வாரிசு அரசியலுக்கு ஜே!
கொஞ்சம் வழக்கமான முத்திரைகளை ஒதுக்கிவிட்டு இதை பார்ப்போம், செப்டம்பர் 7, 2005 அன்று வெளியான இந்தியாடுடே பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை வாரிசுகளுக்கு ஜே! அதில் சில புள்ளிவிவரங்கள், கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தன.
வாரிசு அரசியல் என்பது மன்னராட்சி மனோபாவத்தின் எச்சம், ஆனால் இது உலகளவில் நடைபெறுகின்றது, தமிழகத்தில் இது தலைதூக்கியது 1990க்கு பிறகு, இதில் ஸ்டாலின் அரசியல் பிரவேசம், வாரிசு அரசியல் என இந்தியா டுடே கணக்கிலெடுக்கவில்லை,அது ஸ்டாலினின் வளர்ச்சியை 30 ஆண்டுகால அரசியல் களப்பணிக்கான வளர்ச்சியாகத் தான் அடையாளம் காண்கின்றது.
மு.க.ஸ்டாலின் மீது வாரிசு அரசியல் என்ற ஆயுதம் பிரயோகிக்கப்படுவது திமுகவை தாக்குவதற்காண பலவீனமானப்புள்ளி என்கிறது இந்தியாடுடே.
சில சமயங்களுக்கு முன் வாரிசு அரசியல் பற்றி நான் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தின் முக்கிய காரணம் கட்சி உடையாமல் காப்பாற்ற வேண்டுமென்பது. இதே கருத்தை இந்தியா டுடேவும் கட்சி என்ற தேனீக் கூட்டத்தை பணபலத்தாலும் கலைக்கும் முயற்சிகள் அரசியல் ராஜதந்திரமாக உருவானது 90களில்தான், காங்கிரசின் எம்.எல்.ஏ. ஒருவர் கூட்டணியில் இல்லாத அதிமுக வை பாராட்டி பேசுவார், அல்லது கட்சியின் உத்தரவை மீறி எதிரிக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார், அதுவரை ஒரு கட்சிக்கு சொந்தமாக இருந்த எம்.எல்.ஏ. திடீரென வெளிப்படையாக இன்னொரு கட்சி ஆள்போல் செயல்படுவார். இதெல்லாம் கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகிய காலகட்டம் இது. இப்படிபட்ட நிலையில் "கட்சி கையைவிட்டு நழுவாமல் இருப்பதற்கான சூட்சமமாக வாரிசு அரசியல் உருவெடுத்தது" என்று குறிப்பிடுகின்றது.
இன்னும் பல காரணங்களை இந்தியாடுடே வாரிசு அரசியல்களுக்கு காரணமாக இயம்புகின்றது, வாரிசு அரசியல் பற்றிய மக்களின் கணிப்பு என்ன என்பதையும் இந்தியாடுடே புள்ளிவிவரமாக வெளியிட்டுள்ளது.
தமிழக அளவில் வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்பவர்கள் 48%, இது ஒரு மிகப்பெரிய சதவீதம், பொதுவாக வாரிசு அரசியல் தவறானது என்ற கண்ணோட்டமிருப்பதாக கூறப்படும் நேரத்தில் 48% மக்கள் வாரிசு அரசியலை ஏற்பதாக கூறுவது சில கண்ணோட்டங்களை உடைத்தெறிகின்றது.
ஆனால் இந்திய அளவில் வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் 63%, தமிழக அளவில் 48% வாரிசு அரசியலை ஏற்பவர்கள் தேசிய அளவில் 37% தான் ஆதரிக்கின்றனர்.
இது புலப்படுத்துவது ஒன்றுதான் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியில் அல்லது அவர்கள் ஆதரிக்கும் கட்சிகளில் வாரிசுகளின் அரசியல் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல, அவர்கள் கட்சியை வெறுக்கவேண்டும் என்பதற்கு வாரிசு அரசியல் என்பது ஒரு பலவீனமான காரணமாக மட்டுமே இருக்கும், அதாவது வாரிசு அரசியல் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவரவர்கள் நம்பும் கட்சியை வெறுக்க யாரும் தயாராக இல்லை. வாரிசு அரசியல் என்ற காரணத்திற்காக அவர்கள் அனுதாபியாக இருக்கும் கட்சி சிதறுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.
தமிழக அளவில் 48% வாரிசு அரசியலை ஆதரிப்பவர்கள் இந்திய அளவில் 37% தான் ஆதரிக்கின்றனர், அதாவது அவர்களுக்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வாரிசு அரசியல் பிரச்சினை அல்ல, ஆனால் மற்ற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க கூடாது என்று கருதுகின்றனர், இதன் வெளிப்பாடுதான் தேசிய அளவில் வாரிசு அரசியலை ஆதரிப்பது குறைவாக உள்ளது.அதாவது ஸ்டாலினோ,அன்புமணியோ, வாசனோ அரசியல் வாரிசாக இருப்பது பிரச்சினையில்லை ஆனால் ராகுலோ,பிரியங்காவோ அல்லது தேசிய அளவில் மற்ற வாரிசுகளோ அரசியலுக்கு வருவதை பிரச்சினையாக கூறுகின்றனர்(?!).
இன்றும் வாரிசு அரசியலை ஊக்குவிக்காத கட்சிகளாக மதிமுகவும் கம்யூனிஸ்ட்களும் இயங்குகின்றனர் (பாஜகவையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இதில் சேர்த்துக்கொள்ளலாம்)
இன்று வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் ஒன்று எந்த கட்சி வட்டத்திலும் சிக்காதவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்கள் அனுதாபியாக இருக்கும் கட்சியில் தற்போதைய நிலையில் வாரிசு அரசியல் இல்லாத நிலையிருக்கும் ஆனால் நாளை இதே கட்சியில் வாரிசு அரசியல் இருக்குமானால் அதை எதிர்ப்பவர்கள் மிகச்சிலராகவே இருப்பர், இன்று வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் நாளை அந்த நிலையில் அந்த வாரிசு அரசியலை ஆதரிப்பார்கள்.
தனி மனித வழிபாடு இருக்கும் வரை இந்த நிலை மாறுவது மிகக்கடினம்.
மன்னராட்சி மனோபாவத்திற்கும் வாரிசு அரசியலுக்கும் முக்கிய காரணம் கொள்கையின் மீதான பிடிப்பைவிட தலைவனின் மீதான பிடிப்பு தான் காரணம், இதற்கு படித்தவர்கள்,படிக்காதவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை, இதற்கு பெரும்பாலானோர் விதிவிலக்குமல்ல.
சிங்கை எழுத்தாளர் 'தேடி' கோவிந்தசாமி அவர்களின் சிறுகதையில் குறிப்பிட்டதைப்போல தலைவனுக்காக கொள்கை என்பதை கைவிட்டு கொள்கைக்காக தலைவன் என்ற நிலை வரும்போது தான்(நானும் விதிவிலக்கல்ல) இந்த மன்னராட்சி மனோபாவமும் வாரிசு அரசியலும் முடிவுக்கு வரும் ஆனால் இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியிலும் இந்த நிலை இல்லை, அதற்கு நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் போலுள்ளது. அது வரை தான் அனுதாபியாக இருக்கும் கட்சியில் வாரிசு அரசியல் வரும்வரை வாரிசு அரசியலை எதிர்த்துக் கொண்டிருப்பது தான் தொடரும்.
2 பின்னூட்டங்கள்:
குழலி அவர்களே!
>> இதில் ஸ்டாலின் அரசியல் பிரவேசம், வாரிசு அரசியல் என இந்தியா டுடே கணக்கிலெடுக்கவில்லை,அது ஸ்டாலினின் வளர்ச்சியை 30 ஆண்டுகால அரசியல் களப்பணிக்கான வளர்ச்சியாகத் தான் அடையாளம் காண்கின்றது. >>
இது சரியான பார்வையே.
இந்தியாவின் வேறெந்த இயக்கத்திலும் 30 ஆண்டுகள் களப்பணியாற்றிய 'வாரிசுகள்' இருந்ததில்லை (இந்திரா காந்தி உட்பட)
பரிதி இளம்வழுதி, பொன்முடி, ஸ்டாலின் ஆகிய மூவரணி திமுகவின் எதிர்கால அரசியல் பயணத்தைத் தீர்மானிக்கப் போகின்றன என்பதில் அய்யமில்லை.
தேர்தல் வாக்கு, கிடைத்த வெற்றிகள் என்பதைப் பற்றிய அதீதமான கவலைகள் இல்லாமல் - ஒருங்கிணைத்தல், செயலாற்றல், தலைமையேற்று வழி நடத்துதல் - ஆகிய இன்றியமையாப் பணிகளை இம்மூவரணி கையாள்வதில்தான் திமுக-வின் எதிர்வருங்காலம் உள்ளது.
இப்போதைக்கு எழுஞாயிறுதான்! :)
//*ஸ்டாலின் அரசியல் பிரவேசம், வாரிசு அரசியல் என இந்தியா டுடே கணக்கிலெடுக்கவில்லை*//
நானும் இதை ஆமோதிக்கிறேன். கட்சி பணியில் தன் 30 வருடங்களை சமர்பித்திருக்கிறார். அவர் அரியனை ஏறினாலும் தவறில்லை என்பது என் கருத்து!
//* தலைவனுக்காக கொள்கை என்பதை கைவிட்டு கொள்கைக்காக தலைவன் என்ற நிலை வரும்போது தான்(நானும் விதிவிலக்கல்ல) இந்த மன்னராட்சி மனோபாவமும் வாரிசு அரசியலும் முடிவுக்கு வரும் *//
இதைத்தான் நானும் வழிமொழிய ஆசைப்பட்டேன்! நானும் விதிவிலக்கல்ல என்று சொல்லி தவறை உணர்ந்தாலும் தடுமாறி நிர்க்கும் உங்கள் உள்ளுணர்வு என்னால் புரிந்து கொள்ள முடிகிறது ;)
நன்றி குழலி.
Post a Comment