தங்கர்பச்சானும் உள்குத்து அரசியலும்
முன்குறிப்பு
இங்கே தங்கர்பச்சான் பேசியது சரியா? தவறா? என்ற கோணத்தில் இந்த பதிவு எழுதப்படவில்லை, ஆனால் தங்கர் பச்சானின் பேச்சுக்கு புரியப்பட்ட அதிக பட்ச எதிர்வினையில் உள்ள உள்குத்து அரசியல் தொடர்பானது
தங்கர்பச்சானின் பேச்சிற்கு அளவுக்கு மீறிய எதிர்ப்பு நடிகர்களாலும் நடிகைகளாலும் காட்டப்படதற்கு உள்ளே சில அரசியல் காரணங்கள்.
1. தங்கர் பச்சான் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர், திருமாவின், இராமதாசுவின் நடிகர்களின் மீதான விமர்சனங்களை தாங்கமுடியாமல் இந்த அரசியல் பாறைகளின் மீது மோதி ரஜினி போன்ற தலைகளுக்கே மண்டை உடைந்தது தான் மிச்சமானது , நடிகர்கள் அங்கே பட்ட காயம், ஈகோவிற்கு வசமாக மாட்டினார் தங்கர், யாரிடமோ பட்ட காயத்திற்கான ஈகோவை இவரை போட்டு தாக்குவதினால் தீர்த்துக்கொள்கின்றனர்.
2.இயக்குனர் சீமானும் கவிஞர் அறிவுமதியும், இயக்குனர் சேரனும் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர்கள், இவர்கள் அத்தனை பேருமே நடிகர்களுக்கு முதுகு சொறிந்து விட்டுக்கொண்டு திரையுலகில் பிழைப்பை ஓட்டுபவர்கள் அல்ல, திறமைசாலிகள் அதே சமயம் முதுகெலும்பு உள்ளவர்கள் எந்த நடிகனுக்கும் முதுகு சொறிந்து கொண்டும் கூஜா தூக்கியும் கலைவாழ்க்கையை நடத்துபவர்கள் அதே சமயம் அதிரடியாக பேசுபவர்கள், அடிக்கடி நடிகர்களின் உண்மையான முகத்தை கிழித்து காட்டியவர்கள், எனவே தங்கரை தட்டுவதன் மூலம் இவர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
3. சமீபத்தில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மாத்திரை தின்றதற்கு கமல்,விஜயகாந்த் மேலெல்லாம் கைகாட்டப்பட்டு பின் உடல் நலம் தேறி வந்தவுடன் என்ன நடந்தது என சொல்கிறேன் என புறப்பட்ட காஜா மொய்தீன் மடக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் வைத்து படம் எடுத்த அஜீத்தை பலிகடாவாக்கினார், ஆனாலும் இதில் பெருந்தலைகள் கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டனர், அதிலும் கட்சி ஆரம்பித்து தமிழர்களை காப்பாற்றப்போகும் கேப்டன் நிறையவே கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டார்
4.திரைத்துறை என்றாலே நடிகர்கள் என்றிருந்த நடிகர்களின் ஆதிக்கத்தை உடைத்தெரிந்து தயாரிப்பாளர்களின் கை ஓங்க ஆரம்பித்தது சமீப காலங்களில், தாணு விடயத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டதும், மாதவன் மன்னிப்பு கேட்டதும், ஜோதிகாவிலிருந்து பலருக்கும் ரெட் கார்டு போடப்பட்டதுமென தயாரிப்பாளர்களின் கை ஓங்கியது, அதிலும் கடைசியாக விஜயகாந்த்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு 3 நாள் கெடுவும் வைக்கப்பட்டது, தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்தை எதிர்த்து பத்திரிக்கையில் பேச இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேட்டி கொடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும் தங்கர் மாட்டினார், தயாரிப்பாளர்களுக்கு திரைத்துறை என்றாலே நடிகர்களின் ஆதிக்கம் மட்டுமே என்று காண்பிக்கவும் நடிகர்களின் வண்டவாளங்களை வெளியில் சொன்னால் என்ன ஆகும் என தயாரிப்பாளர்களை மிரட்டவும் தங்கர் பயன்பட்டார்.
5.திறமை இருக்கும் அதே சமயத்தில் வாயும் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் பயப்படாமல் முதுகு சொறிந்துவிடாமல் வெற்றிகளை கண்டிருக்கும் மனிதர்களின் மீது பொறாமை ஏற்படுவது இயல்பு, அதுவும் திரைத்துறையில் நடிகர்களுக்கு முதுகு சொறியாமல் எந்த பின்புலங்களும் இல்லாமல் ஒரு திறமைசாலி வெற்றி பெற்றால் அது கடும் பொறாமை தீயை ஏற்றிவிடும், அப்படி பட்ட இயக்குனர் தான் தங்கர், அவர் வாய்கொழுப்பு அவர் மீதிருந்த வன்மத்தை காட்ட சரியான தருணமாக அமைந்துவிட்டது.
6."நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்"
இது தங்கருக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கை, படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகர்கள் அவர்களை யாரும் விமர்சித்தால் வேலை நிறுத்தம் தானாம்! நடிகர்/நடிகைகளுக்கு வேலை நிறுத்தத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் திரைத்துறையை நம்பியிருக்கும் குடும்பங்கள்?!
7.தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனர்.
ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் ஏழு மாங்காய்கள் அடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாங்காய்கள் என்பது போகப்போகத் தெரியும்
எச்சரிக்கை அல்லது வேண்டுகோள்
இங்கே பதிவில் வந்து எவனாவது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினால் நானும் தமிழன் தான் எனக்கும் தமிழில் உள்ள அத்தனை தரக்குறைவான வார்த்தைகளும் தெரியும் நாய் மனிதனை கடிப்பது அதன் இயல்பு என்று சொல்லி அந்த தரக்குறைவு பேர்வழிகளை நாய்களோடு ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்த விரும்பவில்லை, தரக்குறைவு பின்னூட்டங்கள் அழிக்கப்படும், அதுவும் ஒரு அளவு வரை தான்.