சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா?

நேரடியாக கேள்வியினுள் நுழையும் முன் நாம் சில விடயங்களை பார்ப்போம் நமது சமூகத்தில் சாதி எப்படி பேணப்பட்டு வருகின்றது? அதன் முக்கியத்துவம் என்ன?

தற்போது சாதிப்பற்றி சொல்லப்பட்டு வரும் கருத்தாக்கம் (தியரி)என்னவெனில்நீண்ட நெடும் காலங்களுக்கு முன் செய்த தொழிலினால் மக்களை பிரித்துஅவர்களுடைய சந்ததியினர் தொடர்ந்து அந்த தொழிலை செய்து வருகின்றனர்,இது தொழிலினால் சாதி வந்து பின் பிறப்பினால் என்ற கட்டத்தை அடைந்தது

மற்றொரு கருத்தாக்கம் (தியரி), கடவுளின் உடலின் பல பாகங்களிலிருந்து பிறந்ததாகவும் அதன் மூலம் அவர்கள் செய்யும் தொழில்கள் பிரிக்கப்பட்டதாகவும்,இது பிறப்பினால் சாதி வந்து சாதியினால் தொழில்கள் பிரிக்கப்பட்டு தற்போது தொழிலுக்கும் சாதிக்கும் தொடர்பில்லலயெனினும் பிறப்பினால் சாதி என்ற கட்டத்தை அடைந்தது

எந்த தியரி ஆனாலும் தற்போது பிறப்பினால் தான் சாதி என்ற கட்டத்தை நம் சமுதாயம் எட்டிவிட்டது.

இங்கே இட ஒதுக்கீடு என்பது மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமன் படுத்துவது,சின்ன கோட்டையும் பெரிய கோட்டையும் சமமாக்குகின்றோம் என்றுபெரிய கோட்டை அழிக்கின்றனர் என்கிற உதாரணங்களுக்குள் அடங்காது

அது மட்டுமின்றி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும்வெவ்வேறு தளங்களில் உள்ள பிரச்சினைகள் இரண்டையும் ஒரே தளத்திலுள்ள பிரச்சினைகளாக காணக்கூடாது

இன்றைய(எந்த) காலக்கட்டத்தில் பொருளாதார உயர்வு என்பது சாதிய விழுமங்களில்மாற்றம் ஏற்படுத்துவதில்லை,

பிறக்கும் போது எல்லோரும் சமமான அறிவுடன் தான் தான் பிறக்கின்றனர், வளர்கின்ற காலத்தில் சமூக சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை, சுற்றுச்சூழல் , இன்ன பிறவும் சேர்ந்துதான் மாற்றம் ஏற்படுத்துகின்றன.

பத்து கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலே, நடந்தோ பள்ளிக்கூடம் வந்து பின் வீடு சென்று வயலில் சிறு வேலைகள் பார்த்தோ அல்லது வீட்டில் வேலைகள் பார்த்துவிட்டுதினம் அரை மணி நேரம் கூட வீட்டில் படிக்கமுடியாமல் இருக்கும் ஒரு மாணவன் 70 விழுக்காடு வாங்குவதற்கும் நகரத்திலே தரமான பள்ளியில் படித்து படிப்பை மட்டுமேவேலையாக கொண்டு படிக்கும் மாணவன் 90விழுக்காடு எடுப்பதாலும் 70 விழுக்காடு எடுத்த மாணவன் 90 விழுக்காடு எடுக்கும் மாணவனைவிட அறிவில் குறைந்தவன் என்று சொல்வது நியாயமாக இருக்குமா?

படிப்பதும் அதிக மதிப்பெண்கள் வாங்குவதும் வெறுமனே ஒரு மாணவனின் அறிவுத்திறனை கொண்டு மட்டும் வருவதில்லை, அவன் இருக்கும் சூழலும் இதில் பெறும் பங்காற்றுகின்றது. அதிக மதிப்பெண்கள் பெறுவதில் பொருளாதார வசதி இரண்டாமிடத்தில் தானிருக்கும் மிக முக்கியமான இடம் குடும்ப சூழல், மற்றும் சமூக சூழல் தான்.

தந்தை தான் செய்யும் வேலைக்காக குடித்துவிட்டு பின் அதே பழக்கமாகி வீட்டில் சண்டை சச்சரவுகளோடு நிம்மதியின்றி படிக்கும் மாணவன், சில மாணவர்கள் வீட்டில் பிரச்சினையில்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் பிரச்சினைகள்,இதெல்லாவற்றையும் விட காலம் காலமாக படிப்பு அவனுக்கு ஒதுக்கப்பட்டதல்ல,அது மற்ற சிலருக்காக, என்ற மனப்பாங்கிலிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வருபவனின் மதிப்பெண்களும், காலம் காலமாக கல்வி, கேள்விகள் எமக்கு மட்டுமே சொந்தமென்று இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வரும் மாணவன் எடுக்கும் மதிப்பெண்களும் ஒரே அளவீட்டில் வைத்து பார்க்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயமென எனக்குப்புரியவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறை படிக்க வரும்போது எந்த ஒரு வழிகாட்டியும், வழிகாட்டுதலும் அவனுக்கு கிடைப்பதில்லை அவன் எத்தனை பொருளாதார வசதியுடனிருந்தாலும், அதே சமயம் காலம் காலமாக படித்த சமுதாயத்திலிருந்து வரும் ஒருவனுக்கு அவனுடைய மொத்த சமுதாயமும் வழிகாட்டியாக உள்ளது, இவர்கள் இருவரின் அறிவுத்திறனையும் அவர்கள் வாங்கிய மதிபெண்களை ஒரே தட்டில் வைத்து எடை போடுவது சரியென நான் நினைக்கவில்லை.

இவர்களை யார் அப்படியிருக்க சொன்னது என அடுத்த கேள்வி விழும்,

யார் அப்படி அவர்களை காலம் காலமாக இருக்க வைத்தது?

இந்த சமூகம் தானே?

அதற்கான பரிகாரத்தையும் இந்த சமூகம் தான் செய்ய வேண்டும்.

ஓஷோ அவர்களின் கருத்தின்படி எல்லா குழந்தைகளையும் பிறந்த உடன் பொது காப்பகத்தில் விடவேண்டும், அங்கே யாருடைய குழந்தைகள் என பெற்றோருக்கும்யார் பெற்றோர்கள் என குழந்தைக்கும் தெரியாமல் வளர்க்கவேண்டும், இந்த நிலையில்எந்த சாதி, எந்த மதத்தில் பிறந்த குழந்தையானாலும் ஒரே மாதிரியான சூழ்நிலை, ஒரே மாதிரியான கல்வி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கும், இந்த நிலையில் இடஒதுக்கீடு என்பது தேவையில்லை, ஆனால் நமது சமூகம் இப்படி ஒரு சமமான நிலையை எல்லா குழந்தைகளுக்கும் வழங்குகின்றதா?

எனது கல்லூரியில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்தவர்களில் பலர், மற்ற இட ஒதுக்கீட்டிலும் O.C. பிரிவில் வந்தவர்களையும் விட அதிக மதிப்பெண்கள் பெற்றனர், ஒரே மாதிரியான கல்வி, ஒரே மாதிரியான விடுதி சூழல் ஒரே மாதிரியான சுற்றுச்சூழல் தான் இவர்களை இப்படி மதிப்பெண்கள் எடுக்க வைத்தது, இதே மாணவனுக்கு இட ஒதுக்கீடு முறை கூடாது என கூறி அவனுக்கு பொறியியல் இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் அது இந்த சமூகம் அவனுக்கு இழைத்த அநீதியல்லவா??

பளுதூக்கும் போட்டிகளில் எல்லா வீரர்களையும் ஒரே பிரிவில் மோத அனுமதிப்பதில்லை,45 கிலோ, 65 கிலோ, 75 கிலோ என பலபிரிவுகள் உள்ளன, ஆனால் எந்த பிரிவினில் முதலாவதாக வந்தாலும் தங்கப்பதக்கம் தான் தரப்படுகின்றன

இதில் 75கிலோ பிரிவில் நான்காவதாக வருபவர், 45 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கியவரைவிட நான் அதிக பளு தூக்கியுள்ளேன்ஆனால் அவருக்கு தங்கப்பதக்கம் கொடுத்துள்ளீர்களே என கேட்டால் நீங்கள் எப்படி நகைப்பீர்கள்? அது அவரது அறியாமையல்லவா?இதே வரைமுறைதான் சாதிரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும்.

இதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும் தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... எது வரை தொடரலாம்?, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.

31 பின்னூட்டங்கள்:

said...

Nalla karuthu. Puthiya karuthu illai endraalum, kooda.

said...

இட ஒதுக்கீடு அவசியமானது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

ஆனால் பல நேரங்களில் இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசுபவர்கள், தனி மனிதனையும் ஒரு குழுவையும் மாற்றி மாற்றிப் பேசிக் குழப்பிக் கொள்கிறார்கள்.

இட ஒதுக்கீடு தனி மனிதர்களைப் பற்றியதல்ல. அது சமுதாயக் குழுக்களில் உள்ள புள்ளிவிவரங்களைப் பற்றியது. நாட்டின் மக்கள்தொகையில் 7% எண்ணிக்கையுள்ள ஒரு குழுவுக்கு 7% அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்களா, 7% டாக்டர்கள் இருக்கிறார்களா, 7% பொறியாளர்கள் இருக்கிறார்களா ...

இப்படித்தான் அந்தக் கேள்வி செல்லும்.

இதில் creamy layer பற்றிய விஷயங்கள் எல்லாம் அந்தந்தச் சமூகக் குழுக்களுக்குள்ளாகப் போடவேண்டிய சண்டை. அதை, குழுவுக்கு வெளியே உள்ளவர்கள் போடுவதில் பிரயோசனமில்லை.

ஆனால் ஓர் அரசின் கொள்கை, சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவது மாத்திரமல்ல. ஏழைகள் அனைவருக்கும் சோறு, முன்னேற வசதி வாய்ப்புகள் கொடுப்பது ஆகியவை. அப்படிப் பார்க்கும்போது தனி மனிதர்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஏழை எந்த சமூகக் குழுவின் உறுப்பினராக இருந்தாலும் அவருக்கு உணவு கொடுக்க வேண்டியுள்ளது. அந்தச் சமூகப் பாதுகாப்பு முறை இந்தியாவில் இன்னமும் வரவில்லை.

அதைக் கொண்டுவருவதுதான் முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். அது வரும்வரையில் ஒவ்வொரு குழுவிலும் இருக்கும் பலரும் திண்டாடுவார்கள். சில குழுக்களில் அதிகம் பேர், சில குழுக்களில் குறைவானவர்கள்.

said...

என் பல நாள் எண்ணங்களை அப்பயே பதித்துள்ளீர் குழலி.நல்லக் கருத்துக்கள்...

said...

//...சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்..//

நடைமுறைப்படுத்தறதுல கொஞ்சம் கஷ்டம் இருக்கலாம்.
மத்தபடி, இத செய்யமுடிஞ்சா நல்லது.

- ஞானபீடம்

said...

//சமூக ஏற்றத்தாழ்வுகளைச் சமன்படுத்துவது மாத்திரமல்ல. ஏழைகள் அனைவருக்கும் சோறு, முன்னேற வசதி வாய்ப்புகள் கொடுப்பது ஆகியவை. அப்படிப் பார்க்கும்போது தனி மனிதர்களைக் கவனிக்க வேண்டியுள்ளது. ஏழை எந்த சமூகக் குழுவின் உறுப்பினராக இருந்தாலும் அவருக்கு உணவு கொடுக்க வேண்டியுள்ளது. அந்தச் சமூகப் பாதுகாப்பு முறை இந்தியாவில் இன்னமும் வரவில்லை.
//
பத்ரி நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ள வேண்டிய விடயம் தான் ஆனால் சாதி ஏற்றத்தாழ்வும், பொருளாதாரா ஏற்றத்தாழ்வும் ஒரே தளத்தில் இருக்கும் ஒரே மாதிரியான இரு பிரச்சினைகளோ அல்லது ஒரே பிரச்சினையின் இரண்டு பரிமாணங்களோ அல்ல,இரண்டு பிரச்சினைகளும் இரண்டின் தளமும் வெவ்வேறு என்பது எனது கருத்து.

அரசாங்கத்திற்கு இருக்கும் கடமைகளில் அடிப்படை தேவைகளை எல்லா குடிமக்களுக்கும் நிறைவேற்றுவது

said...

//எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை //
அங்கேதானே பிரச்சினை. இந்த நிலை வந்து விட்டது என்று எப்போது எப்படி தெரிந்து கொள்வீர்கள்? சமூக அக்கறை எல்லாம் வோட்டு வாங்கதான் என்றாகிவிட்டபின், இட ஒதுக்கீடு என்பது இனி கைவைக்கவே முடியாத ஒன்றாகிவிட்டது.

பத்ரி, நீங்கள் சொல்லும் சமனான சமூகப் பாதுகாப்பு முறை, படி நிலை அமைப்பு கொண்ட நம் சமூகங்களுக்கு வரை இன்னும் நிறைய நாளாகும். அது வரை இட ஒதுக்கீடு போன்ற சமப்படுத்தும் முயற்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் அந்த 'அது வரை' என்பது எது வரை? இட ஒதுக்கீட்டின் முழுப்பயனை அடைந்துவிட்டோம், இனி இது தேவை இல்லை என்று சொல்வதற்கு நாம் என்ன இலக்கு வைத்திருக்கிறோம்?

said...

"ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, ........."

-இந்த நம்பிக்கை, குழலி, உங்களுக்கு வந்துவிட்டதா? எனக்கு வராததாலேயே இப்படி எழுதினேன்.

said...

தருமி உங்களது பதிவை படித்தேன், பின்னூட்டமுமிட்டேன், நன்றி

said...

இட ஒதுக்கீட்டைப் பற்றி நிறைய கருத்துக்கள் இருப்பினும் தற்பொழுது விரிவாக எழுத நேரமில்லை. இது நான் சுந்தரமூர்த்தியின் கன்னியப்பன் (http://kumizh.blogspot.com/2005/06/1.html) பதிவில் இட்ட பின்னூட்டம். இந்தப் பதிவுக்குத் தொடர்பிருப்பதால், இங்கு மீண்டும் பதிகிறேன். சுந்தரமூர்த்தியின் பதிவையும் படிக்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.

சுந்தரமூர்த்தி,

நீங்கள் எழுதிய பதிவுகளிலே எனக்கு மிகவும் பிடித்தது இது.

கண்களில் நீர் வர வைத்துவிட்டது இந்தப் பதிவு, கன்னியப்பன்களின் கதை இன்று புதிதாகக் கேள்விப் படவில்லை என்றாலுங்கூட. நான் சிறுவனாகக் கிராமத்துப் பள்ளிக் கூடங்களில் கல்வி பயின்ற பொழுது பல கன்னியப்பன்களைக் கண்டிருக்கின்றேன், ஒவ்வொரு கன்னியப்பனும் பள்ளிக் கூடத்திலிருந்து நின்று விட்டதற்குப் பின்னால் ஒவ்வொரு கதையுண்டு.

//வந்த நாட்களில் பெரும்பாலும் ஒரு பச்சைநிறச் சட்டை அணிந்து வருவான். சட்டையின் கைகள் சுருட்டி மடிக்கப்பட்டிருக்கும். முழுக்கைச் சட்டை என்பதால் அல்ல, அது வளர்ந்த ஆள் அணியவேண்டிய சட்டை. அதனால் சட்டை சற்று நீண்டு கால்சட்டையை மறைத்திருக்கும்.//

திருநெல்வேலி மாவட்டம் பூச்சிக்காடு என்னும் கிராமத்தில் ஆரம்பப் பள்ளியில் படிக்கையில் என்னுடன் பயின்ற சில மாணவர்கள் சாயங்காலம் பள்ளிக் கூடம் விட்டதும் ஆடு, மாடு, கழுதை விட்டைகளை ஒரு ஓலைப்பெட்டியில் பொறுக்கச் சென்று விடுவர். அவற்றை கொண்டு போய் தங்கள் வீட்டின் பின் குவித்து மொத்தமான பின் உரமாக விற்றுக் காசு சம்பாதிப்பர். இது அவர்கள் வயித்துப் பாட்டுக்குச் சம்பாதித்த பணம். காமராசருடைய மதிய உணவுத் திட்டம்தான் அவர்களை பள்ளிக்கூடத்துக்காவது வரச்செய்தது.

பின்புறம் ஓட்டையில்லாத டவுசர் இவர்களிடம் ஒன்றுதான் இருக்கும். அதைத் துவைத்துப் போட மாற்று டவுசரில்லாததால், அதே டவுசரையே வாரம் முழுவதும் போட்டு வருவர். நாங்களெல்லாம் கிணற்றில் விழுந்து குளிக்கும் சமயம் டவுசரை கரையில் கழற்றிப் போட்டு விடுவர். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த கிழியாத டவுசர்கள் தண்ணீரைக் காண்பதுண்டு. பம்பு செட்டில் விழுந்து கிடக்கும் துண்டு சோப்பைப் பயன் படுத்தி துவைத்து வெயிலில் காயும் வரை கோவணத்துடன் நிற்பர். பின்புறம் ஓட்டையுடைய பழைய கிழிந்த டவுசர்களை போட்டால் வகுப்பில் கேலி செய்யப் படுவதால், அவற்றைத் வீட்டில் மட்டும் அணிந்து கொள்வர். ஒரு முறை பள்ளி ஆய்வாளர் திடீரென்று வந்தபடியால் ஆசிரியர் இவர்களை வீட்டுக்கு அனுப்பி அழுக்கு டவுசருக்கு மேலேயே துவைத்த ஓட்டை டவுசரைப் போட்டு வரச் செய்தார்.

//அவன் பேரப்பிள்ளைகளாவது கருவாட்டுப்பாறையிலிருந்து மீண்டார்களா என்று தெரியாது.//

இதுதான் கண்ணீர் வரச்செய்த வாக்கியம். இட ஒதுக்கீட்டினால் தங்களுடைய முன்னேற்றம் பறிக்கப் பட்டதாக சிலர் நொந்து கொள்கிற பொழுதெல்லாம், கன்னியப்பன்களின் கதைதான் எனக்கு நினைவுக்கு வரும். இட ஒதுக்கீட்டில் நிறைய கோளாறுகள், குளறுபடிகள், தில்லுமுல்லுகள் என்று இருந்தாலும் எனக்குத் தெரிந்து அதனால் ஓரளவுக்குப் பயன் பெற்று முன்னுக்கு வந்த கன்னியப்பன்களையும் அறிவேன். இட ஒதுக்கீட்டின் குறைபாடுகளுக்கும் முக்கிய காரணம் அரசாங்கத்தின் செயல்பாட்டுப் பிழைகள்தாம். ஆனால் அதைத் தவிர்த்து நல்ல மாற்றுத் திட்டமிருந்தால் ஆளும் வர்க்கம் அதை முன்வைத்திருக்க வேண்டும். முதலாளித்துவ ஜனநாயக அமைப்பில் இதுதான் இருக்கும் ஒரே வழி. ஒதுக்கப் பட்ட இடங்களுக்குள்ளேயே சலுகைகள் வறுமையால் வாடுபவர்களைச் சென்றடையுமாறு சில சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும். மேலும் கிராமப்புற வேலை வாய்ப்புகளைப் பெருக்க முயற்சிகள் எடுக்க வேண்டும். உதாரணமாக மத்தியப் பிரதேச மானிலத்தில் காங்கிரஸ் முதலமைச்சர் திக்விஜய்சிங் கொண்டு வந்த பல திட்டங்களைக் கூறலாம்.

நன்றி - சொ. சங்கரபாண்டி

said...

On the first hand, it's a good article. Although some can claim it dosn't give other side story, what it presents are FACTS.
/*
படித்து வெளிவரும் தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்
*/
It's the point need to be emphasized, but will be very much opposed by powerfull people of all castes, from our fathers to all political/caste leaders.
I encourage you to write an detailed article on this direction.
Regards, Frd

said...

////...சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்..//

நடைமுறைப்படுத்தறதுல கொஞ்சம் கஷ்டம் இருக்கலாம்.
மத்தபடி, இத செய்யமுடிஞ்சா நல்லது.

- ஞானபீடம் //
இது வெறுமனே அரசாங்கம் மட்டும் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயமில்லை, சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவர்கள் பங்களிப்பை செய்ய வேண்டியதுள்ளது இதை சாத்தியமாக்குவதற்கு


//It's the point need to be emphasized, but will be very much opposed by powerfull people of all castes, from our fathers to all political/caste leaders.
I encourage you to write an detailed article on this direction.
Regards, Frd //

உங்களது பின்னூட்டத்திற்கு நன்றி Frd,
நடைமுறையில் இதை கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமெனத்தோன்றுகின்றது, ஆனால் பலரும் இதைப்பற்றி பேசவில்லை,இதைப்பற்றி நானறிந்த சில சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துகளும், என்னளவில் தெரிந்த சில பெற்றோர்களின் கருத்துகளையும் இதைப்பற்றி ஒரு விரிவான பதிவு எழுதும்போது பதிப்பிக்கின்றேன்.

சுந்தரமூர்த்தியின் பதிவை ஏற்கனவே படித்துவிட்டேன், அந்த பதிவு ஏற்படுத்திய பாதிப்பில் என்ன பின்னூட்டமிடுவது எனத்தெரியாமல் பின்னூட்டமிடவில்லை, நன்றி சொ.சங்கரபாண்டி








இதைப்பற்றி ஒரு விரிவானதொரு

said...

குழலி ! நல்ல பதிவு.

said...
This comment has been removed by a blog administrator.
said...

நல்ல அலசல் குழலி ..

//இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்//

ஆமாம், இந்த ஓட்டையை அடைப்பது மிக முக்கியம் .. நல்ல சூழல் இருந்தும் இட ஒதுக்கீட்டீன்
பயன்களை அனுபவிப்பவர்கள் , நல்ல சூழலில்லாத தம்மின மக்களின் வாய்ப்புகளை தட்டி பறிக்கின்றனர் ..

இட ஒதுக்கீடு தலித் கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்படாததை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

said...

நீதிபதி பதவிக்கு தன் சாதிக்கு/இனத்துக்கு பிரதிநிதித்துவம் வேண்டும், தன் சாதிக்காரர் நீதிபதியாக வேண்டும் என்று போராடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்... அப்படி பணிமூப்பை புறம் தள்ளி, சாதி அடிப்படையில் நீதிபதியாக வருபவர், தன் சாதியை சேர்ந்தவர் குற்றம் சாட்டப்பட்டவராகவோ/தன் தலைவருக்கு வேண்டப்பட்டவராகவோ இருந்து பிரதிவாதி வேறு சாதியை சேர்ந்தவராயிருந்தால் தன் சாதி பற்றியெல்லாம் கவலைப்படாமல் 100% நடுவுநிலை தவறாமல் நீதியளிப்பார் என்று நம்பும் என்னை மாதிரி ஆட்களை பற்றிய உங்கள் கருத்தயும் எதிர்நோக்குகிறேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//அப்படி பணிமூப்பை புறம் தள்ளி, //
சாதிப்பாசத்துக்கும்,வெறிக்கும் வயதுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?, வலைப்பதிவுகளைப்பாருங்கள் புரியும், சாதிபாசத்திற்கும்,வெறிக்கும் வயதிற்கும் தொடர்புள்ளதா என்று...

//நீதிபதி பதவிக்கு தன் சாதிக்கு/இனத்துக்கு பிரதிநிதித்துவம் வேண்டும், தன் சாதிக்காரர் நீதிபதியாக வேண்டும் என்று போராடுபவர்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல்...//

முகமூடி உங்களிடமிருந்து இது மாதிரிதான் வரும் என எதிர்பார்த்தேன்,

தற்போது நீதித்துறையிலிருப்பவர்களெல்லாம் சாதி துறந்த மகான்களா? அவர்களெல்லாம் எந்த நியதியில் தீர்ப்பு வழங்குகின்றனரோ அதே நியதியில்தான் தீர்ப்பு வழங்குவர்,


அப்படியே இன்னும் சில கேள்விகளை நீங்கள் சேர்த்து கேட்டிருக்கலாம், இட ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்தவர் தன் சாதி மாணவனுக்கு மட்டும் அதிக மதிப்பெண் போடுவாரா?, இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்து வேலைக்கு சேரும் மாணவர் தன் சாதி மக்களுக்கு மட்டும் வைத்தியம் பார்ப்பாரா?
இது தான் தற்போது நடந்துகொண்டுள்ளதா என்ன? பிறகு என்ன நீதித்துறையில் மட்டும் இப்படி ஒரு சந்தேகம் எழுப்புகின்றனர்

said...

// முகமூடி உங்களிடமிருந்து இது மாதிரிதான் வரும் என எதிர்பார்த்தேன் // எம்மை எல்லாரையும் விட நன்கு புரிந்து வைத்திருக்கும் அன்பு உடன்பிறப்பே... என்ன தவம் செய்தேன் இந்த புரிதலுக்கும் அன்புக்கும்... சரி மேட்டர்க்கு (மேட்டர்-டேக்கு இல்ல) வருவோம்...

//தற்போது நீதித்துறையிலிருப்பவர்களெல்லாம் சாதி துறந்த மகான்களா// இல்லங்கறீங்களா... கவனமா பேசுங்க... அவமதிப்பு வழக்கு வந்திரப்போவுது... ஆசிரியர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இட ஒதுக்கீடு முறை அமலில் இருக்கிறது... நடக்க வேண்டிய முறையில் நடக்கிறது... 99 சதவீதம் பேருக்கு அது தனியாக ஒரு எண்ணமாக கூட இராது... ஆனால் நீதிபதி விஷயத்தில் நடந்தது உங்களுக்கு தெரியாதா, இல்லை மறந்து விட்டீர்களா... ஒன்பது பதவிகளுக்கு பதவி மூப்பின் அடிப்படையில் நியமன உத்தரவு வந்து விட்டது... அதில் நியாயமாவது ம**வது, எனக்கு தோன்றுவதுதான் நியாயம் என்ற அடிப்படையில் செயல்படும் இயக்கம் பணி மூப்பு அடிப்படையில் தங்கள் சாதி ஆள் நீதிபதி ஆக வாய்ப்பில்லை என்றவுடன் சாதி முறை பிரதிநிதித்துவம் வேண்டும் என்று போராடினார்கள்...வழக்காடுமன்றம் ஸ்தம்பித்தது... (அத பத்தி நமக்கென்ன கவலை... எத்தனையோ விஷயத்துக்காக நீதிமன்றம் நடக்கறதில்லை... அதெல்லாம் கேள்வியா கேக்குறீங்க) போராட்டம் வெற்றி பெற்று ஒருத்தர் மட்டும் பைபாஸ் ஆகி நீதிபதி ஆகறப்போ என்ன ஆகும்னு உங்க யூகத்த கேக்க ஆசையா இருந்திச்சி.... எல்லாம் ஒழுங்கா நடக்கும்னு சொல்லி என் வயத்துல பால வாத்தீங்க...

அப்புறம் நம்ம வலையில லேட்டஸ்ட் "வலைப்பதிவு செய்திகள்" பாத்தீங்களா??

இன்னொரு விசயம்... மேல டோண்டு பெயர்ல வந்த பின்னூட்டம் அவர் போட்டது இல்ல (ப்ளாக்கர் ஐ.டி சரியா இருந்தாலும்) அவரோட http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html பதிவுல சரி பாத்துகோங்க... இது சம்பந்தமா சில கருத்துக்கள் ஓடிகிட்டு இருக்கு

said...

டோண்டு சார், உமது பெயரில் ஒரு பின்னூட்டமுள்ளதே அது தாங்கள் எழுதியதா? இல்லையெனில் தெரிவியுங்கள் நீக்கி விடுகின்றேன், உங்களது பதிவில் அதை காணவில்லை

said...

//ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும் தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... // அருமையா சொன்ன ராசா... கேலியில்ல நெசமாவே... பிரமாதமான கருத்து

// பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம். // இது மாதிரி உலகத்துல எங்கயாவது நாடு இருக்கா ராசா...

said...

நாசமா போச்சி, புண்ணியவானே யாருப்பா அது டோண்டு பெயரில் பின்னூட்டம் விட்டது, நான் தான் உன் வம்புக்கே வருவதில்லையே இங்கே வந்து ஏனப்பா குழப்படி செய்கின்றீர்,

டோண்டுவின் பின்னூட்டத்தையும் அதற்கான என் பதிலையும் எடுத்து விடுகின்றேன்...

பின்னூட்டம் விடுற புண்ணியவானே என்னை ஆளைவிடப்பா, என் பதிவில் வந்து சேட்டை செய்யாதிங்கோ...

ஒரு வேண்டுகோளாக கேட்டுக்கொள்கின்றேன் குழப்படி செய்யாதீர். Anonymous பின்னூட்ட வசதியை எடுத்துவிட்டால் பலருக்கும் கடினமாக இருக்கும் அதனால் தான் விட்டு வைத்திருக்கின்றேன், ஆளை விடப்பா

said...

// பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம். // இது மாதிரி உலகத்துல எங்கயாவது நாடு இருக்கா ராசா...

இது மாதிரி ஒரு நாடு இருக்கா இல்லையானு தெரியவில்லை, ஆனா எனக்கு தெரிந்து பிறப்பால் ஏற்றத்தாழ்வு பார்ப்பது 99% நாடுகளில் இல்லை...

அது சரி நம் நாடு ஏன் இது மாதிரி ஒரு சமுதாயத்தை உருவாக்கி மற்ற நாடுகளுக்கு ஒரு முன் மாதிரியாக இருக்கக்கூடாது என்ன முகமூடி நான் சொல்வது சரிதானே

said...

குழலி அவர்களே, நீங்கள் நினைத்தது சரியே. அது நான் இட்டப் பின்னூட்டம் இல்லை. என்ன செய்வது அந்தப் பேர்வழிக்கு என் மேல் என்ன பாசமோ விட மாட்டேன் என்கிறார். என்னுடைழப் பின்னூட்டமாக இருப்பின் உங்கள் மின்னஞ்சல் வருகைப் பெட்டியில் அது தெளிவாகக் குறிப்பிடப் பட்டிருக்கும். முகமுட்டிக்கு நன்றி. பெடியஙள் பதிவில் பாருங்கள். (வலைப்பதிவருக்கு எச்சரிக்கை). தயவு செய்து அனானி பின்னூட்டங்களைச் செயலிழக்கச் செய்யுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
(அன்னனிப் பதிவுகளைச் செயலிழக்கச் செய்யும் வரை இதில் பலன் உண்டா எனத் தெரியவில்லை. என் குறிப்பிட்டப் பதிவிலும் பார்த்துக் கொள்ளுங்கள்.)

said...

எங்கப்பா அந்த அல்வாசிட்டி சம்மி, ஏம்பா நீ பின்னூட்டத்தில கேட்ட கேள்விக்கு பதிவாகவே பதில் போட்டிருக்கின்றேன், இன்னும் வந்து உங்கள் கருத்தை தெரிவிக்கவில்லை

said...

இப்போது நிலைமை பரவாயில்லை குழலி அவர்களே. என்னுடையப் பின்னூட்டங்கள் புகைபடத்துடன் வரும். அனானி வழியில் வரும் போலி டோண்டு அதில் புகைப்படம் போட முடியாது. அப்படி நகல் எடுத்து போட நினைத்தால் அவர் புதிதாகப் வலைப்பதிவு திறக்க வேண்டும். ஆனால் அதன் ப்ளாக்கர் எண் வேறாக இருக்கும். எலிக்குட்டி அதை காட்டிக் கொடுத்து விடும். ஆகவே அவருடைய கமென்டுகள் இம்மாதிரி முடிகின்றன.
"(எலிக்குட்டியைப் பிடித்து உப்பு மிளகாய் வெங்காயம் போட்டு பிரட்டல் செய்து சாப்பிடவும்)"
அந்த மனம் பிறழ்ந்தவர் என்னவேல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் பாருங்கள்? இனிமேல் என் பின்னூட்டங்கள் என் புகைபடத்துடன் வரும். மேலும் அவை என் தனிப்பதிவில் நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/05/blog-post_25.html#comments

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Sorry, no photo is coming. It seems you have not enabled the photos' publishing. It's a pity.

N.Raghavan

said...

சரி செய்துவிட்டேன், இனியொன்றும் குழப்பங்கள் இருக்காது என நம்புகின்றேன்...

said...

"இதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும் தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை... "குழலி


"ஏழை எந்த சமூகக் குழுவின் உறுப்பினராக இருந்தாலும் அவருக்கு உணவு கொடுக்க... " பத்ரி


என் கனவின் 2ம்-நாளில் இவைகளைப் பற்றித்தான் சுருக்கிச் சொல்லியுள்ளேன். ஆனால், அவைகள் வெறும் கனவுகளாகவே போய்விடுமோ என்ற பயம் உண்டு.

said...

http://thatstamil.oneindia.in/news/2006/05/23/plustwo.html

indha 1003 ella vasidhigalum niraindha soozhnilayil evvalavu
madhippen perum ?

said...

இந்த பதிவில் என் பின்னூட்டதை எழுதுகையில் இதைப்பற்றி என் பதிவில் எழுத நினைத்தேன். இதோ என் கருத்துக்கள் இங்கே

said...

இட ஒதுக்கீடு. தொன்றூதொட்டுப் பேசிப்பேசியே, உருப்படியாக எதுவும் செய்யப்படத சில் விஷயங்கள்ள ஒண்ணு.

உடனே பெரியார் காலதில் இருந்து எப்படியெல்லாம் மாறியிருக்குண்ணு பேசிட்டு வீட்டுக்குப் போகப்படாது.

நண்பர் பத்ரி சொன்னது முக்கியமானது.

@@”சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.”@@

சொல்ல நல்லாத்தான் இருக்கு. காசுதான் எல்லத்தைய்ம் போட்டுக் கொளப்புதே.

பொருளாதாரம்லாம் வேறங்க, சாதி விஷ்யம் வேறன்னெல்லாம் விடியவிடியப் பேசு பேசுன்னு பேசிட்டு, ராக்கெட் விடரதுக்கு ப்ளைட்டப் புடுச்சுப் போன பயலுகளத்தான் எனக்குத் தெரியும்.

@@”இது வெறுமனே அரசாங்கம் மட்டும் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயமில்லை, சமூகத்திலுள்ள ஒவ்வொருவரும் அவரவர்கள் பங்களிப்பை செய்ய வேண்டியதுள்ளது இதை சாத்தியமாக்குவதற்கு”@@

குழலி தப்பா நினக்காதங்க. வினோபபாவேயின் பூதான இயக்கம் மாதிரியில்ல இருக்கு. நல்ல விஷயம் தான், நடக்கனுமே.

இட ஒதுக்கீட்ட சாதிரீதியா மட்டுமே அணுகணும்னு சொன்ன நண்பர் ஒருத்தர் “யாரு யாரச் சொறண்டரதுங்கறதையாவது சாதி ரீதியான ஒதுக்கீடு செய்யட்டுமேன்னாரு; என்னமோ என்னயக் கையும் களவுமாப் புடிச்ச மாதிறி. (வேற எப்படியும் அவரால பேச முடியத எரிச்சல்ல)

அவர் எரிச்சல் என்னமோ எனக்குப் புரிஞ்சாலும், உண்மையில் அதைத்தான் நம்ம செய்ய முடியும்.

முதளாளித்துவத்தின் முகமூடிகள் சிக்கலானவை. ஆனால் புரிந்த்து கொள்ளலாம், மனதில் உண்மை இருந்த்தால்

கருத்தைப் பதிவு செய்யக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி குழலி.