வர்ணபேதமும் வாழ்க்கை சுவாரசியமும்
வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை
சுவாரசியமாக இருக்கும் என இராணி சீதை அரங்கில் விவேகானந்தரை சாட்சிக்கு அழைத்து
ஜெயகாந்தன் பேசியதாக படித்தபோது எனக்கு சில கேள்விகள் எழுந்தன.
(ஒரு வேளை ஜெயகாந்தன் இப்படி பேசவில்லையென்றால் இந்த கருத்தை
கொண்டிருப்பவர்களுக்கான கேள்வியாக எடுத்துக்கொள்ளவும்)
சில இடங்களில் ஜெயகாந்தனின் இந்தப்பேச்சுக்கு ஆதரவாக, இதில் உண்மை இருக்கின்றது
என்பதுபோல சில கருத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன.
''முதலில் ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் வாழ்வு சுவாரசியாமாக இருக்கும்'' என்பது
சத்தியமான உண்மை..., ஆனால் இதன் பொருள் எனக்கு ஏற்றமும் அடுத்தவனுக்கு தாழ்வும்
என்பதல்ல... எனக்கே ஏற்றமும் எனக்கே தாழ்வும் இருந்தால் தான் என் வாழ்வு
சுவாரசியமாக இருக்குமே ஒழிய எனக்கு ஏற்றம் மட்டுமேயும் அடுத்தவனுக்கு தாழ்வு
மட்டுமே இருந்தால் சத்தியமாக வாழ்வு சுவாரசியமாக இருக்காது...
உயர் சாதி என அழைக்கப்படும் சாதியில் பிறந்து அந்த சாதியில் பிறந்ததற்காக
சமூகத்தில் கொடுக்கப்படும் அத்தனை மரியாதைகளையும் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு
வர்ணவேறுபாடு இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியாமாக இருக்கும் என கூறுபவர்கள்,
தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்து
பிறப்பால் இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டு வர்ணவேறுபாட்டு நம்பிக்கையினால் இந்த
சமூகத்தின் அசிங்கமாக பக்கங்களை அனுபவித்தும்,பார்த்துக்கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு
சாதியில் பிறந்து இதே வார்த்தைகளை ஜெயகாந்தனாலோ அல்லது வர்ணவேறுபாடுகள் இருந்தால்
மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்பதை நம்புகின்றவர்களாலோ சொல்ல முடியுமா?
சொல்லுவார்களா??
இங்கே வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட சாதியிலே பிறந்ததற்காக பிறப்பால் சமூகத்தில்
மரியாதை கிடைக்கலாம், ஒரு நிறவெறி பிடித்த அமெரிக்கர் முன்போ அல்லது
ஆங்கிலேயர்முன்போ அல்லது வேறு இனத்தின் முன்போ வர்ணபேதமில்லாமல் இழிவு
படுத்தப்படுவார்கள், அந்த நிலையில் நிறபேதமிருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமாக
இருக்கும் என்று அந்த நிறவெறி பிடித்த அமெரிக்கரோ அல்லது ஆங்கிலேயரோ அல்லது வேறு
இனத்தவரோ கூறினால் ஜெயகாந்தனாலோ அல்லது இந்த கருத்தில் உண்மை இருக்கின்றது என
கருதுபவர்களாலோ ஏற்றுக்கொள்ள முடியுமா??
ஒருவேளை ஏற்றத்தாழ்வுதான் சுவாரசியமானது என்பது தனக்கு ஏற்றமும்
மற்றவனுக்குத்தாழ்வும் என்பதாக புரிந்துகொள்ளப்பட்டவர்களை என்னவென்று
சொல்வது...
என்னிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சினையே பெரியோர்கள், கற்றவர்கள், படிப்பாளிகள்,
எழுத்தாளர்கள் உள்ள சபையிலே எனது வயது, அனுபவம் மற்றும் படிப்பை கணக்கில் கொண்டு
எந்த கருத்தையும் பேசமாட்டேன், எப்போதும் ஒரு பர்வையாளனாக மட்டுமே இருப்பேன்,
ஒரு வேளை ஜெயகாந்தனை நேரில் பார்த்தாலும் இந்த கேள்வியை நான் கேட்பது
சந்தேகமே... ஆதலால் வேறு யாரேனும் அவரிடம் கேட்க முடிந்து கேட்டால் நன்றாக
இருக்கும்...
25 பின்னூட்டங்கள்:
குழலி,
வர்ணபேத முறையில் ஏற்ற தாழ்வு பார்ப்பது மிகத் தவறானது, கண்டிக்கப்பட வேண்டியது. அதே நேரம், பணம் படைத்தவர்களுக்கு சாதி என்பது கிடையாது. பொதுவாக, அவர்களிடையே பார்ப்பதும் இல்லை. எல்லா சாதிகளிலும் ஏழைகள் தாழ்ந்தவர்களாகத் தான் நோக்கப்படுகிறார்கள்.
பெரும்பாலும், முதலாளி என்ற நிலையிலுள்ள ஒருவர் (அவர் மேட்டுக்குடியோ, பின்தங்கியவரோ, தாழ்த்தப்பட்டவரோ!) தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை ஒரு படி கீழே பார்க்கவும் / வைத்திருக்கவும் தான் விரும்புகிறார். எல்லாவற்றுக்கும், சமூகத்தில் நல்லதொரு மனமாற்றம் தேவை. கல்வியும், நல்ல சூழலும் இதற்கு பெருமளவு உதவுகிறது என்று நம்புகிறேன்.
என்றென்றும் அன்புடன்
பாலா
குழலி,
நல்ல பதிவு.
பாலா: இத்தகைய சிந்தனை அதாவது, பணக்காரன் தன்னிடம் வேலை பார்ப்பவர் ஒரு படி கீழே இருக்க வேண்டும் என்ற எண்ணம் சனாதன மற்றும் ஆதிக்க உணர்வு இல்லையா?. இத்தகைய சிந்தனை போக்கு எங்கிருந்து கிளைத்தது என்பதுதானே அதை நீக்க முயல்வதின் முதல் படி?. அப்படி பார்த்தால் வர்ணபேதத்தை அதன் புதிய வடிவில் மிக தெளிவாக காணலாம்.
இதை சொல்லும் போது, எனக்கு நினைவில் வரும் சங்கதி. இங்கு கனடாவில் ஒரு முதலாளியும் தொழிலாளியும் (அவருடன் பணி புரியும்) ஒரே மேசையில் உட்கார்ந்து தினமும் உணவு உண்பது நான் காணும் ஒரு காட்சி. இங்கு இத்தகைய நிலை என்பது சாதாரணம். ஆனால் இந்திய துணைக்கண்டத்தில் அது அரிது. இதை ஒப்பிட்டால் சிந்தனைகளின் வேர் எது என்பது உரக்க தெரியும்.
(இதை கூறும் போது மேலைநாட்டினரின் மத விச(ய)ங்களையும் நன்றாக புரிந்து கொண்டு கூறுகின்றேன் என்பது எனது மெக்தலீனா சகோதரிகள் பதிவில் தெளிவு)
"பாலா: இத்தகைய சிந்தனை அதாவது, பணக்காரன் தன்னிடம் வேலை பார்ப்பவர் ஒரு படி கீழே இருக்க வேண்டும் என்ற எண்ணம் சனாதன மற்றும் ஆதிக்க உணர்வு இல்லையா?. "
இம்மாதிரி ஆதிக்க உணர்வே முன்னேற்றத்துக்கு முதல் படி என்றும் ஒரு கருத்து உண்டு. விளக்குகிறேன்.
எல்லோருமே போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இருந்து விட்டால் நாட்டில் என்ன முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? ஒவ்வொருவரும் தாங்கள் மற்றவரை விட அதிக அளவில் முன்னேற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை மனித இயல்பு. அதை அழிக்க நினைப்பது வீணாசை. இதில் உயர்சாதி தாழ் சாதி என்றெல்லாம் கிடையாது. கனடாவில் முதலாளியும் தொழிலாளியும் ஒரே இடத்தில் உணவு அருந்துவது பெரிதாகக் கூறப்பட்டது. அதே தொழிலாளி முதலாளி உறுப்பினராக இருக்கும் ஒரு எலைட் க்ளப்பில் உறுப்பினராக வர முடியாது. அங்கத்தினர் ஆவதற்கான விண்ணப்பத்தை ப்ளாக் பால் செய்து விடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?
ஏற்றத் தாழ்வுகளை ஒழிக்கப் புறப்பட்ட சித்தாந்தங்கள் என்ன ஆயின? ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி பொலிட்ப்யுரோ உறுப்பினருக்கு கிடைத்த சலுகை பாமர ரஷ்யனுக்கு கிடைத்ததா? எந்த இனமானாலும் எந்த நிறத்தவராயினும், இங்கு எந்த சாதியினராயினும் ஏற்றத் தாழ்வு என்பது பொது விதியாகும். அது சரியா தவறா என்றெல்லாம் வாதம் செய்வது வீண். எப்படிப்பட்ட நிலையிலும் இது தவிர்க்க முடியாதது என்பதுதான் உண்மை.
மறுபடியும் ரஷ்யாவையே எடுத்து கொள்வோம். 1992-ல் எல்லோரும் ஏறத்தாழ ஒரே நிதி நிலைமையிலேயே இருந்தனர். இப்போது 13 ஆண்டுகளுக்குள் நிலைமை எப்படி என்று நினைக்கிறீர்கள்? இனிஷியேடிவ் இருப்பவர்கள் எப்படியாவது முன்னேறுவர் என்பதுதானே உண்மை? சைனாவிலும் அதே நிலைதானே?
எங்கு மதிப்பு கிடைக்கிறதோ அங்கு இருப்பதும் அவமரியாதை கிடைக்கும் இடத்தை காலி செய்வதும் மனித சரித்திரத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
//வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான்
வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என இராணி சீதை அரங்கில்
விவேகானந்தரை சாட்சிக்கு அழைத்து ஜெயகாந்தன் பேசியதாக ...//
என்ன அபத்தம்!! 'தாழ்வு தனக்கும் ஏற்றம் அடுத்தவனுக்கும்' இப்படி
இருந்தா எப்படிப் பேசியிருந்திருப்பார்?
என்னவோ ஆயிக்கிடக்கு இந்தஆளுங்களுக்கு! பெரிய எழுத்தாளர்னு ஆனவுடனே
'தல திருகிபோயிந்தா'?
சும்மா இருக்கவே முடியாது போல!
குழலி, அதான் ஜெயகாந்தன் சிங்கப்பூருக்கு வர போறாரே. வாறீரா! இதே கேள்வியை கேட்டு விடுவோம். ஏற்கனவே வாக்குவாத அடிதடி நடக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயகாந்தன் வயசு கோளாறில் இப்படி பேசுகிறாரோ?
அவரை பற்றிய இமேஜை தூர எறிந்து விட்டு பார்த்தால் அவருடைய படைப்புகளை மிக மதிக்கிறேன்.
ஒரு அரசியல்வாதி தனது குடும்பத்தினரை விட்டால் கோடானு கோடி தமிழர்களில் தனக்கு அடுத்து தனது இயக்கததை தலைமை ஏற்க தகுதியான ஆளே கிடையாது என்று நினைப்பது கூட வர்ண பேதம் தான். என்ன, நான் சொல்றது சரிதானே குழலி?! வேண்டுமானால் நவீன கால வர்ண பேதம் என்ற கணக்கில் இதை எடுத்துக் கொள்ளலாமா?!
//ஒரு அரசியல்வாதி தனது குடும்பத்தினரை விட்டால் கோடானு கோடி தமிழர்களில் தனக்கு அடுத்து தனது இயக்கததை தலைமை ஏற்க தகுதியான ஆளே கிடையாது என்று நினைப்பது கூட வர்ண பேதம் தான். என்ன, நான் சொல்றது சரிதானே குழலி?! வேண்டுமானால் நவீன கால வர்ண பேதம் என்ற கணக்கில் இதை எடுத்துக் கொள்ளலாமா?!
//
இது நிச்சயம் விவாதத்தை திசை திருப்பும், மேலும் இங்கே பிறப்பினால் உயர் குலத்தோன் என்று சொல்லப்படுபவர் சமூகம் தரும் அத்தனை சலுகைகளையும் சுகத்தையும் மரியாதையும் அனுபவித்துக்கொண்டு பிறப்பினால் உயர்வு தாழ்வு இருந்தால் தான் வாழ்வு சுவாரசியமாக இருக்கும் என்று கூறும் ஒரு நோயுற்ற மனப்பாண்மையை கண்டித்து பேசிக்கொண்டிருக்கின்றோம் இந்த நிலையில் இது மாதிரி ஒரு பின்னூட்டம் வேறு விவாதங்களுக்கு வழி வகுக்கும், நீங்கள் கூறும் பிரச்சினையை விவாதிக்க வேறு பல பதிவுகள் உண்டு, நீங்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் வர்ணபேதம் இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும் என்கின்ற சிலரின் கருத்தை ஆமோதிக்கின்றீர்களா? இல்லையா என்பதை மட்டும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.... இது என்னுடைய வேண்டுகோளாக எண்ணிக்கொள்ளுங்கள்
//பெரும்பாலும், முதலாளி என்ற நிலையிலுள்ள ஒருவர் (அவர் மேட்டுக்குடியோ, பின்தங்கியவரோ, தாழ்த்தப்பட்டவரோ!) தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளர்களை ஒரு படி கீழே பார்க்கவும் / வைத்திருக்கவும் தான் விரும்புகிறார்//
பாலா தாங்கள் சொல்வது சரிதான் ஆனால் நீங்கள் சொல்லும் இந்த விடயத்தில் ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறப்பு என்பது காரணியில்லை...
//பணம் படைத்தவர்களுக்கு சாதி என்பது கிடையாது. //
இல்லை பாலா... நீங்கள் சொல்வது ஓரிரண்டு இடங்களில் இருக்கலாம்... ஆனால் பணம் உண்டு, இல்லை என்ற வித்தியாசமின்றி மேல்,கீழ் சாதி வேறுபாடு பரவியுள்ளது, அதற்கு வர்ணபேதம் இருந்தால் தான் வாழ்வு ருசிக்கும் என்று இலக்கியவாதிகளால் சப்பை கட்டு கட்டப்படுகின்றது, அது சிலரால் ஆதரிக்கவும் படுகின்றது, இங்கு பொருளாதார வேறுபாடும் பிறப்பினால் உயர்வுதாழ்வும் ஒரே தட்டில் வைத்துபார்க்கப்படுகின்றது... ஆனால் இரண்டும் வெவ்வேறு தளம்
//தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்து
பிறப்பால் இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டு வர்ணவேறுபாட்டு நம்பிக்கையினால் //
உங்களது பார்வையிலேயே வந்தால் கூட இதில் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறப்படுகிறவர்கள் வேண்டுமானால் வர்ண பேதங்களை எதிர்த்து குரல் கொடுக்க முழு தகுதி படைத்தவர்களாகிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை கீழ்த்தரமாக நடத்துவதேயில்லையா என்பதை தெளிவு படுத்துகிறீர்களா குழலி?! இன்னும் சொல்லப்போனால் உயர் சாதியில் பிறந்தவர்கள் என்று உங்களால் கூறப்படுகிறவர்களைக் காட்டிலும் இந்த மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் தான் தாழ்த்தப்பட்டவர்கள் என்றழைக்கப்படுகிறவர்க்ளை மிகவும் கீழ்த்தரமாக நடத்தி வருகிறார்கள் என்பது கண்கூடு!!
//உங்களது பார்வையிலேயே வந்தால் கூட இதில் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்று கூறப்படுகிறவர்கள் வேண்டுமானால் வர்ண பேதங்களை எதிர்த்து குரல் கொடுக்க முழு தகுதி படைத்தவர்களாகிறார்கள். பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பவர்கள் தாழ்த்தப்பட்டவர்களை கீழ்த்தரமாக நடத்துவதேயில்லையா என்பதை தெளிவு படுத்துகிறீர்களா குழலி?! //
இங்கே (எல்லோருமல்ல சிலர்...)பிற்படுத்தப்பட்டவர்கள் உயர்த்தப்பட்டவர்களால் வன்கொடுமை செய்யப்படுகின்றனர், மிகப்பிற்படுத்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்களாலும்,உயர்த்தப்பட்டவர்களாலும் வன்கொடுமை செய்யப்படுகின்றனர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்ற அனைத்து பிரிவனராலும் வன்கொடுமை செய்யப்படுகின்றனர் ஆனால் இங்கே வர்ணவேறுபாடு இருந்தால் தான் வாழ்க்கை ருசிக்கும் என அதை ஆதரித்து யாரும் பேசவில்லை, அது தவறு என பலரின் மனமும் மாறி வரும் வேளையில் இப்படி அதுவும் இலக்கியத்திலே சாதனை(?!) படைத்த சமூகத்திற்கு முன்னோடியாக இருக்கக்கூடிய ஒருவர் பேசியது தவறா இல்லையா? அதை ஆதரித்து சிலர் பேசியதை என் காதால் கேட்டபிறகு இந்த பேச்சை படித்த சிந்தனையாளர்கள் சிலரே ஆதரிக்கும்போது எவ்வகையான தாக்கத்தை இது சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது என்ற வேதனையில்தான் இந்த பதிவை எழுதினேன்... இங்கே எந்த சாதியையும் குறிப்பிடவில்லை, எந்த சாதியையும் தாக்கவில்லை, ஒரு இலக்கியவாதியின் பேச்சையும் அதை ஆதரிப்பவர்களையும் தான் விமர்சித்துள்ளேனே தவிர உயர்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் என யார் வன்கொடுமைசெய்தாலும் கண்டிக்கப்படதக்கதே என்பது எனது கருத்து....
மேலும் தாழ்த்தப்பட்டோர்கள் அல்லது வன்கொடுமையை அனுபவிப்பவர்கள் மட்டும் தான் குரல் கொடுக்க வேண்டுமென்பது ஒரு தவறான மனோபாவமாக கருதுகின்றே, பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்றால் நம்மால் நாட்டில் நடக்கும் பல அநியாயங்களை எதிர்க்க முடியாது...
//குழலி, இப்பதிவுக்கான மூல கருத்தையே நான் மறுக்கிறேன். வர்ணம் உண்டு, ஆனால் பிறப்பை பொறுத்து அல்ல.//
இந்தபதிவின் மூலக்கருத்தே பிறப்பை வைத்து வரும் வர்ணவேறுபாடுதான் வாழ்க்கையை ருசிக்கவைக்கும் என்ற சிலரின் மனோபாவத்தை எதிர்த்துதானே அப்படியென்றால் என் பதிவின் மூலக்கருத்தை நீங்கள் ஆதரிப்பது போலத்தானே உள்ளது.
//என்னை பொறுத்த வரையில் இவ்வுலகில் எவருக்கும் தன்னை பிராமணன் என்றோ, சூத்திரன் என்றோ என அழைத்துக்கொள்ளும் தகுதி கிடையாது.
//
நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால் நடைமுறை அப்படியில்லையே... அப்படி அழைத்துக்கொள்வதுதான் தகுதி என்பதுபோலல்லவா சில பெரும் படிப்பாளிகள் பேசுகின்றனர், அதற்கு சில படிப்பாளிகள் ஆதரவு தருகின்றனர்
முதலில் ஜெயகாந்தனின் ஜாதி என்ன? அது உயர் சாதியாகக் கருதப்படுகிறதா, என்பதை யாரேனும் தெளிவுபடக் கூறினால் நலம்.
மற்றப்படி ஏற்றத் தாழ்வுகள் இருக்க வேண்டுமா கூடாதா என்பது வீண் விவாதங்களைத்தான் வளர்க்கும். நான் ஏற்றத் தாழ்வுகள் என்று குறிப்பிடுவது எல்லா வகையிலும்தான். சாதி அவற்றில் ஒன்று என்பதே உண்மை. மற்றப்படி நான் கூற நினைப்பது என்னவென்றால் ஏற்றத் தாழ்வுகளைத் தவிர்க்க இயலாது. வாழ்க்கையிலும் சரி இயற்கையிலும் சரி மிக வலிமையானவர்களே மிஞ்சுகின்றனர் என்பது விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்தது. அவை இருக்கின்றன. அவை இருக்கவேண்டுமா கூடாதா என்று யாரையும் கேட்டு வருவதில்லை.
நான் கூறியது போல சாதி என்பது ஒரு க்ரைட்டீரியன்தான். அதைத் தவிர வேறு க்ரைட்டீரியன்களும் உண்டு. ஏன் ஒன்றையே பிடித்துக்கொண்டு தொங்க வேண்டும்?
மறுபடி ஜெயகாந்தன் விஷயத்துக்கு வருவோம். அவர் தன்னை உயர் சாதியாக நினைத்து கொண்டிருக்கிறாரா? தன் சாதியைப் பற்றி எங்காவது உயர்வாகக் கூறியிருக்கிறாரா? இதையெல்லாம் ஆராய்வதும் நலமாயிருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
விஜய் அடிதடியா சிங்கையிலா எங்கே எங்கே.நாந்தேன் தெரியுமில்லா
குழலி இதுபற்றி கடந்த கூட்டத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் வாழ்வு இனிக்கும் என்று ஜெயகாந்தனது கூற்றை மேற்கோள் காட்டியபோதே தொடர்ந்து பேச விரும்பினேன் அதற்குள் கருத்து திசைமாறிவிட்டது.நீங்களாவது திரும்பவும் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
//குழலி இதுபற்றி கடந்த கூட்டத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் வாழ்வு இனிக்கும் என்று ஜெயகாந்தனது கூற்றை மேற்கோள் காட்டியபோதே தொடர்ந்து பேச விரும்பினேன் அதற்குள் கருத்து திசைமாறிவிட்டது.நீங்களாவது திரும்பவும் சுட்டிக் காட்டியிருக்கலாம்.
//
ஈழநாதன் என்னிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சினையே பெரியோர்கள், கற்றவர்கள், படிப்பாளிகள்,
எழுத்தாளர்கள் உள்ள சபையிலே எனது வயது, அனுபவம் மற்றும் படிப்பை கணக்கில் கொண்டு
எந்த கருத்தையும் பேசமாட்டேன், எப்போதும் ஒரு பர்வையாளனாக மட்டுமே இருப்பேன்...
அதனால் தான் அமைதியாக இருந்துவிட்டேன்.
நீண்ட நாட்களுக்குப்பின் என் பதிவில் பின்னூட்டமிடும் டோண்டு அய்யாவிற்கும், பின்னூட்டமிட்ட மற்ற அனைவருக்கும் நன்றி.
பொருளாதார ஏற்றத்தாழ்வும் பிறப்பால் வேறுபடுத்திப்பார்க்கும் சாதி பேத ஏற்றத்தாழ்வும் வேறு வேறு தளங்களில் இருக்கும் பிரச்சினைகள்...
இரண்டும் ஒரு பிரச்சினையில் இரு பரிமாணங்கள் அல்ல...
//அவர் தன்னை உயர் சாதியாக நினைத்து கொண்டிருக்கிறாரா? தன் சாதியைப் பற்றி எங்காவது உயர்வாகக் கூறியிருக்கிறாரா? இதையெல்லாம் ஆராய்வதும் நலமாயிருக்கும்.
//
அவர் உயர் சாதியோ தாழ்ந்த சாதியோ அவர் சாதியை அவர் புகழ்ந்தாரோ இகழ்ந்தாரோ வர்ணபேதம் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்ற அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதா??
//வாழ்க்கையிலும் சரி இயற்கையிலும் சரி மிக வலிமையானவர்களே மிஞ்சுகின்றனர் என்பது விஞ்ஞான பூர்வமாக கண்டறிந்தது. //
இது மட்டும் சரியானது என்றால் இன்றைய நிலையில் சில இனம்,சில மதம்,சில சாதி, சில நாடு, ஏன் பல மனிதர்கள் கூட மிஞ்சியிருக்க மாட்டார்கள்... நம்மால் சென்னையில் 10ரூபாயோடு சாலையில் இறங்கமுடியாது நம்மை விட உடல் வலு உள்ளவன் அடித்து பிடுங்கிகொண்டுவிடுவான், நம்மை விட பலமுள்ளவர்கள் பலர் இருந்தும் நாம் ஓரளவுக்கு நிம்மதியாக இருப்பதற்கு காரணம் அரசாங்கமும் சட்டமும் தர்மமும் தந்திருக்கும் பாதுகாப்பு, மிஞ்சியது மட்டுமே எஞ்சும் என்றால் இங்கே யாருமே நிம்மதியாக இருக்க முடியது
//மறுபடியும் ரஷ்யாவையே எடுத்து கொள்வோம்.//
கம்யூனிசம் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதின் விளைவு, மேலும் விளக்கம் தர ஆசைதான், விவாதம் திசை திரும்பிவிடும் என்பதால் அதை வேறொரு பதிவில் பார்ப்போம்.
//ஒவ்வொருவரும் தாங்கள் மற்றவரை விட அதிக அளவில் முன்னேற வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை மனித இயல்பு. அதை அழிக்க நினைப்பது வீணாசை.//
பதில் சொல்ல ஆசைதான் ஆனால் விவாதம் திசை திரும்பிவிடும் என்பதால் அதை வேறொரு பதிவில் பார்ப்போம்.
குழலி, பாரதியின் வாரிசு என்று இதில் வெட்கமில்லாமல் ஜெயகாந்தன் சொல்லிக்கொண்டு ஜாதியை நியாயப்படுத்த விவேகானந்தரை துணைக்கு அழைக்கிறார். ஜாதியைத் தான் ஆதரிக்கிறேன் என்று ஆண்மையோடு கம்பீரமாக ஜெயகாந்தனே அறிவிக்கலாமே. விவேகானந்தர் எதற்கு? எனக்குப் பிறகு ஏதேனும் பட்டப்பெயரைப் போட்டுக்கொள்ள வேண்டுமென்றால் பிள்ளை என்ற என் சாதியையே போட்டுக்கொள்வேன் என்று முன்பே அவர் சொல்லியிருப்பது தெரிந்ததுதானே. பாரதி ஜாதியை மாற்ற வன்முறைதான் வழியென்றால் அதுவும் நடக்கவேண்டும் என்பவர்; விவேகானந்தர் பெண்கள் பற்றிய பிற்போக்கான, போலித்தனமான கருத்துக்களைக் கொண்டிருந்தற்காக பாரதி விமர்சித்தார். அதையெல்லாம் வசதியாக மறந்துவிட்டாரா? இல்லை மறைத்துவிடலாம் என்று எண்ணுகிறாரா?
"பொருளாதார ஏற்றத்தாழ்வும் பிறப்பால் வேறுபடுத்திப்பார்க்கும் சாதி பேத ஏற்றத்தாழ்வும் வேறு வேறு தளங்களில் இருக்கும் பிரச்சினைகள்...
இரண்டும் ஒரு பிரச்சினையில் இரு பரிமாணங்கள் அல்ல..."
மன்னிக்கவும் உங்கள் கருத்திலிருந்து மாறுபடுகிறேன். ஏனெனில் பணக்காரன் மகன் பணக்காரனாகத்தான் பார்க்கப்படுகிறான், தலைவன் மகன் சீக்கிரன் தலைவன் மற்றும் மந்திரி ஆகிறான். அவ்வாறு தலைவரானவர்கள் மற்ற தொண்டர்களுக்கு செய்யும் மூளைச்சலவை "எல்லோரும் பல்லக்கில் அமர ஆசைப்பட்டால் தூக்குவது யார் என்ற கேள்விதான். நேரு குடும்பத்தில் சம்பந்தம் இல்லாதிருந்தால் ராகுல் காந்தி மாவட்டத் தலைவராகக் கூட வந்திருக்க முடியாது. பாலா கூறியது போல இது ஒரு புதுவித வர்ண வேறுபாடு, சலுகை அனுபவிப்பவர்களால் ஆதரிக்கப் படுவது.
"அவர் (ஜயகாந்தன்) உயர் சாதியோ தாழ்ந்த சாதியோ அவர் சாதியை அவர் புகழ்ந்தாரோ இகழ்ந்தாரோ வர்ணபேதம் இருந்தால்தான் வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்ற அவரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதா??"
அது அவர் கருத்து ஐயா. அவர் என்ன கருத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூற நாம் யார்? அவரவர் கருத்து அவரவருக்கு என்பதுதானே உண்மை? மேலும் உங்கள் முதல் அனுமானத்தின்படி அவரை உயர்சாதியாகத்தான் கருதியிருந்தீர்கள். ஆதாரம் நீங்கள் கூறியதே:
"உயர் சாதி என அழைக்கப்படும் சாதியில் பிறந்து அந்த சாதியில் பிறந்ததற்காக
சமூகத்தில் கொடுக்கப்படும் அத்தனை மரியாதைகளையும் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு
வர்ணவேறுபாடு இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியாமாக இருக்கும் என கூறுபவர்கள்" ஆகவேதான் நான் அந்தக் கேள்வி போட்டேன். இப்போது அவர் சாதி பற்றிக் கேட்பது பொருத்தம்தானே? இப்போதாவது கேள்வியைத் தட்டிக் கழிக்காமல் பதில் கூறுங்கள் என கேட்டு கொள்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ப்ளாக்கர் எண் 4800161
(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)
அவர் சைவ வேளாளர் பிரிவை சேர்ந்தவர், அவருடைய சொந்த ஊர் கடலூர்...
அந்த சாதி சமூகத்தில் உயர் சாதியாக கருதப்படுவது தான்...
//அவர் கருத்து ஐயா. அவர் என்ன கருத்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூற நாம் யார்? அவரவர் கருத்து அவரவருக்கு என்பதுதானே உண்மை? //
நிச்சயமாக அவரவர் கருத்து அவரவர்க்கு உண்மை... அது சமூகத்திலே பாதிப்பு ஏற்படுத்தாத வரை.... அதுவுமில்லாமல் எப்போது அவரது கருத்தை மேடையிலே பேசிவிட்டாரோ அப்போதே அவரது கருத்து தெருவுக்கு வந்துவிட்டது மட்டுமல்லாமல்... இது மாதிரி ஒரு கருத்தை கொண்டிருப்பது மட்டுமல்லாமல் அதை வெளியே சொல்லி நியாயம் சொன்னதை கண்டிக்கத்தக்கது... இதே போல் அவரவர் கருத்து என எல்லாவற்றையும் சொல்லி அதற்கு கண்டிக்காமல் இருந்தால் (ஆதரவும்) தெரிவித்தால் சத்தியமாக நாம் எங்கே செல்கிறோம் எனத்தெரியவில்லை...
//ஏனெனில் பணக்காரன் மகன் பணக்காரனாகத்தான் பார்க்கப்படுகிறான்//
பணக்காரன் மகன் பணக்காரணாகத்தான் பார்க்கப்படுகின்றான், அதே பணக்காரன் மகன் நாளை ஏழை யாகவும் ஏழை மகன் பணக்காரணாகவும் மாறும்போது காட்சிகள் மாறும்... இங்கே ஏழையோ பணக்காரனோ சாதி மாறமுடியாது, பணக்காரணானாலும் பிறப்பால தாழ்ந்த அவனுக்கு சில அங்கீகாரங்கள் கிடைக்காது... இதைப்பற்றி மறைந்த எழுத்தாளர் திரு.சு.சமுத்திரம் "வேரில்பழுத்த பலா" என்ற ஒரு நாவல் எழுதியுள்ளார், முடிந்தால் படித்துப்பாருங்கள் அது வெறும் கதையல்ல... தினம் தினம் பல இடங்களில் நடக்கும் அவலம்.... ஒரு சமூகத்தின் அவலக்குரல்... பொருளாதாரநிலையில் முன்னேறினாலும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவர்கள் எந்த அளவு இந்த சமூகத்தால் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதன் சாட்சி...
சரி ஜெயகாந்தன் சொன்னதற்கு உங்கள் கருத்து என்ன? வர்ணபேதம் தேவையா? வேண்டாமா?
//இம்மாதிரி ஆதிக்க உணர்வே முன்னேற்றத்துக்கு முதல் படி என்றும் ஒரு கருத்து உண்டு. விளக்குகிறேன்.
எல்லோருமே போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று இருந்து விட்டால் நாட்டில் என்ன முன்னேற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்? //
உங்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை. இருந்தாலும் உங்கள் பிழையான வாதத்தை சுட்டுவது அவசியம்.
ஆதிக்க உணர்வு என்பது, ஒருவன் முன்னேறுவதை குறிப்பதல்ல. ஆதிக்க உணர்வு இல்லாதவர்கள் பலர் தங்களது நேர்மையான மனித நேய வாழ்க்கையின் மூலம் பெரும் மேம்பாடு அடைந்துள்ளனர். ஆதிக்க உணர்வு என்பது தனக்கு கீழ் இருக்கும் ஒருவரின் உழைப்பை சுரண்டுவது. அவரின் இரத்தத்தை உறிஞ்சுவது. இதைதான் வேண்டும் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் உங்களிடம் பேச எதுவும் இல்லை எனக்கு. மேலும் ஒரு கிளப்-பின் அங்கத்தினராக இருப்பதை பற்றி உங்களால் பேச முடியும். நான் பேசியது அடிப்படையான தேவையை நிறைவேற்றி கொள்ளும் ஒரு தொழிலாளியை பற்றி. உங்களது தளமும் எனது தளமும் வேறுவேறு.
இதற்கு மேல் என்னிடம் இருந்து எந்த பதிலையும் எதிர்பார்க்காதீர்கள்.
உஙள் கருத்துடன் மிகவும் ஒத்துப்போகிறேன். என் கருத்தை
http://neyvelivichu.blogspot.com/2005/06/blog-post_13.html
பதிவு செய்திருக்கிறேன்.
//(ஒரு வேளை ஜெயகாந்தன் இப்படி பேசவில்லையென்றால் இந்த கருத்தை
கொண்டிருப்பவர்களுக்கான கேள்வியாக எடுத்துக்கொள்ளவும்)//
இந்த கருத்தையும் வரவேற்கிறேன்.. உண்மை என்பது நிச்சயமாக தெரியாமல் வதந்திகளை நம்பி ஒரு நல்ல கலைஞனை இழிவு படுத்துவது தவறு.. இன்னும் தேடிக்கொன்டிருக்கிறேன்.. எங்கேயாவது அவர் பேச்சு கிடைத்தால் உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன். அப்படி அவர் கூறியிருந்தால் அது கண்டிக்கத்தக்கதே, கண்ணியமான முறையில்.
மற்றபடி, வர்ணச்ரமம் எதற்காக உருவக்கப்பட்டதோ அந்த சுழ்நிலை என்ன என்பது தெரியவில்லை. (பிச்சை வாங்கி உண்டு ஆசிரியனாய் இரு பாடம் கற்பி, மற்றவர்கள் தொழில் செய்து முன்னெறட்டும் என்று சொன்னால் யாரும் செய்ய மாட்டர்கள் என்பதால் இப்படி ஒரு சர்க்கரைப்பூச்சு என்று படித்தேன்). எப்படி அமெரிக்காவில் நமது இட ஒதுக்கீட்டு முறை பற்றிச் சொன்னால் அவர்களால் புரிந்து கொள்ள முடியதோ அது போல. கருப்பர்களும் இதே நிலையில் தான் இருந்தார்கள்.. இப்போது கருப்பர்கள் பல உயர்ந்த நிலைகளில் உள்ளதைக்காண முடிகிறது.. அவர்களை பிரித்து வைக்காமல் வளர உதவிகள் மட்டும் செய்தார்கள். நாம் பிரித்துக்காட்டியது அரசியல் லாபத்திற்காக செய்தது.. அது இடைவெளியை அப்படியே இருக்க வழிசெய்து விட்டது.. திரும்ப திரும்ப தினமும் அவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறுவது பெருமை படுத்தும் செயல் அல்ல.
கேள்வி இது தான்.. பிராமணனைத் திட்டுவதால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னெறி விடுவார்களா.. அவர்கள் முன்னெற்றத்திற்கு என்ன முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.. முழு மனதாக எடுக்கப்படுகின்றனவா...
அன்புடன்
விச்சு
விச்சு உங்களது பதிவை படித்தேன்...
பின்னூட்டம் அங்கே...
//மற்றபடி, வர்ணச்ரமம் எதற்காக உருவக்கப்பட்டதோ//
எதற்கு உருவாக்கப்பட்டிருந்தாலும் இன்றைய நிலையில் அதைப்பிடித்துக்கொண்டு தொங்குவதும் அது இருந்தால்தான் வாழ்வு ருசிக்கும் என சப்பைக்கட்டு கட்டுவதும் நோயுற்ற மனப்பாண்மை என்பது எனது கருத்து...
//பிராமணனைத் திட்டுவதால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னெறி விடுவார்களா.. //
அய்யோ தலைவா எனது பல நண்பர்கள் இந்த பதிவை படித்து வருகின்றனர் அதில் எல்லோரும் அடங்குவர், ஒரு இடத்தில் கூட நான் இந்த சாதிப்புத்தி என்றோ சாதியின் பெயரால் வசவு கொடுத்ததோ விமர்சித்ததோ இல்லை இல்லை...
பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்கும் எண்ணங்களைத்தான் விமர்சிக்கின்றேன்... உங்கள் பின்னூட்டம் அந்த கருத்தில் இல்லையென்றாலும் தெளிவு படுத்த வேண்டியது எனது கடமை...
குழலி,
மிக அருமையாக எழுதிவிட்டு, பின்னர், அவர்களை நேரில் சந்தித்தால், இதை அவர்களிடத்தில் நேரில் சந்திக்கும் பொழுது கேட்க இயலுமா என்ற சந்தேகத்தையும் வெளியிட்டிருக்கிறீர்கள். வியப்பாகத் தான் இருக்கிறது. ஆனால், எனக்கென்னவோ உங்களால் கேட்க இயலும் என்று தான் தோன்றுகிறது. வயதில் மூத்தவர்கள், அனுபவத்தில் மூத்தவர்கள், அறிவில் மூத்தவர்கள் என்று ஒருவருக்கு மரியாதை செய்ய எத்தனை எத்தனையோ வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றை நடைமுறைப் படுத்துகிறோம். ஆனால், உயர்ந்தவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் எத்தனையோ பேர், இளையவராக இருந்தாலும், அறிவற்றவராக இருந்தாலும், அனுபவமற்றவராக இருந்தாலும், ஔஅடுத்தவரை கேள்வி கேட்க எப்பொழுதுமே தயங்கியதில்லை.
சில சமயங்களில், நாமும் ஏன் அவர்களைப் பின் பற்றக் கூடாது என்றே தோன்றுகிறது - இந்த ஒரு விஷயத்திலாவது?
நன்றி
அன்புடன்
நண்பன்
வியாசரும், கண்ணனும் கீதையில் வர்ணாசிரமத்தை ஆதரித்தார்கள், அதைத் தொடர்ந்து விவேகானந்தரும் ஆதரித்தார்.
ஜெயகாந்தன் சொன்னது தவறு. ஆனால் எந்த நினைப்பில் அவர் சொன்னார் என்று தெரியவில்லை. ஆயினும், இயல்பாகவே சாதித்தவர்கள் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தி வாழ்வது அன்றும் இன்றும் என்றும் இயல்பே.
இன்று தமிழகத்தில் எத்தனை MLA, MP from MBC/OBC/SC/ST உள்ளனர்? அவர்கள் ஏன் பணத்தைத் தவிர வேறு ஒன்றும் சாதிக்கவில்லை?
ஒரு சிறந்த கவி? ஒரு சிறந்த எழுத்தாளன்? ஒரு சிறந்த அறிவியலாளன்? ஒரு சிறந்த பத்திரிக்கை-பத்திரிக்கையாளன்?
ஏன் 50 வருட ரிசர்வேசன் உப்யோகமற்று போனது? உழைப்புக்கும், சிந்தனைக்கும் மதிப்பு இல்லையே தமிழ்நாட்டில்? 2 தமிழர் நோபல் பரிசு பெற்றது பிராமணன், பல சேவைகள் செய்வது பிராமணர், அல்லது உயர் சாதியோர். ஆனால், ஆட்சி புரியவும், ரிசர்வேசன் வாங்கவும், சீக்கிர பதவி உயர்வு வாங்கவும் தாழ்த்தப்பட்டவர் certificate உபயோகம் செய்து, பின் தூஷணை செய்வது.. சாதித்த பிறகு சாதி பேசுங்கள்.
www.pasug.blogspot.com
www.saivaneri.org
வர்ணபேதம்,பொருளாதார பேதம், நிற பேதம், மனிதர்களின் உடல் எடையில் பேதம், உடல் தோற்றத்தில் பேதம் இப்படி பேதங்கள் சர்வ நிச்சயமாக இருக்கும். அபேத வாதிகளாக எல்லாவற்றையும் சமப்படுத்தி விடப்போவதாக தங்களைக் காண்பித்துக்கொள்கிற மார்க்ஸீய வாதிகளே 'வர்க்க பேதம்' என்ற ஒன்றை உண்டாக்கித்தான் தங்கள் வேலையை நடத்துகிறார்கள். இந்த யதார்த்தத்தை ஒருவர் உடைத்துச்சொன்னால் அவர்களை அயோக்யர்களாகச் சித்தரித்து வசைபாடுவதில் பயனில்லை.
நாம் செயல்படுத்த வேண்டியது இதுதான்; இந்த பேதங்களால் மற்றவரை இழிவுபடுத்தக்கூடாது,சக மனிதர்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது.
நாம் எங்கே செல்ல வேண்டும் என்ற இலக்கு தெளிவானால் - லட்சியம் என்று ஒன்று இருந்தால் நமது பணி எது என்பது நமக்குப் புலப்பட்டுவிடும்.
இந்த பின்னூட்டங்களில் பூணூலைப் பற்றி ஒரு பேச்சு வந்துள்ளது. அதாவது அது என்னமோ ஒரு பிரிவினருகே சொந்தம்-அது வர்க்க பேதத்தின் அடையாளம் என்பதுபோல். இது அபத்தம். நான்கு வருணத்திற்கும் பூணூல் உண்டு. அதன் மிச்ச சொச்சங்களாக இன்றும் ஆசாரியார்களும்,செட்டியார்களும் அணிந்து கொள்கிறார்கள். ஏனயவர்கள்கூட கல்யாணம், கருமாதி சடங்குகளில் அணிந்து கொள்கிறார்கள். இதில் எந்த பேதமும் எந்நாளும் இருந்ததில்லை. அணிவது அணியாதது எல்லாம் கால மாற்றத்தில் வந்தது; இன்று பிராமண சாதியில் பிறந்து பூணூல் அணியாதவர்களும் உண்டு.
அடுத்து, அன்றைகு இருந்த நான்கு வர்ணத்திற்கும் இன்றைக்கு இருக்கிற நாற்பதாயிரம் சாதிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - ஒரு சில சாதிப் பெயர்களைத் தவிர - உதாரணம்: பிராமணர், வைசியர்.
சாதிகளை ஒழிக்கவேண்டிய அவசியமும் இல்லை; ஒழித்து விடுவேன் என்பதும் போகாத ஊருக்கு வழி; வீண் ஜம்பம், தன்னை சீர் திருத்தவாதியாகக் காட்டிக் கொள்வதற்கான உதார்; அவ்வளவே.
உண்மை நிலையை எதிர் கொண்டு ஆகவேண்டியதை கவனித்தால் பலனுண்டு.
நன்றி.
கண்ணன்,
கும்பகோணம்.
Post a Comment