பெனிகளிலும் விப்ரோ முதலான கம்பெனிகளிலும் சேர்ந்துகொண்டு சாதி இல்லை என்று வாயளவில் சொல்லிவிட்டு மற்ற மக்களுக்கு எதிராக பாலிடிக்ஸ் செய்வது நியாயமா?

யாரைஎல்லாம் எதிர்த்து எழுதுவதாக தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு இருந்தாரே ரவி,தாமே அவர்களை போல் எழுத ஆரம்பித்துவிட்டது வருத்தத்திற்குரியது.

said...

I have seen ads for project assistants in newspapers.they mostly appear in classified
section.but if a prof. takes
a person who has passed b.sc
when the minimum qualification
is m.sc that can be challenged
in the court.the number of project
assistants vary from project to
project.project assistants
are not treated as permanent
employees.regarding m.s the norms
and conditions are clearly stated.
in admissions if the rules are
violated they can be challenged
in the court.you could have found out how project assistants are selected in other universities
including anna university and
could have compared that with
the norms in IIT.You are more
interested in casting aspersions
on IIT than finding out truth.
Employed persons do M.S in part time and they are selected only
if they are found suitable.If IIT
chooses a bank clerk with M.A
over an engineer with B.Tech
and work experience that can
be questioned in court.I think
Kasi arumugam has written about
his experiences in IIT as a part
time M.S (or is it M.Tech) student.
And the title of the blog post
is misleading.

said...

ரவி உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, சிறிது நேரம் கழித்து இன்னும் விளக்கமாக பின்னூட்டமளிக்கின்றேன்...

நன்றி

said...

அன்பின் குழலி
நான் தற்சமயம் ஐஐடியில் படித்துவருகின்றேன், ஐந்தாம் ஆண்டு ஆராய்ச்சி மாணவன், தாங்கள் கூறிய ஒரு விசயம் சரி என்றே நினைக்கின்றேன், project staff எடுப்பதற்கு, எந்த பேராசிரியரும் தினசரிகளில் விளம்பரம் தர அவசியமில்லை, துறைகளின் அறிவிப்பு பலகையிலும், தற்காலத்தில், அந்த அந்த ஐஐடியின் இணைய பக்கத்திலும் வெளியிடுகின்றனர், அதைப்பார்த்தே விண்ணப்பித்து வருகின்றனர் மாணவர்கள்...மற்ற விசயங்களை குறித்து நான் எதுவும் கமெண்ட் அடிக்க விரும்பவில்லை...நன்றி, ஏதேனும் தகவல் வேண்டுமெனில் என்னைக்கேட்கலாம், நான் இருப்பது அஸ்ஸாம் மானிலம், குவஹாத்தி ஐஐடியில்...உயிர் இயந்திரவியல் துறையில் ஆராய்ச்சி மாணவர்...நன்றி...
ஸ்ரீஷிவ்..

said...

IIT,IIM களில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் முதல் காரணம் தரம், இட ஒதுக்கீட்டை IIT,IIM களில் அமல்படுத்தினால் IIT,IIM களின் தரம் குறைந்து விடுவதாக கூறுகின்றனர், ஆனால் அங்கேயும் மாணவர் தேர்வுகளில் குளறுபடிகள் நேர்கின்றன, GATEல் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைவிட Project Assitant மாணவர்கள் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் அனுமதிக்கப்படுவார்கள், இதற்கு admission criteria விலும் அனுமதிக்கப்படுகின்றது, ஆனால் project assitant தற்காலிக பணியானாலும் அது முழுக்க முழுக்க பேராசிரியர்களின் கையில் உள்ளது, project assitant அண்ணா பல்கலைகழகத்திலும் இப்படி தான் எடுக்கப்படுகின்றது என்றாலும் IITகள் மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வித்தியாசப்படுவது இட ஒதுக்கீடு இல்லாததினால் தரத்தினால் என்றும் இட ஒதுக்கீடு வரும்போது தரம் குறையும் என்று கூறும் போது அங்கே எல்லாம் சரியாக இருக்க வேண்டும், ஆனால் அங்கே ஓட்டை இல்லாமலெல்லாம் இல்லை, IITயிலும் ஓட்டைகள் உள்ளன, இப்படியும் மாணவர்களால் உள்ளே நுழைய முடியும், இப்படி பட்ட ஓட்டைகளினால் கெடாத தரம் இட ஒதுக்கீட்டினால் கெட்டுவிடுமா??

//in admissions if the rules are
violated they can be challenged
in the court
//
இங்கே சட்டபடிதான் நடக்கிறது என்றாலும் அதில் உள்ள ஓட்டையால் தவறுகள் நடக்கிறதே, இட ஒதுக்கீடும் சட்டபடி தானே அமல்படுத்தப்படும்.

said...

//you could have found out how project assistants are selected in other universities
including anna university and
could have compared that with
the norms in IIT
//
IITகள் மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வித்தியாசப்படுவது இட ஒதுக்கீடு இல்லாததினால் தரத்தினால் என்றும் இட ஒதுக்கீடு வரும்போது தரம் குறையும் என்று கூறும் போது அங்கே எல்லாம் சரியாக இருக்க வேண்டும், ஆனால் அங்கே ஓட்டை இல்லாமலெல்லாம் இல்லை, IITயிலும் ஓட்டைகள் உள்ளன, இப்படியும் மாணவர்களால் உள்ளே நுழைய முடியும், இப்படி பட்ட ஓட்டைகளினால் கெடாத தரம் இட ஒதுக்கீட்டினால் கெட்டுவிடுமா??

said...

மேலும் ரவிஸ்ரீனிவாசை பொறுத்தவரை அவர் ஆதரிப்பதும் எதிர்ப்பதும் ஆட்களுக்காக இல்லை, அவருடைய அந்த கருத்தின் அந்த நிலைக்காக என்பது என் கருத்து

said...

//யாரை "Project Assistant" ஆக தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதற்கு பேராசிரியர்களுக்கு முழு உரிமை உண்டு என்றே கருதுகின்றேன்//

முற்றிலும் உண்மை!

நம்ம பொழப்பும் அப்படி தானே ஓடிட்டிருக்கு! :-)

said...

இது சும்மா தமாசுக்கு

//you could have found out how project assistants are selected in other universities
including anna university and
could have compared that with
the norms in IIT
//
ஹி ஹி அண்ணா பல்கலைக்கும், IITக்கும் வித்தியாசம் இல்லையென்றால் அப்போ அண்ணா பல்கலைகழகத்தில் உள்ள இட ஒதுக்கீட்டை IITயில் கொண்டுவரலாமே....

said...

ரவியின் இந்த பதிவில் நான் இட்ட பின்னூட்டம்.

இரவி கொஞ்சம் நிதானமாக என் பதிவை படித்து பாருங்கள், சிலவற்றை நான் பதிவில் சரியாக சொல்லாமல் விட்டிருந்தால் இதோ இந்த பின்னூட்டத்தில் தருகின்றேன்
------------------------
IIT,IIM களில் இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதற்கு சொல்லப்படும் முதல் காரணம் தரம், இட ஒதுக்கீட்டை IIT,IIM களில் அமல்படுத்தினால் IIT,IIM களின் தரம் குறைந்து விடுவதாக கூறுகின்றனர், ஆனால் அங்கேயும் மாணவர் தேர்வுகளில் குளறுபடிகள் நேர்கின்றன, GATEல் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைவிட Project Assitant மாணவர்கள் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் அனுமதிக்கப்படுவார்கள், இதற்கு admission criteria விலும் அனுமதிக்கப்படுகின்றது, ஆனால் project assitant தற்காலிக பணியானாலும் அது முழுக்க முழுக்க பேராசிரியர்களின் கையில் உள்ளது, project assitant அண்ணா பல்கலைகழகத்திலும் இப்படி தான் எடுக்கப்படுகின்றது என்றாலும் IITகள் மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வித்தியாசப்படுவது இட ஒதுக்கீடு இல்லாததினால் தரத்தினால் என்றும் இட ஒதுக்கீடு வரும்போது தரம் குறையும் என்று கூறும் போது அங்கே எல்லாம் சரியாக இருக்க வேண்டும், ஆனால் அங்கே ஓட்டை இல்லாமலெல்லாம் இல்லை, IITயிலும் ஓட்டைகள் உள்ளன, இப்படியும் மாணவர்களால் உள்ளே நுழைய முடியும், இப்படி பட்ட ஓட்டைகளினால் கெடாத தரம் இட ஒதுக்கீட்டினால் கெட்டுவிடுமா??

//in admissions if the rules are
violated they can be challenged
in the court
//
இங்கே சட்டபடிதான் நடக்கிறது என்றாலும் அதில் உள்ள ஓட்டையால் தவறுகள் நடக்கிறதே.

இட ஒதுக்கீடும் சட்டபடி தானே அமல்படுத்தப்படும்.

//இதில்ஐ.ஐ.டி இப்படி செயல்படுகிறது, சென்னைப் பல்கலைகழகம் இப்படி செயல்படுகிறது, அண்ணாபல்கலைகழகம் இப்படி செயல்படுகிறது என்று அவர் கூறுவதில்லை. அப்படி ஒப்பிட்டு ஐ.ஐ.டியைவிட அண்ணா பல்கலைகழக விதிகள் சிறப்பாக உள்ளன, அனைத்து திட்ட உதவியாளர்பதவிகளும் நாளிதழ்களில் முறையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன என்று வாதிட்டு ஐ.ஐ.டியைகுறை கூறினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.//

//you could have found out how project assistants are selected in other universities
including anna university and
could have compared that with
the norms in IIT
//
IITகள் மற்ற கல்வி நிறுவனங்களிலிருந்து வித்தியாசப்படுவது இட ஒதுக்கீடு இல்லாததினால் தரத்தினால் என்றும் இட ஒதுக்கீடு வரும்போது தரம் குறையும் என்று கூறும் போது அங்கே எல்லாம் சரியாக இருக்க வேண்டும், ஆனால் அங்கே ஓட்டை இல்லாமலெல்லாம் இல்லை, IITயிலும் ஓட்டைகள் உள்ளன, இப்படியும் மாணவர்களால் உள்ளே நுழைய முடியும், இப்படி பட்ட ஓட்டைகளினால் கெடாத தரம் இட ஒதுக்கீட்டினால் கெட்டுவிடுமா?? இது தான் என் ஆதார கேள்வி.

said...

இரவியின் பதிவிலிட்ட பின்னூட்டம்

//1,Can one be a project assistant and be a M.Tech student (regular stream, full time student) simultaneously.
//
இல்லை என்றே நினைக்கின்றேன், சரி இந்த கேள்வி இங்கே எதற்கு??

2,GATEல் அதிகம் மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களைவிட Project Assitant மாணவர்கள் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் அனுமதிக்கப்படுவார்கள்
Is this for part-time course or full time course or for sponsored programs.
// full time course, experience in the research area என்ற அடிப்படையில், இது தொடர்பாக மேலும் தகவல் பெற MS படித்த நண்பரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன் ஆள் கிடைக்கவில்லை, கிடைத்தவுடன் தகவல் தெரிவிக்கின்றேன்.

இதெல்லாவற்றையும் விட IIT IIM களில் இடஒதுக்கீடு தரக்கூடாது என்பதற்கு தரம் தான் காரணமென்றால் இப்படி உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி உள்ளே நுழைவதால் குறையாத தரம் இட ஒதுக்கீட்டினால் குறையப்போகின்றதா?

said...

"ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான்".

சாதுரியம் அதிகம், அளவு குறைவு என்கிறீர்களோ? என்ற என் கேள்விக்கு
குழலியின் பதிலை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

இனி சந்திப்பின் பதிலுக்குப் பின்னூட்டம்:

"தற்போது ஜாதி ஒழிய வேண்டும் என்று கூறுபவர்கள் யார் என்று கூர்ந்து கவனித்தால் அது உயர் ஜாதியினராகத்தான் இருக்க முடியும். இவர்களுக்கு முன்னேறி உயரே இருக்கும் போது, ஜாதியை வைத்துக் கொண்டிருப்பதால் இவர்களது முன்னேற்றத்திற்கு அது தடையாக இருக்கலாம் என கருதலாம்"

- எனக்குத்தெரிந்து ஜாதி ஒழிய வேண்டும் என்றுதான் முற்போக்குவாதிகள் பலரும் சொல்வதாக நினத்துக் கொண்டுள்ளேன். ஒவ்வொரு தொழிலிலும் ஒவ்வொரு ஜாதி உயரே இருக்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை. ஒன்று செய்யலாம். எந்தத்தொழிலில் எந்த ஜாதி ஆதிக்கம் அதிகமாக உள்ளதோ அந்தத் தொழிலில் அந்த ஜாதிக்கு முன்னுரிமை கிடையாது என்று கொண்டு வந்துவிடலாம். அர்ச்சகர் தொழிலில் பார்ப்பனருக்கு முன்னுரிமை கிடையாது. கவுண்டர்கள் ஆதிக்கத்தைக் குறைக்க குறவர்களுக்கே விவசாயத்தில் முதலிடம். மளிகைத்தொழிலிலும், ஏஜென்ஸி தொழிலிலும் நாடார்கள் பின்னுக்குத் தள்ளப்பட வேண்டும். மிலிட்டரி ஓட்டல் நடத்த தேவரை விட சைவப்பிள்ளைக்கே முதலிடம். மீன் பிடி தொழிலில் மரவர் ஆதிக்கம் அதிகம் என்பதால் அதை செட்டியார்களுக்கு விட்டுத்தர வேண்டும். இப்படிப்பல புரட்சிகளைச் செய்தால் சாதி மறைந்து சமத்துவம் மலர்ந்து விடும்தான்!

"அதே சமயம் உயர் ஜாதியினர் தங்களுடைய பூணூலை கழற்றாமல் ஜாதி ஒழியவேண்டும் என்பது எப்படி என்றும் புரியவில்லை".

- உங்களது நோக்கம், உயர்ஜாதி பூணூல் கழற்றுவதா அல்லது சமத்துவ சமூகமா என்பது எனக்கும் புரியவில்லை. பூணூல் என்ற செத்த பாம்பைக்காட்டி எத்தனை நாள் சாதி அரசியல் வித்தை காட்டுவது? பூணூலக் கழற்றி விட்டால் அடுத்த நாள் காலையில் சாதியற்ற சமுதாயம் மலர்ந்து விடுமா? தென் மாவட்டங்களில் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைப் பூணூலாளர்கள்தான் செய்கிறார்களா? வாலி என்றொரு பார்ப்பனன் ஒரு ஜெ என்ற பார்ப்பனத்தியை எதிர்த்து கருணாநிதி என்ற தாழ்த்தப்பட்ட சாதிக்காரரிடம் கும்பிடு போடுவது பூணூல் கழற்றாமலேயே தானே நடக்கிறது?

"அடுத்து கீழ்த்தட்டு மக்களைப் பொறுத்தவரை அவர்கள் முன்னேற்றத்தின் முதல் படியில்தான் இருக்கிறார்கள். எனவே இவர்களுக்கு ஜாதி நிச்சயம் தேவை. இந்த அடையாளத்தை அழித்து விட்டால், இவர்களது சமூகமும் அழிந்து போகவேண்டியதுதான்".

- கீழ்த்தட்டு என்று நீங்கள் சொல்வது கார், பங்களா கனவான்களான ராம்தாஸையோ, அன்புமணியையோ, தயாநிதியையோ, திருமாவையோ அல்ல என நினைக்கிறேன். உண்மைக்கீழ்த்தட்டு மக்களின் ஒரே பொது அடையாளம் ஜாதியல்ல. அணில்கூடு வீடும், அரைவயிற்றுக் கஞ்சியும், அணிவதற்கிருக்கும் கிழிசல் ஆடைகளும்தான் இவர்களது அடையாளம். இவர்களது தேவை ஜாதியல்ல. வாழ்நிலை உறுதியும் அதனைத்தரும் பொருளாதார மேம்பாடும் மட்டுமே.

"எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் ஜாதி அடையாளம் தற்போதைக்கு காக்கப்பட வேண்டிய ஒன்றே. ஒரு சமூகத்தில் அனைவரும் முன்னேறி விட்டால் - ஒரு சமத்தன்மை நிலவினால் ஒழிய ஜாதி ஒழியாது!"

- "ஒரு சமூகத்தில் அனைவரும் முன்னேறி விட்டால்..." என்பது எத்தகைய வசதியான சொற்றொடர் என்பது இதைப்படிப்பவர் அனைவருக்கும் புரியும். முன்னேற்றம் என்பது பொருளாதார அடிப்படையில் இருந்தாலன்றி அதனை அடையாளம் காண்பது நடைமுறைச் சாத்தியம் இல்லை. இப்படி இருக்கையில் இட ஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் என்று இருந்தாலன்றி எப்படி சமத்துவம் சாத்தியம் ஆகும்?

ஆக ஒன்று மட்டும் உள்ளங்கை நெல்லிக்கனி. ஜாதி நிச்சயம் தேவை என வெளிப்படையாகவே சொல்கிறீர்கள்.

'ஜாதி அடிப்படை அவசியம்' என்று சொன்ன பிறகு ஒரு சில ஜாதிகளுக்கு மட்டுமே அந்த உரிமை என்று சொல்ல முடியாது. இதனால் பார்ப்பனீயம் பாராட்டும் பார்ப்பனரையோ, நாடாரியம் பாராட்டும் நாடாரையோ, கவுண்டரியம் பாராட்டும் கவுண்டரையோ, தேவரியம் பாராட்டும் தேவரையோ (இத்யாதி) எதிர்க்கவும் உங்களுக்குத் தார்மீக உரிமை கிடையாது.

இனி குறைந்தது ஜாதிகளின் இருப்பிற்கும் ஜாதீயம் வாழ்வதற்கும் பார்ப்பனரைக் குற்றம் சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

said...

"ஆனால் அங்கே ஓட்டை இல்லாமலெல்லாம் இல்லை, IITயிலும் ஓட்டைகள் உள்ளன, இப்படியும் மாணவர்களால் உள்ளே நுழைய முடியும், இப்படி பட்ட ஓட்டைகளினால் கெடாத தரம் இட ஒதுக்கீட்டினால் கெட்டுவிடுமா??"

ஓட்டைகளில் தரம் கெடுக்கும் ஓட்டை தரம் கெடுக்காத ஓட்டை என வகை பிரிப்பதை விட, ஓட்டை எங்கு இருந்தாலும் அதை அடைப்பதுதான் சரியான நேரடி அணுகுகுறை. அதே ஓட்டையை எல்லா கல்விக்கூடங்களிலும் உருவாக்குவோம் எனப்புறப்படுவது அல்ல. Let us err on the positive side.

said...

தரமான ஐஐடி இதுவரை எத்த்னை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை
patent செய்திருக்கிறது?

இந்தியாவின் தர நிறுவனங்களள் உருவாக்கிய உலகத்தரம் வாய்ந்த பொருட்கள்
யாவை?

said...

இங்கே குழலியின் அடிப்படைக் கருத்துடன் ஒத்துப் போகிறேன். IIT பயிற்றுவிக்கப்படும் அனைத்து வகுப்புகளுக்கும் JEE போன்ற முறையான சேர்க்கை முறைகள் கிடையாது.அது அந்த துறை சார்ந்த விளம்பரமாக மட்டும் இருக்கிறது.IIT ல் எங்கே எது , எப்படிக் கிடைக்கும் என்ற தகவல் சமான்யனுக்குத் தெரிவதில்லை. யார் வேண்டுமானலும் "..தேடிப் பார்க்க வேண்டும், விசாரிக்க வேண்டும், அக்கறை வேண்டும், வழக்குப் போட வேண்டும்.." என்று பல வியாக்கியானங்களைக் கூறலாம்.ஆனால் அதுவெல்லாம் தீர்வாகாது.

+2 முடிக்கும் ஒருவனுக்கு அதற்கு மேல் என்ன செய்யலாம், எங்கே படிக்கலாம் போன்ற தகவல்களும், இளங்கலை முடிப்பவனுக்கு அதற்கு மேல் என்ன , எங்கே படிக்கலாம் போன்ற விவரங்களையும் தர வேண்டியது கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசின் கடமை. அரிசியும், தொலைக்காட்சியும் மட்டுமே முக்கியமாகிப் போன இந்த சண்டாள மாநிலத்தில் என்னாலும் இ-கலப்பையில் மட்டுமே தீர்வு சொல்ல முடிகிறது.

====

மேலும் இந்த பெரிய கல்வி நிறுவனங்களில் இருந்து இதுவரை ஒரு உருப்படியான உலகத்தை திரும்பிப் பார்க்க வைக்கும், தொழில் நுட்ப புரட்சி என்றும் சொல்லக் கூடிய எந்த ஒரு சாதனையும் நிகழ்த்தப் படவில்லை. இப்போது பலரும் இந்தியா ஏதோ IT புரட்சி செய்வதாக பேசுகிறார்கள். உண்மை அதுவல்ல. வீணாப்போன HTML க்குக்கூட ஒரு புது TAG கண்டுபிடித்ததாகத் தெரியவில்லை. அரிக்கேன் விளக்கில் இருந்து ஆகாய விமானம் வரை கண்டுபிடிப்புகள் நிகழ்வது இங்கல்ல.

இந்தியாவில் நடக்கும் IT தொழில், சேவை சார்ந்ததே தவிர கண்டுபிடிப்பு சார்ந்த்தது அல்ல. IIT பங்களிப்பு என்ன? ஆகாய விமான பயணிகளுக்கு சேவை செய்ய Call Center களை உருவக்குவதற்கு IIT கள் தேவை இல்லை. அதற்கு 100/100 சீமான் இன்ஸ்டிடுயூட் போதும்.

====

நான் இப்படிக் கூறுவதால் யாரும் சண்டைக்கு வர வேண்டாம். அம்பானி ஒன்றும் IIM ல் இருந்து வரவில்லை.

மேலே அனானி கேட்ட கேள்விகளுக்கு IITக்கு நற்சான்று வழங்கும் நண்பர்கள் பதில் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

1.தரமான ஐஐடி இதுவரை எத்த்னை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை patent செய்திருக்கிறது?

2.இந்தியாவின் தர நிறுவனங்களள் உருவாக்கிய உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் யாவை?

said...

IIT puts advts in major newspapers and Employment News.It is upto you
to read them and apply.Almost all universities have bureaus or cells to help students in choosing career and higher education.If you are a B.Tech student and if you do not even read newspapers or visit
websites of institutions like IIT
what can IITs do.These days the websites contain updated and latest information.Dont expect IIT
to contact you and tell that there is something called world wide web :).

said...

கல்வெட்டிற்கு......

// 1.தரமான ஐஐடி இதுவரை எத்த்னை உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை patent செய்திருக்கிறது?

2.இந்தியாவின் தர நிறுவனங்களள் உருவாக்கிய உலகத்தரம் வாய்ந்த பொருட்கள் யாவை? //
ஐஐடியில் படிக்கும் மாணவர்களில் 99 சதவீதம் பேர் மேலைநாட்டிற்கு சென்றுவிடுகின்றனர். அங்கே போய் ஆராய்ச்சி செய்து, பாரட்டும் பெற்று, கம்பெனியில் பெயரில் காப்புரிமை மற்றும் தரச்சான்றும் பெறப்படுகின்றன. பின்னர் எப்படி நீங்கள் நினைப்பது சாத்தியமாகும்?

said...

குழலியின் பதிவில் ரொம்ப நாள் கழித்து பின்னூட்டம் இடுகிறேன்.


இட ஒதுக்கிட்டை எதிர்ப்பவர்கள் கூறுகின்ற தகுதி, திறமை என்பது என்ன?. இவர்களுடைய க்னாலெட்ஜ் அது மட்டுமே. அந்த க்னாலெட்ஜ் பெறுவதற்கான சந்தர்பங்கள் இவர்களுக்கு இருந்தது பெற்றார்கள். பீ அள்ளுகிறவர் மகனுக்கு அத்தகைய சூழ்னிலை இல்லை. எனவே அவர் பெறுகின்ற மதிப்பெண் இவர்களுடையதை விட குறைவாக தான் இருக்கும் . இட ஒதுக்கீட்டினால் மட்டுமே அவன் சந்ததி மாறுதல் அடையும். இதனால் பாதிப்பு பற்றி பேசுபவர்கள் ஒன்றை -ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். எல்லா இடத்திலும் போட்டி அதிகம். இட ஒதுக்கீடு இருந்தும் இடம் கிடைக்காதவர்கள் இருக்கிறார்கள். திறமை குறித்து பேசுபவர்கள் ஒன்றை கூடுதல் மதிப்பெண் பெற கவனம் செலுத்த வேண்டியது தானே. ஐ.ஐ.டி, ஐ.ஐ.ம் பற்றி குறிப்பாக வாதங்கள் நிகழ்வதை குறித்து நான் எழுதிய பதிவு.







http://bunksparty.blogspot.com/2006/04/blog-post_20.html

said...

Dont expect IIT
to contact you and tell that there is something called world wide web :).

YES. THERE ARE INDIANS WHO DO NOT KNOW WORLD WIDE WEB. IIT AND OTHER INSTITUTES WILL HAVE TO MAKE EFFORTS TO CONVEY IT TO THEM.

said...

மிகவும் சரியாக சொன்னீர்கள் பாலசந்தர் கணேசன். இடஒதுக்கீடு என்பது கட்டாயம் தேவையான ஒன்றுதான். பட்டியல் வகுப்பினைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி, பொருளாதாரச் சூழல் மிகவும் படுபாதலத்தில் இருக்கும் என்னற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணக்கர்களினால், மேம்பாடைந்த குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுடன் இணையான மதிப்பெண்களால் போட்டிபோட முடியும் என்று எண்ணுகின்றனரா? நிச்சயம் இது கடினமான ஒன்றுதான்.

ஏனென்றால் சென்னையைவிட்டு ஐம்பது கிலோமீட்டருக்கு பிறகு சென்றாலே, மின்சாரவசதியில்லா எண்ணற்ற குடும்பங்களை கண்கூடாக காணலாம். இது தமிழகத்தின் நிலைமை மட்டுமல்ல. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான ஒன்றாகத்தான் கருதுகின்றேன்.

வீட்டில் மண்தரையும், ஒலைகூரையும், நிலவொளியை கொண்டு படிக்கும் மாணவர்களையும் பற்றிக்கொஞ்சம் சிந்திப்பார்களா? இடஒதுக்கீடு வேண்டாம் என்று கூப்பாடு போடுபவர்கள்!!!

said...

// அவன் சந்ததி மாறுதல் அடையும் // Mr. பாலசந்தர் கணேசன், this what exactly I am thinking about.

But, I am still confused about this "reservation system".

I think, we need Dr.Ambedkar to give a lawful solution to this problem.

Do we have anyone like him now? I really want to know.

said...

ஐஐடியும் ஆராய்ச்சி நிறுவனம்தானே.
இந்தியாவிலேயே இருக்கும் ஐஐடி ப்ரொபஸ்ர்களும், அவர்களுடைய
மாணவ்ர்களும் என்ன கண்டுபிடித்தார்கள் என்பது கேள்வி.

ஒரு கிராமத்து மெக்கானிக் இந்தியாவில் மோட்டர் பாக் பின்னால் ஏர்
கட்டி உழுவதற்கு ஒரு கருவி வடிவமைத்ததாக பத்திரிகையில்
வந்தது.

இது போன்ற கண்டுபிடிப்புகள் ஏதும் பல்கலைகழகங்களிலிருந்து
வராததற்கு காரணம் தயிர் சாத சூழ்நிலை தானே. ஏரையும், தறியையும்
பார்க்காதவன் ஜாதகம் பார்க்க software எழுததான் முடியும்.

said...

What is the record of Anna University or any other university in Tamil nadu in terms of patents and inventions.These universities are dominated by OBCs,SCs and STs as they enjoy 69% quota and constitute more than 69% of faculty.You answer this first and
then I will answer your questions on IITs.

said...

அரசு பொறியியற் கல்லூரிகளில் ஆசிரியப்பணி -- பட்டியலினத்தவருக்கு ஒரு கனவா?

அன்பின் சினேகத்திற்கு,
வணக்கம்,தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப்பணியிடங்கள் நிரப்புதல் அரசு பொறியியற் கல்லூரிகளில் என்பது பட்டியலினத்தவரைப்பொறுத்த வரை ஒரு கண்துடைப்பு என்பது பெரும்பாலோருக்கு தெரியாத ஒரு விசயம், எப்படி என்று கேட்கின்றீர்களா? முன்னேறிய வகுப்பினருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் ஒரே அளவில் சமத்துவத்தினை நிலைநாட்டி சரித்திரத்தில் இடம் பெற நினைக்கின்றது தமிழக அரசு. அரசு பொறியியற் கல்லூரிகள் ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்ட ஆசிரியப்பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்ப வேண்டிய அறிவிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒரு பெரிய அநீதி இழைத்துள்ளது, மத்திய அரசிலும் மற்றைய மானில அரசுகளிலும் அரசுப்பணிகளுக்கான குறைந்த பட்ச தகுதியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகளுக்கு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று இருக்கின்றது, ஆனால் தமிழக அரசு தேர்வாணையத்தில் மட்டுமே , முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும் என்ற ஒரு பெரிய தடைகல்லை போட்டு பட்டியலினத்தவரின் பிழைப்பில் மண்ணை அள்ளிப்போட்டு மேல்தட்டு வர்கத்தினருக்கு வசதி செய்து கொடுத்துள்ளது இந்த அரசு.

இதனால் தகுதியோடு இருக்கும் எத்தனையோ தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கின்றனர், தமிழ் போதனாவழிக்கல்வியில் பயின்று விட்டு அந்த மிரட்சி தீர்வதற்குள் இறுதியாண்டு கல்லூரிப்படிப்பையும் முடிக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மாணவன், முதல் நிலையில் தேர்ச்சியுறுவான் என்று எந்த நிச்சயமும் இல்லை, ஆனால் அதனால் மட்டுமே அவன் அறிவற்றவன் அவன் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கவே தகுதியற்றவன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? , மத்திய அரசிலும் மற்ற மானில அரசுகளிலும் அளித்திருக்கும் சலுகையினைப்போல் தேர்வெழுத அந்த மாணவனை அனுமதிக்கலாமே? அதில் அவன் திறமையை காண்பித்து ஒரு தலை சிறந்த ஆசிரியனாக வர வாய்ப்புகள் உண்டு அல்லவா? அந்த வாய்ப்பினை தட்டிப்பறிக்கின்றதா தமிழக அரசு?

இதனால் பாதிக்கப்படுவது முற்றிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்களே, முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் அனைவரும் அறிவாளிகள், இரண்டாம் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் எல்லாம் முட்டாள்கள் என்பது போலல்லவா உள்ளது இந்த நியாயம்? அவர்களுக்கும் ஒரு வாய்ப்பினை இந்த அரசு அளித்துப்பார்த்தால் தானே தெரியும்? அதிலும் எத்தனை அறிவாளிகள் உள்ளனர் என்று? சமூக நீதி, சமூக நீதி என்று சத்தம்போட்டுக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளே? இதை யாரேனும் கவனிப்பீரா? பொறியியல் கல்வியில் முதல் வகுப்பில் தேர்ச்சியுற்றவர் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்ற தடையை நீக்க்கி தேர்ச்சிமட்டுமே பெற்றிருந்தாலே அவர் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர் என்று ஒரு வாய்ப்பினை அனைத்து தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்திற்கும் வழங்கி பெருமை தேடிக்கொள்ளுமா இந்த மானில அரசு? அவர்களை நேரடியாக பதவி தரச்சொல்லி கேட்கவில்லை, விண்ணப்பித்து அவர்களின் தகுதியை நிலைநாட்ட ஒரு வாய்ப்பினை மட்டுமே கேட்கின்றனர் அவர்கள், அரசு இந்த விசயத்தில் எந்த அளவிற்கு செயல்படுகின்றது என்று கவனிப்போம், இணையத்தில் எழுதும் இந்த எழுத்து அரசாங்கத்தினை சென்றடையுமா? பொறுத்திருந்து பார்ப்போம்...வாழ்க வளமுடன்,
சமூக அக்கரையுடன்,
ஒரு சேவகன் ...