பிரேமானந்தாவுடன் ஒரு சந்திப்பு

இத்தனை நாள் வாழ்க்கையை எதிர்கொள்ள ஒரு பாதுகாப்பு அரணாக பெற்றோர்கள் இருந்தனர், இன்னும் எத்தனை நாள் இந்த பாதுகாப்பு அரணினுள்? இதுவரை அவர்கள் பாத்திகட்டி, வேலிபோட்டு,தண்ணீர் உரம் என பாய்ச்சி இந்த செடியை மரமாக்கிவிட்டனர்...

அடுத்து என்ன செய்வது? ஓரளவுக்கு எதிர்காலத்திட்டங்களை வைத்திருந்தாலும்
இன்னும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுமுடிவுகள் கூட வராத போது பார்ப்பவர்களிடமிருந்தெல்லாம்
இலவச அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன.....

இலவச அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காதில் கேட்டுக்கொள்ளும்
அளவிற்காவது மனமுதிர்ச்சி அடைந்திருந்தேன் அப்போது,
இல்லையென்றால் இந்த நேரத்தில் என்னை எதிரிகளாக பார்ப்பவர்களின் கணக்கு
இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

எப்போதுமே மோட்டார் சைக்கிளில் காரணமேயில்லாமல் ஒரு நீண்ட தூரப்பயனம்(50 - 100 கி.மீ.)
சென்று வருவது ஒரு விதமான கனவாகவே இருந்தது....

மோட்டார் சைக்கிளில் சுற்ற வேண்டுமென்ற ஆசைகளோடு திரிந்த போது
நண்பன் பஃப்ஸின் டி.வி.எஸ். 50 தான் அதை ஓரளவு தீர்த்து வைத்தது....

அந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் காலை ஒரு பழைய டி.வி.எஸ்.50 வாசலில் இருந்தது....

ஏதோ வேலையாக கடலூர் வந்த ஜெயிலர் மாமாவின் வண்டி பழுதடைந்துவிட்டதால்
அதை இங்கே விட்டுச்சென்றார்,

அப்பா 50 ரூ கொடுத்து வண்டியை பழுதுபார்த்து வண்டியை மாமாவிடம் கொடுத்துவிட்டு
வர சொன்னபோது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... அட குறைந்தது பத்து பதினைந்து கிலோமீட்டர்கள் வண்டியில் போகலாமே என்று.


என்னைப்போலவே நண்பன் வர்மாவும் வீட்டிலிருந்தான் பொழுது போகாமல்
இலவச அறிவுரைகளைக்கேட்டுக்கொண்டு....

அவனையும் அழைத்துக்கொண்டு இருவரும் கேப்பர் மலையிலிருந்த
மத்திய சிறைச்சாலை நோக்கி எங்கள் மோட்டார் பயணத்தை துவங்கினோம்

திருப்பாப்புலியூர் தாண்டி வண்டிப்பாளையம் சாலையில் பயணிக்கும் போது
வண்டிக்கு மூச்சிரைப்பு வந்து உருமிக்கொண்டே நின்றுவிட்டது....

வண்டியில் பெட்ரோல் இல்லை.... மாற்றி மாற்றி வண்டியை தள்ளிக்கொண்டே
முருகன் கோவிலருகில் சில்லறையில் பெட்ரோல் விற்கும் ஒரு கடைக்கு சென்று
பெட்ரோல் கேட்டால் அரை லிட்டர் ரூ.17 என்றார்,
வண்டி பழுது பார்க்க ரூ.40 கொடுத்தது போக மீதம் ரூ.10 தான் இருந்தது.
வர்மாவிடம் ஒரு 10 ரூபாய் இருந்தது...
17 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு திரும்பி பேருந்தில் எப்படி வருவது
எப்படியும் இரண்டு பேருக்கும் 12 ரூபாய் தேவைப்படும்...
மாமா எப்படியும் பணம் தருவார் தான், ஒரு வேளை அவர் இல்லையென்றால்?!
என்ற நினைப்போடே சரி 10 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல்
கொடுங்கள் என கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டார்.

எங்களைப்போலவே படித்து முடித்துவிட்டு இலவச
அறிவுரைகளை கேட்டுக்கொண்டிருந்த குருவின் வீட்டிற்கு சென்று
அவனிடம் ஒரு 10 ரூபாய் வாங்கி பெட்ரோல் போட்டுக்கொண்டு
கேப்பர் மலையிலே ஏறத்தொடங்கினோம், இருவரையும் வைத்து
இழுத்துக்கொண்டு கேப்பர் மலையில் ஏறும் அளவுக்கு டி.வி.எஸ்.50க்கு
சக்தியில்லை... தள்ளிக்கொண்டே கடலூர் மத்திய சிறைச்சாலையை
அடைந்தோம்...

ஜெயிலர் மாமாவை பார்த்து வண்டியை ஒப்படைத்துவிட்டு
சிறையை சுற்றி பார்க்க வேண்டும் என்றேன்....

Image hosted by Photobucket.com

பழமலை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற கைதியை கூப்பிட்டு
சுற்றி காட்ட சொன்னார்....

பழமலை ஆயுள் தண்டனை பெற்ற கைதி, வெள்ளை சட்டை
வெள்ளை கால்சட்டையோடு எங்களை உள்ளே அழைத்துச்சென்றார்.

ஏற்கனவே நான் சிறு வயதில் ஒன்றிரண்டு முறை சிறையை சுற்றிப்பார்த்திருந்தாலும்
நண்பன் வர்மாவுக்கு அதுதான் முதல்முறை...

சிறையினுள் அப்படி ஒரு அமைதி, அங்கே ஆயிரம் கைதிகளுக்கு மேல்
இருக்கின்றனர் என்று எந்த ஒரு அடையாளமுமில்லை...

முதலில் சிறையின் சமையலறையை பார்த்தோம்....
மகாநதி படத்தில் காட்டப்பட்டது மாதிரியான சமையலறை...

சிறையில் எங்கெங்கு நோக்கினும் சுத்தம்...
மிக அழகாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது...
கழிப்பறைகளைத்தவிர

அந்த நேரத்தில் கையில் தடியோடு வெள்ளை தொப்பி,
சட்டை, கால்சட்டையோடு ஒருவர் கடந்து சென்றார்,
அவர்தான் ஆட்டோ சங்கர் வழக்கில் ஆயுள் தண்டனையடைந்த
பாபு... தற்போது அவர் மானிட்டர்...

சிறையில் பாரதி இருந்த அறை தற்போது நினைவிடமாகவும்
நூலகமாகவும் மாற்றப்பட்டிருந்தது....
ஆனால் நூலகம் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை...

Image hosted by Photobucket.com

இங்கே தானே ஜான் டேவிட்டும் பிரேமானந்தாவும் இருக்கின்றனர்
என கேட்டோம்... அடுத்த பிளாக்கில் தான் ஜான் டேவிட் இருக்கிறார்
என கூறி... பின் சற்று தொலைவிலிருந்தே ஜான் டேவிட்டை காண்பித்தார்
டீ-சர்ட்டும் கால்சட்டையுமாக நின்றிருந்தார் ஜான் டேவிட்...கையில் புத்தகத்தோடு
யாரிடமோ பேசிக்கொண்டு.... பழமலை ஜான் டேவிட்டோடு பேசுகிறீர்களா
என்றதற்கு இல்லை அவரும் எங்களை மாதிரி சின்ன வயசு பையன் தான்
ஏதோ சூழ்நிலை, தவறு நடந்து இங்கிருக்கின்றார், அவரைப்பார்த்து பேசினால்
அவர் ஏதோ காட்சிப்பொருள் மாதிரி அவரைப்பார்த்து விட்டு போவது போல
மன வருத்தப்படுவார், அதானால் வேண்டாம், பிரேமானந்தாவை காட்டுங்கள்
என்றோம்...


எதிர்ப்படும் கைதிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் அய்யாவோட தங்கச்சி பசங்க
அய்யா ஜெயில சுத்திகாமிக்க சொன்னார் என்று அவருடைய செல்வாக்கி பறைசாற்றிக்கொண்டே பிரேமானந்தவின் அறைக்கு கூட்டி சென்றார்.

Image hosted by Photobucket.com

ஒரு சிறிய அறைக்குமுன் பழமலை நின்று இதான் சாமியாரின் அறை என கூறிவிட்டு

"சாமியாரே... உங்களை பார்க்க வந்திருக்காங்க" என குரல் கொடுத்தார்...

தமிழகத்தையே சில காலம் கலக்கி செய்திகளில் இடம் பிடித்திருந்த
உள்ளேயிருந்தாலும் வெளியே இருந்தாலும் சுலபமாக பார்க்க முடியாத
ஒரு மனிதரை(?!) மிக எளிதாக பார்க்க வந்திருக்கின்றோம்,
அதுவும் எங்களுக்காக அறையை விட்டு வெளியே வருகின்றார் என்ற
கர்வத்தோடு முதன் முதலில் நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வத்தோடும்
எதிர்பார்ப்போடும் காத்திருந்த சில வினாடிகளில்
வெளியே வந்து எங்களைப்பார்த்து வணக்கம் சொன்னார்,
நாங்களும் பதிலுக்கு வணக்கம் கூறினோம்

நகைச்சுவை நடிகர் செந்திலை நேரில் பார்த்தது மாதிரி இருந்தது
பிரேமானந்தாவைப்பார்த்தது...

வெள்ளை வேட்டியுடன் மேலே எதுவும் அணியாமல் ஈரமாயிருந்த
தலைமுடியை வழித்து சீவி ஒரு சிறிய கொண்டை போட்டிருந்தார்.

புசு புசு வென சாயிபாபா மாதிரியான தலைமுடியுடனான பிரேமானந்தாவை
எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம் தான்...

"நம்ம அய்யாவோட தங்கச்சி பசங்க, உங்களை பாக்கனும்னு சொன்னாங்க" என பழமலை அறிமுகப்படித்திய பின்...

அவருடைய இடது கையை வலது தோளில் கட்டிக்கொண்டு வலது கையால் இடது தோளை தட்டிக்கொண்டே பேசினார்

"அப்படியா ராஜா... நல்லா இருக்கிங்ககளா ராஜா"

"நம்ம அய்யாவோட தங்கச்சி பசங்க, உங்களை பாக்கனும்னு சொன்னாங்க" என பழமலை அறிமுகப்படித்திய பின்...

"அப்படியா ராஜா... நல்லா இருக்கிங்ககளா ராஜா" என்றார் எங்கள் இருவரையும் பார்த்து

பெயர் படிப்பு அறிமுகங்களுக்குப்பின் எப்படி இருக்கிங்க என கேட்டதற்கு

"இப்போதான் ராஜா குளிச்சிட்டு வந்தேன், லெட்டர் எழுதலாம்னு உக்கார்ந்தேன்.."

சில வினாடிகள் இரு பக்கமும் அமைதி... என்ன பேசவேண்டுமெனத்தெரியவில்லை

பழமலைதான் ஆரம்பித்தார்...

"சாமியாரே பசங்க எதிர்காலத்தை உங்க ஞானதிருஷ்டியில் பார்த்து சொல்லுங்க"

உடனே பிரேம்ஸ் எனது நேற்றியில் குங்குமம் வைப்பது போல கட்டை விரலையும்
மற்ற நான்கு விரல்களால் தலையின் மேலும் கைவைத்து கண்களை மூடி சிறிது
நேரம் கழித்து எனக்கு பலன் சொல்ல ஆரம்பித்தார்

"ராஜா நீங்க ரொம்ப கோவக்காரரு... கோவத்தை கட்டுப்படுத்திக்குங்க,
நீங்க ரொம்ப நல்லா வருவீங்க.... எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்றார்"

"ங்கொக்காமக்க நீ கட்டுப்படுத்த வேண்டியதை கட்டுப்படுத்தாமதான் களித்தின்னுக்கிட்டிருக்க, எனக்கு சொல்றியோ" என்று மனதில் நினைத்தபடியே
"ம்...." என்றேன் ஆமோதிப்பது போல

இதே மாதிரி தலைமீது கைவைத்து கண்மூடி பலன் சொன்னது என் நண்பன் வர்மாவுக்கும் அரங்கேறியது....

"சரி ராஜா இப்போ என்ன வேலை செய்றீங்க "
"இப்போதான் படிச்சி முடிச்சிருக்கோம்... இனிதான் வேலைத்தேடனும்"
"அப்படியா ராஜா எப்படிப்பட்ட வேலையா தேடுறிங்க"
"கம்ப்யூட்டர் சைட் தான் டிரை பண்றோம்"
"அப்படியா ராஜா, ஸ்டார் ஹோட்டல்ல கம்ப்யூட்டர் செக்ஷன்ல வேலைக்கு போறதுனா சொல்லுங்க, நான் ஏற்பாடு செய்யறேன் ஏழாயிரம் எட்டாயிரம் தருவாங்க"

"பார்ப்போம்.... வேண்டுமென்றால் சொல்கிறோம்"

"அய்யாகிட்ட சொல்லுங்க.... எப்போ வேண்டுமானாலும் ஏற்பாடு செய்றேன் ராஜா
கோபத்தை மட்டும் கொறச்சிக்கங்க ராஜா"

"அடங்கொக்காமக்கா இப்படி மயக்குற மாதிரி உதார் உட்டதாலதான் எல்லாம் உன் காலடில விழுந்தாங்க" என மனதிற்குள் நினைத்துக்கொண்டே சாமியாரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்தேன்...

இதே பிரேமானந்தாவை சிவராத்திரியன்று திருவிழாப்போன்று வாயிலிருந்து
லிங்கம் எடுக்கும் நிகழ்ச்சியில் கும்பலோடு கும்பலாக குடும்பத்தோடு தரிசனம் செய்துவிட்டு வந்த மாமாவின் அதிகாரத்திலுள்ள சிறைக்கு வருவார் என்று
பிரேமானந்தாவின் ஞானதிருட்டிக்கும் தெரியவில்லை....

பக்தர்கள் குழுமத்தில் ஒரு ஓரமாக நின்று சில நிமிடங்கள் மட்டுமே
தாம் பார்த்துக்கொண்டிருக்கும் இதே சாமியார் இருபத்திநான்கு மணிநேரமும்
தம் அதிகாரத்திலுள்ள சிறைக்கே கைதியாக வரப்போகிறார் என மாமவும்
அன்று நினைத்ததில்லை...

"அக்கியூஸ்ட்டுங்க அதிகமாயிட்டாங்க, ஆனா அதுக்கேத்தமாதிரி பொலீசார் அதிகமா போடலை நாமளே ரெண்டு டூயூட்டியும் பார்க்கனும்" என்றா புலம்பிக்கொண்டிருந்த
வாயிலில் பாதுகாப்பிற்கிருந்த காவலர்

"என்ன தம்பி ஜெயில சுத்தி பார்த்திங்களா, இங்க பிரேமானந்தாவும்,ஜான் டேவிட்டும் தான் பேமஸ் அவங்களை பார்த்துட்டா ஜெயில முழுசும் பார்த்தமாதிரி" என்றவரிடம்
விடைபெற்றுக்கொண்டும் வீடு வந்து சேர்ந்தோம்....

தற்போது பிரேமானந்தாவை பார்த்தால் நிறைய பேசலாம்...

பிரேமானந்தா அதே சிறையிலிருந்தாலும் முன்பு பார்த்தமாதிரி எளிதாக பார்க்கமுடியாது.... ஜெயிலர் மாமா இறந்து மூன்று வருடமாகிவிட்டது...

10 பின்னூட்டங்கள்:

said...

//பின் குறிப்பு
இவை அனைத்தும் சொந்த கற்பனையே //

யோவ்... நல்லா வருது வாயிலே..!!

said...

// பின் குறிப்பு இவை அனைத்தும் சொந்த கற்பனையே //

ஞானபீடம் என்னான்னா கதைய நீங்களே முடிச்சுக்கங்கன்னு சொல்றாரு நீங்க என்னான்னா சொந்த கற்பனையேன்னு சொல்றீங்க..........

உண்மையிலேயே கடுப்பில பல்லைக் கடிக்கறேன் பேர்வழின்னு நாக்கைக் கடிச்சுக்கிட்டேன்......

எத்தனை பேர் இப்படி கிளம்பியிருக்கீங்க.......

said...

//யோவ்... நல்லா வருது வாயிலே..!!- மாயவரத்தான்.

இன்னாபா வர்து வாயில... லிங்கமா? ம்... கைவசம் தொழிலு ஓங்கிட்ட கீதுபா மாயவரம் ;-) பொழச்சுக்குவ.

------------
விளம்பரம்
------------

ஒரு crime story படிக்கனும்னா இங்கே... கொல், கவனி, செல்.

இந்த பின்னூட்டத்தை வழங்கியவர்: ஞானபீடம்

said...

//சட்டப்பிரச்சினை ஏதும் இருக்குமா?
//

இந்த வரியை படித்தால் உங்களுக்கு புரிந்திருக்கும் கற்பனையா உண்மையா என.... என்ன சரியா?

said...

//இன்னாபா வர்து வாயில... லிங்கமா? ம்... கைவசம் தொழிலு ஓங்கிட்ட கீதுபா மாயவரம் ;-) பொழச்சுக்குவ.//

ஏது.. விட்டாக்க பூஜ்யஷ்ரீ மாயவரானந்த சுவாமிகள்னு சொல்லி ஒரு ஏத்து ஏத்தி அப்புறம் ஒரேடியா கவுத்திடுவீங்க போலருக்கே!

said...

//யோவ்... நல்லா வருது வாயிலே..!! //
மாயவர்ஸ்...
படிச்ச மேட்டருக்கு வாயில இருந்து வேற என்ன வரும் லிங்கம் தான் வரும்..உசாரா இருங்க அப்பு.. !

குயில்ஸ்,
எனக்கு இது கற்பனைனு தெரியும் .. ஏன்னா போன வருஷம் திருச்சில எங்க கலெக்டர் மாமா சிபாரிசுல பிரேம்ஸ் அசிரமத்தில போய் பிரேம்ஸ் பெர்சனல் டைரி பாக்குற வாய்ப்பு கிடைச்சுது... ஒரு பக்கம் விடாம படிச்சு முடிச்சேன்..(அத பத்தி ஒரு பதிவு அப்புறம் போடுறேன்) :) :)
அதுல நீங்க சொன்ன மாதிரி நிகழ்ச்சி எதுவும் நடந்ததா படித்த ஞாபகம் இல்லை..
பிரேம்ஸ்கு தவறாம சின்ன சின்ன விஷயத்தையும் டைரி எழுதுற பசக்கம் இருக்குனு அவர் கேஸ் டைரியை (எங்க சுப்ரீம் கோர்ட் சீப் ஜஸ்டிஸ் சித்தப்பா சிபாரிசுல) படிச்சப்ப தெரிந்தது

அப்புறம், இவர்களிடம் எனக்கு பிடித்தது என ஒரு தொடர் எழுதுனீங்களே. இந்த பதிவின் தலைப்பை பார்த்து அதன் தொடர்ச்சியோனு கொஞ்சம் அசந்து போயிட்டேன்... நல்ல வேளை

வீ .எம்

said...

எந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாத எழுத்துருவாகவிருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளிட்டு கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களை சுட்டுவதன் மூலம் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்கமுடியும்.

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்கு பொங்கு தமிழ் எனப் பெயரிடப்படுகிறது.



இந்த தானிறங்கி எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு ஸ்ரீவாஸிற்கு எனது நன்றிகள்

நெற்ஸ்கேப் பதிப்புகளில் இந்த செயலி தானிறங்கி எழுத்துரு இல்லாமையினால் முழுமையாக வேலைசெய்யாது என்பதை கருத்திலெடுக்கவும்.

தமிழை சர்வதேசஇணையத்துடன் முன்னோக்கி நகர்த்த ஓர் உந்து சக்தி உதவியாக இந்த புதுவை யூனிக்கோட் உருமாற்றியை வடிவமைத்துள்ளேன்.தமிழில் இன்று அதிகமாக பாவனையிலிருக்கும்
எழுத்துருக்களை யூனிக்கோட் எழுத்துருவிற்கு மாற்றவும்,இணைய இணைப்பிலிருந்தபடியே
எந்தவித தரவிறக்கமும் செய்யாமலேயே உங்கள் ஆவணங்களை உருமாற்றவும் இதன்மூலம் முடியும்.

இந்தப் பக்கத்தை இலகுவாக உங்கள் கணனியில் சேமிப்பதன் மூலம் இதனை உங்களது ஆக்கிக்கொள்ளலாம்.



உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.

சுரதா யாழ்வாணன் 27.05.03

said...

வேற ஒண்ணுமில்லை.. பத்திரிகைகளில் வாசகர் கடிதம் எழுதுற மாதிரி (நண்பர் ரஜினி ராம்கி மன்னிக்க!) இப்படி வரிசையா பின்னூட்டமா எழுதி தள்ளிக்கிட்டே இருந்தா இப்படி தான் சமயத்துலே 'கொல்லாப்ஸ்' ஆகிறும்..!! :))))

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி ...

நான் ரஜினியை சந்திச்சதை பதிந்தால் , நீங்கள் அதற்கு எதிர்வினையா , பிரேமானந்தாவை சந்திச்சதா பதியிரீங்க.. இதெல்லாம் நல்லாயில்ல...