புரட்சித்தலைவி செல்வி. ஜெயலலிதா

எப்பொழுதும் யாரையாவது விமர்சனம் செய்து எழுதியது சற்று அலுப்படைந்து விட்டதால்,
சிலரின் நல்ல பக்கங்களை எழுதலாம் என ஆரம்பித்துள்ளேன்

இந்த வரிசையில் இரண்டாவதாக நான் எழுதுவது முதல்வர் செல்வி.ஜெயலலிதா.







குடும்பமில்லை, தலைமுறைக்கும் சொத்து சேர்க்கவேண்டுமென்ற அவசியமில்லை,
கண்மூடித்தனமாக பின்பற்றவும், காலில் விழவும் பல ஆயிரம் பேர் உள்ளனர்,
இவர் சொல்வதை வேதவாக்காக எடுத்து செயல்பட லட்சக்கணக்கில் தொண்டர்கள்,
இவர் மட்டும் நேர்மையாக, சரியான ஆட்சி புரிந்திருந்தால் இவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்,
ஏன் இந்தியாவையே ஆளத்தகுதி படைத்தவர் என்ற ஒரு ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு செல்வி.ஜெயலலிதாவைப்பற்றி

நடிகையாக தொடங்கி 1984ல் அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாலராக கடலூர் கூட்டத்தில் அரசியலுக்கு அறிமுகமாகி முதல்வராக வளர்ந்தவர் செல்வி.ஜெயலலிதா.








திரையுலகில் அவர் நடிக்க வந்ததே விருப்பமில்லாமல் தான்,

தன் குடும்பத்தின் பொருளாதார வறுமையை போக்கத்தான் அவர் நடிக்க வந்தார்,

அதை முன்பு (அரசியலுக்கு வரும்முன் ) சில பேட்டிகளிலும் கூறியுள்ளார்.

அவருடைய சில பழைய சில பேட்டிகள் சில பத்திரிக்கைகளில் மீள் பதிவு செய்யப்பட்டன

செல்வி.ஜெயலலிதா நடிகையாக இருந்த போது நடந்த சில சம்பவங்களை படித்தபோது ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றேன்.

திரையுலகில் அந்த காலகட்டத்தில் கதாநாயகனி ஆதிக்கமே(இப்பொழுது மட்டுமென்ன அதேதானே!), திரைப்படங்களில் நடிப்பு மட்டுமின்றி, கதாநாயகி, பிண்ணணி பாடகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என அத்தனையும் அவர்களின் தேர்வுதான், அவர்களின் தயவிருந்தால் மட்டுமே திரையுலகில் இருக்கமுடியும் என்ற சூழ்நிலை.

இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளங்களில் கதாநாயகர்கள் வரும் போது
அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூறி (போலி?!)மரியாதை செலுத்துவர்,
ஆனால் இந்த கதையெல்லாம் செல்வி.ஜெயலலிதாவிடம் நடக்காது,
கதாநாயகர்கள் வந்தாலும் சரி, போனாலும் சரி அவர் அவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பர்,
இதைப்பற்றி ஒரு நாள் கேட்டதற்கு அவர்களைப்போல் நானும் இங்கே வேலைதான் செய்து கொண்டிருக்கின்றேன்,
எனக்கு எந்த அவசியமும்மில்லை என்றார், இதை என்னால் திமிர்த்தனமாக பார்க்கமுடியவில்லை,
செல்வி ஜெயலலிதா அவர்களின் தன்னம்பிக்கையாகவும், அவருடைய தைரியத்தையும் பெண்ணடிமைக்கு எதிரான
மனப்பாங்கையும் தான் காண்கின்றேன்.







மேஜர்.சந்திரகாந்த் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த காட்சிகளெல்லாம் இன்னும் கண் முன்னால் நிற்கின்றது,
அப்படி ஒரு அற்புதமான நடிப்பைத்தந்தார் செல்வி.ஜெயலலிதா.

செல்வி.ஜெயலலிதாவிற்கு நடிப்பு திரையில் மட்டுமே கை வந்த கலை,
நிஜத்தில் அல்ல, எதையும் பூசி மெழுகாமல் ஆதரிப்பதோ எதிர்ப்போதோ முகத்திற்கு நேராக செய்பவர் பேசுபவர்,
விமர்சனத்தைப்பற்றி கவலைப்படமால் செயல்படுபவர்.

நடிகையாக இருந்தாலும் எத்தனைத்திருமனங்கள் செய்து கொண்டாலும் நிறைவேறாத காதல் அனுபவங்களை
யாரும் பேட்டியில் சொல்வதில்லை, எங்கே தமது பெயர் கெட்டுவிடுமோ என்கிற பயத்தில்
ஆனால் கடந்த காலங்களில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அவருக்கு பதின்ம வயதில் இருந்த இன்பாக்சுவேஷன்
பற்றி கூறி இருந்தார், இதெல்லாம் அவரின் தைரியத்திற்கும், பெண்விடுதலை முற்போக்கு எண்ணத்திற்குமான் சான்று.

எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்தபோது சில அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவிற்கு ஆதரவளித்து கட்சியை கைப்பற்ற முனைந்தனர்,
ஆனால் ஆதரவளித்தவர்களெல்லாம் முதலில் கட்சியைக்கைப்பற்றி பின் ஜெயலலிதாவை விலக்கிவிடலாம் என நினைத்தனர்,
ஆனால் இந்த ஆட்டமெல்லாம் செல்வி.ஜெயலலிதாவிடம் எடுபடவில்லை, கட்சி செல்வியின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

அரசியல் சாணக்கியர், இராஜ தந்திரி என்ற பெயர்களோடு பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சுபவர்
கலைஞர், ஆனால் இவருடைய எந்த தந்திரமும், சாணக்கியத்தனமும் செல்வி.ஜெயலலிதாவின் வியூகங்களுக்கு முன் எடுபடவில்லை.

1996 தேர்தலில் மிகக்கடுமையான தோல்வி, செல்வியே பர்கூரில் தோல்வியுற்றார்,
தமிழகத்தில் பா.ஜ.க. வோடு கூட்டணி வைக்க பயந்து கொண்டிருந்த சமயத்தில்
பா.ஜ.க. வோடும் கூட்டணி ஏற்படுத்தியவர், பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் முகவரி கொடுத்தவர் இவர்தான்.
அவ்வளவு ஏன் வாஜ்பேயியை தமிழக கிராம மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரே இவர்தான்.
1998 தேர்தலில் வெற்றி மிதப்பில் தேர்தலை சந்தித்த திமுக-தாமக விற்கு மரண அடி கொடுத்தது
செல்வி.ஜெயலலிதாவின் கூட்டணி வியூகம்தான்,
பா.ம.கவின் பலத்தை சரியாக கணிக்காமல் ஒரு நாடாளுமன்றத்தொகுதிதான் தர முடியும் கண்ணாமூச்சி காட்டிய
திமுகவிடமிருந்து பா.ம.க வைப்பிரித்து 5 தொகுதிகள் கொடுத்தார், பாஜக மற்றும் மதிமுக வை சேர்த்து மாபெரும்
கூட்டணியை உருவாக்கி வெற்றிபெற்றாரென்றால் அவரது அரசியல் சாணக்கியம்தான் காரணம். (இந்தத்தேர்தலின் போது எனது கல்லூரி நண்பர்களோடு நடந்த விவாதங்கள் கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஒரு தனிப்பதிவு போடுமளவு மிக சுவாரசியமானவை ), மாபெரும் தோல்வியிலிருந்து மீண்ட ஃபீனிக்ஸ் பறவைத்தான் செல்வி.

செல்வி. ஜெயலலிதாவை நம்பி கெட்டோரில்லை, நம்பாமல் கெட்டவர்கள் தான் உண்டு.
விசுவாசிகளுக்கு எப்போதும் நல்லது செய்பவர் செல்வி.
இல்லையன்றால் ஓ.பி.எஸ் முதல்வராகமுடியமா?

முதல்வராக ஏற்றிவிட்டப்பின் ஏற்றிவிட்டவரின் முதுகில் குத்தியதைத்தான் இந்த வரலாறு கண்டுள்ளது
எஸ்.ஆர்.பொம்மையிலிருந்து தற்போது முதல்வராக பதவியேற்ற உமாபாரதியின் ஆதரவாளர் வரை,
ஆனால் ஓ.பி.எஸ். என்ற விசுவாசியை தேர்ந்தெடுத்தது அவரின் மிகப்பெரிய அரசியல் சாணக்கியத்தனம்.








எத்தனை ஆண்டுகளாகத்தான் நட்பிற்கு இலக்கணமாக குசேலர்-கண்ணண்,
துரியோதனன் - கர்ணன், கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் என்பது,
இனி ஜெயலலிதா-சசிகலா என்று கூறலாம்,
அந்த அளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்.
சில பத்திரிக்கையாளர்களிலிருந்து பல அரசியல்வாதிகள் வரை
அனைவரும் 1996 தோல்விக்குப்பின் எல்லாவற்றிற்கும் காரணம் சசிதான் நானில்லை
என அறிக்கைவிட்டுவிட்டு அவரை ஒதுக்குங்கள் என்றனர்,
ஆனால் அவர் எந்த காலத்திலும் நட்பை விலக்கவில்லை.

தி.மு.க வில் அந்தந்த பகுதியிலே பல குறுநில மன்னர்களின் ஆதிக்கம்,
விழுப்புரத்திலே பொன்முடி, சேலத்திலே வீரபாண்டி ஆறுமுகம்,
வேலூரிலே துரை.முருகன், தூத்துக்குடியிலே என்.பெரியசாமி கும்பகோணத்திலே
கோ.சி.மணி மற்றும் பலர், இங்கெல்லாம் கிட்டத்தட்ட தி.மு.க இவர்களின்
கட்டுப்பாட்டில்தான், இந்த கதையெல்லாம் அதிமுகவில் இல்லை,
அங்கே அம்மாதான் எல்லாம் மற்றவர்களெல்லாம் சும்மா.

யாரை அவர் கட்சியில் சேர்த்தாலும் விலக்கினாலும் யாருக்கு தேர்தலில் போட்டியிட
வாய்ப்பளித்தாலும் அளிக்கவில்லையென்றாலும் எந்த முனகலும் வராது,
ஆனால் திமுகவில் கும்மிடிப்பூண்டி வேணுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்காததால்
நடந்த உள்குத்து வேலைகள் அனைவரும் அறிந்ததே.

கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் என்னை மிகவும் கவர்ந்தவர் செல்வி தான்.
தான் மட்டுமே சாப்பிடவேண்டுமென்ற என்னமில்லாமல் எல்லோரையும், அதுவும்
கடைசி கட்டத்தொண்டன் வரை சாப்பிட அனுமதிப்பவர் செல்வி தான்.
அதுதான் திமுக கடைசிகட்டத்தொண்டர்கள் விரக்தியிலும் அதிமுக தொண்டர்கள் பசையோடு இருக்கவும் காரணம்

யாராலும் கைவைக்கமுடியாது என்கிற எண்ணத்திலிருந்த
காஞ்சி சங்கராச்சாரியரை கைது செய்தபோது அவரின் தைரியத்தின் மீதிருந்த மதிப்பு மேலும் அதிகரித்தது.

இதைவிட பெரிய ஆச்சரியம் காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது

கோவையிலே முஸ்லீம் மதத்தீவிரவதிகளை கட்டுக்குள் வைத்திருந்ததெல்லாம் நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய விடயம்.

எல்லாவற்றுக்கும் மேலாக தொட்டில் குழந்தைகள் திட்டத்தை உலகிலேயே முதன் முதலில் உருவாக்கி
பெண் குழந்தைகளை அனாதைகளாக்கமல் தடுத்தாரே அது தான் எப்போதும் அவரிடம் எனக்கு பிடித்தவிடயம்.

அரசியல் கட்சிகளின் பலத்தை மிகச்சரியாக கணக்கிட்டு சரியான முறையிலே கூட்டணி சேர்த்து தேர்தல் களம் காணும்
செல்வி.ஜெயலலிதாவின் அரசியல் தந்திரம் வெற்றிபெறுகின்றதா அல்லது செல்வி ஜெயலலிதா அறிமுகப்படுத்திய
கூட்டணி கூட்டல் கழித்தல்களை பின்பற்றி கூட்டணி பலத்தோடு(கூட்டணியை தேர்தல் வரை வைத்து)
இருக்கும் கலைஞரின் சாணக்கியம் வெற்றிபெறுகின்றதா என வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பார்ப்போம்.

13 பின்னூட்டங்கள்:

said...

இதுவரை கலைஞர் எந்த சாணக்கியத்தனமும் அம்மாவிடம் காட்டவில்லை., செல்விதான் உளவுதூறைய வச்சு கூட்டணிகட்சிகளை வளைக்கப் பார்க்கின்றார்கள். முதன்முதலில் அம்மா வெற்றிக்கு காரணம் 'ராஜிவ் காந்தி' மரணம்., இரண்டாவதுமுறை கூட்டணி பலம். அ.தி.மு.கா ல யாரு இருக்கா நிக்க? அள்ளிவிட வேண்டியதுதானே சீட்டுக்கள?.,. அவங்ககிட்ட இருக்கிற ஆளுகள்லயே இளிச்சவாயி ஒ.பி.எஸ்தான். பின்ன யாருக்கு குடுக்க செல்றிங்க?., சசிக்கா?., செல்வி அரசியல் வாழ்க்கையில தன் செல்வாக்குனால பெற்ற வெற்றின்னா, இந்த இடைத்தேர்தல் வெற்றிய மட்டும்தான் சொல்ல முடியும்(2 இடம்). அசட்டு துணிச்சலுக்குப் பேரு தன்னம்பிக்கையா?., ஒவ்வொரு வழக்குலயும் நீதிபதி பக்கம்பக்கமா அறிவுரை சொல்றாரே... என்னாத்துக்கு?... விளாட்டுக்கா?. அதுசரி, அடுத்த தேர்தல்ல அம்மாகிட்ட 'சீட்' கேட் கப்போறிங்க போல?., கவலைப் படாதிங்க., நிச்சயம் கிடைச்சுரும், இந்தப் பதிவ அ.தி.மு.க காரங்க கண்ணுல படற மாதிரி வச்சுருக்கப்பு...அப்புறம்., உங்க வீட்டுப் குழாயில தண்ணி வராது... பணமா வரும். அம்மாகிட்ட காட்டும்போது மறக்காம என் பின்னுட்டத்தை அழிச்சுருங்க!.கும்மியடிச்சுட்டுப் போயிறாதிக!...ம்...

said...

அம்மணி அங்கிட்டு சிங்கப்பூர்ல உக்காந்துகிட்டா இவங்க ஆடுற ஆட்டம் எப்புடித் தெரியும் கொஞ்சம் இங்கிட்டு வந்து பாருங்க

said...

நான் படங்களை upload செய்ய www.geocities.com பயன்படுத்துகின்றேன், ஆனால் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் geocities பயன்படுத்தினால் அடுத்த சில மணி நேரங்களுக்கு எமது படங்கள் டவுன்லோட் ஆவது தடுக்கப்படுகிண்றன, யாரேனும் வேறு நல்ல இலவச இணையம் படங்களை அப்லோடு செய்ய இருந்தால் கூறுங்களேன்.

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி சார் ,
அப்போ டெல்லி அன்னை , இப்போ சென்னை அம்மா .....
என்ன ஏதாச்சும் புது கட்சி ஆரம்பிக்க போறீங்களா? கூட்டனிக்கு உஷார் பன்றீங்களா?
அடுத்தது யார்? விஜய காந்தா?? இல்லை ரஜினி யா??

{{{{//செல்வி.ஜெயலலிதா நடிகையாக இருந்த போது நடந்த சில சம்பவங்களை படித்தபோது ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றேன் //}}}

சினிமா காரங்க பேட்டியை எல்லாம் படிச்சு நம்புற ஆளா நீங்க?? நெசமாவா???

{{{{இந்த ஆட்டமெல்லாம் செல்வி.ஜெயலலிதாவிடம் எடுபடவில்லை, கட்சி செல்வியின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது.]}}}}

அம்மாவின் நடிப்பு திறமை கை கொடுத்தது :)

{{{விசுவாசிகளுக்கு எப்போதும் நல்லது செய்பவர் செல்வி.
இல்லையன்றால் ஓ.பி.எஸ் முதல்வராகமுடியமா}}}}}

மனசை தொட்டு சொல்லுங்க.. இது விசுவாசிக்கு நல்லாது செய்யும் நோக்கில் செய்ததா? ஒருத்தன் தன் அழகான பொன்டாட்டிக்கு குருட்டு பிச்சைக்காரனை காவல் வெச்சானாம் .. பிச்சைகார மேல் விசுவாசமா?? பாசமா?? அதான் யோசிக்கிறேன்..

{{கோவையிலே முஸ்லீம் மதத்தீவிரவதிகளை கட்டுக்குள் வைத்திருந்ததெல்லாம் நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய விடயம்.}}

கோவைல தீவிரவாதிங்களை கட்டுப்பாட்டுல வெச்சாங்க..சரி , அதே போல 3 கல்லூரி மாணவிங்களை பேருந்துல வெச்சி எரிச்ச அவங்க கட்சி தீவிரவாதிங்களை ஏன் கட்டுப்படுத்தலை????

{{{பிசிராந்தையார் என்பது,
இனி ஜெயலலிதா-சசிகலா என்று கூறலாம்,
அந்த அளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்}}}

"சசிகலா"வின் நட்புக்கு மட்டும் என்று மாற்றி சொல்லுங்கள்.. அவ்வளவு செய்த திருநா வை தூக்கி அடிச்சவங்க...


{{காஞ்சி சங்கராச்சாரியரை கைது செய்தபோது அவரின் தைரியத்தின் மீதிருந்த மதிப்பு மேலும் அதிகரித்தது.}}

அதோட பழி வாங்கும் பன்பும் .. கரெக்ட்???

{{எல்லாவற்றுக்கும் மேலாக தொட்டில் குழந்தைகள் திட்டத்தை }}}}

அதிலயும் சூப்பரா ஒரு ஊழல் செஞ்சாங்களே.. அதுவுமா???

ஆனா. பல இடங்களில் அவங்க நெகட்டிவ் எல்லாம் உங்களை கவர்ந்ததுனு சொல்லி இருக்கீங்க... ! வஞ்சப் புகழ்ச்சியோ ????

எது எப்படியோ... பிடிகாதவங்க கிட்ட இருக்கு நல்ல விடயங்களை தேடி பாரட்ட ஒரு மனசு வேனும்பா..
இது தான் உங்க கிட்ட எனக்கு பிடித்த விசயம்.. என்னா சொல்றீங்க காஜா?? :)


வீ எம்

said...

குழலி... photobucket.com டிரை பண்ணி பாருங்களேன்.

அ.தி.மு.க.விலே யாரு ஆளுங்க இருக்காங்கன்னு ஒரு போடு போட்டீங்களே அப்படிப்போடு. குழலி பா.ம.க.வைப் பத்தி பதிவு போடலை. இது அ.தி.மு.க. பத்திய பதிவு. அவசரத்திலே மாத்தி எழுதிட்டீங்க பாருங்க!

said...

அய்யா அப்படிபோடு நல்லதா நாலு வார்த்தை நாலு பேரப்பத்தி எழுதினால் பொறுக்காதே, சரி விடுங்க இனிமே திட்டுவதையே தொடர்கின்றேன்... என்ன சொல்றீங்க, சும்மா தமாசு

ஆனால் ஒரு விடயம் இந்த பதிவை மிகவும் யோசித்து யோசித்துதான் எழுதினேன், எனக்கு பிடித்தமனா விடயம் செல்வி.ஜெயலலிதாவிடம் அவ்வளவு(?!) இருந்தது

//ஒருத்தன் தன் அழகான பொன்டாட்டிக்கு குருட்டு பிச்சைக்காரனை காவல் வெச்சானாம் .. பிச்சைகார மேல் விசுவாசமா?? பாசமா?? அதான் யோசிக்கிறேன்..
//
இதுக்கு பேருதான் வீ.எம். பஞ்ச் ஆ!

//அவ்வளவு செய்த திருநா வை தூக்கி அடிச்சவங்க...
//
அந்த சமயத்தில் அரசியலை கூர்ந்து கவனித்திருந்தால் புரியும், திருநாவின் எண்ணம் முதலில் அதிமுகவை செல்வியை வைத்து கைப்பற்றி பின் செல்வியை ஓரம் கட்டுவது, இதையே திரு.ஆர்.எம்.வீ. திருமதி ஜானகியை வைத்து கட்சியை கைப்பற்ற முயற்சி செய்தார் என்பது உலகறிந்த உண்மை.

//அடுத்தது யார்? விஜய காந்தா?? இல்லை ரஜினி யா??
//
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வார இறுதியில் எழுதுகின்றேன்

said...

நன்றி மூர்த்தி மற்றும் மாயவர்த்தான், முயற்சி செய்து பார்க்கின்றேன்

//Comment Deleted
This post has been removed by the author.
//

அட யாருப்பா இங்கன எழுதின பின்னூட்டத்தை அழிப்பது, இங்கன ஒன்னும் பெரச்சினையில்ல யின்னா வேணா எழுதுங்க

said...

அய்யா மக்களே இந்த பதிவுக்கு போட்டதே 3 ஓட்டுதான், அந்த 3ம் - ஆ போட்டு தள்ளிட்டிங்க, வாழ்க வாக்களித்த அந்த மூவரும்

said...

oru votu potuteen .. !

said...

//oru votu potuteen .. !//
மிக்க நன்றிங்க வீ.எம். நீங்க ஓட்டு போட்டப்ப கூட -1 தான் காண்பித்தது, நான் என்னுடைய ஒரு ஓட்டை போட்டதற்கு பிறகுதான் 0 ஆனது, ம்....

said...

குழலி கடலூரில் நீங்கள் எந்த இடம்?. எனக்குத் தெரிந்தவர்கள் நிறைய பேர் இருக்காங்க அங்க

said...

//இந்த வரிசையில் இரண்டாவதாக நான் எழுதுவது முதல்வர் செல்வி.ஜெயலலிதா.//

அப்போ கருனாநிதி முன்னாள் முதல்வரா???

அடப்பாவிங்களா??? உங்களுக்கெல்லாம் மனசாட்சியில்லியா???

பொட்"டீ"