OPML பகிர்வு, ip , திரட்டி அரசியல், டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கரின் டெக்னிக்கல் தவறுகள் மற்றும் இன்ன பிற...
சமீப காலமாக ரவிசங்கர் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் இருக்க கூடியதான நிலைப்பாட்டை வலியுறுத்தி தொடர் பதிவுகள் எழுதி வருகிறார், ரவிசங்கர் அவர்கள் ஏன் எதற்கக இப்படி எழுதிவருகிறார் என ஆரம்பித்தால் அவரின் டெக்னாலஜி பிதாமகன் என எல்லோரும் புகழ வேண்டுமென்ற ஆசையா, நான் சொன்னேன் செய்யலை என்று ஆரம்பிக்கும் அவரின் ஈகோ வா? அல்லது தமிழ்வலைப்பதிவுலகில் எல்லாம் தன் ஆலோசனையின் கீழ் தான் நடக்கவேண்டுமென்ற தன் முனைப்பா என்பதிலிருந்து சென்னையில் நடந்த வலைப்பதிவு பட்டடறை அரசியல், புதுச்சேரி வலைப்பதிவு பட்டறை அரசியல் என ஆரம்பித்து ஒரு வருடம் இனி பட்டறை நடத்த தேவையில்லை என்று கூறும் அத்தாரிட்டியிலிருந்து ரவிசங்கரின் முன்னுக்குபின் முரணான கொள்கை முரண்பாட்டிலிருந்து தானியங்கியாக பதிவுகளை திரட்டும்
'தமிழ்' திரட்டிகளை விட ஒரு குழுவிற்கு பிடித்த பதிவுகளை மட்டும் காண்பித்து கொண்டிருக்கும் மனித திரட்டிகளுக்கு அவர் தரும் முக்கியதுவத்தின் அரசியலில் இருந்து ஏகப்பட்ட விசயங்கள் பேச வேண்டியிருக்கும் என்பதால் அந்த விடயங்களை விவாதிக்கும் அளவிற்கு எமக்கு நேரமில்லை என்பதாலும் ரவிசங்கர் டெக்னிக்கலாக தந்து கொண்டிருக்கும் தவறான விசமங்களையும் மற்றும் சில விசயங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்...
1. தமிழ் திரட்டிகள் வெறும் தானியங்கி திரட்டிகள் மட்டுமல்ல, தமிழ் திரட்டிகள் என்று நான் குறிப்பிட்டதற்கு காரணம் டெக்னோரைட், கூகிள் ரீடர் போன்றவை பொதுவான திரட்டிகள், ஆனால் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்றவைகள் தமிழ்மொழியில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்காக உருவாக்கப்பட்ட திரட்டிகள், ரவிசங்கர் மூச்சுக்கு முன்னூறு முறை திரட்டிகளை சாராமல் திரட்டிகளை சாராமல் என்று சொல்வது என்ன வென்றால் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் என்று பொருள் ஏனென்றால் இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்கலாம் அப்போது வலைப்பதிவர்கள் கூகிள் ரீடர் திரட்டியையோ டெக்னோரைட் திரட்டியையோ அல்லது வேறு எந்த திரட்டியையோ சார்ந்து இருப்பதாகும்... சரி இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்க சொல்வதற்கான காரணங்களாக சிலவற்றை வைக்கின்றார். அதில் முதன்மையானது கட்டற்ற சுதந்திரம், பாதுகாப்பு என்று சில விடயங்களை முன் வைக்கிறார்... அதற்கு முன் இந்த திரட்டிகள் வெறும் பதிவு, பின்னூட்டம் திரட்டுவது என்று மற்ற திரட்டிகள் போலில்லாமல் ஒரு வலைப்பதிவு சமூகமாக இருந்து வருகின்றது, நட்சத்திரம், பூங்கா, சுடர் விளையாட்டு என தமிழ் வலைப்பதிவர்களின் பங்கேற்ப்பை ஊக்குவிக்கின்றது, information காலத்தை தாண்டி இப்போது நாம் Participatipon காலத்தில் இருக்கிறோம். அதானாலேயே சர்ச்சைகளும் அதிகமாக உள்ளது.
கட்டற்ற சுதந்திரம்:
ஆபாச பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் என்று தமிழ்மணம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆபாசங்களை எழுத்துவடிவில் எழுத இடம் கொடுத்த ப்ளாக்கருக்கு மின்மடல் அனுப்பி அதை
தடைசெய்ய சொன்னதை விட தமிழ்மணம் அதை காட்டக்கூடாது என்று எழுந்த கோரிக்கைகளும் அதை வைத்து தமிழ்மணத்தை தாக்கிய நிகழ்வுகளுமே நடந்தது, அந்த பதிவுகளை எல்லாம் தமிழ்மணம்
நீக்கியது, பின்னூட்ட மட்டுறுத்தல் செய்தால் தான் தமிழ்மணம் பின்னூட்டத்தை காண்பிக்கும் என்ற நிலைக்கு தமிழ்மணத்தை தள்ளியது யார்? தமிழ்மணமா? அல்லது வலைப்பதிவர்களா? இந்த பிரச்சினையில் எழுத இடம் கொடுத்த கூகிளை நோண்டியவர்களை விட தமிழ்மணத்தை தாக்கியதே அதிகம், சில மாதங்களுக்கு முன் பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லையென்றாலும் பதிவுகளின் பின்னூட்டம் காட்டப்படும் என்ற போதும் இதோ இந்த நொடி வரை ரவிசங்கரின் பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளதே என்ன காரணம், அவர் பதிவு மட்டுமல்ல எத்தனையோ பதிவுகளில் இன்னமும் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளது, ஏனென்றால் இங்கே அப்படியிருக்கு நிலைமை...
ரி தமிழ் திரட்டிகளில் தான் சுதந்திரம் இல்லை, கூகிளில் என்ன நிலைமை, ஒரு ஆபாச போலி ப்ரொபைலை சர்வேசன் பதிவில் வைத்து புகார் மேல் புகார் வைத்து குத்தோ குத்தென்று குத்தி முடக்கவில்லையா? புகார் மேல் புகார் அனுப்பியதில் இன்னொரு வலைப்பதிவை திறக்கும் போதே ப்லாக்கர் இந்த பதிவில் அவதூறுகள் உள்ளதாக புகார் வந்துள்ளது பார்க்க விருப்பமெனில் உள்ளே செல்லுங்கள் என்று எச்சரித்ததே அதெல்லாம் கட்டற்ற சுதந்திரமா?
கட்டற்ற சுதந்திரம் என்ற பெயரில் தமிழ் திரட்டிகளை புறக்கணிக்க சொல்வதன் காரணம் என்ன? அதன் பின் ஏதேனும் அரசியல் இருக்கா? என்ன அரசியல் அது?
ஒரு நாள் ஒரே ஒரு நாள் சுதந்திரமாக வலைப்பதிவுகளை தானாக இணைக்க அனுமதித்தால் இங்கே என்ன நடக்கும்? திரட்டியில் வந்து இணைத்து அதை வேலை, வீட்டுப்பிரச்சினைகள், புள்ளைகுட்டியோடு நேரம் செலவழிப்பு அதன் பிறகு ஏகப்பட்ட இன்ன பிற வேலைகளுக்கு பின் இந்த பதிவுகளை எல்லாம் படித்து இதெல்லாம் திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என பார்த்து பிறகு சேர்க்கும் போதே ஏகப்பட்ட பிரச்சினைகள் வருகிறது இதில் கட்டற்ற சுதந்திரமாக இணைக்கவிட்டால்?
பொது OPML உருவாக்குவதற்கான வரைமுறையாக ரவிசங்கர் முன்னெடுத்த விசயத்தில் எந்த பதிவுகளை சேர்க்கலாம் எதை சேர்க்க கூடாது என சொல்லியுள்ளது இங்கே
வெர்சன் 1 Dec -14 :எந்த மாதிரி பதிவுகளைத் தவிர்ப்பது?
பதிவுகள் பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவதாக இருப்பது முக்கியம். சாதி, மத, இன, மொழி வெறுப்புணர்வூட்டும் பதிவுகள், விளம்பரப் பதிவுகள், ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பார்க்கத் தகாத பதிவுகளைத் :) தவிர்க்கலாம். வேற பெரிய வரையறை ஏதும் இல்லை.
கட்டற்ற சுதந்திரம் பற்றி பேசுபவர் எந்த மாதிரி பதிவுகளை தவிர்க்க வேண்டுமென சொல்லியுள்ளார் பாருங்கள், டிசம்பர் 20 ம் தேதி வரை 7 முறை அடித்தல் திருத்தல் செய்த போது இருந்த இந்த தணிக்கை டிசம்பர் 20ம் தேதி கடைசியாக அடித்து திருத்தி எழுதிய போது இல்லை, திடீரென ஞானோதயம் வந்துவிட்டதோ என்னமோ....
2. OPML பகிர்வு
OPML என்பது ஒரு திரட்டியின் சொத்து, ஏன் அதை சொத்து என சொல்கிறேன் என்றால் அது ஒரு திரட்டியின் டேட்டா, எத்தனை பேர் அந்த திரட்டியில் இணைந்துள்ளார்கள் என்பதுவே அது தான், தமிழ்மணத்தின் பலம் அதில் இணைந்துள்ள 2400+ பதிவர்கள், அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது, மீண்டும் சொல்கிறேன் அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது... அது தான் தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு OPML ஆக வெளியிட்டால் அந்த பிரச்சினையில்லை அதனால் தான் ரவிசங்கர் OPML ஆக வெளியிட சொல்கிறார், தமிழ்மணம் OPML வெளியிடும் உதாரணத்திற்கு ரவிசங்கரே ஒரு திரட்டியை உருவாக்குகிறார் என வைத்துக்கொள்ளுங்களேன் தமிழ்மணம் மூன்றாண்டுகளுக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்திருக்கும் அவர்களின் சொத்தை நோகாமல் நோன்பு கும்பிட ரவிசங்கர் உருவாக்குகிற(ஒரு உதாரணத்திற்கு மட்டுமே ரவிசங்கர் பெயரை பயன்படுத்தியுள்ளேன்) புது திரட்டியில் உபயோகப்படுத்தி கொள்ளலாம் பாருங்கள். மீண்டும் சொல்கிறேன் OPML வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அந்த வேண்டுகோளை புறந்தள்ள தமிழ்மணத்திற்கோ மற்ற திரட்டிகளுக்கோ உரிமை உண்டு.
OPML பகிர்வில் மேலும் சில சிக்கல்கள் உண்டு, ஒரு வலைப்பதிவர் ஒரு திரட்டியில் இணைகிறார் அந்த திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு இணங்க தம் பதிவை திரட்டியில் சேர்க்கிறார், அதை OPML ஆக வெளியிடும் உரிமை அந்த திரட்டிக்கு உண்டு, OPML பயன் படுத்தி இன்னொரு திரட்டியில் அந்த பதிவர் அவருக்கு தெரியாமலேயே இணைக்கப்படுகிறார், இப்போது புதிதாக வந்த திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு அவர் கட்டுப்பட்டவரா?
தமிழ்மணம் தங்களின் Terms And Conditions ல் பதிவுகளின் உள்ளடக்கம் எப்படி தமிழ்மணத்தால் பயன்படுத்தப்படுவதை வெறும் preview என்ற அளவில் மட்டுமே வைத்திருக்கிறது இதற்கு இணங்கி தமிழ்மணத்தில் ஒரு பதிவர் சேர்கிறார், தமிழ்மணத்தின் OPML மூலமாக அதே பதிவர் இன்னொரு திரட்டியில் இணைக்கப்படும் போது அந்த திரட்டியில் வலைப்பதிவு எழுத்துகள் காப்பிரைட் பிரச்சினையில்லாமல் மறுபதிப்பு, லைசன்ஸ் ஃப்ரீ என்றெல்லாம் இருந்தால் அந்த பதிவர் நிலை என்ன? அவராக சென்று அந்த திரட்டியில் இணைக்கவில்லை, இப்போது அந்த புது திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு இவர் கட்டுப்பட்டவரா?
அதற்கு கட்டுப்படாமல் அவர் இருக்க விரும்புகிறார் எனில் அவர் புது திரட்டிக்கு தெரிவிக்க வேண்டும், ஆனால் அவர் அந்த திரட்டியில் இருப்பதே அவருக்கு தெரியாதென்றால் என்ன செய்யலாம்? கிரெடிட்
கார்டு வழங்குபவர்கள் வழக்கமாக ஒரு வித்தையை செய்வார்கள், நாங்கள் மாதம் 20 ரூபாய் இந்த இன்சூரன்ஸ்க்காக, அந்த இன்சூரன்ஸ்க்காக பிடித்துக்கொள்வோம் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் லெட்டர் போடுங்கோ, போன் செய்யுங்கோன்னு, இதென்னடா கூத்து எனக்கு அதில் விருப்பமில்லையென்றால் நான் சொல்ல வேண்டுமாம், விருப்பம் இருப்பவனை மட்டும் சேர்த்துக்கொள், லெட்டர் போட்டு எவனுக்கு விருப்பமிருக்கோ அவன் பணத்தை மட்டும் எடுத்துக்கோ, அதே கதைதான் இங்கேயும் இதே மாதிரியான ஒரு காமெடியை ரவிசங்கரும் செய்துள்ளார், அவர் tamil-blogs-open-opml திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்
"ஒரு வேளை, சில பதிவர்களுக்கு இப்படி இந்த OPMLல் இடம்பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இந்தக் கணக்கு பொதுவில் இருப்பதால் வேண்டாதவர்கள் தாமாகவே நுழைந்து பெயர்களை நீக்கிக் கொள்ளலாம். ஒரு வரி padhivu@gmail.comக்கு எழுதிப் போட்டால் நாம் அவற்றைப் பொது வெளியீடுகளின் போது கவனம் எடுத்து நீக்கலாம்."
இவுங்க சேர்த்துப்பாங்களாம், வேணாமுன்னா நாம போய் எனக்கு விருப்பமில்லைன்னு எழுதி போடணுமாம்.... சேர்க்கும் முன் அனுமதி பெற்று சேர்ப்பதே சரியானது, அதைத்தான் திரட்டிகள் செய்து வருகின்றன.
ஒரு வலைப்பதிவருக்கு ஒரு திரட்டியில் சேர்திருப்பார், இன்னொரு திரட்டியின் அரசியல் பிடிக்காமல் அதில் சேர விரும்பாமல் இருக்கலாம், மற்றொரு திரட்டியை நடத்துபவரை பிடிக்காமல் அதில் சேராமல் இருக்கலாம், ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் இதெல்லாம் பதிவரின் சுதந்திரம், அதில் தலையிட யார் கொடுத்தது அதிகாரம்? இதை சொன்னால் உடனே தமிழ்மணம் தேன்கூட்டிற்கு OPML கொடுத்ததே என்றால் தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளிலேயே இருக்கின்றது அவர்கள் விரும்பினால தரலாமென, அதை ஒத்துக்கொண்டு தான் தமிழ்மணத்திலேயே சேர்கின்றார்கள் என்னும் போது தப்பில்லை.
கடைசியாக ரவிசங்கர் அவர்கள் பொறுப்பு துறப்பு என்று எழுதியிருக்கும் விசயமென்னவென்றால் பொறுப்புத் துறப்பு:
"இது திட்டமிட்டு தணிக்கை செய்ய முற்படாத ஒரு பட்டியல். எனவே இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பதிவுகள், தளங்கள் தரும் உள்ளடக்கம் தரமானதாகவும் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று உறுதி அளிக்க இயலாது. இப்படியலில் தங்களுக்கு ஒவ்வாத தளங்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியது பயனரின் பொறுப்பாகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்."
இவர் துறந்த பொறுப்பை தான் திரட்டிகள் தானாக முன்னமேயே செய்துவருகின்றன.... ரவிசங்கர் எப்படி மூக்கைத்தொடுவார் நேரடியாகவா? அல்லது காதை சுற்றியா என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது.
கட்டற்ற சுதந்திரம் என்ற காரணத்தை சொல்லி 'தமிழ்' திரட்டிகளை துறக்க சொல்லும் ரவிசங்கருக்கு ப்லாக்கர், டெக்னோரைட்டில் ஆரம்பித்து எதிலுமே கட்டற்ற சுதந்திரம் கிடையாது என்பதே ஆபாச போலி பதிவுகளையும் புரொபைல்களையும் குத்தோ குத்தென்று குத்தி மூட வைத்த விசயத்தினால் தெரிந்திருக்கும்
குட்டிப்பையன் தூங்கி எழுந்து சத்தம் கொடுத்துக்கொண்டே என் லாப்டாப்பை தட்ட வந்தான், இனி அவனை பார்க்கவில்லையென்றால் ரகளை தான் மிச்சத்தை அடுத்து எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது....