அப்சல், தீவிரவாதம், மாறி வரும் போர் முறை


இவைகள் மாற்றுப்பார்வையே, இந்த மாற்றுப்பார்வையே முற்றிலும் சரியானது என்று தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக இருப்பதைவிட இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியமிருப்பதாக கருதியதாலேயே இந்த பதிவு.
இந்திய நாடாளுமன்றத்தை தாக்கியதற்கு உதவிய அப்சலை தூக்கில்
போடுமாறும் அது நியாயமனதுமே என்று இங்கே பலரும் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் மேலே உள்ளபடங்களில் இருப்பவர்கள் அப்சலின் தூக்கை எதிர்த்து ஆர்பாட்டம் செய்கின்றனர், அவர்களும் இந்தியர்கள் என்று தானே சொல்லப்படுகிறார்கள், தாக்கப்பட்ட பாராளுமன்றம் அவர்களுக்கும் உரிமையானது தானே பிறகேன் அவர்கள் அப்சலின் தூக்கை எதிர்க்கின்றார்கள், தெருவில் இறங்குகின்றனர், இங்கே பலருக்கும் உள்ள அந்த உணர்ச்சி அவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? எது அவர்களை தெருவில் இறங்க வைத்துள்ளது?

மேலே படத்தில் இருப்பவர் யார் தெரிகின்றதா? இவர் பெயர் சப்ரஜித் சிங், இவர் 1989ல் பாக்கிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளுக்கு தொடர்புடையவர் என்று பாக்கிஸ்தானில் வழக்கு நடந்து தூக்கு தண்டனையை எதிர் நோக்கியிருப்பவர், இவருக்காக இந்தியாவும், இந்திய தூதரும் அவரது தூக்கு தண்டனையை ரத்து செய்ய பாக்கிஸ்தானிடம் கோரிக்கை விடுத்தது, பாக்கிஸ்தான் அதிபர் முஷாரப் அவர் "ரா"வை சேர்ந்தவர் என்றும் அவருக்கு குண்டுவெடிப்புகளோடு தொடர்புள்ளது என பாக்கிஸ்தான் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிவிட்டார். இவர் ஆடுமேய்க்கும்போது தவறுதலாக சென்றவர் என்றது இந்திய தரப்பு, ஆனாலும் இந்திய மக்களும், அரசாங்கமும் அவரது தூக்கை தடைசெய்ய எல்லாவிதமான முயற்சிகளும் மேற்கொண்டது.
இன்று வடகொரியாவின் அணு ஆயுத சோதனையை எதிர்க்கும் இந்தியாவில் புத்தர் சிரித்த அணுஆயுத சோதனையும் நடந்தது.
இவையெல்லாம் சொல்ல காரணம் சரிகளும் தவறுகளும், ஆளுக்கு ஆள் மாறுபடுகின்றது, செய்பவர்களை பொறுத்து மாறுகின்றது, செய்தது யார், பார்ப்பவர் யார் என்பதை பொறுத்து மாறுகின்றது.
"சிக்காடிலோ" என்ற தொடர்கொலைகாரன் செய்த கொலைகளுக்கு க்ராவ்சென்கோ என்பவரின் மீது குற்றம் சாட்டி தூக்கிலிட்டு பின் அதை செய்தது சிக்காடிலோ என்று அறியவந்த போது செய்த தவறை திருத்திகொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது, கிலானியில் ஆரம்பித்து விஞ்ஞானி நம்பிநாராயணன் ஜோடிக்கப்பட்ட வழக்கு வரை பலவற்றிலும் ஒரு வேளை தூக்களிக்கப்பட்டிருந்தால் தவறுகள் திருத்திக்கொள்ளப்பட வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம்.
"ஒரு நாள் காலை சி.ஐ.டி. போலீஸ் சூபரிடென்ட் மிஸ்டர் நியூமேன் என்னிடம் வந்தார், நாங்கள் சொல்கின்ற மாதிரி வாக்கு மூலம் தராவிட்டால் காகோரி வழக்கில் என்னை சேர்த்து தசராவில் குண்டு வழக்கில் சிக்கவைக்கப் போவதாக மிரட்டினார். போதுமான சாட்சியத்துடன் தூக்கில் போடுவேன் என்றார், அப்போது எனக்கு விபரம் அதிகம் தெரியாதென்றாலும் கூட போலீஸ் நினைத்தால் எதையும் செய்ய முடியுமென கருதினேன்" - இதை சொன்னவர் பகத்சிங்( நூல் - நான் ஏன் நாத்திகன் ஆனேன்?)
பொதுவாக யாரையுமே தூக்கில் போடக்கூடாது என்ற கருத்தாக்கத்தை வலியுறுத்துபவர்கள், தவறுதலாக தூக்கிலிடப்படுதல், சோடிக்கப்பட்ட வழக்கு, அப்சல் நாடாளுமன்ற தாக்குதலில் அவருடைய தொடர்பென்ன இப்படியெல்லாம் பலரும் பேசுவதால் இதை தொடாமல் நேரடியாக அடுத்த நிலைக்கு சென்றேன், சரியும் தவறும் செய்பவர்களை பொறுத்தும் பார்ப்பவர்களை பொறுத்தும் அமையும் என்பதை வலியுறுத்தவே அப்படியான ஒரு பதிவு.
வெகுசன ஊடகங்களைப்போலவே வலைப்பதிவுகளிலும் பல இடங்களில் இந்திய தேச பக்தி பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் எத்தனை தூரம் இந்திய தேசியம் நசுக்கும் தேசிய இனங்கள் பற்றி பேச இயலும் என தெரியவில்லை, வடகிழக்கு மாநிலங்களில் நேற்றுதான் இராணுவ சட்டம் திரும்பபெறப்பட்டுள்ளது, சப்பையான மூக்கும், இடுங்கிய கண்களும் உள்ள மங்கோலிய இனமான அந்த வடகிழக்கு மாநில மக்கள் எந்த விதத்தில் இந்தியாவுடன் எந்த இயல்பான கலாச்சார, மொழி, மத பண்பாட்டு முறையில் இணைக்கப்பட்டனர் என்ற கேள்விக்கு நம்மால் விடைசொல்வதென்பது கடினமானதே, வெகுசன ஊடகங்களால் மறைக்கப்பட்டிருந்தாலும் அங்கே தனி அரசாங்கமே நடந்து கொண்டிருப்பதும், அங்கே வரிவசூலில் ஆரம்பித்து ஒரு அங்கீகரிக்கப்படாத அரசாங்கமே நடந்து வந்திருக்கின்றது, அந்த பிரதமருடன்(அப்படி அவர்கள் அழைத்துகொள்கின்றனர்) ஜப்பானில் வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பேச்சுவார்த்தைகளை நடத்தினர். ( தமிழ்நாட்டில் இருந்து லாரிகளில் அங்கு போகும் ஆட்களை கேட்டால் வரிவசூல் பற்றி சொல்வார்கள். அவர்களை பாராட்ட அல்ல இந்த தகவல் .யதார்த்தத்தை சொல்லவே)
காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா நிச்சயமாக வெளிப்படையாக நடந்து கொள்ளவில்லை என்பது தெளிவானதே, காஷ்மீர் பிரச்சினை பற்றிய அலசல் தமிழ்சசி அவர்களால் கிட்டத்தட்ட முழுவதுமாக அலசப்பட்டுள்ளது அதன் சுட்டிகள் இங்கே.
சுயநிர்ணயத்தில் இருந்து ஜிகாத் வரை
காஷ்மீரின் விடுதலை
காஷ்மீர் பிரச்சினை என்றாலே அதை உடனடியாக இசுலாமிய அடிப்படை பயங்கரவாத செயல்களோடு இணைத்து காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசுபவர்கள் இசுலாமிய அடிப்படை வாதிகளுக்கு ஆதரவு தருவது போன்ற அய்யோக்கியத்தனமான பொய் பிரச்சாரத்தை செய்து வரும் இந்திய வெகுசன ஊடகங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் இங்கே வலைப்பதிவிலும் காஷ்மீர் பிரச்சினை பற்றி பேசும்போது இசுலாமிய அடிப்படைவாத அல்கொய்தா அமைப்புகள் செய்த படுகொலைகளின் படத்தை போட்டு பேசுவது காஷ்மீர் பற்றி பேசுபவர்களின் மீது இசுலாமிய அடிப்படைவாத ஆதரவாளர்கள் என்பது போன்ற மாயத்தை ஏற்படுத்த முயல்வது அவர்களின் நேர்மையின்மையையே அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது என கருத வாய்ப்புள்ளது, இந்து மத கவசத்தை அணிந்திருக்கும் என்னை போன்றவர்களுக்கே இப்படியான நிலை என்னும் போது இந்த பிரச்சினையில் இசுலாமிய வலைப்பதிவாளர்கள் எந்த அளவிற்கு பேச இயலும் என்பது சந்தேகமே.
முன்பிருந்த போர்முறைகளில் பெரும்பாலும் கூட்டம் எந்த பக்கம் இருக்கிறதோ அந்த பக்கமே வெற்றி என்ற நிலை இருந்தது, மாறி வரும் போர் உத்திகள், வெடிகுண்டுகள் எல்லாம் இன்று எத்தனை பெரிய நாட்டையும் சிறு குழுக்கள் அந்த நாட்டின் நிம்மதியை இழக்க வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இலங்கை இராணுவத்தின் அளவில் பாதி கூட இல்லாத விடுதலைபுலிகளை இலங்கை அரசு வெற்றி கொள்ள இயலாத நிலை, கார் குண்டுவெடிப்புகள், தற்கொலை குண்டு வெடிப்புகள் என இன்று ஏதேனும் ஒரு முறையில் நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன, பாதிக்கப்படும் இனக்குழுக்கள் அது பயங்கரவாதத்தாலோ, அரச பயங்கரவாதத்தாலோ எதுவானாலும் இன்றைய நிலையில் அந்த இனக்குழுக்கள் அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்களுக்கு பெருமளவில் சேதத்தை உருவாக்க இயலும் என்பதே தற்போது நாம் உலகில் பார்த்துக்கொண்டிருப்பது, அறிவிக்கப்பட்டது தான் போர் என்றில்லை, எல்லாமே போர்தான் இது குழுக்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொறுந்தும், இப்போது போர் முறை மாறிவிட்டதால் சிறிய சிறிய நாடுகள் கூட பெரும் சேதத்தை எதிரிக்கு விளைவிக்கலாம், சில ஆண்டுகளுக்கு முன் பாக்கிஸ்த்தானுடம் போர் அபாயம் ஏற்பட்டு நீங்கியதே, ஏன் இந்தியாவில் போரை ஆரம்பிக்க இயலவில்லை, ஏன் தயங்கினார்கள், அணு ஆயுதப்போரின் அபாயம் வரை சென்றது ஆனால் போர் நடக்கவில்லை, போர் ஆரம்பித்தால் இந்தியாவினால் பாக்கிஸ்தானுக்கு ஏற்படும் அழிவிற்கு கொஞ்சம் கூட குறைவில்லாமல் இங்கேயும் ஏற்படும் அது தான் காரணம், பாக்கிஸ்தானின் அணு ஆயுத பலம் அது மேலும் ஒரு முறை இந்தியாவிடம் போரில் அடிபடுவதிலிருந்து தப்பித்தது...
இயல்பாக எழும் சில கேள்விகளும் விவகாரத்திற்காகவே எழுப்பப்பட்ட சில கேள்விகளையும் பார்க்கலாம்.
உம்ம வீட்டில் யாரேனும் இம்மாதிரி நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்டால் இப்படியான மாற்றுபார்வை பற்றி பேச இயலுமா என்ற கேள்வி எழும் போது நேர்மையான பதில் "இப்படியாக பேச முடியாது" என்பதுவே, உம்ம வீட்டில் அரச பயங்கரவாதம் நடந்திருந்தால் அப்போதும் தேசபக்தி பெருக்கெடுத்து ஓடுமா என்ற கேள்வியும் எழுவது நியாயமானதாகவே இருக்கலாம், பயங்கரவாதமோ, அரச பயங்கரவாதமோ நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தான் அதன் எதிர்வினைகள் ஆற்ற வேண்டும் மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள் என்பதற்கு எந்த காலத்திலும் ஆதாரமில்லை, 12வயதில் நேரடியாக பாதிக்கப்படாத ஆனால் ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை பார்த்த பகத்சிங்கின் பங்கு சுதந்திரப்போராட்டத்தில் எத்தனை தூரம் இருந்தது என்பது நாம் அறிந்ததே, வலைப்பதிவாளர் ராஜ்வனஜ் கோயமுத்தூர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரடியாக பெரும் பாதிப்பில்லையென்றாலும் வெகுண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தது என நிறைய இருக்கின்றது.
கற்பழிக்காத இராணுவமென்று உலகில் எதுவுமேயில்லை, தீவிரவாதிகளை பிடிக்க போகும்போது அத்துமீறல்கள் நடக்கத்தான் செய்யும், பாருங்கள் காஷ்மீரில் கூட இராணுவம் இப்படி பாதிக்கப்பட்டவர்களை தத்தெடுத்துள்ளது இப்படியான ஒரு பின்னூட்டம் வீசப்பட்டது, எப்படி இப்படி ஒரு சாக்கு நம்மால் சொல்ல முடிகின்றது? அரசாங்க, இராணுவ அத்து மீறல்களுக்கு அந்த அரசை உருவாக்கியவர்களுக்கும், இராணுவத்திற்கு சம்பளம் கொடுக்கும் அந்த நாட்டின் குடிமக்களுக்கும் எந்த பொறுப்பும் இல்லையா? எந்த மக்களை எந்த தேசத்தை எந்த அரசை காப்பதற்காக பயங்கரவாதத்தை எதிர்கொள்பவர்கள் அந்த மக்களின் மீது தம் கோபத்தை காண்பிக்க மாட்டார்களா?
அன்னிய தலையீடு பற்றி பேசும்போது சமீபத்தில் கொல்லப்பட்ட பாக்கிஸ்தானிலிருந்து பலுசிஸ்தானை தனி நாடாக்க கோரிய பழங்குடி தலைவர் புட்கா அவர்களிடம் இந்தியா உங்களுக்கு உதவுவதாக சொல்கிறார்களே என்று எழும்பிய கேள்விக்கு பதிலாக பாக்கிஸ்தானிலிருந்து விடுதலை பெற நாங்கள் எந்த சைத்தானிடமிருந்து வேண்டுமானாலும் உதவி பெறுவோம் என்றார், இந்திய சுதந்திரத்திற்காக ஹிட்லரின் உதவியை நாடிய சென்பகராமன், ஜப்பான் துணையை கொண்டு அமைக்கப்பட்ட நேதாஜியின் இந்திய தேசிய இராணுவம் எல்லாம் நினைவுக்கு வருகின்றது.
காஷ்மீர் மக்கள் தேர்தலில் பங்கெடுக்கின்றார்களே என்பவர்களுக்கு இந்தியா சுதந்திரம் பெறும் முன் நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ், முஸ்லீம் லீக், நீதிக்கட்சி என பல தரப்பட்ட கட்சிகளும் தேர்தலில் பங்கெடுத்ததை நினைவு படுத்த விரும்புகின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன் வரை இந்திய ஊடகங்கள் சொல்வது மட்டுமே நமக்கு செய்தியாக இருந்தன, இன்றைய இணைய உலகில் செய்திகளை தெரிந்து கொள்வதற்கு எந்த கட்டுப்பாடுமில்லை, பாக்கிஸ்தான் செய்தி தாளை கூட இணையத்தில் படிக்கலாம், எல்லா நாட்டு செய்திகளையும் படிக்கலாம், அதை முழுவதுமாக நம்பவேண்டுமென்பதில்லை, குறைந்த பட்சம் என்ன நடக்கிறதென்றாவது தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய நிலையில் எல்லா இனக் குழுக்களுக்கும் அவரவர்களுக்கான நியாயமான உரிமைகளையும் பங்கையும் கொடுத்தால் மட்டுமே நிம்மதியாக நாட்டு மக்கள் உறங்கும் நிலை, அடக்குமுறைக்கு ஆளாகும்,ஒடுக்கப்படும், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் இனக்குழுக்கள் இன்றைய சூழலில் எளிதாக மற்ற மக்களின் நிம்மதியை கெடுக்கும் நிலைப்பாடு உள்ளது.
References:
http://www.hindu.com/2005/09/15/stories/2005091506231200.htm
http://www.paktribune.com/news/index.shtml?116707
வலையுலக அரசியலில் கணக்கு தீர்க்கும் முகமாக ராமதாஸ் சட்டகத்தில் அடைக்க முயன்றவர்களில் ஆரம்பித்து மூடிக்கொண்டிரு என்று கூறியவர்கள் வரை என் மீது தனிமனித தாக்குதல் நடத்தியவர்களுக்கு இந்த பதிவு எழுத ஆரம்பிக்கும் முன் பதில் சொல்ல வேண்டுமென்ற மனநிலை இருந்தது, ஆனால் அது தற்போது இல்லை என்பதால் அந்த தனிமனித தாக்குதல்கலை புறந்தள்ளி செல்கிறேன்.














