நாய் கடித்துவிட்டது!

நாய் கடித்துவிட்டது!



நாய் கடித்துவிட்டது!
கடிபட்ட இடம் பொதுவில்
என்றாலும்
காயங்கள் சில மறைவிடத்திலும்
கடித்ததற்கும் கடிபட்டவனுக்கும்
மட்டுமே தெரியும்
அந்த இடங்கள்

அய்யகோ !
இனி யாரைப் பார்த்தாலும்
சந்தேகப்படத் தோன்றுமோ?

இல்லை இல்லை
இது ஒன்றுதான் இப்படி
என சொல்கிறது மனம்

நம்பிக்கைதான் வாழ்க்கை
நல்லதே நடக்கும்
அமைதி! அமைதி!!

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா?

இட ஒதுக்கீடு தொடர்பாக என் முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இந்த பதிவு.

இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர்.

ஒரு தலைமுறைக்கு 33 ஆண்டுகள், இட ஒதுக்கீடு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது, சரியாக சொல்லப்போனால் முதல் தலைமுறையில் அதன் பலன் தெரியவில்லை, ஏனெனில் தொழிற் கல்விகளுக்கான(professional courses) (உதாரணம் பொறியியல்,மருத்துவம்,சட்டம் மற்ற கல்விகள்) அடிப்படை தகுதிகள் பெறும் அளவிற்கு கூட அந்த கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, மேலும் தொழிற்கல்விகள் படிக்க முனைந்தவர்கல் மிக மிகக்குறைவே, மேலும் அன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி கல்லூரிகள் இருந்தன, மேலும் SSLC, PUC முடித்தவுடன் அரசாங்கம் அளித்த கடைநிலை ஊழியர்கள், எழுத்தர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் என்று தான் அவர்களால் செல்லமுடிந்ததே தவிர பெரும் எண்ணிக்கையில் அவர்களால் முன்னேற முடியவில்லை, ஆதலால் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பெரிய பலன் அடையவில்லை.

இரண்டாம் தலைமுறை, அதாவது எண்பதுகளின் இறுதியில் தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்லூரிகளினுள் அடியெடுத்து வைத்தனர்,
கிட்டத்தட்ட கடந்த பதினைந்து பதினாறு ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு அதன் பலனை தந்து கொண்டிருக்கின்றது, இட ஒதுக்கீட்டை அனுபவித்துள்ள இந்த தலை முறையின் சந்ததிகள் இன்னமும் கல்லூரி நிலையை எட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே... அதற்குள் தலைமுறையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சாரரே இட ஒதுக்கீட்டை பயன் படுத்துகின்றனர் என்பது எத்தனை அப்பட்டமான பொய்.

எழுபதுகளில் தொழில்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் பயனுற்றவர்கள் மிக மிக குறைவே அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கையும் விழுக்காடு அளவில் மிகக்குறைவே என்பது கண்கூடு, இருந்தாலும் இப்படி ஒரு பொய் பிரச்சாரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகின்றது, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் தேவை ஆனால் அதன் தேவை இன்றே என்ற அளவில் இல்லை,

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான பொய் பிரச்சாரம், இட ஒதுக்கீட்டை பயன்படுத்திய/பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முதல் தலைமுறை தான் இப்போது உள்ளது.

தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்று கவலைப்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அதன் காரணத்தால் இட ஒதுக்கீட்டையே நிறுத்த சொல்வது வினோதமான ஒன்று.

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா?

இடஒதுக்கீடு விடயத்தில் அச்சு ஊடகங்கள் பெரும்பாலும் இடஒதுக்கீட்டுற்கு எதிர்ப்பு நிலையையே எடுத்துள்ளன, இதற்கு விகடனும் விலக்கல்ல என்பதை 'குழப்பும் அரசு, கொந்தளிக்கும் மாணவர்கள் - இட ஒதுக்கீடு' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை முழுக்க முழுக்க உயர் சாதி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவும் நாடு முழுவதும் ஒரு விதமான பரபரப்பான அசாதாரண சூழல் இருப்பது போலவுமான தோற்றத்தை தருமாறு கட்டுரை எழுதப்பட்டுள்ளது, இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பாக சில மாணவர்களிடம் பேட்டி எடுத்து எழுதியவர்கள் பிரச்சினையின் இன்னொரு முக்கிய பக்கத்தை இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவானவர்களிடமிருந்து எதையும் பதிவு செய்யவில்லை.

இடஒதுக்கீட்டை எதிர்த்து போராட்டத்தில் குதித்த டெல்லி மாணவர்களுக்கு ஆதரவாக தமிழகம் தவிர்த்த மற்ற மாநில மாணவர்களும் களம் இறங்கியிருக்கின்றனர் என்றும் ஜீனியர் விகடனில் குறிப்பிட்டுள்ளனர். இதை வைத்தே புரிந்து கொள்ளலாம் திராவிட கட்சிகள் தமிழகத்தில் செய்துள்ள சமூகப் புரட்சியை.

கீழே உள்ள படத்தை பெரிதாக்க படத்தின் மேல் சுட்டவும்.



கிட்டத்தட்ட எல்லா இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களும் வைக்கும் அதே கேள்விகளை முன் வைத்துள்ள இந்த மாணவர்களின் கேள்விகளுக்காவது கருத்து தளத்தில் பதிலளிக்கும் விதமாக கூட இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் யாரிடமும் கேட்காமல் இப்படி ஒரு கட்டுரை எழுதியுள்ளது , எல்லா கட்டுரைகளுக்கும் பெட்டி செய்தியாகவேனும் மற்ற கருத்தை வெளியிடும் விகடன் இந்த முறை அது கூட செய்யாதது பத்திரிக்கை தர்மமாக தெரியவில்லை.

திறமை திறமை என கூறும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்

திறமை ஒருவரின் பிறப்பினால் அமைவதாக கருதுகின்றீர்களா? அப்படியெனில் உங்களுக்கு பதில் இங்கே

திறமை ஒருவரின் பிறப்பினால் அமைவதில்லை என்னும் போது சமுதாயத்தில் எண்ணிக்கையில் மிகக்குறைவே உள்ள முற்பட்ட சாதியினர் கல்வி கூடங்களில் பெரும்பாலன இடங்களை பெறும் அளவில் உள்ளது எதனால்? சமுதாயத்தில் எண்ணிக்கையில் மிகஅதிகமாக உள்ள மற்ற சாதியினர் கல்வி கூடங்களில் குறைவான இடங்களை பெறும் அளவில் உள்ளது எதனால்? குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் விகிதாச்சார அளவில் கல்வி இடங்களில்அதிகமாகவும் மிக அதிக எண்ணிக்கையில் உள்ளவர்கள் விகிதாச்சார அளவில் கல்வி இடங்களில் குறைவான இடங்களும் பெறுவது எந்த விகிதாச்சாரத்திற்கும், எந்த கணக்கிற்கும் எந்த விதிக்கும் பொருந்தாமல் உள்ளதே….. இது வித்தியாசமாக தெரியவில்லையா? இதற்கு காரணம் என்ன? மேலும் தகுதி என்பது எதை வைத்து நிர்ணயிக்கப்படுகின்றது, தேர்வுகளில் வாங்கும் மதிப்பெண்கள் தான் திறமை என்றால் அந்த திறமைக்கு காரணம் வெறுமனே அந்த மாணவனின் புத்திசாலித்தனம் மட்டும் காரணமில்லை, அந்த மாணவனுக்கு கிடைக்கும் சூழல், பெரும் பங்காற்றும் இந்த சூழல் பற்றிய என் முந்தைய பதிவு இங்கே, உயர் சாதி மாணவர்களுக்கு மிக எளிதாக கிடைக்கும் அந்த சூழல் மற்றைய மாணவர்களுக்கு கிடைப்பதில்லை(சில விதிவிலக்குகள் தவிர்த்து) எல்லாம் ஒன்றுதான் என்னும் போது ஒரு மாணவனுக்கு கிடைக்கும் சாதக சூழ்நிலை மற்ற மாணவனுக்கு கிடக்கவில்லை என்னும் போது அது சமூக அநீதி அல்லவா? சாதகமற்ற சூழலில் 80% மதிப்பெண்கள் வாங்குபவன் ஒருவனுக்கு சாதக சூழ்நிலை அமைந்தால் சாதக சூழலில் படிக்கும் ஒரு மாணவன் வாங்கும் மதிப்பெண்களுக்கு இணையாக அதை விட அதிகமாகவே வாங்குவார்கள், அப்போ சாதகமற்ற சூழலில் சற்று குறைவாக மதிப்பெண்கள் வாங்கும் மாணவன் திறமை குறைந்தவனா?.

பொருளாதாரத்திற்கும் இந்த சாதக சூழலுக்கும் சற்றும் தொடர்பில்லை, நல்ல பொருளாதாரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் கூட உருவாக்கி தரமுடியாத சாதக சூழலை ஒரு மத்தியதர வருமானமுடைய உயர்சாதி குடும்பத்தால் உருவாக்கி தரமுடியும், இதற்கு எது காரணம்?

உதாரணத்திற்கு இட ஒதுக்கீட்டில் படித்து இன்று தகவல் தொழில்நுட்பத்துறையில் உலகமெங்கும் சென்று வேலைசெய்து தம் திறமைகள் நிரூபித்துக்கொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறையை பார்த்தாவது இட ஒதுக்கீட்டினால் திறமை பாதிக்கப்படுவதில்லை என்பது புரிந்து கொள்ளப்படுமா?

இட ஒதுக்கீட்டுக்கு மாற்றாக வேறு திட்டங்கள் ஏதும் கொடுக்கப்படாத நிலையில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் முன் வைக்கும் ஒரு தீர்வாக பள்ளி கல்வியை மேம்படுத்துதல், நிச்சயமாக செய்யப்பட வேண்டிய ஒன்று, இன்றைக்கு இதை செய்தாலும் இது பலன் கொடுக்க 12 ஆண்டுகள் ஆகும், மேலும் வெறும் பள்ளி கல்வியையும் தாண்டி குடும்ப சூழல், சமூக சூழல் எல்லாமே காரணிகளாக இருக்கும் இந்த நிலையில் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் சமுதாய சமநிலைக்கு என்ன திட்டத்தை முன்னெடுக்கின்றனர்?

எந்த குழந்தையும் பிறந்த உடன் அது உடனடியாக அரசாங்க காப்பகத்தில் விடப்பட்டவேண்டும் எந்த பெற்றோருக்கு பிறந்தது என்று கூட தெரியாமல் மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கும் அதே உணவு, உடை, உறையுள், சூழல் எல்லாம் அளிக்கப்பட வேண்டும், இப்படி ஒரு சமுதாயம் அமைய வேண்டுமென ஓஷோ ஆசைப்பட்டார், அந்த மாதிரியான சமூகம் அமையும் போது இடஒதுக்கீடு நிச்சயம் தேவைப்படாது.

அச்சு ஊடகங்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உருவாக்க முயலும் நச்சு சூழலை முறியடிக்க வேண்டும், இட ஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் தங்கள் கருத்துகளை எல்லா பத்திரிக்கைகளுக்கும் வாசகர் கடிதம், கட்டுரைகள் என அனுப்பலாம் (தினமலர் உட்பட) .

இட ஒதுக்கீடு தொடர்பான சிலரின் பதிவுகள்

சுந்தர மூர்த்தியின் முதல் தலைமுறையில் படித்து வந்த OBC நண்பர்கள் கவனத்திற்கு

பத்ரியின் இடஒதுக்கீடு

மனசாட்சியின் நான் ஏமாளியா? - பிற்பட்டோர் இடஒதுக்கீடு



இட ஒதுக்கீடு தொடர்பான என்னுடைய பிற பதிவுகள்

சாதிரீதியான இடஒதுக்கீடு தேவையா?
இப்படித்தான் பதில் சொல்லனுமோ?

அய்யோ பாவம் ஜெயா / சன் டிவிகள்

ஆட்சி மாற்றம் தமிழகத்திலே நடந்தேறிவிட்டது, திமுக தனிப்பெரும்பான்மையோடோ அல்லது குறைந்த பட்சம் கம்யூனிஸ்ட்கள் துணையோடு ஆட்சி அமைக்கும் நிலை வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்... ஐந்தாம் முறையாக முதல்வர் பதவியேற்றிருக்கும் கலைஞர் கருணாநிதிக்கு வாழ்த்துகள், தற்போதைய திராவிட பெரிய ராஸ்கல் (நாங்களெல்லாம் திராவிட ராஸ்கல்கள்) பதவியேற்றிருப்பதால் உடனே தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடப்போவதில்லை, இருந்தாலும் குறைந்த பட்சம் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சில உயிர் உரிமை பிரச்சினகள் இருக்காது என்று நம்புவோமாக, ஆதலால் இனி விமர்சிக்க வேண்டியது திமுக கூட்டணி ஆட்சியின் பிரச்சினைகள்.

சரி விடயத்துக்கு வருவோம் இது வரை ஜெயா தொலைக்காட்சியில் தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடியதாகவும், அமைதிப்பூங்காவாகவும் வந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இனி மாறி தமிழகத்தில் வறுமை கோர தாண்டவம் ஆடுவதாகவும் கொலை கொள்ளைகள் நிகழ்ந்து இரத்த பூமியாகவும் கலவர பூமியாகவும் இருப்பது போல நிகழ்ச்சிகள் வர ஆரம்பிக்கும், பாவம் ஜெயா டிவி நிருபர்கள் இனி எல்லோரும் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டும், சன் தொலைக்காட்சியில் அப்படியே மாறி இருக்கும், இனி தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடும், பழைய நினைப்பில் சன் தொலைக்காட்சியில் தமிழக அரசின் அராஜகங்கள்னு கவனக்குறைவா போட்டுடாதிங்கப்பு, கவனமா இருங்கோ....

இப்போது ஜெயா டிவி ஆரம்பிக்க வேண்டியதை அண்ணன் மாயவரத்தார் வலைப்பதிவில் ஆரம்பித்து விட்டார், இது வரை பாலும் தேனும் ஓடி, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்திலே திமுக ஆட்சி ஆரம்பித்த உடனே என்னென்னமோ நடக்குதாம்,அண்ணாத்தே ஜெயா டிவில நிருபர் வேலைக்கு கேட்டு இருக்கிங்களா?

போடுங்கய்யா ஓட்டு

போடுங்கய்யா ஓட்டு பானை சின்னத்தை பார்த்து, நம்ம சின்னம் பானை சின்னம் என்று பானை சின்னத்திற்கு வீட்டிற்கு போவோர் வருவோரிடமெல்லாம் வாக்கு கேட்டு சின்னத்தை கரித்துண்டு, சாக்பீஸ், சுண்ணாம்பு கட்டி என்று எல்லாவற்றாலும் சுவற்றில் எழுதி சுவரொட்டிகளையும் குறிப்பு துண்டுகளை அளித்து.... சரி இதை ஒரு நாள் சாவகாசமாக எழுதலாம் இப்போது நான் செய்த தேர்தல் வேலைகள் முக்கியமல்ல....

இது ஒரு பிரச்சார பதிவு, கண்மூடித்தனமான அதிமுகவின் ஆதரவாளர்களும், கண்மூடித்தனமான திமுகவின் எதிர்ப்பாளர்களும் படிக்காமலேயே ஒரு - குத்திவிட்டு போய்விடலாம், மற்றவர்கள் படித்து பார்த்துவிட்டு முடிவெடுக்கலாம்.

இன்றைய நிலையில் இருக்கும் அரசியல்வாதிகளில் யார் பரவாயில்லை என்று பார்த்து வாக்களிக்கலாம்,

முதலில் நமது தேமுதிக கேப்டன் விஜயகாந்த்
விஜயகாந்த் ஒரு புனித பிம்பம் ஊழலுக்கு, குடும்ப அரசியலுக்கு எதிரானவர் என்ற காரணங்களுக்காக நீங்கள் அவருக்கு வாக்களிக்க போகின்றேன் என்று நினைத்தால்,

விருத்தாசலத்தில் அவரது மாற்று வேட்பாளராக நின்றவர் பிரேமலதா, அவரது மனைவி, குடியாத்தம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் விஜயகாந்தின் மச்சான்

//வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி கூட்டிக்கிட்டு போக முடியுமா இல்ல வேற பொண்ணுங்களை அழைச்சிக்கிட்டு போகமுடியுமா?..." //குமுதம் பேட்டியில் விஜயகாந்த்

ஆண்டாள் அழகர் மண்டபம், விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின்(தற்போது தேமுதிக) தலைமையிடம், சென்னை மாநகர நெரிசலை குறைக்க கட்ட திட்டமிடப்பட்ட மேம்பால பணியில் இந்த மண்டபம் சிறிதளவு இடிபடக்கூடும், பல கட்டிடங்கள் முழுமையாக இடிபடக்கூடும் என்பது வேறு விடயம், உடனே முறையிட்டார் பாருங்கள் விஜயகாந்த், யாரிடம் முறையிட்டார்? தஞ்சைவிவசாயிகள் எலிக்கறி தின்பதை தடுக்க விவசாயத்துறையை கேட்காமல் ஏன் நெடுஞ்சாலைத்துறையை கேட்டனர் என கள்ளக்குறிச்சியிலே முழங்கினாரே? பணம் சம்பாதிக்கத்தான் இந்த துறையை கேட்டு பிரச்சினை செய்கின்றனர் என விமர்சித்தாரே அவரிடம் சென்று மண்டபம் இடிபடாமல் காக்க சென்று முறையிட்டார் அதுவும் எப்படி நெடுஞ்சாலைத்துறையின் மேம்பால திட்டவரைபடத்திற்கு மாற்று வரைபடத்தோடு.


ஒவ்வெரு படத்திற்கும் விஜயகாந்த் பல கோடி வாங்குகின்றாரே சரியான வருமான வரி கட்டுகின்றீரா? எல்லாமே வெள்ளைப்பணமாகத் தான் வாங்குகின்றாரா? விஜயகாந்தின் பொறியல் கல்லூரி விதிப்படிதான் இயங்க்குகின்றதா? அங்கே அரசாங்கம் அனுமதித்தற்கு மேல் எந்த விதத்திலும் கட்டணம் வாங்கப்படவில்லையா?

தற்போதைய அரசியல்வாதிகளிலிருந்து மாற்றாக அவரை நினைப்பவர்கள் எதில் மாற்றாக இருக்கிறார் என்று கீழ்கண்ட் சுட்டியை படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்

விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?
விஜயகாந்தின் முதிர்ச்சி
இரண்டு காந்தகளும் இரண்டு மண்டபங்களும்


மற்றபடி அவருக்கு ஒரு வாய்ப்பு தரலாமென்றால் அடுத்த தேர்தலில் தரலாம், அதுவரை அவருடைய செயல்பாடுகளை பார்க்கலாம்

தற்போது அதிமுகவைப் பார்க்கலாம்
1991-96 அதிமுக ஆட்சியைவிட மக்களுக்கு அதிக கேடுவிளைவித்த ஆட்சியென்றால் 2001-06 அதிமுக ஆட்சி தான், 1991-96ல் வெறும் ஊழலும், ஆடம்பர திருமணமும் மட்டும் தான் இதனால் ஒன்றும் உயிர் உரிமை போகும் அளவிற்கு மக்கள் பாதிக்கப்படவில்லை, ஆனால் 2001-06 ஆட்சியில் ஆடம்பரமும் ஊழலும் குறைந்தது போல தோன்றினாலும் அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் உலை வைத்தன.

திமுக-பாமக கட்சிகளின் வாரிசு அரசியல் என்ற ஒற்றை காரணத்திற்காக ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க முயலும் நடுநிலைமையாளர்களுக்கு மருத்துவர் இராமதாசு பொதுக்கூட்டத்தில் பேசியது MIDAS கம்பெனியின் விரிவு என்ன தெரியுமா? M - மன்னார்குடி, I-இளவரசி, D-தினகரன் A-அண்ட் எல்லாருக்கும் பின்னாடி S இந்த S தான் சசிகலா, குடும்ப ஆதிக்கம் என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டுமே திமுகவை ஒதுக்குபவர்கள் இதை சற்று கவனத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

அரசு ஊழியர்கள் போராட்டம் நசுக்கப்பட்ட விதம், நடுத்தர மக்களுக்கும் நள்ளிரவு கைதுகளை அறிமுகப்படுத்தியது, சாலைப்பணியாளர்கள் வேலை நீக்கம், அதனால் இழந்த உயிர்கள், நெசவாளிகள் கஞ்சித்தொட்டி, சாதாரண மக்களின் இருப்பை மறைத்து அழித்து இந்து மதத்தை ஒரு முகப்படுத்த முயன்றது, பொடா அத்து மீறல்கள், கஞ்சா வழக்குகள் என ஆணவம் பிடித்த (இதை தைரியம் என்று பாராட்டுபவர்களும் உண்டு) அரசாக மட்டுமே இது இருந்தது, மீண்டும் இந்த ஜெயலலிதாவின் அரசு வந்தால் அடுத்த நான்கு ஆண்டுகளும் நரகவேதனை, அதை மறைக்க ஐந்தாம் ஆண்டு பறிக்கப்பட்டவை மீண்டும் சலுகைகள் என்ற பெயரில்.

நாஜிக்கள் கம்யூனிஸ்ட்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் கம்யூனிஸ்ட் அல்ல


நாஜிக்கள் யூதர்களை கொன்றனர்
நான் எதிர்க்கவில்லை
ஏனெனில்
நான் யூதனல்ல

அய்யோ
நாஜிக்கள் என்னை கொல்லவருகின்றனர்
யாருமே அதை கேட்கவில்லையே

சன் டிவி, தினகரனின் ஊடக ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் சூப்பர் டூப்பர், ஜெயாடிவி என்று அதிமுக மன்னார்குடி குடும்பத்திடமும் உள்ளன,
அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்


அராஜக அதிமுக ஆட்சியும் அரசு ஊழியர்களும்

திமுக கூட்டணியில் தற்போது திமுக-பாமகவின் குடும்ப அரசியல் மற்றும் சன் குழுமத்தின் ஊடக ஏகாதிபத்யம் என்ற ஒற்றை காரணம் தான் ஜெயலலிதாவிற்கு வாக்களிக்க முயல்கின்றனர் என்றால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உயிர் உரிமை பிரச்சினைகளுக்கு முன் இந்த ஊடக பிரச்சினை எந்த அளவு முக்கியம் என எடைபோடுங்கள், இந்த ஒற்றை காரணத்திற்காக அதிமுகவிற்கு வாக்களிக்க முயல்பவர்கள் விடுதலைசிறுத்தை, மதிமுகவிற்கு வாய்ப்பளிக்கலாம்.

திமுக கூட்டணிதான் சிறந்த ஆட்சி தரும், நல்ல கூட்டணி என்றெல்லாம் சொல்ல வரவில்லை, ஜெயலலிதாவின் ஆட்சியைவிட திமுக ஆட்சி எந்த பிரச்சினையும் self control ஆக செயல்படுவார்கள்

ஜோசப் அய்யவின் என்ன ஓட்டு யாருக்கு என்ற பதிவையும் படித்து முடிவு செய்யுங்கள்

உயிர் உரிமைப்பிரச்சனைகள் தான் எமக்கு தலையாய பிரச்சினை மற்றவைகள் எல்லாம் அதற்கு பிறகு தான்

பின் குறிப்பு
இந்த பதிவிற்காக திமுக கூட்டணியிடமிருந்து நான் பணம் வாங்கவில்லை

எந்த கூட்டணி ஆட்சிக்கு வந்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கோ, என் குடும்பத்திற்கோ ஒரு ரூபாய் கூட இலாபமோ, நட்டமோ இல்லை, பொது மக்களுக்கு என்ன நன்மையோ அதே நன்மை எனக்கும், பொது மக்களுக்கு என்ன தீமையோ அதே தீமை எங்களுக்கும்.

அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்

அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்

1991-96 அதிமுக ஆட்சியைவிட மக்களுக்கு அதிக கேடுவிளைவித்த ஆட்சியென்றால் 2001-06 அதிமுக ஆட்சி தான், 1991-96ல் வெறும் ஊழலும், ஆடம்பர திருமணமும் மட்டும் தான் இதனால் ஒன்றும் உயிர் உரிமை போகும் அளவிற்கு மக்கள் பாதிக்கப்படவில்லை, ஆனால் 2001-06 ஆட்சியில் ஆடம்பரமும் ஊழலும் குறைந்தது போல தோன்றினாலும் அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் உலை வைத்தன மக்களை மட்டுமல்ல சாமிகளுக்கும் ஊறுவிளைவித்தது அதிமுக அரசு.


கோழி, ஆடு பலியிடத்தடை என்ற சட்டத்தை திடீரென ஒரு நாள் நிறவேற்றினார் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா, மேலோட்டமாக பார்க்கும் போது இது ஏதோ மிருகங்களின் மீதான கருணை மழையை ஜெயலிதா பொழிந்தது போன்ற ஒரு தோற்றத்தை நடுத்தர வர்க்கத்தினரிடம் தோற்றுவித்தது, ஆனால் இது ஒரு அப்பட்டமான இந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் இந்த மதத்தின் பன்முகத்தன்மையை அழித்து ஒரு முகப்படுத்தும் முயற்சி, இந்து மதத்தில் சிறு தெய்வ வழிபாடும் குலதெய்வ வழிபாடும் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் , பெரும்பான்மை மக்களின் இந்த வழிபாட்டு முறை தான் ஆரியமயமாக்களில் எல்லாவற்றையும் இழந்து எஞ்சி நிற்பது.



யாரிந்த குலதெய்வங்கள், சில பல காலங்களுக்கு முன் எம் மக்களுக்கும், ஊருக்காகவும் சமூகத்திற்காகவும் உயிர்துறந்த எம் முன்னோர்கள், இவர்களின் நினைவாக நாம் கும்பிடுவதே குலதெய்வங்களும் சிறு தெய்வங்களும், இந்த கோவில்களில் பெரும்பாலானவைகளுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, இன்றைக்கு இந்து மதம் என்ற ஒற்றை குடையின் கீழ் எம் மக்கள் வந்த போதும் எம் மக்களின் அடையாளங்களும், நம்பிக்கைகளும் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டில் உள்ளன, எஞ் சாமிக்கு முப்பலி படைப்பது எம் வழிபாட்டு அடையாளம்,அது எமது உரிமை, சனாதான தர்ம ஆகம விதிப்படி இயங்குவதாக கூறும் கோவில்களின் கருவறையில் நுழைவதை வேண்டுமானால் சில ஜாட்டான்கள் தடுக்கலாம், ஆனால் எம் கோவிலின் கருவறையில் நுழைவதையும், எஞ் சாமியை தொடுவதையும் எந்த ஜாட்டான்களாலும் தடுக்க முடியாது, எஞ் சாமியை எப்படி வேண்டுமானாலும் ஆராதிப்பேன், எந்த மொழியில் வேண்டுமானாலும் ஆராதிப்பேன், அதையும் எந்த 'பெரியவரும்' நிந்திக்க முடியாது, நான் தொட்டதற்காக எஞ்சாமி தீட்டு என கோவித்துக்கொள்ளாது, பட்டு,பீதாம்பரம், தங்கம், நெய் மற்றும் இன்ன பிற உணவுகளையும் யாக நெருப்பிலிட்டு பொசுக்கிவிட்டு எழுந்து போவதை போல ஆட்டையும், கோழியையும் பலி கொடுத்து விட்டு அதை தூக்கி வீசிவிட்டு வரமாட்டோம், அதை எம் சொந்தங்களும், ஊர் மக்களும் பங்கிட்டு அங்கேயே சமைத்து உண்போம், வேண்டும்போதும் வாய் ஊறும் போதும் சிக்கன்-65 சாப்பிட்டு கொண்டிருப்பவர்களல்ல எம் மக்கள்,அசைவ உணவே தீபாவளிக்கும், கரிநாளுக்கும் எப்போதாவதுமாக மட்டுமே இருந்து கொண்டிருக்கும் எம் மக்களுக்கு சாமிக்கு படைப்பது நம்பிக்கைக்கு மட்டுமல்ல அதை வைத்து அசைவம் உண்ணும் நாளாகவும் இருக்கும் என்பதுவும் கூட.


எம் கோவில்களின் மீது எந்த உரிமையும் இல்லாத அம்மையாரின் அதிமுக அரசு ஆடு,கோழி பலியிடத்தடை என்று எம் மக்களின் நம்பிக்கையையும், உரிமையையும் பறித்தது, எஞ் சாமிக்கு என்ன படைக்க கூடாது என்று சட்டம் போட்டு தடுத்து இந்து மதமென்றால் சாமிக்கு சைவ உணவுதான் படைக்க வேண்டுமென்ற நிலைக்கு தள்ளியது




கீழ்கண்ட வரிகள் திரு.முத்துகுமரன் அவர்களின் அதிகார உரையாடல்களை உடைப்போம் என்ற பதிவிலிருந்து எடுக்கப்பட்டது, இங்கே பொருத்தமாக இருக்கும் என்பதால் இணைக்கின்றேன்

//தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார,ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச்செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக்கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது.பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.
//

புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக சமூக அளவில் அதை வலுவூட்டி வருகிறபோது அரசு அதிகாரம் கையிலிருக்கும் போது எம் மக்களின் உரையாடலை ஒழிக்கும் சட்டங்களை போட்டு நம் மண்ணின் வரலாற்றை ஒரு முகப்படுத்த துடிக்கின்றது, நம் வரலாற்றை, நம் உரையாடலை, நம் மொழியை நம் நம்பிக்கையை நாம் இழக்கும் போது நாம் தாமாகவே அடிமையாகின்றோம்.

இது தொடருமானால் நாளை நம் சாமியை கும்பிடும்,வணங்கும், வழிபாட்டு முறை உரிமைகளை இழந்து எந்த சாமியை கும்பிட வேண்டும், எப்படி வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும், என்ன வேண்டிக்கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டு சொல்லும் அளவில் வந்து நிற்கும் இந்த ஒரு முகப்படுத்தும் முயற்சி.

இன்று நம் சாமிக்கு என்ன படையல் போட வேண்டுமென சட்டத்தின் மூலம் முடிவு செய்பவர்கள் நாளை நாம் என்ன சாப்பிட வேண்டுமென சட்டத்தின் மூலம் முடிவு செய்யவும் வாய்ப்புள்ளது இது நடக்க வாய்ப்பில்லை என மறுக்க முடியாது ஆடு,கோழி பலியிடத்தடை என்பதை அது சட்டமாக்கப்படும் முன் வரை நினைத்து பார்த்திருப்போமா?

கிறித்துவ பிரச்சார அமைப்புகளின் அதி தீவிர மதமாற்றப் பிரச்சாரங்கள் ஏற்படுத்திய எரிச்சலில் மத மாற்ற தடை சட்டம் என்ற ஒற்றை காரணத்திற்காக ஆதரிப்பவர்களே உம் மதத்திலேயே உம் உரிமைகள் இங்கே சட்டத்தினால் பறிக்கப்பட்டுள்ளனவே!

உயிர் உரிமைப்பிரச்சனைகள் தான் எமக்கு தலையாய பிரச்சினை மற்றவைகள் எல்லாம் அதற்கு பிறகு தான்

தேர்தல் 2006 - கடலூர் – முக்கூடலூர்

கடலூர், பழைய தென்னாற்காடு மாவட்டம் தற்போதைய கடலூர் மாவட்டத்தின் தலைநகர், கடலூர் தொடர்பான சில தகவல்களை பார்த்துவிட்டு பிறகு தொகுதி நிலவரத்திற்குள் நுழைவோம், தென்பெண்ணையாறு, கெடிலம் ஆறு, உப்பனாறு என்று மூன்று ஆறுகள் கடலில் கலக்கும் இடம் என்பதால் கூடலூர் என்று தொடக்கத்தில் அழைக்கப்பட்டு கடலூராக மாறியது இதனை ஆங்கிலத்தில் எழுதும் போது cuddalore என்றே எழுதுகிறோம், இது முற்காலத்தில் நடு நாடு என்று அழைக்கப்பட்டது, கடலூர் மழை மறைவு பிரதேசம் மாதிரி ஒரு வளர்ச்சி மறைவு பிரதேசம், இன்றைக்கு சென்னைக்கு கிடைத்த தலைநகர் வாழ்வு கடலூருக்கு தான் கிடைத்திருக்க வேண்டும் ஆங்கிலேயா ஏகாதிபத்தியத்தை நிறுவிய இராபர்ட் கிளைவு முதலில் இருந்தது கடலூரில் தான், கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமாக கடலூர் செய்ன்ட்.டேவிட் கோட்டை செயல்பட்டது அதன் அருகிலேயே 24கிலோ மீட்டர் தூரத்தில் பிரெஞ்சு காலனி தலைமையிடம் பாண்டிச்சேரி இருந்தது, பிரெஞ்சு படைகளினாள் கடலூர் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளானது, தலைமையிடம் தாக்குதலை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பது இயலாது என சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டது அன்றிலிருந்து இன்று வரை பாண்டிசேரி நகரம் கடலூர் நகரத்தின் வளர்ச்சிக்கு ஒரு வகையில் தடையாகவே உள்ளது, கடலூரில் விற்கப்படும் பெட்ரோல் 5 கி.மீ. தொலைவில் இருக்கும் பாண்டிச்சேரி எல்லையில் விற்கப்படும் பெட்ரோலிலிருந்து ஓரிரு ரூபாய் அதிகமாக இருக்கும், மதுவும் பாதிக்கு பாதி விலை பாண்டிச்சேரியில், வரிச்சலுகையினால் எல்லா பொருட்களுக்கும் விலை பாண்டிச்சேரியில் சற்று குறைவாகவே இருக்கும் அதனால் கடலூர் வரவு செலவுகளில் பாதி பாண்டிச்சேரியில் நடைபெறும்.

108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவந்திபுரம் (திருவஹீந்தபுரம்) கோவில் வரலாற்று புகழ் பெற்றது, அனுமார் சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு இலங்கைக்கு பறந்த போது அதிலிருந்து விழுந்த மலைதான் திருவந்திபுரம் (கேப்பர் மலை) என்றும் சொல்வார்கள், திருப்பாதிரிபுலியூர் பெரிய கோவிலும் வரலாற்று புகழ் பெற்ற கோவில், கல்லில் கட்டி கடலில் எறிந்த தேவாரம் தந்த அப்பர் (எ) திருநாவுக்கரசர் கரையேறியது கடலூரில்.

முற்காலத்தில் இது நடு நாடு என்று அழைக்கப்பட்டது, பிறகு தென்னாற்காடு மாவட்டமாகி தற்போது கடலூர் மாவட்டமாகியுள்ளது.

தமிழகத்தின் நான்கு துறைமுகங்களில் கடலூர் துறைமுகமும் ஒன்று, தமிழகத்தின் ஐந்து மத்திய சிறைச்சாலைகளில் கடலூர் சிறைச்சாலையும் ஒன்று, மனிதர்கள் சுவசிக்க தகுதியில்லாத நச்சு காற்று வீசுமிடத்தில் தமிழகத்திலேயே முதலிடம், அதிக அளவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலைகள் கடலூரின் காற்றை,நீரை, மண்னை நச்சு படுத்தி வருகின்றன, இது தொடர்பான எனது முந்தைய பதிவு மடியில் இரசாயன குண்டு, நகைக்கடைகளின் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே இரண்டாவது இடம்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகியோர் பிறந்த ஊர், பிரபல கடத்தல்காரன் மஸ்தான் கடலூரை சேர்ந்தவர் என கேள்விப்பட்டுள்ளேன், கடலூரின் குற்ற வரலாறு என்றால் முதன் முதலில் நீதிமன்றங்களில் நீதிபதியின் முன்பே வைத்து வெட்டும் கலாச்சாரம் தொடங்கியது கடலூரில், சாராய சங்கிலிக்கொலைகள் சில கிராமங்களில் ஆண்களே இல்லாத அளவிற்கு மாறி மாறி கொலைகள் செய்து பழிவாங்கிக்கொண்டனர், சாதி மோதல்களுக்கு பிரபலமான கடலூரில் பாமக, விடுதலை சிறுத்தைகளின் கை கோர்ப்பு, தலித் வன்னிய மக்களுக்கிடையே ஆரம்பித்துள்ள புரிதல்களினால் தற்போது சாதி மோதல்கள் இல்லை

விவசாயம், மீன் பிடித்தல், கைத்தறி நெசவு ஆகியவை முக்கிய தொழில்கள் கல்விக்கூடங்களின் எண்ணிக்கை தரம் ஆகியவைகளில் முண்ணனியில் இருப்பவை கிறித்துவ மிசனரி பள்ளிகளே, நூற்றாண்டுகால பாரம்பரிய கிறித்துவ பள்ளிகள் கடலூர் மக்களுக்கு கல்வியறிவளித்ததென்றால் மிகையாகாது, பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் 50மீட்டர் தொலைவில் இருக்கும் இருந்தாலும் எத்தனையோ மாவட்ட ஆட்சித்தலைவர்கள் முயற்சித்தும் இரயில்வே மேம்பாலம் கட்ட முடியாமல் வியாபாரிகள் தடுக்கின்றனர்.

நூறு நாட்கள் ஓடும் திரைப்படங்களெல்லாம் கடலூரில் காண முடியாது, எனக்கு தெரிந்து தொன்னூறு நாட்களுக்கு மேல் ஓடியபடங்கள் என்றால் விஜய டி ராஜேந்தரின் சம்சாரசங்கீதமும் , ராமராஜனின் கரகாட்டகாரனும், மேலும் இங்கு திரையரங்குகளின் எண்ணிக்கையும் மிக குறைவு (நகரினுள் உள்ள திரையரங்குகளின் எண்ணிக்கை ஆறு) 20 ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்ட கிருஷ்ணாலயா திரையரங்கம் கடலூர் நகரத்தில் தொடங்கப்பட்ட கடைசி திரையரங்கம், பேருந்து நிலையத்தின் அருகிலிருந்த முத்தையா திரையரங்கம் தற்போது வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளது, இதே கால இடைவெளியில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் நகரங்களில் கிட்டத்தட்ட 20 திரையரங்குகள் உள்ளன, ஆனாலும் கடலூரில் நடிகர்களின் ரசிகர் மன்றங்களுக்கு எந்த குறைவும் இல்லை.

கடலூர் நகரம், துறைமுகம் தவிர்த்து மீதி அனைத்தும் கிராமங்கள் அடங்கிய தொகுதி, நகர வாக்குகளும் கிராம வாக்குகளும் சரி சமமாக இருப்பதால் இரண்டு மக்களின் வாக்குகளையும் பெறுபவர் தான் வெற்றியடைய முடியும் என்ற நிலை, வன்னியர்கள் அதிக அளவிலும், தலித்கள் அதற்குக் அடுத்த அளவிலும், மீனவர்கள் பிற சமூகத்தினர் என்ற வரிசையில் எண்ணிக்கை உள்ளது. இங்கு திமுக, அதிமுக,பாமக, காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள் என்ற வரிசையில் கட்சிகளின் பலம் உள்ளது, 1989ல் காங்கிரஸ் தனித்து நின்றபோது 20,000 வாக்குகள் பெற்றதும் அதில் 10,000 வாக்குகள் இன்னமும் காங்கிரசிடமே இருப்பதும் காங்கிரசின் கூட்டணியின் முக்கிய பங்கை உணர்த்தும், சீனுவாசப்படையாட்சி காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தார் வன்னிய சமூகம் இவரின் பின் நின்றது அதன் பிறகு அவரது மகன் பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் அவர்கள் காங்கிரசில் தொடர்ந்தார், ஆனால் பண்னையார்களுக்கு சேவகம் செய்த பண்னையார் விசுவாச மனோபாவம் வன்னிய மக்களிடமிருந்து மாறியதும் இன்னமும் காரைவிட்டு இறங்காமல் வாக்கு கேட்ட பி.ஆர்.எஸ்.வெங்கடேசனின் பண்ணையார் முறை வாக்கு சேகரிப்பும் பாமகவின் தோற்றமும் காங்கிரசின் வாக்கு வங்கியை வெகுவாக குறையச்செய்தது, பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் 1989, 1996ல் பாராளுமன்ற உறுப்பினராகவும் 1991ல் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார் 2001ல் திமுக மற்ற இடங்களிலெல்லாம் தோற்ற போதும் வெறும் 34 வாக்குகளில் (தமிழகத்திலேயே இது வரை நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆக குறைந்த வாக்கு வித்தியாசம்) வெங்கடேசன் வெற்றியை இள.புகழேந்தி (திமுக)யிடம் இழந்தார் வலுவான வாக்கு வங்கியுள்ள அதிமுக,காங்கிரஸ், பாமக கூட்டணி இருந்த போதும் வெங்கடேசனை எதிர்த்து அரசியல் செய்த பாமக ஒத்துழைக்காததும், அப்படியே பாமகவினர் வாக்கு கேட்டபோதும் ஏற்கனவே பண்ணையார் முறை அரசியலாலும், சொந்த சாதிக்கு எதிராக செயல்படுகின்றார் என்ற எரிச்சலும் சேர்ந்து கொண்டதால் பலர் வெங்கடேசனுக்கு வாக்களிக்காமல் தவிர்த்தனர், விளைவு விடுதலை சிறுத்தைகளின் பலத்த ஆதரவினாலும் திமுகவின் செல்வாக்கினாலும் புகழேந்தி சட்டமன்றம் சென்றார்.

புகழேந்தியின் அரசியல் வாழ்க்கை ஆரம்பம் பலத்த எதிர்ப்புக்கிடையில் ஆரம்பித்தது, செள.பத்மனாபன் 1989ல் கடலூர் திமுகவின் முக்கியபுள்ளி, அனைவரும் எளிதாக அனுக முடிந்த அரசியல்வாதி, தைரியசாலி, எதையும் நேருக்கு நேர் பேசுபவர், புகழேந்தியின் தந்தை இரெ.இளம்வழுதி கலைஞரின் ஆரம்பகால நண்பர், கலைஞருக்கு தோள் கொடுத்தவர், 1989 தேர்தலில் சௌ.பத்மனாபன் திமுக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த சமயத்தில் கட்சிக்கு அறிமுகமே இல்லாத இள.புகழேந்தி போட்டியிட்டார், வெகுண்டெழுந்த பத்மனாபன் கலைஞரை எதிர்த்து கலைஞரிடமே நேரடியாக வாதம் செய்து பேசினார் (ஏற்கனவே நான் இதை கேள்விப்பட்டிருந்த போதும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு பேருந்தில் வந்த போது இந்த விடயத்தை என் இருக்கைக்கு முன் அமர்ந்திருந்த இருவர் பேசிக்கொண்டு வந்தனர்) திமுகவை விட்டு வெளியேறி சுயேட்சையாக பானை சின்னத்தில் போட்டியிட்டார் சொந்த பலத்தினால் 5000 வாக்குகள் பெற்றார், இதன் பிறகு பாமக உதயமான பொது பத்மனாபன் பாமகவில் சேருவார் என எண்ணியபோது பாமகவில் சேராமல் அமைதி காத்தார், அதன் பின் மதிமுக உருவானபோது மதிமுகவில் சேர்ந்து மாவட்ட செயலாளர் ஆனார், சென்ற தேர்தலில் மற்ற தொகுதிகளில் இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் பெற்ற மதிமுக கடலூரில் மட்டும் ஏழாயிரத்தி சொச்சம் வாக்குகள் பெற்றது, இதில் 5000 வாக்குகள் பத்மனாபனுக்கான வாக்குகள் பத்மனாபன் நின்றால் மட்டுமே கிடைக்கும்வாக்குகள், பத்மனாபன் போட்டியிடாத போது திமுகவிற்கு போகும் வாக்குகள் இவை. மதிமுக-அதிமுக கூட்டணியில் பத்மனாபன் கடலூரில் போட்டியிட்டிருந்தால் களம் தூள் பறந்திருக்கும்.

கடலூரில் 1980க்கு பிறகு முதன் முறையாக அதிமுக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றது, இரட்டை இலை 26 வருடங்களுக்கு பிறகு (ஒரே ஒரு பாராளுமன்ற தேர்தல் தவிர்த்து) சுவர்களில் தெரிகிறது, அதிமுகவின் பலமென்றால் அது மீனவ மக்கள் தான் முதலில் மீனவ சமுதாய தலைவர் ஹிலால் பாமக சென்ற பிறகும், மற்றொரு அதிமுக தலைவர் இரகுபதியின் மறைவிற்கு பிறகும் இந்த மீனவ மக்களை அதிமுக பக்கமே வைத்திருக்க சரியான தலைவர்கள் அதிமுகவிற்கு அமையவில்லை என்பது அதிமுகவிற்கு ஒரு குறைதான், தற்போதைக்கு முருகுமணி போன்ற ஒரு சிலர் தவிர்த்து பெரும்பாலன அதிமுகவினர் யாரும் மக்களுக்கு அறிமுகமானவர்களாகவே தெரியவில்லை, தற்போதைய அதிமுக வேட்பாளர் 'சேவல்' குமாருக்கு போஸ்டர் குமார் என்று ஒரு பெயருண்டு, அதாவது சுவரொட்டி அரசியல் செய்பவரென, எதற்கும் எல்லாவற்றிற்கும் 5000 சுவரொட்டி அடித்து ஒட்டிவிடுவார்.

தற்போதைய திமுக வேட்பாளர் தௌலத் நகர் அய்யப்பன், சென்ற முறை பாராளுமன்றத்திற்கு போட்டியிட விரும்பியபோதே சட்ட மன்ற தேர்தலின் போது வாய்பளிக்கப்படுமென சமாதானப்படுத்தப்பட்டவர், மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர், பணபலம் மிக்கவர், திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தியும் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளர் , தொகுதியிலும் எந்த கெட்ட பெயரும் இல்லையென்றாலும் அய்யப்பனுக்கு வாய்பளிக்கவே இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுளது, திருவாரூர் அசோகன் மாதிரி முறுக்காமல் இவர் தேர்தல் வேலை செய்து வருகிறார், இள.புகழேந்தி மீது தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற அதிருப்தி இருந்தது அதுவும் தற்போதைய வேட்பாளர் அய்யப்பனிடத்தில் இல்லை.

விடுதலை சிறுத்தைகளின் பலம்மிகுந்த பகுதிகளில் கடலூரும் ஒன்று, விடுதலை சிறுத்தைகளின் முந்தைய முக்கிய தலைவர் திருவள்ளுவன் (இவர் திருமா வடமாவட்டங்களுக்கு வருவதற்கு முன்பிருந்தே இங்கு தலித் அரசியில் நடத்துபவர்) விடுதலை சிறுத்தையிலிருந்து வெளியேறி விஜயகாந்த் கட்சிக்கு ஆதரவளிப்பது சிறுத்தைகளின் முகாமில் சிறிய ஓட்டையை போட்டுள்ளது.

திமுகவின் வலுவான வாக்கு வங்கியும் பாமகவின் 17,000 வாக்குகளும் காங்கிரசின் 10,000+ வாக்குகளும் (இவைகளில் பாதி பாதி வந்தால் கூட போதுமானது) திமுக,பாமக,காங்கிரஸ் என கணிசமான வாக்கு வங்கியுள்ள முக்கூடல் கூட்டணி திமுகவின் பலமாக உள்ளது, அய்யப்பன் எந்த பதிவியும் வகிக்கவில்லையென்றாலும் மக்களுக்கு அறிமுகமான வேட்பாளர்

பாரம்பரிய அதிமுக மீனவ வாக்குகள், விடுதலை சிறுத்தைகளின் வாக்குகள், சுய உதவி குழுக்கள் வீடு வீடாக அமர்ந்து பிரச்சாரம் செய்வது சேவல் குமாருக்கு பலம்

முந்தைய திமுக சட்ட மன்ற உறுப்பினர் பெரிதாக ஏதும் செய்யாதது திமுகவிற்கு பலவீனமாக அமைந்தது,

நடிகர் விவேக் ஓபராய், தொண்டு நிறுவனங்கள் சுனாமி சமயத்தில் ஆற்றிய பணிகளை கொச்சை படுத்தியது கழகங்களின் மீது வெறுப்பு கொள்ள வைத்துள்ளது, விவேக் ஓபராய் வீடுகள் கட்டி தர முன்வந்தும் தமிழக அரசு நிலம் ஒதுக்காகதது சேவல் குமார் மீனவ கிராமங்களின் உள்ளே நுழைந்து வாக்கு கேட்கமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது ஆனாலும் இந்த பாரம்பரிய அதிமுக வாக்குகள் திமுக விற்கு செல்லுமா என்பது சந்தேகமே, ஆனாலும் கடலூர் நகரம் முழுதும் பாதிக்கப்படவர்கள், படாதவர்கள் என அனைவருக்கும் ரூபாய் ஆயிரம் நிவாரண உதவி எந்த அளவிற்கு நிவாரண குளறுபடிகளை மறக்கடிக்க செய்யும் என தெரியவில்லை.

கலைஞர், ஜெயலலிதா என யார் நின்றாலும் அவர்களை தோற்கடிக்க கூடிய இருவர் கடலூரில் உண்டு, ஒருவர் விவேக் ஓபராய், மற்றொருவர் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், நீண்ட காலமாக எந்த சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினராலும் செய்ய முடியாமலிருந்த இரயில்வே மேம்பால பைபாஸ் சாலை, செம்மண்டலம் திருப்பாபுலியூர் கெடிலம் பாலம் போன்றவைகளும் சுனாமி, வெள்ள மீட்பினாலும் மக்கள் உள்ளத்தில் குடி கொண்டார், அரசியல்வாதிகள், நடிகர்களுக்கு மட்டுமே டிஜிட்டல் பேனர் பார்த்திருந்தவர்களுக்கு கடலூரில் பல இடங்களில் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நன்றி அறிவுப்பு டிஜிட்டல் பேனர்கள் ஆச்சரியமளிக்கும், இன்றைய கடலூரின் இரட்டை ஹீரோக்கள் விவேக் ஓபராய் மற்றும் கடலூர் ஆட்சித்தலைவர்.

முக்கூடல் பலத்தினால் கடலூரில் திமுக வெற்றியின் அருகில், எட்டி பிடிக்க முடியாத அளவில் அதிமுக பின் தங்கியுள்ளது