ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்
குஷ்புவின் பேட்டியும், அதைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் நடந்த விவாதங்களும் பிரச்சினைகளின்/கருத்துகளின் பல பரிமாணங்களை காண்பித்தன, பெரும்பாலும் நாகரீகமாகவும், சில இடங்களில் அநாகரீகமாகவும் நடந்தேறின, அநாகரீகங்கள் கண்டிக்க வேண்டியவை, முழுமையாக நீக்கப்படவேண்டியவை.
தங்கரை முழுமையாக எதிர்ப்பதும் குஷ்புவை முழுமையாக ஆதரிப்பதுமே ஆணாதிக்கத்தையும் பெண்ணியத்தையும் அளக்கும் அளவுகோலாக வைத்து இங்கே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் எனக்கு தோன்றிய/ நான் இதற்கு முன் கேட்ட, மற்ற சிலரின் கருத்துகளையும் விடயத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன், முழுவதும் படிக்காமல் இரண்டு வரிகளை படித்துவிட்டு பின்னூட்டமிடுவதும் திரித்து பின்னூட்டமிடுவதையும்,பதிவிடுவதற்கும் விளக்கம் சொல்லி துடித்த காலங்கள் கடந்து அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து பல நாட்களாகிவிட்டன.... எல்லா கேள்விளோடும் என்னை பொறுத்தி பார்க்க வேண்டாம், கேள்வி கேட்பதாலேயே இதை நான் ஆதரிக்கிறேன் என்றோ எதிர்க்கிறேன் என்றோ இல்லை.
1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?
2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)
3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?
4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?
5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?
6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?
7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?
8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?
9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?
10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)
11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?
12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?
13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?
14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?
15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?
16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?
17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?
18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?
19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?
20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?
21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?
22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்
23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.
இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு
'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்
'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது
'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.
24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?
25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?
26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?
28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?
29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?
30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?
31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?
32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா?
கடுமையான முகத்தில் அறைய கூடிய சில கேள்விகள் இன்னும் உள்ளன ஆனால் தற்போது அதை பகிர்ந்துகொள்ளும் நிலை இல்லையென்பதால் பிறிதொரு சமயத்தில் அதை பார்ப்போம்.
மேலே உள்ள கேள்விகளில் எத்தனை 'ஆம்' சொல்லியிருக்கின்றோம், மேற்சொன்ன விடயங்களில் ஆணாதிக்கத்தை அழிக்க அரசியல் தலைவனோ, திரைப்பட நடிகனோ அவ்வளவு ஏன் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட தேவையில்லை, நீங்கள் ஒருவரே போதும். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் கூடவே இருக்கும் சக மனுஷிகளின் பிரச்சினைகளை கவனிப்போம், அதற்காக விளிம்பு நிலை மனிதர்களையும், மற்ற கருத்துகளையும் பேசவே கூடாது என்பதில்லை ஆணாதிக்கத்தையும், பெண்ணியத்தையும் பற்றி ஒவ்வொருமுறை பேசும் போதும் பின்னூட்டமிடும்போதும் பதிவிடும்போதும் மேலே கேட்ட கேள்விகளில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு இல்லை என்ற பதிலையாவது ஆம் என மாற்றிவிட்டு பேசலாம்.
மற்ற சித்தாந்தங்களில் கொள்கைவிடயத்தில் ஆதரிப்பதற்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது, உதாரணமாக கம்யூனிச கொள்கையை இந்தியாவில் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சமூகம், தன் வாழ்வு, தன் குடும்பத்தின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்படப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் கடைபிடிக்கலாம் யாரையும் பாதிக்காமலே...
குஷ்புவின் பேட்டியை ஆதரிக்கும்(இதை தவறு சொல்லவில்லை நான்) அதே நேரத்தில் அரசுவின் http://arrasu.blogspot.com/2005/09/blog-post_26.html இந்த பதிவில் வீக் என்ட் பார்ட்டியைப் பற்றி கவலைப்பட்டு 'வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன், ஒரு தாய்' எழுதியுள்ளாரே இது தான் நிதர்சனமான உண்மை நிலை இதற்கு மேலும் விளக்கமாக சொல்லத் தேவையில்லை என கருதுகின்றேன்.
இந்த பதிவை பிரதியெடுத்து உண்மையான/ மனசுக்கு நேர்மையான பதிலை எழுதுங்கள் பாஸா/பெயிலா என உங்கள் மனசுக்கு தெரியும், பின்னூட்டத்தில் எழுத வேண்டியதில்லை.
இதோ முதல் ஆளாக நான் இந்த பதிவை அச்செடுத்து பதிலளிக்கப் போகின்றேன், பார்ப்போம் பாசாகின்றேனா/பெயிலாகின்றேனா என்று
கற்பு அது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்தததா? இருக்கா இல்லையா என்று பேசும் நிலையில் தற்போது நான் இல்லை, இந்த சச்சரவுகள் அடங்கி பிறிதொரு நாளில் ஒரு நல்ல சூழ்நிலையில் திறந்த மனதோடு பேசலாம் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.